மெல்ல தொடங்கி
அடித்துப்பெய்கிறது
மழை
அடித்து பெய்து
மெல்ல அடங்குகிறதுன்
ஊடல்
****
நீயும் நனைகிறாய்
என்னையும் நனைக்கிறாய்
****
அடை மழை என்றாலே
இரவுப்பேருந்தில்
நீ தந்த 164 முத்தங்களை தான்
நினைத்துக்கொள்கிறேன்
****
மழைக்கு வேறு என்ன
பெருமை இருந்துவிடப்போகிறது
உன்னை நனைத்தது தவிர
****
மழையில் நனைந்து விட்டு
கைதட்டி சிரிக்கிறாய்
உன்னை நனைத்து விட்டு
பெய்யென பெய்கிறது பெருமழை
****
அந்த மழை நாளில்
குடைக்கடியில் இட்ட
முத்தத்தில் வடிந்து
போனவன் நான்
****
வாசல் தெளித்து
கோலம் போடாதே
வந்துவிடபோகிறது மழை
****
தேனீர் அதன்
ஆகச்சிறந்த சுவையை
மழை நாளில் அடைகிறது.
நீயுன் ஆகச்சிறந்த
அழகை மழைநாளில்
அடைகிறாய்
****
என்பெயரற்ற ஒரு பெயரை
அந்த மழை நாளில்
தான் முதன் முறை
கூப்பிட்டாய்
****
மழை நாளில் தேனீரின்
கதகதப்பு
பின் கழுத்தில் நீயிடும்
எச்சில் முத்தம்
****
உன் பிறந்த நாள் காலை
குதுகலத்துடன்
பொழியத்தொடங்கியது
அடை மழை
****
கவிதைகளெல்லாம் போதும்
காதல் செய்
பெய்யட்டும் பெருமழை
****
நான் தொடாத இடங்களை
மழை நனைத்ததால்
தொடங்குகிறது
மழைக்கும் எனக்குமான சண்டை
****
உடலெங்கும்
படர்ந்தென்னை சில்லிட வைக்கும்
என் மழையானவள் நீ
****



















Nice da.. Awesome..
Thanks da. its gonna be a wonderful evening
கலக்கல் நீண்ட நாளைக்கு பிறகு பழைய நினைவுகளை கண்முன் கொண்டுவந்த கவிதை
Thank You Sir
I could remember your smile when you taking class to us. keep smiling
!!!!மீண்டும் அடலேறு!!!!
அனைத்தும் அருமை.
//நான் தொடாத இடங்களை
மழை நனைத்ததால்
தொடங்குகிறது
மழைக்கும் எனக்குமான சண்டை// அட!
Thanks maari
Very nice lines da Nanba!!!
Thanks da