வெயில் தின்ற மழையும் இரவை தின்ற கவிதையும்

புதுக்கவிதையில் இருந்து நவீன கவிதை வாசிப்பிற்கு வந்த பிறகு கவிதையின் சாராம்சமே முற்றிலும் மாறிப்போய் ஒரு புது உலகம் இயங்கிகொண்டிருப்பது எப்படி மகிழ்ச்சியை தந்ததோ அதே மகிழ்ச்சியை நிலா ரசிகனின் “வெயில் தின்ற மழை ” நவீன‌ கவிதை தொகுப்பும் தந்தது.

நிலாவின் மயிலிறகாய் ஒரு காதல், பட்டாம் பூச்சியின் கனவுகள் புத்தகத்தை படித்துவிட்டு வெயில் தின்ற மழை படிப்பவருக்கு இதன் ஆசிரியர் தான் இந்த புத்தகத்‌தை எழுதிய‌வ‌ர் என்ப‌து ஆச்ச‌ர்ய‌மாக‌த்தான் இருக்கும். இந்த மனிதர் கவிதைகளுக்கு வார்த்தைகளை எங்கிருந்து பிடிக்கிறார் என்பது இன்னும் எனக்கு புதிராகவே உள்ளது.

நல்ல குளிர் அன்று இரவு ப‌தினொன்று ம‌ணியிருக்கும் அப்போது தான் நிலாவிட‌ம் க‌விதை தொகுப்பை வாங்கி வ‌ந்தேன். குளிருடன் சேர்ந்த‌ இர‌வு அறையில் அனைவ‌ரையும் உற‌ங்க‌ வைத்திருந்தது. கால்கள் தரையில் பட்டவுடன் சில்லிட்டது. வழக்கமாக புத்தகம் படிக்கும் ஜன்னலருகே  இருக்கையை இழுத்துப்போட்டு உட்கார்ந்து கொண்டேன். வெளியே இருள் என்னை பார்த்துக்கொண்டிருப்பதாய் இருந்தது.

வெயில் தின்ற மழை தொகுப்பை வாசிக்க தொடங்கினேன். முதல் பக்க அட்டை , பின் பக்க மனுஷ்யபுத்திரன் வார்த்தைகள் என அனைத்தும் கடந்து உள்சென்றதும் , நிலாவின் அறிமுகம். கவிதைக்கு வந்தேன் முதல் கவிதையே புதுக்கவிதை போல எளிதில் கடந்து போக முடியாது என முரண்டு பண்ணியது. இரண்டு முறை வாசித்தேன் ஒரு அர்த்தத்தை தந்தது. அடுத்த முறையும் வாசித்தேன் இன்னொரு அர்த்தத்தை தந்தது.புதுக்கவிதையில் நமக்கான அர்த்தங்களை கவிதையோடு நாம் தான் இணைத்துக்கொள்ளவேண்டும் என்பது அலாதியாக இருந்தது. இப்போது குளிர் ஜன்னல் வழி உள்ளேறி கைகளையும் சில்லிட வைத்திருந்தது. எனக்கு ஒரு கவிதையின் வரி பிடித்துவிட்டால் அதன் தாக்கமே இரண்டு நாள் இருக்கும். எப்போதும் அதன் வரிகளையே முணுமுணுத்துக்கொண்டிருப்பேன். அடிக்கொருமுறை அந்த பக்கத்தை திருப்பி திருப்பி பார்த்தும் சிரித்துகொண்டுமிருப்பதை வித்தியாசமாக இருக்கிறது என்று நண்பர்கள் சொல்லுவதுண்டு.கவிதையை இதைவிட வேறு எதாவது முறையில் கொண்டாட முடியாதா என யோசித்திருக்கிறேன். கைகள் சில்லிட மனதுக்கு நெருக்கமான கவிதைகளை படித்துக்கொண்டிருக்கிறேன் என்ற நினைப்பே சந்தோஷத்தை கொடுத்தது. நிலாவின் பல கவிதைகளை திரும்ப திரும்ப வாசிக்கும் போது அது தரும் பரிமாண மாற்றங்கள் புதுமையான‌ வேறொரு மனநிலையில் வைத்திருந்ததாக உணர்ந்தேன்.

வார்த்தைகளற்ற மென் இசையை எனக்கு மட்டும் கேட்கும் அளவு வைத்துக்கொள்ள வேண்டும் போல தோன்றியது. மென் இசையுடன் வாசிக்கப்படும் கவிதை அதன் நிர்வாணம் கடந்து ரசிக்கப்படுகிறது என எனக்கு நானே சொல்லிக்கொண்டேன். இசையை மெல்ல சுழலவிடேன்.இன்னும் அதிக தீரத்துடன் ஜன்னல் வழியே குளிர் அறைக்குள் இறங்கிக்கொண்டிருந்தது.சில கவிதை பக்கங்கள் பல நிமிடங்களுக்கு என்னை கட்டிப்போட்டது. மெல்ல ஒவ்வொரு கவிதைகளுக்குள் இருந்து வெளிவந்து அடுத்த கவிதைக்குள் மாட்டிகொண்டேன். வெளியெங்கும் இருட்டு, சில்லிட வைக்கும் குளிர், அறையெங்கும் மென் இசை, கையில் கவிதை என இரவு அத்தனை அழகாகியிருந்தது

என்னை க‌வ‌ர்ந்த‌ சில‌ க‌விதைக‌ள்

குழ‌ந்தையாத‌லின் சாத்திய‌ங்க‌ள் ஏதும‌ற்ற‌
இர‌வொன்றில் உன‌க்கொரு
உடைந்த‌ பொம்மையை ப‌ரிச‌ளித்து
சிரிக்கிற‌து கால‌ம்.
மென்காற்றில் சித‌றும் சார‌லில்
ந‌னைந்த‌ப‌டி த‌னித்த‌ழுகிறாய்
நீ.
(வெறுமையின் அழ‌கான‌ வ‌ர்ண‌னை இது )
****

வீழ்ந்து கிட‌த்த‌லை விட‌
ப‌றந்து சாத‌லே பெரிதென‌
உண‌ர்த்தின‌
ச‌வ‌ப்பெட்டிக்கு காத்திருக்கும்
துருப்பிடித்த‌ ஆணிக‌ள்

*******

உதிர்ந்த‌ முத்தங்க‌ளை பொறுக்கும்
ந‌ட்ச‌த்திரா த‌ன் க‌ன்ன‌த்தின் சுருக்க‌ங்க‌ளை
வ‌ருடிக்கொடுக்கிறாள்.
சித‌றிக்கிட‌க்கும் முத்த‌ங்க‌ளின் ந‌டுவே
கால‌ம் க‌ண்சிமிட்டிக்கொண்டிருப்ப‌தை
வ‌லியுட‌ன் நோக்குகிற‌து அவ‌ள‌து க‌ண்க‌ள்.
தீராப்ப‌சியுட‌ன் வான‌ம் பார்த்துக்
க‌த‌றுகின்ற‌ன‌ வீழ்ந்த‌ இலைக‌ள்.
மெல்ல வழுக்கிறது
நிறமற்ற மழை

******

இந்த கடைசி கவிதையை என்னால் அத்தனை சீக்கிரம் கடந்து போக முடியவில்லை. வலிகளை வார்த்தைபடுத்துவது கடினம் என்று சொல்லிவிட்டு அனாசயமாக நட்சத்திராவின் வலிகளை வார்த்தைபடுத்தியுள்ளார். கவிதையில் வரும் நட்சத்திரா பற்றியே நீண்ட நேரம் யோசித்துக்கொண்டிருந்தேன்.

வார்த்தைக‌ளையெல்லாம் பின்னிப்போட்டு கிற‌ங்க‌டிக்கும் க‌விதை த‌ருவ‌தில் நிலா எப்போதும் தனக்கான இடத்தை தெரிந்தே வைத்திருக்கிறார் என்று தோன்றியது.  இரவுகளுக்கு கைநீளுவதும், உலகின் மிகப்பெரிய தவறை துளியாக்குவதும் என மாயவித்தைகளை கண் முன்னே கடைபரப்பிக்கொண்டிருந்தது வெயில் தின்ற மழை. சில‌ க‌விதைகளில் ஆரம்பங்களிலேயே உச்ச‌த்தை தொடுகிறார்.

க‌டைசிவ‌ரிக‌ளில் வ‌சிய‌ம் த‌ட‌வியே க‌விதைவ‌டிக்கிறார் நிலா. கடைசி கவிதையை உணர்ந்து முடித்ததும் தான் தான் தெரிந்தது வெயில் தின்ற மழை என்னுடைய பாதி இரவை முழுதாக தின்று முடித்திருந்தது என்று. நாற்காலியை விட்டு எழுந்தேன். மணி நான்கு என கடிகாரம் காட்டிய‌து.

புத்த‌க‌த்தை மூடிவைத்துவிட்டு அத‌ன் நினைவிலேயே இருந்தேன். தேனீர் குடிக்க வேண்டும் போல இருந்தது. எங்காவ‌து வெளியில் செல்ல‌ வேண்டும் என்று தோன்றிய‌து. டிச‌ம்ப‌ரில் மாதங்களின் அதிகாலை அழ‌கான‌து அவ‌ற்றை ர‌சிக்க‌ வேண்டும் போல‌ இருந்த‌து. கவிதை புத்தகத்தை எடுத்துக்கொண்டு வெளியே சென்றேன். உட‌லை ந‌டுங்க‌வைக்கும் டிசம்பர் மாத குளிர் என்னை உள்ளிழுத்துக்கொண்ட‌து

சோடியம் ஒளி மெல்ல கசிந்து கொண்டிருந்தது. பின்னிரவில் சோடியம் விளக்கை சுற்றிய விட்டில்  பூச்சிகள் விள‌க்கின் அடியில் விழுந்திருந்தன‌.சாலையில் நான், குளிர்,க‌விதை என‌ மூன்று பேர் ம‌ட்டும் இருப்ப‌தாய் தோன்றிய‌து.

சோடிய‌ம் விள‌க்கில் இன்னும் சில‌ க‌விதைக‌ளை ப‌டித்தேன். முன்பு ப‌டித்த‌தை விட‌ இன்னும் அழ‌காக‌ தோன்றிய‌து.  சூழ்நிலைகளும் கவிதையின் அழகியலை தீர்மானிக்கின்றன என்று உணர்ந்தேன். நிலாவின் க‌விதைக‌ளில் வ‌ரும் ந‌ட்ச‌த்திராவும் என்னுடைய‌ க‌விதைக‌ளில் வ‌ரும் தூரிகாவும் ஒருவ‌ரே என்று நிலா சொன்னது நியாபகம் வந்தது. ந‌ட்ச‌த்திராவை பார்க்க‌ வேண்டும் போல‌ இருந்தது.

குளிரில் நடுங்கியபடியே சைக்கிள் தள்ளிக்கொண்டு வந்த ஒருவர் என்னை பார்த்து புன்னகைத்துவிட்டுப்போனார்.அறைக்கு வந்து மீண்டும் பிடித்த கவிதைளை படித்தேன் புத்த‌க‌த்தை நெஞ்சில் சாய்த்த‌ப‌டி எப்போது உற‌ங்கிப்போனேன் என நினைவில்லை. காலை எழுந்ததும் ஒரு வரி பிசகாமல் நிறைய‌ க‌விதைக‌ள் நியாப‌க‌த்திற்கு வ‌ந்தது.இதே போல் என்னுடைய‌ ஒன்றாம் வ‌குப்பு த‌மிழின் முத‌ல் பாட‌லும் , பக்கத்தின் வண்ணம் என மாறாமல் சில‌ ச‌ம‌ய‌ம் நியாப‌க‌த்திற்கு வ‌ரும், சில நேரங்களில் அந்த புத்தகத்தின் வாசம் கூட உணர்ந்திருக்கிறேன். சிரித்துக்கொண்டேன். ப‌டுக்கையில் இருந்து கொண்டே சில‌ கவிதைக‌ள் வாசித்தேன். அன்று மாலை வ‌ரை வெயில் தின்ற மழையுடன் பேசிக்கொண்டிருந்தததாக நியாபகம்.

ம‌ழையுட‌ன் க‌ழியும் இர‌வும்,ம‌ன‌திற்கு பிடித்த‌ க‌விதைகளுடன் தொடங்கும் காலையும் எப்போதுமே வ‌சீக‌ர‌மான‌வைகள்.

புத்த‌க‌த்தின் பெய‌ர்: வெயில் தின்ற‌ ம‌ழை ஆசிரிய‌ர் : நிலார‌சிக‌ன் ‌ ( உயிர்மை பதிப்பகம் ) விலை : 50 ரூபாய் ‌ இணையத்தில் பெற‌: http://tinyurl.com/2uqqkta

15 thoughts on “வெயில் தின்ற மழையும் இரவை தின்ற கவிதையும்

Add yours

  1. நீங்கள் குறிப்பிடும் கவிதைகள் எப்படி எனத் தெரியவில்லை. எனக்கு இங்கே ‘வெயில் தின்ற மழை’யை வாங்கவும் முடியாது. ஆனால் உங்கள் விமர்சனம் அருமையாக உள்ளது. விமர்சனமே கவிதையாக உள்ளது :).

    Like

  2. புத்தகதை விரைந்து படிக்கதூண்டும் விமர்சனம்.வெறுமையை பர்ர்ய கவிதையை படிதபோது பிரபல் பிரேஞ்ச்கவிதைகள் என்ற புத்தகத்தில் உள்ள சோகம் என்ற கவிதை நினைவுக்கு வருகிறது.இக்கவிதையை இணைதளத்தில்(http://www.angelfire.com/indie/tbindia/century19/poems-in-french.html) காணலாம்.

    Like

அடலேறு -க்கு பதில் அளிக்கவும் மறுமொழியை நிராகரி

Create a free website or blog at WordPress.com.

Up ↑