பிப்ரவரி, 2013 க்கான தொகுப்பு

Image

வாழ்வும் கலையும் பின்னிப்பினைந்த இரட்டையர்கள்.  சந்தோஷம் , துக்கம், வேதனை என எல்லா காலத்திலும் கலையை மனிதன் தனக்குள் நிகழ்திப்பார்க்கிறான், அது சத்தமிட்டு சினிமா பாடலை பாடுவதாகட்டும், உட்ச போதையில் வேட்டியை மடித்து கட்டி குத்தாட்டம் போடுவதாகட்டும்.

கலையை தொழிலாக வைத்திருப்பவர்களுக்கு கலை எல்லாமுமாய் இருக்கிறது. பெரும்பாலன கலைஞன் இழப்புகளையும், வலிகளையும் தாண்டி தான் கலையின் முதல் துளியை சுவைக்கிறான். தன் அவமானங்களுக்கு கலையின் மூலம் ஒரு காத்திரமான பதிலை கொடுக்க முடியும் என்பது அவன் எண்ணம்.

அட! விடு மாப்ள நானா பொண்ணு பொண்ணுகுடு கல்யாணம் பண்ணிக்கறனு சொன்ன அப்பா தா தேவையில்லாம பேச்ச எடுத்தாரு , இப்ப பாரு சினிமா காரனுக்கு பொண்ணு தர மாட்டன்னு அசிங்க படுத்தி அனுப்ச்டாங்க., வேணான்னு சொன்னா கேக்கனும் மாப்ள , ஆனா சதீசா ஒன்னுமட்டும் பாத்துக்க முத படம் வந்து பிச்சுட்டு ஓடும் அப்ப சொல்லுவாங்கடா அய்யோ மிஸ் பண்ணிட்டமேன்னு அதான் மாப்ள நமக்கு வேணும். எடுத்துக்க சியர்ஸ் என்றான் பாலா..

நீண்ட நாள் கழித்து வட பழனி கடையில் டீ மாஸ்டராய் எனக்கு டீ கொடுத்தது பாலாவின் கரங்கள். சிரித்த படியே கையில் ஒரு டீ கிளாசுடன் வந்தவன், மச்சா எப்படி இருக்க ,  கைல 3 ஸ்கிரிப்ட் ரெடி பண்ணீட்டண்டா, நம்ம அப்பார்ட்மெண்ட் மாடில அந்த ஒரத்துல இருந்து டாப் வீயூ சாட் வெச்சா செமயா இருக்கும்ல டா, என்ன சொல்ற.., என்றான் புன்னகைத்துவிட்டு வந்தேன்.பெண் கொடுக்க மறுத்த வீட்டிற்கு தரும் காத்திரமான பதிலுக்காய் கோடம்பாக்க சாலைகளின்  சுற்றிக்கொண்டிருக்கிறான் பாலா.

_DSC9509

கார்த்தியை டவுசர் போட்ட காலத்திலிருந்து தெரியும்.,நெகமம் சுறாமீன் ஜிக்காட்ட குழு சுத்துப்பட்டு ஏரியாவில் ஏகத்துக்கும் பேமஸ். இறப்பு, கல்யாணம், திருவிழா, வரவேற்பு என எங்கும் தலையில் ஒரு சிறு துணியை கட்டிக்கொண்டு டண்டனக்க,டண்டனக்க என ஒலியை கேட்டால் ஆட துவங்கி விடுவான்.ஒரு தாளம் மாறாது, ஒரு அசைவு கூட பல்லை இளிக்காது. அத்தனை நேர்த்தி.  இவன் ஆடுவதை பார்க்க வரும் பல பெண்களை நான் அறிவேன்.

சென்னை இலக்கிய மன்றத்தில் அவன் ஆடிய ஆட்டத்தை பார்த்துவிட்டு வந்து  இதை எழுதுகிறேன். எங்க மாப்ள பஸ் ரேட்டுல அம்மா என்னைக்கு கை வெச்சுதோ அதோட போச்சுடா எல்லாம், ஒரு நாளைக்கு 200 ரூபா சம்பளத்துல 100 ரூபா இதுக்கே எடுத்து வெக்க வேண்டியதா இருக்குடா, கஷ்டம் என்றான். வாழ்வாதாரமாய் இருந்த கலை இப்போது அவனுக்கு இரண்டாம் தொழில்., கலைஞன் கஷ்ட ஜீவனத்திற்காக கலையை விட்டுச்செல்கிறானே ஒழிய ஒரு போதும் வெறுப்பதில்லை.,

 தெரிந்தவரின் இறப்புக்காக போயிருந்தோம் அவரின் இரண்டாம் மனைவி அழுவதை பார்த்து பாலா இப்படி சொன்னான்.,” இந்தக்கா ரொம்ப லைவ்வா அழுகுதுல்லடா”  என்றான். அப்போது தோன்றியது, கலைஞனுக்குள் கலை என்பது ஓய்வில்லாத அலையை போல சதா இயங்கிக்கொண்டே இருக்கிறது. புற உலகில் இருந்து அவன் எப்போதோ தன்னை விடுவித்துக்கொண்டான். கலையாக மட்டும் தான் அவனால் காட்சியை விவரிக்க முடிகிறது.

என்னை தாளம்போட்டு ஆட வைக்கும் இசை பறை.ஆபீஸ் கல்சுரலில் பறை அடித்துக்கொண்டிருந்தார்கள். ஆபிஸ் நண்பனிடம் கேட்டேன், மச்சா உனக்கு ஆடனும்னு தோன்ல? என்றேன். மச்சி ஒரு கோட்டர் அடிச்சுட்டு ஊர்பக்கம் போய் செமயா ஒரு குத்து குத்தனும்டா என்றான், ஏண்டா இங்க ஆடக்கூடாது, வா ஆடலாம் என்றதற்கு., ஆமா நீ ரோட்ல பறை அடிக்கறத கேட்டுட்டு டண்டனக்க டண்டனக்கன்னு ஆடுவ, ஆடீட்டு ஆபீஸ்க்கு வா உன்ன எப்படி பாக்கறான்னு பாரு என்றான். தமிழனின் ஆதிகலையை கண்காணாத இடத்தில் ஆட சொல்கிறது. கையில் மது கோப்பையுடன் பெண்ணின் இடை இழுத்து ஆடுவதை மற்றவர்கள் பார்க்க வேண்டும் என்பதற்காக ஸ்டார் ஹோட்டலில் நடத்தப்படும் எத்தனை பர்த் டே பார்ட்டிகளை பார்த்திருக்கிறேன்.

பறையை பற்றி உனக்கு தெரியுமா என்றேன் தோழியிடம், அய்யே! அது மாட்டு தோல்ல செஞ்சது, அத எப்படி தான் தொடறங்களோ உவ்வே! என்றாள் . பறை வாசிப்பதற்கு முன், தன் தோலையே தனக்கு வாழ்வாய் கொடுத்த மாட்டிற்கு தான் முதன் வணக்கம் வைக்கிறான், அது எத்தனை பேருக்கு தெரியும், இத சொல்றியே நீ சாப்பிடும் மஸ்ரூம்கு மட்டும் உயிர் இல்லைன்னு யார் சொன்னது என்றேன் ? போடா போங்கு என தலையில் தட்டி விட்டு ஓடிப்போனாள். முடிவு பெறாத கேள்விகள் நம்மை விட்டு ஓடி ஒளிந்து கொண்டுதான் இருக்கிறது. ஒளிந்து கொண்ட இடத்தில் வெளிச்சம் அடிப்பது கார்பரேட் உலகில் முட்டாள்தனம்.

கார்த்தியிடம் ஒரு முறை மச்சா ஏன் சாவுல பறை அடிக்கறாங்க என்றேன்., அது என்னன்னா மாப்ள, பறை அடிச்சா எல்லாருக்கும் ஆடனும்னு தோனும், கை கால் கொஞ்சமாச்சும் அசையும் அது தான் இயற்கை., இப்படி ஆட வெக்கற பறை அடிச்சுமே ஒருத்தன் ஆடமா படுத்து கெடக்கான்னா  அவ பொணம், செத்துட்டான்னு ஆகுதுல்ல. அத எல்லாத்துக்கும் சொல்றதுக்கு தாண்டா பறை அடிக்கறாங்க என்றான்.

நீங்க ஜிக்காட்டம் ஆடறவருதான தம்பி என்று கார்த்திக்கின் பூச்சிக்கொள்ளி மருந்து சூப்பர் வைசர் கேட்டிருக்கிறார்.,அது முன்னாடி சார் இப்பல்லாம் இல்லை என்றிருக்கிறான். ஆமாம் என்று சொன்னால் வேலை போய்விடும். ஏன்னா ரோட்டுல ஆடீட்டு திரிறவ வேலையை ஒழுங்காக செய்ய மாட்டான் என்பது ஆவரின் அசைக்க முடியாது நம்பிக்கை. திரையில் ஆடியவர்கள் தான் நம்மை இன்று ஆள்கிறார்கள் என்பதை எப்படி அவருக்கு புரிய வைப்பது. தமிழின் ஆதிகலையை தொழிலாக வைத்திருந்தவன் கையில் பூச்சிகளுக்கு மருந்தடிக்கும் வேலையை கொடுத்தது நீங்களும் நானும் தான்.

 இப்போதெல்லாம் கலையுடன் சேர்ந்து கலைஞனும் ஒளிந்து கொள்ள வேண்டும்.,இல்லை என்றால் நம்மை வெளியே தள்ளிவிட்டு நம்மீது குத்தாட்டம் போடுவதற்கு ஒரு முதலாளிக்கூட்டமே கையில் பூதக்கண்ணாடி வைத்து நம்மை பார்த்துக்கொண்டிருக்கிறது.

Advertisements

மிக நீண்ட பயணம் இது

Posted: பிப்ரவரி 15, 2013 by அடலேறு in அடலேறு

Marriage_invitation

யூமாவின் மஞ்சள் வெயில் படித்த பிறகு திகட்ட திகட்ட ஒரு காதல் கதையை படிக்கவே இல்லை. இந்த முறை புத்தக திருவிழாவில் கூட மஞ்சள் வெயிலை விட ஒரு அழகான காதல் தொகுப்பை எடுத்து விட முடியுமா என தேடிக்கொண்டிருந்தேன். உளவியல்  காதலின் ரகசிய  போல., உளவியல் படிக்க ஆரம்பித்த பிறகு காதல் கிளர்ச்சியை தர வில்லை அதன் அழகியல் மட்டும் தான் இம்சிக்கிறது.

சென்னையில் இன்று காலை  நல்ல மழை., தரை முழுக்க சில்லென ஈரம் படிந்திருந்தது.  மழை இன்னும் விடவில்லை. அலுவலகம் போகும் நண்பர்களெல்லாம் போர்வையை இழுத்து போர்த்தி குளிருக்கு இதமாய் உறங்கிக்கொண்டிருந்தனர். கீரனூர் ஜாகீர் ராஜாவின் ‘அழியாத கோலங்கள்’ படித்துக்கொண்டிருந்தேன். காதல் நம்மை வசீகரிக்கும் போது எத்தனை அழகாயிருக்குமோ அத்தனை அழகு.,  நமக்கு நெருங்கியவர்களுக்கோ,., சம காலத்தில் நமக்கு மிக அருகில் பயணப்பட்டவர்களுக்கோ அவர்களின்  காதல் ஒற்றை தீற்றல் அனுபவத்தை பகிர்ந்து கொள்வதும்.  அது அந்த நாளையே அழகாக்குகிறது.

மச்சா, என்னோட சின்ன வயசு பிரண்ஸ் ரெண்டு பேரு 14 வருஷம் லவ் பண்ணி, நெக்ஸ்ட் மன்த் மேரேஜ் பண்ணிக்க போறாங்கடா என்று நவீன் சொன்னதும் தூக்கிவாரி போட்டது.ஏண்டா நம்ம செட்லயே எல்லாருக்கும் இப்பதான் 25-26 வயசு ஆகுது அதுல எப்டிடா 14 வருசம் லவ் பண்ணீருப்பாங்க உதார் விடாத என்றேன். சென்னையின் ஒரு மாதத்தில் நான்கு காதல்களை கழட்டி மாட்டும் திறமைசாலிகளுடன் நிறைந்தது எனதிருப்பு. நமக்கு 1000 பிகர் மடியும் மச்சி என சட்டை பட்டனை கழட்டி விட்டு திரிந்தவர்களை தான் பார்த்துள்ளேன்.14 வருட காதலெல்லாம் கனவிற்கு ஒரு கனவு வந்தால் தான் நடக்கும் என்னை பொறுத்தவரை.

தினகரனும், பூங்கோதையும் 6ம் வகுப்பிலிருந்து ஒன்றாய் படித்தவர்கள். என்னுடைய ஆறாம் வகுப்பு  பிஸாஷ் பேக் தான் ஓட்ட வேண்டும். இப்போது நினைத்துப்பார்க்கிறேன்., எப்படி உக்கார்ந்தாலும் மூன்று மாத்தில் பின்னாடி கிழிந்து போகும் என் ஆறாம் வகுப்பு அரை கால் நிஜாரும், வெள்ளை சட்டையும் என்னை பார்த்து சிரிக்க கூடும், தினாவும் பூங்கோதையும் நான் படித்த பள்ளிக்கு மிக அருகில் உள்ள பள்ளியில் தான் படித்திருக்கிறார்கள். ஒரு தடவை கூட அவர்களை பார்த்தில்லை. என் முன்னாடி தான் வெளிர் நீல கலர் சீருடையில் நடந்திருக்கவேண்டும். ஆண்கள் மேல்நிலைப்பள்ளியின் அவுத்து விட்ட அராத்து நாங்கள், ஒரு வேளை அப்போது பார்த்திருந்தால் கிண்டல் செய்திருக்கக்கூடும். அதனால் தான் பார்க்கவே இல்லை போலும்.  மழை பெய்யும் இந்த சத்தத்துடன் 14வருட காதலை திரும்பி பார்க்கிறேன்., இவர்கள் இருவரும் என்னை மெஸ்மரிசம் செய்கிறார்கள்.

எத்தனை விடியல், எத்தனை நாட்கள், எத்தனை விட்டுக்கொடுத்தல், எத்தனை காதலிருந்தால் இவ்வளவு நீண்ட அன்பு சாத்தியமாயிருக்கும்,இந்த காதல் சில்லென்று சாரல் பட்டுத்தெரிக்கும் இந்த காலையை அழகாக்குகிறது. சமரசம் செய்து கொள்ளாத அன்பின் கனங்கள் எப்போதும் நம்மை பிரமிக்க வைக்கின்றன., இவ்வளவு பெரிய அன்பின் கரங்கள் கிடைக்க பெற்றவர்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்.

சுஜாதாவின் டைம் மெசின் போல ஒரு கால கடிகாரம் இருந்தால் இந்த நீண்ட காதலின் ஆரம்ப நாட்களை பார்த்துவர ஆசை. கல் மரத்தின் மரக்காளான் பூத்திருப்பதை பார்க்கும் பரவசம் போல இருக்கிறது இவர்களின் காதல்.

நிச்சயமாக சொல்கிறேன் முகமறியா நண்பர்களின் காதலுக்காக என் அறையும்,  அறை நண்பர்களும் இத்தனை உற்சாகமாய் இதற்கு முன் இருந்ததில்லை.ஒரு காதல் வாழ்க்கையை அழகாக்குகிறது., ஒரு காதல் வாழ்க்கையை புரட்டிப்போடுகிறது , ஒரு காதல் நமக்கு எல்லாமுமாய் இருக்கிறது. காதலின் உட்சபட்ச உணர்ச்சிக்குவியல் அது நமக்கு எல்லாமுமாய் ஆகிப்போவது தான்.

மாரத்தானில் ஒடிவரும் நண்பனுக்கு தண்ணீர்பாட்டில் நீட்டும் கரங்கள் அன்பால் சூழப்பட்டது. அன்பும் காதலும் வாழ்க்கை அழகாக்குகின்றன ., நீண்ட காதலின் அன்பிற்காய் பூச்செண்டு கொடுக்கிறேன், இவர்கள் இன்னும் வெகுதூரம் போக வேண்டியவர்கள்.

( மேலே இருப்பது தினா, பூங்கோதையின் கல்யாண பத்திரிக்கை தான் )