ஏப்ரல், 2012 க்கான தொகுப்பு

வெயிலானவள் நீ

Posted: ஏப்ரல் 20, 2012 by அடலேறு in அடலேறு, கவிதை
குறிச்சொற்கள்:,

வெயில் நாட்களில்
துப்பட்டாவை பின்
கழுத்தில் சுற்றி
தலை மூடியிருப்பாயே
அதில் வடிந்து போனவன்
நான்

******

வெயிலால் உருகிப்போன
சாக்லேட்டை நுனி
மூக்கு படர நீ
சாப்பிடுவதை ரசிக்கவேணும்
நீளட்டும் இந்த கோடை

****
கோடையின் இந்த‌
நடுநிசி விழிப்புகள்
அனைத்தும்
உன்னை
நினைத்துக்கொள்ளத்தான்

******

வெட்கம் விலகிய
இரவில் போர்வை விலக்கி
அணைத்துக்கொள்
நீளட்டும் இந்த
அடர் ஜாமம்

******

நீண்ட கோடை
விடுமுறை முடிந்த‌
சந்திப்பில்
எல்லாரும் இருக்க‌
ஓடிவந்து பின்கழுத்தனைத்து
முத்தமிட்டாயே போதும்
இனி மெல்ல
தொடங்கட்டுமென் கர்வம்

********

யாருமறியா என் பிம்பத்தில்
மூழ்கி காதல் எடுக்கும்
சிறகற்ற யட்சி நீ

********

முன்கை கொஞ்சமே மடக்கி
நெற்றி வியர்வை
துடைத்த பின் பார்ப்பாயே
அதில் தான்
என்னை தேடிக்கொண்டிருக்கிறேன்

******

இத்தனை வெயிலா என‌
சலித்துக்கொள்கிறாய் நீ
இத்தனை அழகா என‌
பிரமித்துக்கொள்கிறது
வெயில்

******

உனக்கென்ன பேசாமல்
கல்லூரிக்கு சென்று
விடுகிறாய்
உன்னை காணாத கோபத்தில்
சுட்டெரிக்கிறது சூரியன்
மாலை வரை

*****

யாருமறியா பின்னிரவில்
இறுக்கி மூடிய போர்வைக்குள்
வரும் கூதல் காற்று நீ

*****

பேருந்து பயணந்தில்
ஏறும் இடம் தொடங்கி இறங்கும்
இடம் வரை கூட வந்து
இறங்குகையில் முத்தமிட்டு செல்பவள் நீ

*******

உதடு சுழித்து
வியர்வை துடைத்து
மென் துப்பட்டாவில் காற்று வீசியபின்
முணுமுணுத்துக் கொள்வாய்
சூரியனை அன்பிலன் என்று

*******

வியர்வை படிந்த
முகத்தில் முத்தக்
கோட்டோவியம்
வரையும் என்
வெயிலானவள் நீ

*****

சார்பு இடுகை : மழையானவள் நீ

Advertisements