முப்பதுகளின் தொடக்கம்

Posted: மே 27, 2018 by நிலன் in நிலன், பயணம், பேலியோ, Paleo
குறிச்சொற்கள்:,

heal

முப்பதுகளின்  தொடக்கதிலிருக்கிறேன். கல்லூரி முடிந்து ஏறக்குறைய பத்தாண்டுகள் கடந்துவிட்டது. இருபதுகளில் இலகுவான இருந்தவைகள் சற்று சிரமமாக தெரிகிறது. காரணம் உடல்பருமன். கல்லூரியின் மாரத்தான் ஓட்டக்காரன் என நண்பர்களிடையே பேச்சுவாக்கில் சொல்வதையே கூட தவிர்க்குமளவு உடலை கெடுத்துவைத்திருக்கிறேன். பயணங்களின் மீது பெருங்காதல் கொண்டவன். இந்தியாவின் முதல் கிராமமான துர் துக் தொடங்கி கன்னியாகுமரி வரை பெரும்பாலான உணவுகளை கபளிகரம் செய்திருக்கிறேன் 😉 . பயணங்களில் சாப்பிடுவது போய் பிறகு சாப்பிடுவதற்காக பயணப்பட்ட பரமாத்மா நான்.

என் மனம் விரும்பிய ஒரு உணவையும் விட்டுவைத்ததில்லை. அமெரிக்க கண்டத்தின் முதலைக்கறி தொடங்கி தெற்காசியாவின் கரப்பான் பூச்சி வரை ருசிபார்த்த பாவி நான். காரத்தின் அடிமை, ஒருமுறை இமயமலையில்  கிராமத்தில் மழைக்கு ஒதுங்கியிருக்கும் போது வழியின் சென்ற யாரோ இருவர்   மொமோவிற்கு தொட்டுக்கொள்ளும் கார சட்டினியை பற்றி பேசிக்கொண்டதை கேட்டபின் அந்த குளிருலும் அதை தேடி பலகிலோ மீட்டர் பயணப்பட்டு சாப்பிட்தை பார்த்த நண்பர்களின் கண்களின் தெரிந்த மிரட்சியை நினைவுகூருகிறேன். முட்டம் கடற்கறையில் கடைசி துண்டு மீனை முழுங்கும் போது மணி இரவு இரண்டை தாண்டியிருந்தது. சுவையான உணவா எந்த நேரமும் வேலை செய்ய ராணுவ வீரனை போல கட்டுக்கோப்பாக நாக்கை பழக்கப்படுத்தி இருக்கும் நாதஸ் நான்.

சென்னையின் சிறப்பான பொங்கல் அடையாரிலும், தமிழகத்தின் சிறப்பான பொங்கல் கிருஷ்ணகிரியிலும், உலகத்தின் சிறப்பான் சாம்பார் சாதம் பிர்ஸ்பர்க் வெங்கடேஸ்வரா கோயிலிலும் கிடைக்கும் என்பதை தெரிந்து வைத்திருப்பது எவ்வளவு மகத்தான சாதனை. செம்புலப்பெயல் நீர் போல என யாரையாவது வாழ்த்தினால் எனக்கு பொங்கலுக்கும் உளுந்துவடைக்குமான பிணைப்பு தான் நினைவுக்கு வரும். உளுந்து வடையை வெறுப்பவர்களை ஒரு போதும் என் நண்பர்கள் பட்டியலில் இருக்க முடியாது. முன்பெல்லாம் உளுந்து வடையை சாப்பிட்ட பின் தான் தரம் பற்றி தெரிந்து கொள்வேன் , இப்போதெல்லாம் பார்ததுமே தெரிந்து விடும். நல்ல உணவகத்தின் தரம் அதன் உளுந்துவடையில் இருக்கிறது என்பதை நம்புகிறவன் நான். உணவகத்தின் உளுந்து வடையே சொதப்பல் என்றால் நிச்சயமாக மற்றவை அனைத்தும் பெரிதாக சொல்லிக்கொள்ளும்படி இருக்காது. உளுந்துவடை பொங்களுக்கு எப்படி செம்புலம்பெயல் நீர் போலவோ அதற்கு சற்றும் குறைவில்லாத துணை இட்லிக்கும்.

idli-25618358.jpg

ஒரு அடைசல் ஆவிபறக்கும் இட்லியும் எலும்பு குழம்பும் சொர்கத்திற்கு சமமென்பேன். இட்லிக்கு உற்ற துணை சாம்பாரென்பது தவறான பரப்புரை. இட்லிப்பொடியில் காரம் முக்கியம், அப்போதய நேரத்திற்கு தகுந்தாற் போல மையமாகவோ அல்லது உதிரியாகவோ இருக்க வேண்டும். நல்லெண்னையை விட தேங்காயெண்னையுடன் பெரும்பாலும் பிரச்சனையில்லாமல் குடும்பம் நடத்தும் பக்குவம் கொண்டது இட்லிபொடி. ஆனால் இவை எல்லா வற்றையும் விட இன்னொருவன் இருக்கிறான் அவன் தான் மிளகாய் துவையல்.  அரைத்த காய்ந்த மிளகாய், தேங்காய், புளி, பெரிய வெங்காய இவற்றின் சேர்மானம் தேங்காய் சட்னிக்கே சவால் விடக்கூடியது.  சாம்பாருக்கென்று ஒரு அகராதி, ரசத்திற்கென்று  நூலகம் என என் நாக்கின் அத்தனை சுவை நரம்புகளையும் மீட்டின கிராதகன் நான்.

தயிர் சாத்ததுல என்னடா வைரைட்டி என கேட்பவர்கள் வாழ்க்கையை இன்னும் அனுபவிக்க தெரியாத பால்வாடி பையன்கள் என்பதே எனதென்னம். முறுக வறுத்த கருவேப்பிலை, சிவப்பு மிளகாய், கடலைபருப்பு, கொஞ்சமாக உளுந்து, கடுகு இவற்றுடன் இஞ்சி சற்றெ தூக்கலாக போட்டு தயிர் சாதத்தின் தலையில் கவிழ்க்க.  வறுத்த மிளகாயின் காரம் எண்ணெயில் கலந்து , சிவப்பும், கொஞ்சம் கறுப்பும் கலந்த நிறத்தில் தயிரினூடே பயணித்திருப்பதை பார்த்து பரவமாவேன்.  சுடுசாதம், புளிப்பில்லாத கெட்டி புதுத்தயிர் ஒரு டிப்ளமேட்டிக்கான பந்தம் அதனுடன் தக்காளி வெங்காயம் வணக்கிப்போட்ட எண்ணையில் கரையும் நெய்மீன் கருவாடும் சேர்ந்தால் வாவ் அது தான் படைப்பின் உச்சம். தயிருடன் குழம்பு, சாம்பார், என எதை கலந்து சாப்பிடுவதும் நாம் தயிருக்கு செய்யும் அநிதீ.

ருசியான உணவை தேடிப்போய் சாப்பிடுவது செலவு பிடிக்கும் விஷயமாகி போனது. எவனாவது பால்கோவா திங்க பொள்ளாச்சியிருந்து ஸ்ரீவில்லிபுத்துர் போவானா என்று கேட்டால் அப்படி ஒரு ஜீவன் உங்கள் சமகாலத்தில் வாழ்ந்திருக்கிறது. வடபாவ் சாப்பிட பாம்பே போனவனுக்கு, பால்கோவா சாப்பிட ஸ்ரீவில்லிப்புத்தூர் ஒன்றும் சிரமமான காரியமில்லை தான். அதனால் நானே சமைக்க கற்றுக்கொண்டேன். மைசூர்பா தொடங்கி மூளை பொறியல் வரை அனைத்தும் எனக்கு பிடித்தமாதிரி செய்ய தொடங்கினேன். சுவை கொஞ்சம் மாறினாலும் எந்த மூலப்பொருளால் பிசகியது என்பது வரை நுணுக்கமாக தெரிந்து கொண்டேன். அங்கே பிடித்தது பிரச்சனை.

உணவின் சுவையூட்டி  அதன் மூலப்பொருள், அதற்கான தேடல் ஆரம்பமானது. அதன் பிறகுதான் மிளகாயின் வகைகள் என்னை பிரமிக்கவைத்தன. குண்டூர் தேஜா தொடங்கி  மேற்கு தொடர்ச்சி மலைகளில் மட்டும் விளையும்  நெய் மிளகாய் வரை சென்றேன், ஒவ்வொன்றும் உணவின் புது சுவையை அறிமுகப்படுத்தியது. அசைவத்திற்கு தேஜாவை அடித்துக்கொள்ள ஆளில்லை. வடைக்கு எப்போதும் கூடலூர் நெய் மிளகாய் தான் தி பெஸ்ட். மசலாவிற்கு குண்டு மிளகாய், பீட்ஸாவிற்கு பூட் ஜொலைக்கியா, கரைத்து விட்ட மோருக்கு வானம் பார்த்த மிளகாய் என நீள்கிறது பட்டியல். இப்பொது நான் வீட்டில் தினசரி பயன்படுத்தும் மிளகாய் ஊட்டியில் வாங்கியது. கடந்த இரண்டு வருடமாக அங்கே தான் வாங்குகிறேன். ஊட்டிக்கு மிளகாய் வாங்க போகும் ஒரே பிரகஸ்பதி நான் தான். மிளகாய் மட்டுமில்லை  மஞ்சலென்றால் ஈரோடு, மரவள்ளி என்றால் எர்ணாகுளம், குருமிளகு என்றால் வயநாடு என நாவின் நீளத்தை அதிபடுத்தி கொண்டே போனேன். ஒரு முறை பிரியாணிக்கு குங்குமப்பூ வேண்டி காஷ்மீரின் கிராமத்திற்கு பயண திட்டமிட்டது எனக்கே பயத்தை உண்டாக்கியது.

chilli

இப்படி உண்டு கொழுத்தவனின் எடை பார்கும் எந்திரம் “ குறைவான எடை” யையா காட்ட போகிறது. எடை வெளியில் சொல்லகூட கூசும் எண்ணில் இருக்கும் போது இதை தட்டச்சிடுகிறேன். உடலளவில் தொல்லையில்லை ஆனால் எனக்கு மீண்டும் ஒரு முழு மாரத்தான் ஓட வேண்டும் ஆமாம் 42 கிலோமீட்டர் மாரத்தான் தான். இந்த எடையை வைத்துக்கொண்டு தெருமுனை வரை கூட ஓட முடியாது  . ஆனால் எனக்குள் 10 வருடத்திற்கு முன்பு  இருந்த ஒருவனை தெரியும். அவனை தேடிப்போக வேண்டும். தொலைவில் எங்கோ இருக்கிறான். இருந்தால் என்ன ? கடக்க முடியாத தூரம் என ஒன்று இருக்கிறதா என்ன?

வாட்டர் பாஸ்டிங் தொடங்கி பலவகையான டயட்டுகளை பல்வேறு காலகட்டத்தில் எடுக்க ஆரம்பித்து பின் மண்ணைகவ்வியிருக்கிறேன். இப்போது நான் எடுக்கப்போகும் பேலியோவைகூட பல முறை எடுத்து பின் பெருந்தீனிக்காரணாகி போயிருக்கிறேன்.  இனி இப்படி இருக்கபோவதில்லை. மற்ற எல்லாவற்றையும் விட எனக்கு நான் மிக முக்கியமானவன். அவனை இனியும் சித்தம் போக்கில் போகவிடுவது முறையன்று. அதுமட்டுமல்லாது எனக்கு மாரத்தானும் ஒடியாக வேண்டும். ஒருவருடம் கட்டுக்கோப்பாக இருப்பது பெரிய காரியம் தான். அதும் என்னை போல ருசிகண்ட ஊருக்கு செல்லும் பூனைக்கு சிரமமான காரியம் தான். இருந்துதான் பாக்கலாமெ என இன்றிலிருந்து பேலியோ உணவுமுறையைக்கு என்னை முற்றாய் மாற்றுகிறேன். இனி ஓவ்வொரு பதினைந்து நாளும் இதை பற்றி எழுத போகிறேன்.

Rain-Wallpapers-23-23-x-23

வாழ்வின் பிற்பாதியில் ஒரு மழை நாளில் தேனீர் அருந்தியபடி என்னுடைய முப்பதுகளின் தொடக்கம் எப்படி இருந்தது என்பதை நியாபகப்படுத்திக்கொள்ள நினைவுகளை இப்போது சேமிக்க தொடங்குகிறேன்.  வெயில் தாழ்ந்து விட்டது. டியாவுடன் ஒரு மெது நடை சென்று கணக்கை தொடங்கவேண்டும். இனி மெல்லத்தொடங்கும் இப்பருவமழை. நான் நனையப்போகிறேன்.

Advertisements
பின்னூட்டங்கள்
  1. CHRISTINA SHAJINI சொல்கிறார்:

    Arumai !!!

    Like

  2. ராஜசேகரன் சொல்கிறார்:

    நண்பா…. நமது இளமை (குழந்தை) பருவத்தை என் கண் முன்னே கொண்டு வந்து விட்டது இப் பதிவு. புது ரோடு டீ கடை போண்டாவில் துவங்கியதல்வா நம் நட்பு. நினைவில் தொலைந்துபோனேன்.

    Like

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s