தடகளம்- வெல்ல மறுக்கும் இந்தியா

Posted: ஜூன் 21, 2016 by நிலன் in நிலன்

indian-olympics

இன்னும் சில நாட்களில் தொடங்கப்போகிறது 2016 ஒலிம்பிக் திருவிழா. இந்த ஒலிம்பிக்கில் இந்தியாவின் பங்களிப்பு எப்படி இருக்க போகிறது? அதிலும் குறிப்பாக தடகளத்தில் நிறைவேறாத நூறு ஆண்டுகளின் கனவை இந்த முறை இந்தியா எப்படி சரிகட்டப்போகிறது ?

உலகின் மிகப்பெரும் மனித சக்தியை கொண்ட தேசம். கல்வி, விஞ்ஞானம்,தொழில்நுட்பம் ராணுவம் என தன்னிறைவை நோக்கி முன்னகரும் தேசம், 2020ல் வல்லரசாக தன்னை முன்னிறுத்திக்கொள்ளு விரும்பும் தேசம். அதன் நிறைவேறாத நூற்றாண்டு கனவு., உலக அளவில் தடகளத்தில் ஒரு தங்கம்.

தடகளத்தில் மண்ணை கவ்வுவது இந்தியாவின் துயர்மிகு சரித்திரம்.மில்கா சிங்கையும், பிடி உஷாவையும் தான் தடகளத்திற்கென இன்றுவரை கைகாட்டுகிறோம். மில்கா சிங் களத்தில் இருந்தது 1960 களில்., பி.டி உஷா 1980 களில்.,கடைசியாக இந்தியா ஒலிம்பிக் தடகளத்தில் வெள்ளி வென்றது எப்போது தெரியுமா? 1900 ஆம் ஆண்டு பிரான்சில் நடந்த ஒலிம்பிக்கில். இந்தியாவில் பிறந்த பிரிட்டிஷ் காரர் தான் அதையும் வாங்கிகொடுத்தார். நார்மன் பிட்சர்ட் இந்தியாவின் முதல் தடகள வீரர். அப்போது மட்டும் தான் இந்தியா ஒலிம்பிக் பதக்கப்பட்டியலில் அதன் வரலாற்றிலேயே குறைவான 17ம் இடத்தை பிடித்தது. அதன் பிறகு? தொடர் தோல்விகள். நூற்றிப்பதினைந்து வருடங்களாக பிரிட்டீஷ் இந்தியர், தேசி இந்தியனை ஜெயித்துக்கொண்டே இருக்கிறார்.நீண்ட தோவ்விகளால் வறண்டு போன தடகளத்தை கள ஆய்வு செய்யாததன் வீழ்ச்சி இந்த நிறைவேறாத கனவு.

kkmvU0eifjfsi

ஒலிம்பிக் போட்டிகள் மட்டுமல்ல , உலக தடகளத்திலும் இந்தியா கால் பதிக்காமல் போனது. மாராத்தான் போன்ற தொலைதூர போட்டிகளாகட்டும், 100 மீ, 200 மீ போன்ற குறுகிய தூர போட்டிகளாகட்டும், இல்லை நீளம் தாண்டுதல் , உயரம் தாண்டுதல், மும்முனை நீளம் தாண்டுதல் போன்ற போட்டிகள் ஆகட்டும் இவை அனைத்தும் தீவிர உடல் உழைப்பை கோருபவை. மனவலிமையை பெரிதும் சார்ந்தவை, டிராக் அண்டு பீல்டு எனப்படும் இவற்றில் எப்போதும் இந்திய கொடியை முதலிடத்தில் பார்க்க முடியாது நம் தலைமுறையின் சாபக்கேடு.

தடகளம் என்பது உடலுக்கும் மனதுக்குமான ஒரு யுத்தம். வேறெந்த துறையிலும் இல்லாத அளவு தடகளத்தில் உளவியல் கவனிக்கப்பட வேண்டிய ஒன்று. இந்தியா தவறியதும் இங்கே தான். கடைசி ஒலிம்பிக் போட்டியை சற்று அலசுவோம். ரஞ்சித் மகேஷ்வரி 2012 லண்டன் ஒலிப்பிக்கில் தவறியதற்கு முக்கிய காரணம் பதட்டம். தேசிய சாதனையை தன் பெயருக்கு பின்னால் வைத்திருந்த மனிதர்,27 பேர் கலந்து கொண்ட போட்டியில் 27வது ஆளாய் வந்திருக்கிறார், 27வது என்று கூட சொல்ல முடியாது அவர் தாண்டின ஒரு அளவு கூட ஏற்றுக்கொள்ள முடியாத அளவைகள்( Foul ) முறையில் வெளியேற்றப்பட்டார்.

டின்டு லூகா, பிடி உஷாவின் பள்ளியில் இருந்து வந்தவர், பெரிதும் எதிர்பார்க்கப்பட்டவர். 800மீ ஓட்டத்தில் இந்தியாவிற்கு பதக்கம் உறுதி என மீடியாக்கள் அலறின. அவருடைய மாநிலத்தை சார்ந்தவரே டின்டு வெல்வதற்கு வாய்ப்புகளே இல்லை என பேட்டியளிக்கிறார். வேறுயாருமல்ல அஞ்சு பாபி ஜார்ஜ் தான். போட்டி நடக்கும் போது இப்படி ஒரு வார்த்தை வீரனை எப்படி காயப்படுத்தும் என்று அறியாதவரல்ல, மிக பரிதாபமாக டின்டு தோற்றுப்போனார். இத்தனைக்கும் இவர் இந்தியாவின் தேசிய சாதனையை(1:59.17) கொண்டவர்.

அதே 2012 ம் ஒலிம்பிக்கில் 3000 மீ தடை தாண்டும் ஓட்டத்தில் சுதா சிங் இறுதி போட்டிக்கு கூட முன்னேற முடியவில்லை, ஒலிம்பிக்கின் அதிக தூர போட்டிகளான 50கிமீ நடை, 20கிமீ நடை , மாரத்தான் என அடுத்தடுதது தோல்விகள். போட்டிகள் முடிந்த போது மற்றவர்கள் பதக்கத்திற்கு முத்தம் கொடுத்துக்கொண்டிருக்க நாம் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தோம். மறைமுயன்றும் முட்டிக்கொண்டு நிற்கும் அவமானத்தின் எச்சம்.

indian_atheletes_PTI

இதை எல்லாவற்றிலும் பெரிய தலைகுனிவு குறுகிற ஓட்டப்போட்டிகளில் நம் ஆட்கள் ஒருவரும் இல்லை. நம் ஆட்கள் குறுகிய ஓட்டப்போட்டிகளை பற்றி கனவில் கூட நினைப்பதில்லை போலும்.100மீ, 200 மீ, 110மீ தடைதாண்டும் ஓட்டம் என தொடங்கி என நீளும் பட்டியல் அது. அங்கே ஜமைக்காவின் ஆதிக்கம் .ஜமைக்கா காரர்களுக்கு தொடர் ஓட்டம் என்பது அல்வா சாப்பிடுவது போல. 4* 100 தொடர் ஓட்டத்தில் உசைன் போல்ட், யோஹ‌ன், நெஷ்டாகாட்டர் என களத்தில் அணிவகுக்க மற்றவர்கள் நிலை பரிதாபடும், பல உலக சாதனைகளை கையில் வைத்திருக்கிறார்கள்.

இந்தியாவின் தேசிய சாதனை அணில் குமார் 100 மீ ஒட்டப்போட்டியில் 10.30 நொடிகளில் வைத்திருக்கிறார். ஒலிம்பிக் 100 மீ இறுதிப்போட்டியில் அனைவரும் 9.98 நிமிடத்திற்கு முன்பாக முடித்தவர்கள்., அந்த போட்டியில் கடைசியாக வந்தர் கூட ஒன்றும் சாதாரணமானவரல்ல ஜமைக்காவை சேர்ந்த அசாஃவா பாவல் 9.72 நொடிகளில் 100மீ கடந்த வெற்றிச்சரித்திரம் கொண்டவர்.

அமெரிக்காவை பாருங்கள், சீனாவை பாருங்கள் என்றெல்லாம் சொல்லவில்லை, ஜமைக்கா குட்டி நாடு, சிறு தீவு, பூதக்கண்ணாடியை வைத்து தான் உலக வரைபடத்தில் தேட வேண்டும் தடகளத்தில் உலக சாதனைகளுக்கு சொந்தக்காரர்கள். 100 மீ ஓட்டப்போட்டில் ஜமைக்காவின் தங்க மங்கை சேல்லி ஆன்‍னின் (shelly ann fraser) ஓட்டத்தை ஒரு தடவை பாருங்கள், சக ஓட்டக்காரர்களின் சிம்ம சொப்பனம் அவர். ஒரு தேர்ந்த உயர் ரக பந்தய குதிரையை போல அத்தனை லாவகத்துடன் நொடிகளில் இறுதிக்கோட்டை அடைவார். தடகளத்தில் உயரம் முக்கியமென கருதப்பட்ட வரலாற்றை சுக்கு நூறாய் உடைத்துப்போட்டவர், உயரம் அதிகம் கொண்டவர்கள் களத்தில் ஒடிக்கொண்டிருக்க இவர் பறந்து கொண்டிருப்பார். ஜமைக்காவின் தங்கபெண்மணி, ஒலிம்பிக், உலக தடகள சாம்பியன்ஷிப்கள் என ஒன்றையும் விட்டுவைக்கவில்லை. திரும்ப திரும்ப நாம் நினைவுபடுத்திக்கொளள வேண்டிய கேள்வி இது தான். நம்மால் ஏன் ஒரு சேல்லியையோ, உசைன் போல்டையோ குறைந்த பட்சம் இன்னொரு நார்மன் பிட்சர்ட் டை கூட உருவாக்க முடியவில்லை?

485096972

குறுகிய தூரத்தில் ஜமைக்கா முடிசூடா மன்னன் என்றால் நீண்ட தூர ஓட்டத்தில் ஆப்பிரிக்க நாடுகள்., அனேகமான முதன் மூன்று இடங்களுக்கான போட்டி கென்யா, எத்தியோப்பியா,உகாண்டா, மொராக்கோ, என இவர்களுக்குள் தான் நடக்கும், மற்றவர்கள் 4ஆம் இடம் தொடங்கி மற்ற இடங்களுக்கு போட்டி போட்டிக்கொள்ளலாம். அப்பிரிக்கர்களின் அர்பணிப்பும் பயிற்சியும் சிலிர்க்க வைக்ககூடியது. காடு மேடு புல்வெளி என பல்லாயிரக்கணக்கான கிலோமீட்டர்களை அங்குலம் அங்குலமாக அளந்து வைத்திருக்கும் அவர்களின் கால்கள். மிகை படுத்தி சொல்லவில்லை ஒரு நாளில் சாதாரணமாக 12 மணிநேரத்தை பற்சிக்காக ஒதுக்குகிறார்கள். ஆயிரம் பேர் பயிற்சி பெற்றாலும் கடைசி போட்டிவரை வருவது சிலபேர் தான் ஆனாலும் அந்த பெரும் உந்து சக்தியை ஆப்பரிக்கர்களுக்கு கொடுத்தது எது?

ஒரு ஆப்பிரிக்கரிடம் கென்யர்கள் அலை அலையாக நீண்ட தூர ஓட்டப்போட்டியில் வருவதற்கு என்ன காரணம் என்றேன், யோசிக்கவேயில்லை வயிற்றை தடவி ” சோறு ” என்றார். அங்கே சொந்தமாக ஒரு பூட்ஸ் வைத்திருப்பவர் பணக்காரர்., ஒரே பூட்ஸை பலபேர் காசு கொடுத்து வாங்கி ஒவ்வொருவராக பயிற்சி செய்து கொள்வார்களாம். பெரும்பாலனவர்கள் இன்னும் வெரும் காலில் தான் ஓடிக்கொண்டிருக்கிறார்கள். வெறும் காலில் 40 கிமீ ஓடுவதை கற்பனை செய்து பாருங்கள் அதன் பின்னான சமரசம் செய்து கொள்ளாத விடாமுயற்சியும் , அர்பணிப்பும் புரியும்.

பசந் ரானா 2012 லண்டன் ஒலிம்பிக் 50 கிமி நடையில் 33 வது இடம் பிடித்தார். அதில் அவர் ஒரு சாதனையும் படைத்தார். இந்தியாவில் 50கி நடையை குறுகிய நேரத்தில் கடந்தவர் எனற சாதனை அது. அப்படியானால் ஒலிம்பிக்கில் 33 வது இடம் இந்தியாவில் முதலிடம்., இந்தியர்களின் தரத்திற்கும் சர்வதே தரத்திற்கும் இடைப்பட்ட இடைவெளி அது. இட்டு நிரப்ப முடியாத பெரு வெளி.

உள்கட்டமைப்பு இல்லாமல், மனித வளம் குறைந்த, பொருளாதாரத்தில் ஸ்திர தன்மை இல்லாத நாடுகளில் இருந்து உலக சாதனைகள் கணக்கெடுக்கப்படும் போது எதில் தொலைத்தோம் நம்மை? பொருளாதரத்தில் கடைசி நிலையில் இருக்கும் ஆப்பிரிக்கர்கள் தங்க பதக்கத்தை பட்டியலிடும் போது ஏன் நாம் பதக்க பட்டியலிலாவது வருவோமா என்று காத்திருக்கிறோம்? இந்தியர்கள் வலிமையற்றவர்களா?

150201137

ஒரு வீரனைஉருவாக்குவது என்பது ஒரே நாளில் நடக்ககூடிய விஷயம் அல்ல., அதற்கு சமரசம் செய்து கொள்ளப்படாத முன் தயாரிப்புகள் தேவை. மிகுந்த பொருட்செலவை கோருபவை. ஒரு போதும் விட்டுவிடாத கண்காணிப்பு தேவை படும். மனம், உடல், தொழில்நுட்பம் என அனைத்தையும் பிரித்துப்போட்டு அலசி ஆராயப்பட வேண்டிய துறை அது.

தொழில்நுட்பம் என இங்கு அழைக்கப்படுவது தடகளம் சார்ந்த கற்றல் முறை. இத்தனை வருடத்தில் ஒரு முறை கூட தான் ஓடுவதை துல்லிய வீடியோவாக எந்த ஒரு வீரனும் பார்த்திருக்கமாட்டார்கள், கைகளை எப்படி நீட்டுவது, தொடக்க கோட்டிலிருந்து முன்னரும் போதான உடல் அசைவுகள், சமநிலை ஓட்டம் என அனைத்தும் இந்த வீடியோ பதிவுகளில் அலசப்பட வேண்டும், சர்வதேச போட்டிகளுடன் இந்த வீடியோக்களை ஒப்புமை படுத்தும் போது ஒரு வீரன் தன் தவறுகளை தானே அடையாளம் கொள்வான். இந்த தொழில்நுட்பம் பள்ளியிலிருந்தே கற்றுத்தரப்பட வேண்டும்.

உடலுக்கான பயிற்சி சற்று கடினமானது, அதிக நேரத்தை எடுத்துக்கொள்ள கூடியதும் இதுவே. அந்தந்த போட்டிகளுக்கு தேவையான உடலமைப்பை கொண்டு வர அதில் பயிற்சி பெற்ற நிபுணர்கள் தேவை படுகிறார்கள். இவர்கள் இந்திய,சர்வதேச சந்தையில் சாமானியமாய் கிடைக்க மாட்டார்கள். அவர்களை ஈர்க்க வேண்டும், அவர்களுக்கான வசதி வாய்ப்புகளை அரசு கட்டமைக்க வேண்டும். வீரனின் உடல் மனம் என அனைத்தையும் உருவாக்கப்போகிறவர்கள் இவர்கள் தான். வீரர்களின் முன்னேற்றம் காலவாரியாக பட்டியல் இடப்பட வேண்டும் தொடர்ந்து கண்காணிப்பு,அறிவுறுத்தல்,மாற்றம் என சங்கிலி நிகழ்வாக நடந்து கொண்டே இருக்க வேண்டும். அரசின் கண்காணிப்பும்,அழுத்தமும் வீரனை தொடர்ந்து களத்தில் இயங்கவைக்கும்.

அடுத்து மனம் சார்ந்த உளவியல் பயிற்சி. மனம் ஒவ்வொருமுறை வெல்லும் போதும் தடகள வீரன் முன்னேறிக்கொண்டிருக்கிறான். மனதை தாண்டி உடல் ஜெயிக்கும் போது அவன் கால்கள் தள்ளாடுகிறது. தன்னபிக்கை பலூனை ஒரு ஊசி உடைத்துப்போடுகிறது. இயலாமை, துரத்த தனக்கு முன் ஓடிக்கொண்டிருக்கும் வீரனை பரிதாபத்துடன் பார்த்து தன் தோல்வியை ஏற்கிறான்.

விடா முயற்சியின் தேவையை பற்றி தேர்ந்த உளவியல் நிபுணர்களை கொண்டு வீரர்களிடம் கலந்துரையாடல் நடத்த வேண்டும். வெற்றியின் தாரக மந்திரம் மெல்ல விதைக்கப்படுவது இவர்களால் தான். சோர்ந்து போகாமல் வீர‌னை உயிர்ப்புடன் வைப்பது இவர்கள் கையில் இருக்கிறது.

Olympics-Day-9--Athletics

இவை மட்டுமல்லாது வீரர்களுக்கான பொருளாதாரம், கல்வி, தனி மனித மேம்பாடு, உள்கட்டமைப்பு என அனைத்திலும் முன்னகர வேண்டும். கிராமத்திலிருந்து 50 கி.மீ பயணம் செய்து விளையாட்டு மைதானத்தில் வந்து ஒரு மாணவன் கற்று கொள்வான் என நினைப்பது மிகையானது. மீண்டும் தூசி தட்டிப்போன நமது ஊரக விளையாட்டு மைதாங்களை, உடற்பயிற்சி கூடங்களை உயிர்ப்பிக்க வேண்டும்,ஒத்திகை மைதானம் சிந்தடிக் டிராக் எனப்படும் ஒடுபாதைகளிலும் இருப்பது கட்டாயமாக்கப்பட வேண்டும். வீரர்களுக்கான உடை , பொருட்கள் மானியவிலையில் தரப்பட வேண்டும், ஒரு போட்டியில் தோற்றாலும் தொடர்ந்து பயிற்சியை ஊக்கப்படுத்த வேண்டும்.

பள்ளி அளவில் தோற்றுப்போகும் பெரும்பாலான மாணவர்களை கண்டுக்கொள்ளப்படாமல் விடுவதை போன்ற அபத்தம் வேறில்லை, மீண்டும் மீண்டும் ஒரு வீரன் தன்னை புதுப்பித்துக்கொள்ள கால அவகாசமும் கண்காணிப்பும் கூடவே கரிசனமும் தேவை என்பதை உணரவேண்டும்.

இத்தனை காலமும் ஏன் இந்தியர்கள் தோற்றுப்போகிறார்கள். எதை விதைக்க மறந்தோம் வீரர்களின் மனதில்? தோல்விக்கான முக்கியமான விஷயங்களில் ஒன்று அரசியல் மற்றும் மிக கேவலமான விளையாட்டுத்துறை ஊழல்கள், நூறு வருட கனவை வெறும் கனவாக மட்டும் வைத்துக்கொள்வதற்கு முகம் சுழிப்பதே இல்லை இவர்கள்.ஒரு வீரனுக்கு வாங்கப்படும் காலுறை பணத்தை கொள்ளையடித்து என்ன சாதிக்கப்பார்க்கிறார்கள்? தேசத்திற்காக ஒடும் வீரனின் வியர்வை துளிகளில் பங்குபெறாத இவர்கள் வெற்றியின் போது அருவருப்பாக நினைக்கப்படுவார்கள் என்பதை ஏன் இவர்கள் நம்ப மறுக்கிறார்கள்? இவர்களின் தனிமனித திமிறும் ,ஊழலும் நூற்றாண்டுகனவை சிதைத்துப்போட்டதன் வரலாறு சிவப்பு மை கொண்டு எழுதப்படவேண்டியது.

விளையாட்டு துறை ஊழல் பற்றி ஒரு சிறு கணக்கை பாருங்கள். இது 2010 காமன்வெல்த் விளையாட்டுப்போட்டியில் நடந்தது.“டிரெட் மில்” என்னும் உடற்பயிற்சி சாதனத்தின் அதிகபட்ச விலையே ரூபாய் மூன்று லட்சம்தான். ஆனால், அதனை 9.75 லட்சத்திற்கு வாடகைக்கு எடுத்துள்ளனர். 10,000 ரூபாய் மதிப்புள்ள ஏர் கூலரை 40,000 ரூபாய்க்கும், ரூ.25,000 மதிப்புள்ள கணினியை 89,052 ரூபாய்க்கும் வாடகைக்கு எடுத்துள்ளனர். கையை சுத்தம் செய்ய சோப்புக் கலவையை உமிழும் சாதனத்தின் விலையே 450 ரூபாய்தான். இதனை 3,397 ரூபாய்க்கு வாடகைக்கு எடுத்துள்ளனர்.  குடைகளை 6,000 ரூபாய்க்கு வாடகைக்கு எடுத்த அநியாயம் குறித்து கேட்ட பொழுது, அக்குடைகளெல்லாம் ‘தனிச் சிறப்பானவை’ என்று கூச்சநாச்சமின்றிப் புளுகுகின்றனர். 50 முதல் 100 ரூபாய் மதிப்புள்ள கழிவறைக் காகிதச் சுருளை, 3,757 ரூபாய்க்கு வாங்கியுள்ளனர். உலகிலேயே அதிக விலையுள்ள கழிவறை காகிதச்சுருள் என அவார்டே கொடுக்கலாம்.தொடக்கவிழாவின் போது ஒளிவெள்ளத்தைப் பாச்சும் ஹீலியம் பலூனூக்கு அன்றைய ஒருநாள் வாடகையாக  ரூ.50 கோடி  வாரியிறைக்கப்பட்டுள்ளது. ஆனால், அது அரங்கத்தின் பாதியளவுக்குத்தான் ஒளியை உமிழும் என்று தொழில்நுட்பவாதிகளே அம்பலப்படுத்துகின்றனர்.

2003-இல் திட்டமிடப்பட்ட போது, இப்போட்டியை நடத்த மொத்தத்தில் ரூ.1,899 கோடி செலவாகும் என்று மதிப்பிடப்பட்டது.  ஆனால், எல்லா அதிகாரிகளும் முதலாளிகளும் போட்டி போட்டுக் கொண்டு பணத்தைச் சுருட்டியதால் தற்போது செலவு கணக்கு 10,00 கோடி, எனவும், 36,500 கோடி 70,608 கோடி என பல எண்களை தான் பார்க்க முடிகிறது.  திட்டமிட்டதை விட செலவு 1575%  அதிகம் என வட இந்திய பத்திரிக்கைகள் எழுதின.

CWG2

அரசின் சாதனையை விளம்பரப்படுத்தும் இவர்களால் ஏப்படி ஒரு தேசத்தின் நூற்றாண்டு கனவை பற்றி எதுவுமே சொல்லாமல் இருக்க முடிகிறது. களம் காணுபவர்களின் இறுதி பட்டியலை ஒரு போதும் அரசியல் தீர்மானிக்காது என்பதை எப்போது உரக்க சொல்ல போகிறார்கள்? இந்தியாவின் தடகளத்தை அரசியல் தீர்மானிக்காத போது வரலாற்று நாயகர்கள் தானாக எழுந்து வருவார்கள்.

விளையாட்டு என்பது நேரவிரயம்., பணம் சம்பாதிக்கும் படிப்புகளை படிக்க முடியாது என்ற நம்பிக்கை மக்கள் மனதில் ஆழமாக இருக்கிறது உடல் சார்ந்த தொழிலில் இருப்பதை இந்தியர்கள் கீழ்மையாக எண்ணுவதும் இந்திய விளையாட்டு துறையில் வெற்றிடத்திற்கான காரணம்.

நம்மிடையே இருக்கும் விளையாட்டு வீரர்களை பயன்படுத்திக்கொள்ளாதது அறிவிலித்தனம். நீங்கள் என்ன வேண்டுமானாலும் சொல்லுங்கள்,ஒரு தடகள வீராங்கனையை செங்கல் சூளையில் அடைத்தது உட்ச பட்ச அவமானம்., ஒரு இந்திய வீராங்கனை, 200 மீ ஓட்டத்தில் ஆசிய அளவில் வெள்ளி பதக்கம் வென்றது ஒரு ஆகச்சிறந்த தொடக்கம்., அதிலும் சாந்தி தமிழகத்தை சேர்ந்தவர் என்பது உணர்ச்சி மேலிடசெய்தது. பாலின சோதனையில் அவர் தவறியது துரதிஷ்டம். இந்த பிரச்சனையை இந்தியா கண்டுகொள்ளாமல் விட்டதை போல ஒரு கீழ்மை இனி எப்போதும் நடக்க கூடாது.

தென் அப்பிரிக்கா விராங்கனைக்கு இதே போல ஒரு பிரச்சனை வந்த போது அந்த தேசமே வெடுண்டெழுந்தது. 2009 பெர்லினில் நடந்த உலக சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வென்ற செமன்யாவின் பதக்கம், பாலின பரிசோதனையால் பறிக்கப்பட்டது. நாடு திரும்பிய செமன்யாவை தென்னாப்ரிக்க விளையாட்டுத்துறை அமைச்சரே நேரில் சென்று ‘தாங்கள் இருப்பதாக’ ஆறுதல் கூறினார். தென்னாப்ரிக்க பிரதமர் செமன்யாவிற்கு ஆதரவாக, அந்தச் சோதனையை எதிர்த்து கடுமையான எதிர்ப்பை பதிவுசெய்தார். அந்நாட்டு அரசே அவருக்கு ஆதரவாக ஐக்கிய நாடுகள் அவையில் வழக்கு தொடர்ந்து, வெற்றியும் கண்டது . தென் ஆப்பிரிக்காவின் பெருமை மிகு அடையாளமாக செமன்யா பார்க்கப்பார்.   2012ஆம் ஆண்டு லண்டனில் நடந்த ஒலிம்பிக் போட்டிகளின் தொடக்க விழாவில், தென்னாப்ரிக்காவின் சார்பாக அந்நாட்டு கொடியை கையில் ஏந்தி சென்றவர் அதே காஸ்டர் செமன்யாதான். அமெரிக்கா போன்ற நாடுகளில் கவுண்டி எனப்படும் உள்ளூர் விளையாட்டுகளில் ஜெயித்தவர் கூட நட்சத்திர அந்தஸ்துடன் வலம் வருவார். நாம் தான் ஆசிய வீராங்கனையை செங்கல் பொறுக்க விடுகிறோம். இது ஒட்டு மொத்த தேசத்தின் அவமானம்.

சினிமாக்களை மட்டுமே பார்த்து வளரும் ஒரு மிகப்பெரிய இளைஞர் கூட்டத்தை இந்தியாவின் கனவுகளை நோக்கி எப்படி திருப்ப போகிறோம்? பொபைல் போன் விளையாட்டுகளை தூக்கிபோட்டுவிட்டு, புழுதிபடிய களத்தில் நம் தேசத்திற்காய் விளையாட இந்த தலைமுறையை சிரம் தாழ்த்தி அழைக்கிறேன். இந்தியாவிற்காய் களம் காண்பவர்கள் அவர்கள் தானே?

We have achieved our 100 years dream. India can sleep peacefully tonight. இந்த வார்த்தையை சொல்லப்போகும் அந்த மகத்தான வீரனுக்காய் இந்த தேசம் நூறு ஆண்டுகளாய் காத்திருக்கிறது

160615100857-rio-olympics-medals-5-super-169

 

இது தி இந்துவில் வெளிவந்த என் கட்டுரையின் மூல வடிவம்

 

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s