திசெம்பர், 2009 க்கான தொகுப்பு

இல்லாத மீசை

Posted: திசெம்பர் 19, 2009 by அடலேறு in அடலேறு, கவிதை, தமிழ், புனைவு, Imagination, scribblings
குறிச்சொற்கள்:, ,

குங்குமசிமிழின் அடைபட்டிருந்த

நத்தை ஒன்று வெளியேறி

எனக்கான இடம் கொடு என்கையில்

சம்மதிப்பதாய் பாவனை செய்து

நாட்காட்டி தேதி கிழித்த பின்

சிலந்தி வலையில் மாட்டி விடுவீர்கள்

மீண்டு எழுகையில் நவயுக

பிரிதி எய்து அனைத்தின்

சாராம்சம் நீயென போதை

ஏற்றி பின் வசை பாடி

யாருமற்ற தனிமையின் பின்னிரவில்

தேனீக்கள் கூட்டமாய் கொட்டும்

என பயமுறுத்தி மீண்டும்

சிமிழிக்குள் அடைத்த பின் வீரமாய்

தடவிக்கொள்வீர்கள் இல்லாத மீசையை

Advertisements

அனைத்து நண்பர்களுக்கும்,

இம்மாதம் இருபதாம் தேதி(டிசம்பர் 20,2009) நிலா ரசிகனுடைய சிறுகதை தொகுப்பு “யாரோ ஒருத்தியின் டைரிக்குறிப்புகள்”  மற்றும் விழியனின் ”காலப் பயணிகள் /ஒரே ஒரு ஊரிலே ” வெளியாகிறது. திரிசக்தி பதிப்பகம் இதனை வெளியிடுகிறது. எழுத்தாளர் இந்துமதி வெளியிடுகிறார்.அனைவரும் வெளியீட்டு விழாவிற்கு வருகை தந்து சிறப்பிக்குமாறு அன்புடன் அழைக்கிறேன்.

நாள் & நேரம் : ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணி
தேதி: 20 டிசம்பர் 2009
இடம்: அண்ணாசாலை தேவநேயப்பாவாணர் அரங்கு [ L.L.A.Buildings,735, Anna Salai,Chennai – 2 ]

நூல் விபரம்:

பெயர்: யாரோ ஒருத்தியின் டைரிக்குறிப்புகள்
பகுப்பு : சிறுகதைகள்
பக்கம் : 90
விலை: ரூ.70
பதிப்பகம் :திரிசக்தி
நூல் விபரம்:
பெயர்: காலப் பயணிகள் / ஒரே ஒரு ஊரிலே
பகுப்பு : சிறுவர் நாவல்
பக்கம் : 122
விலை: ரூ.70
பதிப்பகம் :திரிசக்தி

கிடைக்குமிடம் :
டிசம்பர் 30 முதல் ஜனவரி 10 வரை நடக்கும் சென்னை புத்தக கண்காட்சியில் திரிசக்தி அரங்கில் நூல் விற்கப்படும். மற்றும் தமிழகத்தின் அனைத்து முன்னணி புத்தக கடைகளிலும் கிடைக்கும்.
இணையம் மூலம் பெற : வருகின்ற 20ம் தேதி முதல் இணையம் மூலமாகவும் பெற்றுக்கொள்ளலாம். அதற்கான சுட்டி விரைவில் அறிவிக்கப்படும்.

மேலும்,
விழாவிற்கு எழுத்தாளர் நாஞ்சில் நாடன்,ரவீந்திரன்,ரேவதி கிருஷ்ணன்,சாரதா,கவிஞர் ஆண்டாள் பிரியதர்சனி,ராஜ் குமார் பாரதி ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பிக்க இருக்கிறார்கள்
மொத்தம் இருபது எழுத்தாளர்களின் நூல்கள் இருபதாம் தேதியன்று திரிசக்தி பதிப்பகம் வெளியிடுகின்றது.

விழா அழைப்பிதழ்:

http://annakannan.blogspot.com/2009/12/20.html

அனைவரும் வெளியீட்டு விழாவிற்கு வருகை தந்து சிறப்பிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

நட்புடன்
அடலேறு

இலக்கிய காதல் எப்போதும் மனதை லயிப்புக்குள் உள்ளாக்குபவை. இவை அனைத்தும் என்னை ஈர்த்த வரிகளின் பகிர்வுகள்.

பாடல்:

வாரணமாயிரம் சூழ வலம் செய்து
நாரண நம்பி நடக்கின்றான்
என்னெதிர் பூரண பொற்குடம்
வைத்து புறமெங்கும் தோரணம் நாட்ட
கனாக் கண்டேன்.. தோழி நான் கனாக் கண்டேன்

ஆசிரியர்: ஆண்டாள்-நாச்சியார் திருமொழி

பொருள்: வாரணமாயிரம்=ஆயிரம் யானைகள்

விளக்கம்:

ஆயிரம் யானைகள் சுற்றி நிற்க, என் வீரத்தலைவன்(மணமகன்) கம்பீரமாக நடந்து வருகின்றான். சுத்த தங்கத்தாலான குடங்களை எங்கும் சூழ வைத்து அழகிய தோரணம் கட்டி என் தலைவன் மணம் செய்வதாய் கனவு கண்டதாக  ஆண்டாள் தலைவி கூற்றாக தோழிக்கு கூறுகிறாள்.

————————
பாடல்:

கன்றும் முன்னாது களத்தினும் படாது
நல் லான் தீம் பால் நிலத்தில் உக்குகக்கும்
எனக்கும் மாகது எம்மைக்கும் முதவாது
பசலை பனி யியர் தீதலை
அல்குல் என் மாமனிக் கவினே

ஆசிரியர்:வெள்ளிவீதியார்- குறுந்தொகை

விளக்கம்:

பசுவின் பாலை கன்றும் குடிக்காமல், பதப்படுத்தியும் வைக்காமல் நிலத்தினில் கொட்டி வீணாவதை போல, எனக்கும் உதவாது என் தலைவனுக்கும் உதவாத என்னுடைய இந்த அழகிய உடல் இருந்தென்ன பயன், இந்த அழகிய உடம்பை பசலை நோய் ஆட்கொண்டு  போக வேண்டும் என்பதாக தலைவி கூறிய பாடல்.

———————
பாடல்:

கான மஞ்ஞை அறைஈன் முட்டை
வெயில்ஆடு முசுவின் குருளை உருட்டும்
குன்ற நாடன் கேண்மை என்றும்
நன்றுமன் வாழி தோழி! உண்கண்
நீரொடு ஒராங்குத் தணப்ப
உள்ளாது ஆற்றல் வல்லு வோர்க்கே

ஆசிரியர்: கபிலர் – குறுந்தொகை

விளக்கம்:

காட்டில் உள்ள மயில் பாறையில் ஈன்ற முட்டையை  கருங்குரங்கின் குட்டிகள் உருட்டி விளையாடும் மலை நாட்டைச் சார்ந்தவன் தலைவன். அழகிய கண்களில் வழிந்தோடும் நீரைப் பார்த்தும் இரக்கமில்லாமல் அப்படியே பிரிந்து சென்ற அந்த கடும் மனம் உடையவனை எப்பொழுதும் நினைந்து வருத்தப்படாதவர்களுக்கு மட்டுமே தலைவனது நட்பு எப்பொழுதும் இன்பம் அளிக்க வல்லது.
இவ்வாறு கூறும் தலைவி தன் பிரிவாற்றாமை (I Miss u) , தலைவன் இல்லாமை கண்டு வருந்துகிறாள்.

If you enjoyed this post, make sure you subscribe to my RSS feed!

——————————–

நூலின் பெயர் : தலைச்சுமை
வெளியீடு : நிவேதிதா பதிப்பகம்
விலை : ரூ.55
பக்கம்: 144
நூலாசிரியர் : பழமன்
———————————
வட்டார இலக்கியங்கள் தமிழில் எப்போதும் ஒரு தனி முத்திரை படைப்புகளாக வலம் வந்திருக்கின்றன. கொங்கு வட்டார இலக்கியங்களில் பழமன் குறிப்பிடத்தக்கவர்.‘பொன் ஊற்று’, ‘நந்தியா வட்டம்’ என்ற இரண்டு நாவல்களை எழுதிய பழமனின் மூன்றாவது நாவல்‘தலைச்சுமை’. தலைச்சுமை நாவலில் கொங்கு வட்டார மொழியில் கிராமமும் அதன் சார்ந்த இடங்களையும் தாண்டி கிராமத்தின் எதார்த்த மனிதர்களையும் அவர்களின் வாழ்வியல் கூறுகளையும் ஆசிரியர் பழமன் புத்தகம்  முழுக்க அள்ளித்தெளித்திருக்கிறார்.

கொங்கு வட்டாரத்திற்கே உரிய மரியாதை வரிகளிலும், கதை மாந்தர்களின் வடிவத்திலும் சரியாக பொருத்தியிருக்கிறார் ஆசிரியர். நாவலின் நாயகன்  வேலுவை ஒரு சராசரி மனிதனாகவும் கிராமத்தின் தின வாழ்க்கையில் தன்னை இனைத்துக்கொண்டு ஓடும் ஒரு சாதாரண மனிதனாக வலம் வர விட்டிருக்கிறார். நாவலின் முதல் வரி “மணி பத்து இருக்கும் , பழைய சோத்து நேரம்” என ஆரம்பிக்கும்  இடத்தில் இருந்து  நம்மை கை பிடித்து கூட்டிச்செல்கிறார் கொங்கு தேசத்தின் ஒரு கிராமத்திற்கு. கிராமத்திற்கே உரிய விளிம்பு நிலை மனிதர்கள் கிட்டான் மாதாரி, டெம்போ ரங்கநாதன், மினிடோர் மருதாசலம், ட்ராக்டர் அருணாசலம், கால் டாக்சி கருப்புசாமி, பவர்ஸ்ப்ரேயர் பொன்னு சாமி, போரிங் மெஷின் பூங்காவனம், மெக்கானிக் மாரிமுத்து, ஊராட்சி உறுப்பினர் வேலாயுதம் அழகாக பாத்திரங்கங்கள் நாவல் முழுக்க தன் பங்கு நியாங்களையும், தனக்கே உரிய கிராமத்தின் விவரனைகளையும் தனக்குள் பொதித்து வைத்திருக்கின்றன.

நாவலின் நாயகி சாந்தியின் சொந்த ஊர் பொள்ளாச்சி பக்கம் நெகமம் , கொங்கு வட்டார கிராமத்தின் தேர்ச்சியை மிக ரசனையுடன் நாவலின் மேற்கோள் காட்டப்பட்டிருக்கிறது. நாயகி மின்சாரத்துறையில் வீடு வீடாக சென்று மின் கணக்கு எடுக்கும் பாத்திரமாகவும், பெண்னைகே உரிய நளினத்தை அந்த பாத்திரம் எப்படி வெளிப்படுத்துகிறது என்பதையும் பார்க்கையில் நிஜமாகவே ஒரு கொங்கு  தேச நாயகியை நம் கண்முன் உலவவிட்டிருக்கிறார். நிச்சயமாக சாந்தியை கொங்கு வட்டார மக்கள் தினமும் சந்திருக்ககூடும். ஒரு கட்டத்தில் வேலு ஒரு தாழ்ந்த சாதி வீட்டில் தேனீர் அருந்துவதாக குறிக்கப்பட்ட இடத்தில் அந்த பெண் ‘ எங்க வீட்டிலயெல்லாம் நீங்க குடிப்பீங்களா’? என கேட்கிறார் இது அப்பட்டமான மனதின் ஏக்கம், கொங்கு தேசத்தின் மரபுகளை முதன் முதலில் தாண்டும் ஒருவனை பார்த்து முன் வைக்கும் வார்த்தை கோப்புகள். நாயகனின் தவறை ஒற்றை வரி சொல்லில் மறந்துவிட்டதாக  சொல்லி நம் மனதை விட்டு நீங்க மறுக்கிறார் நாயகி. இலை மறை காயாக கிராமத்தில் நடக்கும் தவறுக்கான காரணமும் அழகியல் சார்ந்து சிறப்பாக விளக்கப்பட்டுள்ளது

கொங்கு தேச கிராமத்தின் வாழ்க்கையும்,காதலும் எந்த வித விரசமும் இல்லாமல் அள்ளிப்பருக தலைசுமை ஒரு அருமையான நாவல்

உன் கடுமையான சொற்களின்

மீட்டெடுக்க முடியாத வார்த்தை

கணங்களை தாங்கவியலாத

பொழுதில் என்னிலிருந்து கொஞ்சம்

கொஞ்சமாய் உன்னை

விடுவித்துக்கொள்கிறாய்

முழுதுமாய் வெளியேறும் முன்

நிச்சயம் தரவேண்டும்

உனக்கான முத்தமும்

வெளியேறிய ப்ரதேசத்தின்

ரத்தக்கறைகளும்.

If you enjoyed this post, make sure you subscribe to my RSS feed!