மழை நான் மற்றும் உறுபசி சம்பத்

Posted: December 7, 2010 in அடலேறு, அனுபவம், எஸ்.ரா, தமிழ், நினைவு, புத்தகம், வாழ்த்து
குறிச்சொற்கள்:, , ,

சென்னையில் இரண்டு நாட்களாக நல்ல மழை. மும்பையில் இருந்து வந்த மறுநாள், அமைதியாக  ஜ‌ன்னல் வழியே மழையை பார்த்துக்கொண்டுருந்தேன். மழையை மட்டும் எத்தனை தடவை பார்த்தாலும் சலிப்பதேயில்லை என்று தோன்றியது. மெல்ல தொடங்கி நீண்ட நேரம் பொழிவதற்கு தகுந்தாற்போல் வானமும் இருண்டிருந்தது. நீண்ட நாட்களாக படிக்க வேண்டும் என்று வைத்திருந்த எஸ். ராமகிருஷ்ணனின் உறுபசி நாவல் கண்முன்னே இன்னும் படிக்கவில்லை என்பதை நினைவு படுத்திக்கொண்டிருந்தது.படிப்பதற்கு முன்பு தேனீர் அருந்திவிட்டு ப‌டிக்க‌லாம் என வ‌ர‌ட்டீ ( பால் க‌ல‌க்காத‌ தேனீர்) போட்டு எடுத்து வ‌ந்த‌ம‌ர்ந்தேன், தேநீரின் ஆவி ஜன்னல் வெளியே வெளியேறிக்கொண்டுருந்தது வெளிச்ச‌ம் முன்பை விட சற்று குறைந்திருந்த‌து. தொட‌ர் மழையானது த‌ரை, மேசை, நாற்காலி என‌ அனைத்தையும் சில்லிட‌ வைத்திருந்தது.

முதல் வாய் பருகியதுமே தோன்றியது தேனீர் தன்னுடைய ஆகச்சிறந்த‌ சுவையை மழைநாட்களில் தான் அடைகிறது என்ற எண்ணம்.நாற்காலியை இழுத்து ஜ‌ன்ன‌ல் ப‌க்க‌ம் போட்டுக்கொண்டேன். ஒன்றிர‌ன்டு தூற‌ல்க‌ள் அவ்வ‌ப்போது இட‌து கையை நனைத்துக்கொண்டிருந்தன. தேனீரின் கதகதப்பு மெல்ல மெல்ல உடல் முழுக்க ஊடுருவிக்கொண்டிருந்தது. உறுபசியை எடுத்தேன். முதல்  பக்கதில் ஒரு மெலிந்த மனிதனின் படம் போட்டிருந்தது அது எனக்கு மிக நெருங்கியவர்களின் புகைப்படம் என்ற எண்ணம் தேவையில்லாமல் வந்தது. மழையில் நனைந்த படி வந்த பூனைகுட்டி தன்னுடலை ஒரு குலுக்கு குலுக்கி மழைத்துளியை வெளியேற்றிய சந்தோஷ‌த்தில் தன்னுடைய முன்னங்காலை நக்கி சுத்தம் செய்ய தொடங்கியிருந்தது.

புத்தகம் படிப்பது என்றால் முதலில் எனக்கு முதல் பக்கத்தையும் அதன் வண்ணம், தலைப்பு, படங்கள் பிறகு கடைசி பக்க அட்டையும் அதன் எழுத்துக்களையும் முழுதாக உள்வாங்க வேண்டும். பிறகு முதல் பக்கம், முதல் எழுத்து  தொடங்கி லயிக்க ஆரம்பித்து விடுவேன். அப்படி தான் உறுபசியியும் ஆரம்பித்தது. எஸ். ரா வின் எழுத்துக்களை எப்போதும் எனக்கு நெருக்கமான உணர்வுகளை தருபவை. ஆனால் உறுபசியில் இந்த சம்பத் கதாபத்திரம் இன்னும் அதிக நெருக்கத்தை தருவதாக உணர்ந்தேன்.ச‌ம்ப‌த்தை மைய‌மாக‌ வைத்தே நாவ‌ல் பின்ன‌ப்ப‌ட்டிருந்தது. ஒவ்வொரு பக்கமும் அனுபவித்து படிக்க தொடங்கியிருந்தேன். நாவல் நாயகன் சம்பத் எனக்குள் மெல்ல இறங்கிக்கொண்டிருந்தான். ஒரு பத்து பக்கம் முடிந்ததும் தோன்றியது நான் படிக்க போகும் ஆகச்சிறந்த நாவலில் இதுவும் ஒன்றாக இருக்க கூடும் என்று. மெல்ல எழுந்து ஒரு பிளாஸ்க் நிறைய தேனீர் போட்டு எடுத்து வந்து அருகில் வைத்துக்கொண்டு படிக்க ஆரம்பித்தேன்.சம்பத், நண்பர்கள், சம்பத் மனைவி என கதை சுழன்று கொண்டே இருந்தது. படிக்கும் போது காட்சிகளை கண்முன் கொண்டுவந்து நிறுத்துவது எஸ்.ராவிற்கு கை வந்த கலை அதை கச்சிதமாக செய்து முடித்திருந்தார்.

ஒரு முப்பது பக்கம் முடிந்ததும் புத்தகத்தை திறந்து வைத்தபடியே மீண்டும் ஒரு தேனீர் குடித்தேன். தேனீர் முடிவதற்கு கூட மனம் ஒப்பவில்லை மீண்டும் படிக்க ஆரம்பித்துவிட்டேன். கதையின் பாத்திரங்கள் சென்னை மதுரை என ஓடிக்கொண்டிருந்தன நானும் கூடவே போய்க்கொண்டிருந்தேன். ஜன்னல் வெளியே மழை இன்னும் அதிக லயத்துடன் பேசிக்கொண்டிருந்த்தது. சம்பத் ஒரு வேளை நான் தானோ என தோன்றியது. நிறைய இடங்களில் சம்பத்திற்கு பதிலாக என்னை பொருத்திப்பர்த்தால் சரியாக இருக்கும் எனவும் தோன்றியது. பெயர்களையும் வார்த்தைகளையும இந்த மனிதர் எங்கிருந்து பிடிக்கிறார் என்று யோசனையாக இருந்தது . நிலாரகிகன் போன் பண்ணினார் மாலை சந்திக்கலாமா என்றார். மாலை தானே அதற்குள் உறுபசியை முடுத்துவிடலாம் என்ற எண்ணத்தில் கண்டிப்பாக சந்திக்கலாம் நிலா என சொல்லிவிட்டு மீண்டும் படிக்க ஆரம்பித்தேன். திடிரென புத்தகத்தை மூடிவைத்துவிட்டு படித்த வரை கதையை ரசித்து அசை போடலாம் என்று தோன்றிய‌து. கொஞ்ச நேரம் புத்தகத்தை மூடி வைத்தேன். இசையை சுழல விட்டு  ஹெட்செட்டை காதுக்கு கொடுத்தேன். என்னமோ சோகமான இசை கேட்க வேண்டும் போல இருந்தது. கேட்டுக்கொண்டிருந்தேன். பேசாமல் வெளியே  போய் மழையில் நனையலாமா என்று கூட தோன்றியது, புதுமழை நனையாதே என்று அம்மா சொல்லிவைத்தது வேறு நினைவிற்கு வந்தது. சம்பத் இப்படியெல்லாம் இல்லை அவனுக்கு என்ன தோன்றியதோ கடைசி வரை அதை எல்லாத்தையும் செய்தான், காலை வரை கடற்கறை மணலில் படுத்துக்கிடந்ததாக நாவலில் ஒரு பகுதி வரும், அது மாதிரியெல்லாம் என்னால் ஏன் செய்ய முடியவில்லை என்ற எண்ணம் வந்தது.

சம்பத்தை பற்றிதான் நினைவு சுழன்று கொண்டுருக்கிறது இசையை ரசிக்கவே இல்லை என்பது உறைக்கத்தொடங்கியது. இசையை நிறுத்திவிட்டு மீண்டும் படிக்க தொடங்கினேன். வெளியே மழை அதே மாதிரி பெய்துகொண்டிருந்தது.வெளியே பெய்யும் மழை, உள்ளங்கை சூடாக்கும் தேனீர் , நீண்ட நாள் சந்திக்காத நண்பர்களின் அழைப்புகள் , இன்றைக்கு முடிக்க வேண்டிய ப‌ணிகள் என எல்லாத்திற்கும் விடைகொடுத்து என்னை முழுதாக நாவலில் ஒப்படைத்திருந்தேன். என்னமோ ஒரு உணர்வு , எதோ சோகமாய் இருப்பதாக உணர்ந்தேன். கடைசி பக்கங்களை நெருங்கிக்கொண்டிருக்கிறேன் என்பதெல்லாம்  மறந்து சம்பத்துடன் பயணம் போகத்தொடங்கியிருந்தேன்.

நாவலின் கடைசி அத்தியாயத்தில் சம்பத்தின் நண்பர்கள் ஒரு மலையில் இருந்து இறங்கிக்கொண்டிருந்தார்கள். அங்கேயும் எதிரில் இருப்பவரை மறைக்கும் அளவு மழை பெய்துகொண்டிருந்தது. அடுத்த‌ பக்கத்தை புரட்டும் போது தான் தெரிந்தது அது கடைசி பக்கம் என. படித்து முடுத்ததும் கண்களை மூடி ஒரு ஐந்து நிமிடம் இருந்தேன். கண்களை திறக்கும் போது மழை மெல்ல வடியத்தொடங்கியிருந்தது. எதிரில் நீண்ட நேரமாக உட்காந்திருப்பதாக நண்பன் சொன்னான். பாதி குடித்திருந்த தேனீர் கோப்பை சில்லிட்டிருந்தது. வெளியே போகலாமா என கேட்டான் எனக்கும் அது தேவை படுவதாய் இருந்தது.

மழை சாறலாக உருமாறியிருந்தது. கடற்கறையில் வாகனத்தை நிறுத்திய போது குடைபிடித்தபடி சிலர் நடந்து கொண்டிருந்தனர், காதலர்கள் அங்காங்கே நின்று கொண்டும் பேசிக்கொண்டும்  இருந்தனர். மழையை முழுதாக உள்வாங்கி மணல் மலர்ந்திருந்தது. சைக்கிளில் டீ விற்பவர்களோ, தீயில் சுட்டு தரும் சோள தட்டு காரியோ, குழந்தைகளை பித்துபிடிக்க வைக்கும் பஞ்சுமிட்டாய் காரனோ என யாரும் இல்லாமல் என்னவோ போல் இருந்தது கடற்கறை.  தூரத்தில் இருந்து சம்பத் என்னை பார்த்துக்கொண்டிருப்பதாக தோன்றியது. வீடடிற்கு சென்றதும் மீண்டும் நாவலை வாசிக்கவேண்டும் என்று தோன்றியது. வாகனத்தில் வீடு திரும்பும் போது சம்பத் எனக்கு நெருங்கிய நண்ப‌ன் என்றேன் நண்பனிடம், யார்ரா அது? என்றான் நானாக கூட இருக்கலாம் என்றவனை வித்தியாசமாக பார்த்தான்

If you enjoyed this post, make sure you subscribe to my RSS feed!

மறுமொழிகள்
  1. நீண்ட நாள் கழித்து உன்னுடைய தளத்திற்கு வருகிறேன் அடலேறு. வந்ததற்கு நல்ல பலன். உன்னுடைய எழுத்து படிப்பதற்கு அழகாக இருந்தது. நல்ல அனுபவம்…

      • உறுபசி சம்பத் – தமிழ் இலக்கியத்தில் முக்கிய கதாப்பாத்திரம் மட்டுமல்ல, எங்கள் நண்பர்களுக்கு மத்தியிலும் மறக்க முடியாதவன். 2008இல் கல்லூரி முடிந்ததும் நண்பன் ஒருவனுக்கு ‘உறுபசி’ பிறந்தநாள் பரிசாக அனுப்ப, அவன் சம்பத்தை முன் வைத்து எழுதிய கடிதம் மறக்க முடியாதது…

    • பின்னுட்டத்திற்கு நன்றிங்க லதாமகன்.சம்பத்தின் பாதிப்பு நமக்குள் சரி சமமாக இருக்கிறது. சம்பத் ஒரு ஆளுமை. ஒரு புதிர். ஒரு சுயநலக்காரன், ஒரு நல்ல நண்பனும் கூட. கருத்துக்களை பகிர்ந்ததற்கு நன்றிங்க.
      @ நண்பர்களே சம்பத்தை பற்றி லதாமகனின் பதிவை பார்க்க லதாமகன் கொடுத்த‌ சுட்டியை கிளிக்கவும்

மறுமொழி இடுக

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்றுக )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்றுக )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்றுக )

Connecting to %s