நட்சத்திரங்களுக்கு பயணிப்பவன் – ரோஹித் வெமுலா

Posted: ஜனவரி 26, 2016 by அடலேறு in அடலேறு, சாதியம், ரோஹித் வெமுலா
குறிச்சொற்கள்:,

Rohit_Vemula

இத்தனை கவித்துவமாய் தன்னுடைய இறப்பு கடிதத்தை ஒரு எழுத்தாளனால் கூட எழுத முடியாது. யாரையும் குறைசொல்லவில்லை, யாரையும் கோபிக்கவில்லை. நட்சத்திரங்களுக்கு பயணிக்க முடியும் என்று நம்பின‌ ஒரு இளைஞனை இழந்து நிற்கிறோம். வெமுலாவின் அந்த கடிதம் அடக்கு முறைக்கு எதிராக வீசப்பட்ட எறிகனை. ஏன் ரோஹித்தின் மரணம் உங்களை உலுக்கவில்லை? ஒரு மரணம் கூட அடக்குமுறைக்கு எதிராக நம்மை கிளந்தெள செய்யவில்லை எனில் எது நம் உணர்வுகளை தட்டி எழுப்ப போகிறது ? அத்தனை தூரம் நீர்த்துப்போயிருக்கிறோமா ?

ஒரு மாணவனை கல்லூரியில் இருந்து நீக்குவது அரசியலுக்கெதிராய் அவனின் முதுகெலும்பை உடைக்கும் செயல். அதிலும் அவரின் உதவிதொகையை நிறுத்தி விடுதியிலிருந்து வெளியேற்றுவது மாணவனை எவ்வளவு காயப்படுத்தும் என்று அறியாதவர்களா பல்கலைகழத்தை நடத்துகிறார்கள் ? ரோஹித் பெண்களை கிண்டல் செய்ததற்காகவோ, மது அருந்திவிட்டு கல்லூரிக்கு வந்ததற்காவோ இடைநீக்கம் செய்யப்படவில்லை., தன்னுடைய நம்பும் அரசியல் சார்பாக போராட்டத்தில் ஈடுபட்டதற்காக இடை நீக்கம் செய்யப்பட்டார். கல்லூரிக்குள் குடித்துவிட்டு எழுத கூட முடியாத விஷயங்களை செய்யும் மாணவர்களுக்கு காட்டும் கருணையின் கடைசி அறை ஏன் ஒரு தலித் மாணவனுக்கு எப்போதும் மூடியே இருக்கிறது? தலித் ஆய்வு மாணவர்களின் இடைநீக்கத்தை ரத்து செய்வதற்கு ஒரு உயிர் தேவைபடுகிறதா ? இந்த காலத்திலும் உயிர் பலி கொடுத்துதான் தலித்துகள் தங்களுக்கான இடத்தை அடைய வேண்டுமா?

இது எல்லாவற்றிற்கும் மேலே அதிர்ச்சியளிக்ககூட்டிய விஷயம் ஒரு மத்திய அமைச்சர் எதனடிப்படையில் ஒரு மாணவரை தேசத்துரோகம், சாதியவாதம் ஆகிய குற்றங்கள் செய்தவர் என முடிவெடுக்கிறார் ? வரம்பிற்கு உட்பட்டு மாணவர்கள் அவர்களுக்கு சரி என நினைக்கும் ஒன்றிற்காய் குரல் கொடுப்பது எப்படி தேசதுரோகமாகும் ?

எது எப்படியோ ரோஹித் இன்று இல்லை. ஆனால் சாதிக்கு எதிராய் நட்சத்திரங்களை நோக்கி பயணிப்பவனின் குரல் வரலாற்றில் என்றும் நினைவுகூறப்படும்.போய் வா தோழா.

பின்சேர்க்கை:

ஆங்கிலத்தில் அவர் எழுதிய கடைசி கடிதத்தின் தமிழ் வடிவம்:

காலை வணக்கம்,

இந்தக் கடிதத்தை நீங்கள் வாசித்துக் கொண்டிருக்கும்போது நான் இவ்வுலகை விட்டு நீங்கியிருப்பேன். என் மீது கோபம் கொள்ளாதீர். உங்களில் சிலர் என் மீது உண்மையான அக்கறை கொண்டிருந்தீர்கள், என்னை பரிபூரணமாக நேசித்தீர்கள், என்னை உரிய மரியாதையுடன் நடத்தினீர்கள் என்பதை நான் நன்கு அறிவேன். பிரச்சினை எனக்குள்தான் இருக்கிறது. என் உடல் வளர்ச்சிக்கும் ஆன்ம வளர்ச்சிக்கும் இடையே நிறையே ஏற்றத்தாழ்வு இருப்பதாக உணர்கிறேன். அது என்னை விகாரப்படுத்திவிட்டது. ஓர் எழுத்தாளனாக வேண்டும் என்பதே என் விருப்பம். காரல் சாகன் போல ஓர் அறிவியல் எழுத்தாளனாக வேண்டும் என்பது எனது லட்சியம். ஆனால், என்னால் எழுத முடிந்தது என்னவோ இந்த தற்கொலை கடிதத்தை மட்டுமே…

அறிவியல், நட்சத்திரங்கள், இயற்கை இவையெல்லாம் என் விருப்பத்துக்குரியவை. என் விருப்பப்பட்டியலில் மனிதர்களும் இருக்கின்றனர். அவர்கள் இயற்கையுடனான உறவை எப்போதோ துண்டித்துக் கொண்டனர் என்பதை அறியாமலேயே அவர்களை நான் நேசித்து வந்தேன். நமது உணர்வுகள் எல்லாம் ஏற்கெனவே பயன்படுத்தப்பட்டு நம்மிடம் கடத்தப்பட்டவை, நமது அன்பு கட்டமைக்கப்பட்டவை, நமது நம்பிக்கைகள் சாயம் பூசப்பட்டவை. நாம் என்ற சுயமான ரூபமே ஒரு செயற்கை வடிவமாகிவிட்டது. எள்ளளவும் காயமடையாமல் அன்பை பெறுவது என்பது மிகவும் கடினமாகிவிட்டது.

ஒரு மனிதனின் மதிப்பு, அவனது பிறப்பு அடையாளங்களால் நிர்ணயிக்கப்படுகின்றன. சில நேரங்களில் வாக்கு, சில நேரங்களில் எண் பலம், சில நேரங்களில் சில பொருட்கள்கூட அவனது அடையாளத்தை தீர்மானிக்கின்றன. ஒரு மனிதன் எப்போதாவது அவனது ஆன்மாவின் அடிப்படையில் மதிப்பீடு செய்யப்படுகிறானா என்றால்? நிச்சயமாக இல்லை.

சில நட்சத்திர துகள்களால் ஒரு பிரம்மாண்டம் சமைக்கப்பட்டதுபோல், மனிதனின் மாண்பு சில அடையாளங்களால் நிர்ணயிக்கப்படுகின்றன. கல்வி, அரசியல், சாலைகள், வாழ்வு, சாவு என எல்லாவற்றிலும் இத்தகைய நிர்ணயங்கள் வியாபித்துக் கிடக்கின்றன.

இதுமாதிரியான கடிதத்தை நான் எழுதுவது இதுவே முதன்முறை. ஒரு கடைசி கடிதத்தின் முதல் முயற்சி என்று சொல்லலாம். இது ஒருவேளை அர்த்தமற்றதாக இருந்தால் என்னை மன்னித்து விடுங்கள்.

இந்த உலகம் மீதான எனது புரிதல் தவறாக இருக்கலாம். அன்பு, வலி, வாழ்க்கை, மரணம் இவற்றின் மீதான என் புரிதல்கூட தவறானதாக இருக்கலாம். எனக்கு எந்த அவசரமும் இல்லை; ஆனால் நான் எப்போதுமே அவசரப்பட்டுக் கொண்டே இருந்திருக்கிறேன். வாழ்க்கையை துவக்குவதற்கு வழி தெரியா தேடலுக்கான அவசரம்.

சிலருக்கு வாழ்க்கை வெறும் சாப வடிவிலானதாக கிட்டுகிறது. எனது பிறப்பு ஒரு பயங்கர விபத்தின் விளைவு. எனது பால்ய பருவ தனிமையில் இருந்து என்னை எப்போதுமே விடுவித்துக் கொள்ள முடிந்ததில்லை. கடந்த காலங்களை திரும்பிப்பார்க்கும்போது யாராலும் போற்றப்படாத ஒரு குழந்தையாகவே எனது பிம்பம் மிஞ்சுகிறது. (நானே எனது வார்த்தைகளை அடித்துவிடுகிறேன்).

இத்தருணத்தில் நான் வேதனைப்படவில்லை, துன்பப்படவில்லை. என்னுள் ஒரு வெற்றிடத்தை நான் உணர்கிறேன். அது பரிதாபத்துக்குரியது. பரிதாபத்தின் உந்துதலால் நான் இதைச் செய்கிறேன்.

இதற்காக நான் கோழை என்று முத்திரை குத்தப்படலாம். சுயநலவாதி என்று சாடப்படலாம். ஏன், முட்டாள் என்று நிந்திக்கப்படலாம். என்னை எப்படி அழைத்தாலும் நான் கவலைப்படப் போவதில்லை. மறுபிறவி கதைகள், பேய்கள், பரிசுத்த ஆவிகள் இவற்றின் மீதெல்லாம் எனக்கு நம்பிக்கை கிடையாது.

எனக்கு ஒரே ஒரு நம்பிக்கை இருக்கிறது. என் நம்பிக்கையெல்லாம் தொடுவானத்தில் உள்ள நட்சத்திரங்களை அடைய முடியும், வேறு உலகங்களை அறிய முடியும் என்பது மட்டுமே.

இந்தக் கடிதத்தை படித்துக் கொண்டிருக்கும் நீங்கள் எனக்காக இதை செய்ய முடியும். எனது கல்வி உதவித்தொகை 1 லட்சத்து 75 ஆயிரம் ரூபாய் கடந்த 7 மாதங்களாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. அந்த உதவித்தொகை என் குடும்பத்தினருக்கு எப்படியாவது கிடைக்க ஏதாவது செய்யுங்கள். ராம்ஜிக்கு நான் ரூ.40,000 தர வேண்டும். ராம்ஜி அந்தப் பணத்தை திருப்பித் தா என்று எப்போதுமே கேட்டதில்லை. இருந்தாலும், ராம்ஜியிடம் அதை கொடுத்துவிடுங்கள்.

எனது இறுதி ஊர்வலம் அமைதியாகவும், சுமுகமாகவும் நடைபெறட்டும். நான் தோன்றி மறைந்தேன். அவ்வளவே. அதை இயல்பாக எடுத்துக்கொள்ளுங்கள். எனக்காக கண்ணீர் சிந்த வேண்டாம். இவ்வுலகில் வாழ்வதைவிட மரணித்தல் எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது என்பதை அறிந்து கொள்ளுங்கள். “நிழல் உலகிலிருந்து நட்சத்திரங்களை நோக்கிச் செல்கிறேன்.”

உங்கள் அறையை நான் என் சாவுக்காக பயன்படுத்தியதற்கு என்னை மன்னித்துவிடுங்கள் உமா அண்ணா.

அம்பேத்கர் மாணவர் கூட்டமைப்பினர், என்னை பொருத்தருள வேண்டும். நீங்கள் என்னை மிதமிஞ்சிய அளவு நேசித்தீர்கள். தங்கள் எதிர்காலம் செழிக்க என் வாழ்த்துகள்.

இறுதியாக இதை உதிர்க்கிறேன்… ஜெய் பீம்.

நன்றி: தி இந்து தமிழ்

#RohitVemula

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s