Archive for the ‘அடலேறு’ Category

இன்று அம்மன் டிபன் சென்டரின் காலை உணவு. கையேந்தி பவன்களில் அம்மன் டிபன் சென்டரின் இட்லிக்கும், பொங்கலுக்கும் தனி இடம் உண்டு.  பச்சை மிளகாய் வைத்து அரைத்த தேங்காய் சட்னியை விட இட்லிக்கு வேறோர் நண்பன் இல்லை. மற்ற கடைகளை போல தண்ணியாக சாம்பார் உற்றுவதில்லை. கெட்டியாக, சுவையாகவும் இருந்தது. நானும் நண்பரும் சாப்பிட்ட விவரம் . 4 இட்லி, ஒரு அரை பொங்கல், 2 வடை விலை என்னவாகஇருக்கும் என்று நினைத்து பாருங்கள் ?

2 இட்லிகளை 36 ரூபாய்+ tax என கூசாமல் காசு பிடுங்கும் சரவண பவன் இருக்கிற இதே ஊரில் தான் இந்த கடையும் இருக்கிறது. நாங்கள் சாப்பிட்டதன் விலை 35 ருபாய். 35 ரூபாய் தானே தரம் எப்படியோ என நினைக்க தேவையில்லை. மிக சுத்தமாக, சுவையான காலை உணவு. கேபிள் சங்கரின் இந்த விடியோவை பாருங்கள்., இன்னும் தெளிவாகும். நன்றி கேபிள்.

Advertisements

Sweet red bean paste

டம் : An
இயக்குனர்:  Naomi Kawase
நாடு : ஜப்பான்

உலக சினிமாவிற்கு ஜப்பானின் மகத்தான கொடை நவோமி கவாசி. 13வது சென்னை திரைப்படவிழாவின் குறிப்பிடத்தக்க படம் “An “ . ஒரு கதையை திரையில் பார்க்கிறோம் என்பதையே மறந்து கதையுடன் ஒன்றி போகிறோமோ அந்த ப‌டம் என்னளவில் முக்கியமானது. நவோமி  ஒரு கலை இரசனை மிக்க பெண் இயக்குனர். இவரின் பல படங்கள் சர்வதேச திரைபட விழாவில் ரசிகர்களால் கொண்டாடப்பட்டது.

“ ஆன்”  திரைப்படம் டோக்யூ (Tokue) எனும் ஒரு 70 வயது  பாட்டியை பிரதானமாக கொண்ட படம். அனைத்து பொருளிடமும் பாட்டி பேசுவார், அது உயிருள்ள, உயிரற்ற எதுவானலும் சரி.  தி வே ஹோம் திரைப்படத்தில் வரும் பாட்டி எப்படி நம்மை கவர்ந்தாரோ அதே போல் இவரும் நம்மை கவர்கிறார். ” சென்ட்ரோ (Sentaro)”  நகரத்திற்குள் சிறிய உணவகம் வைத்திருக்கும் நபர்.

இப்போது வசந்த காலம். அங்கே பான் கேக்குகளுக்கு நடுவே ஆன் மற்றும் பீன்ஸ் விதைகளை கொண்டு தயாராகும்  டொரியாக்கி தான் பிரபல உணவு. கடையின் பிரதான வாடிக்கையாளர்கள் அருகில் இருக்கும் பள்ளி சிறுமிகள். அங்கே பகுதி நேர வேலை காலி அறிப்பை பார்த்து பாட்டி ‘ இது போல் ஒரு உணவகம் ‘ ஒன்றில் வேலை செய்வது என்னுடைய நீண்ட நாள் கனவு’ எனக்கு இங்கே வேலை தர முடியுமா என்கிறார். செண்ரோ அவரின் வயது விபரங்களை கேட்டு வேலைக்கு பாட்டி தகுதியானவர் இல்லை அனுப்பிவிடுவான்.  பாட்டி அந்த சாலையில் உள்ள செர்ரி மரங்களுடன் சிறிது நேரம் பேசிவிட்டு போய்விடுவார்.

சில நாட்கள் கழித்து மீண்டும் திரும்பிவருவார். சென்ரோ ஒரு மாதிரி பேசி இவரை திருப்பி அனுப்ப முயற்சி செய்வான், அவர் போகும் போது வீட்டிலிருந்து செய்து கொண்டுவந்த டொரியாக்கியை கடையின் மேசைமீது வைத்து விட்டு போய்விடுவார். சென்ரோ அதை தூக்கி குப்பையில் போட்டு விட்டு தன்னுடைய பணிகளை பார்க்க ஆயத்தமாவான், ஆனால் சில நிமிடங்களில் அதிலிருந்து வரும் வாசனை அவனை கவரும் மீண்டும் குப்பையில் இருந்த உணவை எடுத்து ருசிபார்ப்பான். அதன் அபார மணமும் சுவை அதற்கு முன் அவன் கண்டிராதது.

பாட்டி வசந்த காலம் முடிந்தபின் மீண்டும் திரும்ப வருவார். சென்ரோ அவரை தன்னுடைய கடையில் வேலைக்கு அமர்த்துவான். அடுத்த நாள் அதிகாலை சூரியன் வருவதற்கு முன்னதாக பாட்டியும் சென்ரோவும் வேலையை தொடங்குவார்கள். பாட்டி பீன்ஸ்ஸிடம் பேச தொடங்குவார் அது எவ்வளவு பக்குவமாக வேக வேண்டும் என்று சொல்லித்தருவார் . அன்று டொரியாக்கி அனைவராலும் விரும்பி உண்ணப்படும், கடை வெகு வேகமாக பிரபலமாகும், கடை திறப்பதற்கு முன்னதாகவே வரிசையில் நின்று மக்கள் டொரியாக்கியை வாங்கி போவார்கள். கடையை குத்தகைக்கு விட்ட பெண்மணிக்கு திருப்பி கொடுக்க வேண்டிய கடன்களை கட்டி முடிக்க சென்ரோவிற்கு நேரம் வரும்.

பாட்டி சென்ரோவிற்க்கு டொரியாக்கி செய்வதை கற்று தருவதை விடவும் இயற்கையும், நல்ல மனிதர்களும் வாழ்கைக்கு எவ்வளவு முக்கியம் என்பதை சொல்லிதருவார். வலிகளுக்கு புன்னகை மூலம் எப்படி பதில் சொல்வது என்பதை கற்று தருவார். அதன் பிறகு பாட்டி வேலைக்கு வந்தாரா ? கடன்களை கட்ட முடிந்ததா ? சென்ரோவின் கடந்த கால வலிகள் என்ன? என்பதை பற்றி பேசும் படம்.

படத்தின் கலை அமைதி வெகுவாக ஈர்த்தது. அக மன சிக்கல்களை  அனாயசியமாக பாட்டி கடந்து போவார்.  பாட்டி மரங்கள் மீதும், மனிதன் மீதும், வைத்திருக்கும் அன்பானது  உங்களை நெகிழ்த்து போடும். ஒவ்வொரு பிரேமும் அழகாக செதுக்கப்பட்டிருக்கும்.  கடைசி காட்சியின் அழகியலும் சென்றோவின் உடல் மொழியும் அபாரமானது.  படம் முடித்து நீங்கள் வெளியேறும் போது நிச்சயம் நெகிழ்ந்து போயிருப்பீர்கள்.  என்னளவில் அது கலையின் வெற்றி.

படத்தின் டிரைலர்:

Rohit_Vemula

இத்தனை கவித்துவமாய் தன்னுடைய இறப்பு கடிதத்தை ஒரு எழுத்தாளனால் கூட எழுத முடியாது. யாரையும் குறைசொல்லவில்லை, யாரையும் கோபிக்கவில்லை. நட்சத்திரங்களுக்கு பயணிக்க முடியும் என்று நம்பின‌ ஒரு இளைஞனை இழந்து நிற்கிறோம். வெமுலாவின் அந்த கடிதம் அடக்கு முறைக்கு எதிராக வீசப்பட்ட எறிகனை. ஏன் ரோஹித்தின் மரணம் உங்களை உலுக்கவில்லை? ஒரு மரணம் கூட அடக்குமுறைக்கு எதிராக நம்மை கிளந்தெள செய்யவில்லை எனில் எது நம் உணர்வுகளை தட்டி எழுப்ப போகிறது ? அத்தனை தூரம் நீர்த்துப்போயிருக்கிறோமா ?

ஒரு மாணவனை கல்லூரியில் இருந்து நீக்குவது அரசியலுக்கெதிராய் அவனின் முதுகெலும்பை உடைக்கும் செயல். அதிலும் அவரின் உதவிதொகையை நிறுத்தி விடுதியிலிருந்து வெளியேற்றுவது மாணவனை எவ்வளவு காயப்படுத்தும் என்று அறியாதவர்களா பல்கலைகழத்தை நடத்துகிறார்கள் ? ரோஹித் பெண்களை கிண்டல் செய்ததற்காகவோ, மது அருந்திவிட்டு கல்லூரிக்கு வந்ததற்காவோ இடைநீக்கம் செய்யப்படவில்லை., தன்னுடைய நம்பும் அரசியல் சார்பாக போராட்டத்தில் ஈடுபட்டதற்காக இடை நீக்கம் செய்யப்பட்டார். கல்லூரிக்குள் குடித்துவிட்டு எழுத கூட முடியாத விஷயங்களை செய்யும் மாணவர்களுக்கு காட்டும் கருணையின் கடைசி அறை ஏன் ஒரு தலித் மாணவனுக்கு எப்போதும் மூடியே இருக்கிறது? தலித் ஆய்வு மாணவர்களின் இடைநீக்கத்தை ரத்து செய்வதற்கு ஒரு உயிர் தேவைபடுகிறதா ? இந்த காலத்திலும் உயிர் பலி கொடுத்துதான் தலித்துகள் தங்களுக்கான இடத்தை அடைய வேண்டுமா?

இது எல்லாவற்றிற்கும் மேலே அதிர்ச்சியளிக்ககூட்டிய விஷயம் ஒரு மத்திய அமைச்சர் எதனடிப்படையில் ஒரு மாணவரை தேசத்துரோகம், சாதியவாதம் ஆகிய குற்றங்கள் செய்தவர் என முடிவெடுக்கிறார் ? வரம்பிற்கு உட்பட்டு மாணவர்கள் அவர்களுக்கு சரி என நினைக்கும் ஒன்றிற்காய் குரல் கொடுப்பது எப்படி தேசதுரோகமாகும் ?

எது எப்படியோ ரோஹித் இன்று இல்லை. ஆனால் சாதிக்கு எதிராய் நட்சத்திரங்களை நோக்கி பயணிப்பவனின் குரல் வரலாற்றில் என்றும் நினைவுகூறப்படும்.போய் வா தோழா.

பின்சேர்க்கை:

ஆங்கிலத்தில் அவர் எழுதிய கடைசி கடிதத்தின் தமிழ் வடிவம்:

காலை வணக்கம்,

இந்தக் கடிதத்தை நீங்கள் வாசித்துக் கொண்டிருக்கும்போது நான் இவ்வுலகை விட்டு நீங்கியிருப்பேன். என் மீது கோபம் கொள்ளாதீர். உங்களில் சிலர் என் மீது உண்மையான அக்கறை கொண்டிருந்தீர்கள், என்னை பரிபூரணமாக நேசித்தீர்கள், என்னை உரிய மரியாதையுடன் நடத்தினீர்கள் என்பதை நான் நன்கு அறிவேன். பிரச்சினை எனக்குள்தான் இருக்கிறது. என் உடல் வளர்ச்சிக்கும் ஆன்ம வளர்ச்சிக்கும் இடையே நிறையே ஏற்றத்தாழ்வு இருப்பதாக உணர்கிறேன். அது என்னை விகாரப்படுத்திவிட்டது. ஓர் எழுத்தாளனாக வேண்டும் என்பதே என் விருப்பம். காரல் சாகன் போல ஓர் அறிவியல் எழுத்தாளனாக வேண்டும் என்பது எனது லட்சியம். ஆனால், என்னால் எழுத முடிந்தது என்னவோ இந்த தற்கொலை கடிதத்தை மட்டுமே…

அறிவியல், நட்சத்திரங்கள், இயற்கை இவையெல்லாம் என் விருப்பத்துக்குரியவை. என் விருப்பப்பட்டியலில் மனிதர்களும் இருக்கின்றனர். அவர்கள் இயற்கையுடனான உறவை எப்போதோ துண்டித்துக் கொண்டனர் என்பதை அறியாமலேயே அவர்களை நான் நேசித்து வந்தேன். நமது உணர்வுகள் எல்லாம் ஏற்கெனவே பயன்படுத்தப்பட்டு நம்மிடம் கடத்தப்பட்டவை, நமது அன்பு கட்டமைக்கப்பட்டவை, நமது நம்பிக்கைகள் சாயம் பூசப்பட்டவை. நாம் என்ற சுயமான ரூபமே ஒரு செயற்கை வடிவமாகிவிட்டது. எள்ளளவும் காயமடையாமல் அன்பை பெறுவது என்பது மிகவும் கடினமாகிவிட்டது.

ஒரு மனிதனின் மதிப்பு, அவனது பிறப்பு அடையாளங்களால் நிர்ணயிக்கப்படுகின்றன. சில நேரங்களில் வாக்கு, சில நேரங்களில் எண் பலம், சில நேரங்களில் சில பொருட்கள்கூட அவனது அடையாளத்தை தீர்மானிக்கின்றன. ஒரு மனிதன் எப்போதாவது அவனது ஆன்மாவின் அடிப்படையில் மதிப்பீடு செய்யப்படுகிறானா என்றால்? நிச்சயமாக இல்லை.

சில நட்சத்திர துகள்களால் ஒரு பிரம்மாண்டம் சமைக்கப்பட்டதுபோல், மனிதனின் மாண்பு சில அடையாளங்களால் நிர்ணயிக்கப்படுகின்றன. கல்வி, அரசியல், சாலைகள், வாழ்வு, சாவு என எல்லாவற்றிலும் இத்தகைய நிர்ணயங்கள் வியாபித்துக் கிடக்கின்றன.

இதுமாதிரியான கடிதத்தை நான் எழுதுவது இதுவே முதன்முறை. ஒரு கடைசி கடிதத்தின் முதல் முயற்சி என்று சொல்லலாம். இது ஒருவேளை அர்த்தமற்றதாக இருந்தால் என்னை மன்னித்து விடுங்கள்.

இந்த உலகம் மீதான எனது புரிதல் தவறாக இருக்கலாம். அன்பு, வலி, வாழ்க்கை, மரணம் இவற்றின் மீதான என் புரிதல்கூட தவறானதாக இருக்கலாம். எனக்கு எந்த அவசரமும் இல்லை; ஆனால் நான் எப்போதுமே அவசரப்பட்டுக் கொண்டே இருந்திருக்கிறேன். வாழ்க்கையை துவக்குவதற்கு வழி தெரியா தேடலுக்கான அவசரம்.

சிலருக்கு வாழ்க்கை வெறும் சாப வடிவிலானதாக கிட்டுகிறது. எனது பிறப்பு ஒரு பயங்கர விபத்தின் விளைவு. எனது பால்ய பருவ தனிமையில் இருந்து என்னை எப்போதுமே விடுவித்துக் கொள்ள முடிந்ததில்லை. கடந்த காலங்களை திரும்பிப்பார்க்கும்போது யாராலும் போற்றப்படாத ஒரு குழந்தையாகவே எனது பிம்பம் மிஞ்சுகிறது. (நானே எனது வார்த்தைகளை அடித்துவிடுகிறேன்).

இத்தருணத்தில் நான் வேதனைப்படவில்லை, துன்பப்படவில்லை. என்னுள் ஒரு வெற்றிடத்தை நான் உணர்கிறேன். அது பரிதாபத்துக்குரியது. பரிதாபத்தின் உந்துதலால் நான் இதைச் செய்கிறேன்.

இதற்காக நான் கோழை என்று முத்திரை குத்தப்படலாம். சுயநலவாதி என்று சாடப்படலாம். ஏன், முட்டாள் என்று நிந்திக்கப்படலாம். என்னை எப்படி அழைத்தாலும் நான் கவலைப்படப் போவதில்லை. மறுபிறவி கதைகள், பேய்கள், பரிசுத்த ஆவிகள் இவற்றின் மீதெல்லாம் எனக்கு நம்பிக்கை கிடையாது.

எனக்கு ஒரே ஒரு நம்பிக்கை இருக்கிறது. என் நம்பிக்கையெல்லாம் தொடுவானத்தில் உள்ள நட்சத்திரங்களை அடைய முடியும், வேறு உலகங்களை அறிய முடியும் என்பது மட்டுமே.

இந்தக் கடிதத்தை படித்துக் கொண்டிருக்கும் நீங்கள் எனக்காக இதை செய்ய முடியும். எனது கல்வி உதவித்தொகை 1 லட்சத்து 75 ஆயிரம் ரூபாய் கடந்த 7 மாதங்களாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. அந்த உதவித்தொகை என் குடும்பத்தினருக்கு எப்படியாவது கிடைக்க ஏதாவது செய்யுங்கள். ராம்ஜிக்கு நான் ரூ.40,000 தர வேண்டும். ராம்ஜி அந்தப் பணத்தை திருப்பித் தா என்று எப்போதுமே கேட்டதில்லை. இருந்தாலும், ராம்ஜியிடம் அதை கொடுத்துவிடுங்கள்.

எனது இறுதி ஊர்வலம் அமைதியாகவும், சுமுகமாகவும் நடைபெறட்டும். நான் தோன்றி மறைந்தேன். அவ்வளவே. அதை இயல்பாக எடுத்துக்கொள்ளுங்கள். எனக்காக கண்ணீர் சிந்த வேண்டாம். இவ்வுலகில் வாழ்வதைவிட மரணித்தல் எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது என்பதை அறிந்து கொள்ளுங்கள். “நிழல் உலகிலிருந்து நட்சத்திரங்களை நோக்கிச் செல்கிறேன்.”

உங்கள் அறையை நான் என் சாவுக்காக பயன்படுத்தியதற்கு என்னை மன்னித்துவிடுங்கள் உமா அண்ணா.

அம்பேத்கர் மாணவர் கூட்டமைப்பினர், என்னை பொருத்தருள வேண்டும். நீங்கள் என்னை மிதமிஞ்சிய அளவு நேசித்தீர்கள். தங்கள் எதிர்காலம் செழிக்க என் வாழ்த்துகள்.

இறுதியாக இதை உதிர்க்கிறேன்… ஜெய் பீம்.

நன்றி: தி இந்து தமிழ்

#RohitVemula

99 நாள் சுதந்திரம்

Posted: ஜனவரி 20, 2016 by அடலேறு in அடலேறு
குறிச்சொற்கள்:,

new-profile-picture (1)

பேஸ்புக் இல்லாமல் 99 நாட்கள் இருப்பது தான் இந்த 99 டேஸ் பிரீடம். காலை எழுந்ததும் வாட்ஸ்ஸப்பிலும், பேஸ்புக்கிலும் தான் கண்முழிக்கிறேன். இது ஒரு வித சலிப்பையும் , சமூக வலைதளங்கள் என்மீது கொண்ட ஆதிக்கம் பயத்தையும் தருகிறது. அதுமட்டுமல்லாமல் அலுவகத்தில் அரைமணிக்கு ஒருமுறை பேஸ்புக்கை பார்க்கிறேன். நண்பர்களுடன் முகப்புத்தகத்தில் வரும் செய்திகளை விவாதிக்கிறேன் இது என்னுடைய தினசரியில் சில மணி நேரங்களை தின்கிறது. சிறு சிறு விஷயங்களை இதிலிருந்து கற்றுக்கொண்டாலும் அதற்காக கொடுக்கப்பட்ட நேரமானது மிக அதிகம். சோ.. இந்த 99 நாட்கள் நான் எனக்கானதை தேடப்போகிறேன்.

99 நாட்களுக்கு செய்ய வேண்டிய விஷயங்கள் நிறைய இருக்கின்றன. முதலாவதாக ஜனவரி 31ம் தேதி சென்னை விப்ரோ மாராத்தானின் 22 கிமீ ஓட்டம், அதற்கு பிறகு எச்.ஐ.வி குழந்தைளுடம் நேரம் செலவிடுவது, அதன் பின்னாக மார்ச் ஒன்னாம் தேதி சென்னை டிரக்கிங் கிளபில் டிரையத்தலான்( 1.5கிமீ நீச்சல், 45 கிமீ சைக்கிளிங், 10 கிமீ ஓட்டம்) என பட்டியல் நீள்கிறது.. நீங்களும் 99 நாள் சுதந்திரத்தில் உங்களை இனைத்து கொள்ள http://99daysoffreedom.com/ எனும் வலைபக்கத்தை பாருங்கள். 99 நாட்களுக்கு முகப்புத்தகத்திற்கு குட்பை. நண்பர்கள் drop2adaleru@gmail.com எனும் மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளலாம்.  ஸி யூ பிரண்ட்ஸ்

ஜல்லிக்கட்டு

Posted: ஜனவரி 13, 2016 by அடலேறு in அடலேறு, jallikattu
குறிச்சொற்கள்:,

ஜல்லிக்கட்டை பற்றி விவாதங்கள் நடந்து வருகிறது. நாட்டு காளைகளின் தேவை பற்றி பல்வேறு தகவல்களை கொண்ட கட்டுரைகள்  இணையம் முமுக்க இருக்கிறது. எனக்கிருக்கும் கேள்வி ஏன் புல் ஃபைட் என்று மெக்ஸிகோவில் தினந்தோறும் காளைகள் கொல்லப்படுவதை கண்டு கொள்ளாத பீட்டா இங்கே மட்டும் வாரிக்கட்டிக்கொண்டு குரல் கொடுக்கிறது ? அதன் பின்னனி என்ன? வணிக நோக்கத்தை தவிர வேறு எதுவும் தெரியவில்லை.

jallikattu

பட்டுப்பூச்சிகளை கொன்று பட்டுப்புடைவையை கட்டிக்கொண்டு, பன்றியை கொன்று அதன் கொழுப்பினால் செய்த முகப்பூச்சை பூசிக்கொண்டு, எம் பசுக்களை கொன்று அதன் தோலை லெதர் செருப்பாய் போட்டுக்கொண்டு நீங்கள் தொலைக்காட்சியில் பேசும் ”காளைகளை காப்போம்”  எங்களுக்கு மிக அருவருப்பாய் இருக்கிறது.லட்ச கணக்கில் கொல்வதற்காகவே படைக்கப்படும் பிராய்லர் கோழிகளை நோக்கி உங்கள் குரல் எழவில்லை? மாமிசத்திற்காகவே வளர்க்கப்படும் ஆடுகளை கொல்வதற்கு உங்கள் இரத்தம் ஏன் துடிக்கவில்லை? அதெல்லாம் இருக்கட்டும் நீங்கள் சாப்பிடும் மஸ்ரூமிற்கு உயிரில்லை என்று சொன்னது யார் ? எங்கள் தேசத்தில், எங்கள் நிலத்தில் நாங்கள் வளர்க்கும் எம் காளைகளுடன் விளையாட , எங்களை கீழ்மையாய் நினைக்கும் ஒரு தேசத்தின் நிறுவனத்துடன்  நாங்கள் சமரசம் பேச வேண்டும் என்று நினைப்பதை போன்ற அடக்குமுறை வேறில்லை.

வேண்டுமானால் லட்ச கணக்கில் கொன்று தின்னும் உம் தேசத்து மக்களுக்கு சொல்லுங்கள் உங்கள் விலங்குகளின் மீதான கனிவையும்வும் பாசத்தையும். ” வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடினேன்”  என்றது எம் மண். காக்கை குருவி எங்கள் ஜாதி என்று பாடினான் என் பாட்டன். “ காக்கையையும், குறுவியையும், பயிரையும்” உயிராய் பார்த்த எங்களுக்கு நீங்கள் சொல்லி தெரியவேண்டியதில்லை எம் காளைகளை எப்படி காக்க வேண்டும் என்று.

 

 

படம் : Panama
இயக்குனர்: Pavle Vuckovic
நாடு : செர்பியா

Panama2

உலகிலேயே இனி விரிவாய் சொல்வதற்கு ஒன்றுமில்லை எனும் விஷயம் காதல். சினிமா,இலக்கியம், இசை என அனைத்து தளங்களிலும் கோடிக்கணக்கான பக்கங்கள் காதலுக்காய் இருக்கிறது. ஆணுக்கும் பெண்ணுக்குமான இனைவு இன்னும் எத்தனை பக்கங்களில் எழுதப்பட்டாலும் அதன் வசீகரம் குறைந்து போவதில்லை. தன் ஆளுமைக்கு ஏற்ற துணையை கண்டடைவதில் இருக்கும் ஆழ்மன சிக்கல்கள், அகங்காரம்(Ego), பாலியல் தேர்வு போன்றவற்றை பற்றி இந்த படம் பேசுகிறது.

நாயகன் ஜோவன். சராசரி ஐரோப்பிய இளைஞன். காதல் என்பது உடல் இணைவுக்கானது என நினைப்பவன். எப்போதும் பாலியலை பற்றி பேசிக்கொண்டும், அது சார்ந்த விஷயங்களை பார்த்துக்கொண்டும், காமம் அவனுக்குள் உயிர்ப்புடன் இருக்கிறது. அவனுடைய நண்பர்கள் வார இறுதிக்குள் எத்தனை பெண்களை அடைந்தார்கள் என்பதை நினைத்து பெருமிதம் அடைபவர்கள்.  நாயகி மஜோ(Maja) ஜோவனுக்கு இருக்கும் பெண் தோழிகளில் ஒருவர் என்ற அளவில் இருக்கிறாள். இருவருக்குள்ளாகவும் ஒப்பன் ரிலேஷன்சிப் என்ற ஒப்பந்தம் இருக்கிறது. அதாவது இந்த உறவில் இருக்கும் போதே இன்னொருவரை பிடித்தால் அவருடன் செல்ல எந்த பிரச்சனையும் இல்லை என்பது போல ஒன்று. மஜோவுக்கு பெற்றோர்கள் கிடையாது தன்னுடைய பாட்டியுடன் இருக்கிறாள்.

மஜோ ஆரம்பம் முதலே ஜோவனுடன் மட்டும் தான் தன்னுடைய காதல் எனவும், வேறு யாருடனும் டேட் செய்வதில்லை என்றும் சொல்கிறாள். ஐரோப்பிய கலாச்சார பின்னனி கொண்ட ஜோவனால் அவளை நம்ப முடியவில்லை, அவள் வேறு யாருடனோ தொடர்பில் இருக்கிறாள் என நினைக்கிறான்.ஜோவனின் இந்த நினைப்பு அவனை அலைக்கழிக்கிறது. உறவு முடிவதை மஜோவிடம் சொல்கிறாள் அவள் வெடித்து அழுகிறாள்.

Panama

தனித்துவிடப்பட்ட பெண்ணின் அழுகை ஆண்களால் கடக்கவே முடியாத பெருந்துயரம். அது அவனை உடைத்துபோடும் என்பதை அறிவான். அதனால் தான் பெண்கள் அழுக தொடங்கும் போதே ஆண்கள் அந்த இடத்தை விட்டு வெளியேறிகிறார்கள். பிரிவுக்கு பிறகு மஜோவின் நினைப்பு அவனை கட்டிப்போடும், எதிலும் அவனால் மனதை குவிக்கமுடியாது. I cant function without you  என்று மீண்டும் அவளிடம் சரணடைவான், அந்த காட்சியில் மஜோ அவனை வேண்டாமென்று சொல்லி அவனின் கண்களை பார்க்கமுடியாதவளாக கொஞ்சம் கொஞ்சமாக தன்னுடைய பிடிவாதம் உருகி அவனை அணைத்துக்கொள்ளும் காட்சி கவிதை.

பார்ட்டியில் மஜோவிடம் ஒருவன் நெருங்க முயன்றதை பற்றி சொல்ல மீண்டும் பிரச்சனை ஆரம்பமாகும்.  இப்படி சண்டை, காதல், காமம்.. சண்டை என தொடந்து கொண்டே இருக்கும். சண்டையின் போது காதலில் ஒருவர் மிக எளிதாக விட்டுக்கொடுத்தால் அந்த உறவு பலவீனமாய் இருக்கிறது என்று அர்த்தம் . சதா சண்டையிட்டுக்கொண்டும் திட்டிக்கொண்டும் புகார் செய்து கொண்டு இருக்கும் காதல் தான் உயிர்ப்புள்ளது.  காதலின் ஆரம்பகாலத்தில் எப்போது சண்டைகள் குறைகிறதோ அங்கே காதல் குறைகிறது என்றே கொள்ளலாம்.  இதை என்னுடைய பெரும்பாலான நண்பர்களிடம் பார்த்திருக்கிறேன்,  பெண்ணை பற்றிய பிரஞ்ஞையுடனும் தற்காப்புடனும் தான் காதலை அனுகுவார்கள். ஆனால் தற்காப்புடன் காதலை அனுகுபவர்கள் தான் காதலில் திரும்பிவரமுடியாத தூரத்திற்கு போகிறார்கள். அதுதானே காதலின் வெற்றி. அந்தக்காதல் தானே கொண்டாடப்பட வேண்டியது.

சண்டைகள் தீர்ந்த பின் இருவரும் விடுமுறை பயணம் செல்வார்கள், அங்கே மஜோவிற்கு வந்த ஒரு எஸ் எம் எஸ்யை திறக்க போய் அவள் மொபைல் இன்பாஸ்சில் இருக்கும் வேறு ஒரு மெசேஜை படித்து விடுவான்.  அந்த மெசேஜிற்கான நியாயங்களை மஜோ எவ்வளவோ சொல்லியும் கூட சண்டை உச்சத்தை அடைந்து பின் காமமாய் அடங்கும் அந்த காட்சி அழகு. அடுத்த நாள் காலை மஜோ அந்த இருப்பிடத்தை விட்டு போயிருப்பாள். சில நாட்கள் கழித்து அவள் வீட்டிற்கு வந்து பார்த்தால் மஜோவின் பாட்டி இறந்த செய்தி கதவில் ஒட்டப்பட்டிருக்கும். மஜோ அந்த நகரத்தை விட்டு காலி செய்திருப்பாள். அதன் பிறகு அவனால் மஜோவை கண்டுபிடிக்கவே முடியாது.

மஜோ தன்னுடைய இருப்பிடத்தை சமூக வலைதளத்தில் பகிர்ந்த இடத்திற்கெல்லாம் ஜோவன் பின் தொடர்வான். பிரிந்து போன காதலியை தேடி பல்லாயிரக்கணக்கான கிலோமீட்டர்களை ஆண்கள் கடந்திருக்கிறார்கள் அதில் ஜோவனும் ஒருவன். கடைசியாக அவள் தொலைவிலுள்ள உள்ள பனாமா நாட்டிற்கு போய்விட்டதாக அங்கிருந்து ஒரு வீடியோவை அப்லோட் செய்வாள்.  காதலின் பிரிவை தாங்காமல் உடைந்து போய் சலனமற்றவனாக ஜோவன் அந்த வீடியோவை பார்பதுடன் நிறைவு பெறுகிறது பனாமா.

படம்: Free State
இயக்குனர்: Salmon de Jager
நாடு : தென் ஆப்பிரிக்கா

 

free-state-1

சுவாரசியமான கதைக்களம். தென் அப்பிரிக்காவில் ஒரு இந்தியனுக்கும்,  வெள்ளக்கார பெண்ணுக்கும் ஏற்படும் காதல். இந்த ஒற்றை வரியை வைத்து எத்தனை ரசனை காட்சிகளை பின்னலாம் என்று நினைத்துப்பாருங்கள். இப்படத்தை பார்பதற்கு காரணமே இந்த கதைக்களம் தான். The English Patient படத்தில் கிளை கதையாக இந்திய ராணுவ வீரனுக்கும் வெள்ளைக்கார செவிலிப்பெண்ணுக்கும் ஏற்படும் ஈர்ப்பை காட்சிபடுத்தியிருப்பார்கள், அதன் வசீகரம் free States யை நோக்கி இழுத்தது.

கதை நடக்கும் 1979 தென்னாப்பிரிக்காவில் நிறவெறியின் காலம். கறுப்பர்கள் மற்றும் இந்தியர்கள், வெள்ளைகாரர்கள் வசிக்கும் பகுதியில் சூரியன் மறைந்தன் பின் அனுமதி இல்லை, கறுப்பர்களுக்கும், வெள்ளையர்களுக்குமான உறவுகள் கண்டிக்கப்படவேண்டியது / தடை செய்யபட்டது. இது போன்ற பின்னனியில் நாயகன் ரவியின் குடும்பம் தென்னாப்பிரிக்காவில் பல்பொருள் அங்காடி வைத்திருக்கிறது. மேல்தட்டு குடும்பம். அதே போல மற்றொரு ஊரில் கடைவைத்திருக்கும் இன்னொரு இந்திய குடும்பத்து பெண்ணை ரவிக்கு நிச்சயம் செய்கிறார்கள். அனைத்தும் சுபமாக நடந்து கொண்டிருக்கிறது ஜானட்டை சந்திக்கும் வரை.  ஜானட் கல்லூரி முடிந்து தன்னுடைய கிராமத்திற்கு திரும்புகிறாள். அவளுடைய தந்தை சபையின் பாதிரியார். அம்மா சிறுவதிலேயே இறந்து விடுகிறார்.ஆப்பிரிக்க செவிலிப்பெண் அவளின் வளர்ப்புத்தாய்.

கல்லூரி படிப்பு முடிந்து ஊருக்கு திரும்பும் வழியில் நாயகனை சந்திக்கிறாள். ரவியின் உதவும் குணம் ஜானட்டை ஈர்க்கிறது. இருவரும் காதலிக்க தொடங்குகிறார்கள். நிச்சயதார்த்தம் ரத்து செய்ய படுகிறது. மனமுடைந்த  நிச்சயப்பெண் சுட்டுக்கொண்டு இறந்து போகிறாள்.  வெள்ளை கார பெண்ணுக்கும் இந்தியனுக்குமான உறவு தெரிந்ததால் ரவியை பிரச்சனையில் சிக்கவைக்க கிராம போலீஸ் முனைப்பாகிறது. இறந்து போன பெண்ணின் அண்ணன் ரவியை பழிவாங்க துடிக்கிறான். இவர்களிடம் இருந்து நாயகன் தப்பினானா? ஜானட்டை கைபிடித்தானா என்பது தான் கதை. முழுக்கதையையும் விமர்சனம் என்று சொல்லிவிட்டால் படம் பார்க்கும் போது சப்பென இருக்கும். ஆனால் இந்த படத்தை பெரும்பாலவர்கள் பார்க்கபோவதில்லையால் ஒரளவு முழுகதையையும் சொல்லிவிட்டேன்.

படத்தில் ஆரம்ப நிமிடங்களை தவிர சுவாரஸ்யம் என்று எதுவுமே இருக்கவில்லை. நாயகன் நாயகிக்கான காதலில் எந்த தர்கமும் கிடையாது. கண்டதும் காதல் என்பது போல காட்சிப்படுத்தப்பட்டிருப்பது ஏமாற்றம். நடிகர்களின் தேர்வு மிக மோசம். அதிலும் நாயகனின் உடல் மொழி தரத்தை கீழாக கொண்டு செல்கிறது. எந்த தர்கமும் இல்லாமல் ஒரு காதல் பார்வையாளனுக்கு சலிப்பை தர கூடியது. பின்னனி இசை என்று ஒரு திராபையை கொடுத்திருக்கிறார்கள். படத்தின் உட்ச காட்சிகளில் ரசிப்பதற்கு பதிலாக தியேட்டரே வெடித்து சிரித்தது. நாயகனின் வசனத்தை பார்வையாளர்கள் திரித்து கூற தியேட்டரே சிரிப்பலையில் திளைத்தது. அதர பலசான வசனங்கள் மேலும் சோர்வூட்டியது. நிறைய பேர் கிளப்பி போனார்கள். திரையில் காட்சிகள் நகர்ந்து கொண்டிருந்தது, கே டிவியில் ” நீங்களும் ஹீரோதான்” போன்ற உலக மொக்கைபடங்களை பார்த்த அனுபவம் இப்போது கைகொடுத்தது. நினைத்த மாதிரியே கொஞ்சமும் பிசகாமல் கிளைமேஸ் காட்சி. உயிரை கையில் பிடித்தபடி  வெளியேறி சென்னை டிராபிக்கில் கலந்தோம். சுபம்.