யட்சி

இன்று காலை 48 ‘ A’

பேருந்தில் சாம்பல் நிற

யட்சியை பார்த்தேன்

அதன் அழகு வனப்பானதும்

வெள்ளை பூவின் வாசனையை

தனதண்டையிலும் வைத்திருந்தது

யட்சிகளை பேருந்தில் காண்பது

இதுவே முதல் முறை

அதன் நகம் அழகாக ஒதுக்கப்பட்டும்

தலைமுடி சீராக வெட்டப்பட்டும் இருந்தது

யட்சியின் கண்கள் வழியே

நீளும் கரங்களில்

என்னை விடுவித்துக்கொள்ள

திரும்பும் போது

பார்த்தேன் யட்சி

என்னை உயிருடன்

தின்று கொண்டிருந்தாள்

———-oO0————-

யட்சியின் குட்டியூன்டு இதயம்

வெதுவெதுப்பாகவும் எனக்கு

ஏற்ற இடமாகவும் மாறிப்போனது

அவளின் மகரந்த வாசம்

எனக்குள் மெல்ல மெல்ல

காதலை வரவேற்றுக்கொண்டிருந்தது.

யட்சியின் அடிமை பத்திரத்தில்

கையெழுத்திட்ட மறுவருடம்

என்னை கக்கிப்போட்டது

வெம்மை நிரம்பிய கோடையில்

குருதி சகிதமாக பாதையில்

கிடந்தேன்.

இருந்தாலும் யட்சியின் மேலான

காதலும் அவளின் வாசமும்

கிலேசமடைய வைப்பவை.

———-oO0————-

மெல்ல புறப்பட்டு

வேகம்கொண்டு ஓடுகிறது

என் புரவி

கல்லூரி சாலை, மென்பொருள்

நிறுவனங்கள் வழியாக

ஓடிய புரவி கொண்டு சேர்க்கிறது

பன்னாட்டு விமான நிலையத்தில்

இறக்கை கொண்ட யந்திரம்

என்னை உள்ளிழுத்துக்கொண்டு

வான் நோக்கி பறக்கையில்

தோன்றியது

யட்சியின் மகரந்த வாசனை

மறக்கப்படும் இல்லையெனில்

மறக்கடிக்கப்படும்

If you enjoyed this post, make sure you subscribe to my RSS feed!

5 thoughts on “யட்சி

Add yours

  1. முதல் கவிதை அதிகம் பிடித்தது. “யட்சி” என்கிற சொல் அடிக்கடி வராமல் முயற்சித்தால் இன்னும் கவிதை சிறப்பாக வந்திருக்கும் என்பது என் எண்ணம்.

    வாழ்த்துகள்,முன்பைவிட அதிக முன்னேற்றம் 🙂

    Like

அடலேறு -க்கு பதில் அளிக்கவும் மறுமொழியை நிராகரி

Create a free website or blog at WordPress.com.

Up ↑