Archive for the ‘கவிதை’ Category

வெயிலானவள் நீ

Posted: ஏப்ரல் 20, 2012 by அடலேறு in அடலேறு, கவிதை
குறிச்சொற்கள்:,

வெயில் நாட்களில்
துப்பட்டாவை பின்
கழுத்தில் சுற்றி
தலை மூடியிருப்பாயே
அதில் வடிந்து போனவன்
நான்

******

வெயிலால் உருகிப்போன
சாக்லேட்டை நுனி
மூக்கு படர நீ
சாப்பிடுவதை ரசிக்கவேணும்
நீளட்டும் இந்த கோடை

****
கோடையின் இந்த‌
நடுநிசி விழிப்புகள்
அனைத்தும்
உன்னை
நினைத்துக்கொள்ளத்தான்

******

வெட்கம் விலகிய
இரவில் போர்வை விலக்கி
அணைத்துக்கொள்
நீளட்டும் இந்த
அடர் ஜாமம்

******

நீண்ட கோடை
விடுமுறை முடிந்த‌
சந்திப்பில்
எல்லாரும் இருக்க‌
ஓடிவந்து பின்கழுத்தனைத்து
முத்தமிட்டாயே போதும்
இனி மெல்ல
தொடங்கட்டுமென் கர்வம்

********

யாருமறியா என் பிம்பத்தில்
மூழ்கி காதல் எடுக்கும்
சிறகற்ற யட்சி நீ

********

முன்கை கொஞ்சமே மடக்கி
நெற்றி வியர்வை
துடைத்த பின் பார்ப்பாயே
அதில் தான்
என்னை தேடிக்கொண்டிருக்கிறேன்

******

இத்தனை வெயிலா என‌
சலித்துக்கொள்கிறாய் நீ
இத்தனை அழகா என‌
பிரமித்துக்கொள்கிறது
வெயில்

******

உனக்கென்ன பேசாமல்
கல்லூரிக்கு சென்று
விடுகிறாய்
உன்னை காணாத கோபத்தில்
சுட்டெரிக்கிறது சூரியன்
மாலை வரை

*****

யாருமறியா பின்னிரவில்
இறுக்கி மூடிய போர்வைக்குள்
வரும் கூதல் காற்று நீ

*****

பேருந்து பயணந்தில்
ஏறும் இடம் தொடங்கி இறங்கும்
இடம் வரை கூட வந்து
இறங்குகையில் முத்தமிட்டு செல்பவள் நீ

*******

உதடு சுழித்து
வியர்வை துடைத்து
மென் துப்பட்டாவில் காற்று வீசியபின்
முணுமுணுத்துக் கொள்வாய்
சூரியனை அன்பிலன் என்று

*******

வியர்வை படிந்த
முகத்தில் முத்தக்
கோட்டோவியம்
வரையும் என்
வெயிலானவள் நீ

*****

சார்பு இடுகை : மழையானவள் நீ

Advertisements

கேள்விகளால் ஆன விளையாட்டை
தொடங்கினாள் தூரிகா
விளையாட்டின் விதிகள்
ஒருபோதும் சொல்லப்படவில்லை
ஒவ்வொரு சொல்லாக‌
உதிர்க்க தொடங்கினாள்
தீயிலிருந்து வெம்மை பிரிப்பது
மெளனத்திலிருந்து இசை பிரிப்பது
பற்றிய குறிப்புகள் அவை
நினைவுக‌ளில் இருந்து
அவ‌ளை பிரித்து
காட்ட‌‌ சொன்ன‌ கேள்வியில்
தோற்றுப்போனேன்.
கீறல்களால் த‌ண்ட‌னை
நிறையேற‌ தொட‌ங்கிய‌
காலையில் விழித்தெழுந்தேன்
அவ‌ள் இப்போது
உடலிலிருந்து என்னை
பிரித்துக்கொண்டிருக்கிறாள்

கல்லூரி கள்வன்

Posted: ஏப்ரல் 16, 2011 by அடலேறு in கவிதை, காதல்
குறிச்சொற்கள்:, , ,

கல்லூரியில்
முதல் நாள் வகுப்பில்
கிரங்கடிக்கும்
பார்வையுடன்
என்னையே
பார்த்துக்கொண்டிருந்தாயே
அதற்கு என்ன அர்த்தம் ?

–oO0–

மென் இதய‌ம் கிழித்து
குருதி புசித்து
உள்ள‌ம் தொடும்
உன் பார்வை

–oO0–

எப்ப‌டி த‌ய‌க்க‌மில்லாம‌ல்
கைகுலுக்கி
பெய‌ர் கேட்டாய்
போடா! நான் தூங்கவேயில்லை

–oO0–

கரும்பலகை எழுத்துக்களை
அழிக்கும் ஒவ்வொரு முறையும்
அழித்துக்கொண்டுருந்தாய்
என் தயக்கத்தை

–oO0–

எளிதாய் ம‌ய‌க்கி வைத்தாய்
இய‌ல்பாய் ர‌சிக்க‌ வைத்தாய்
என்னையே மெதுவாய்
இழ‌க்க‌ வைத்தாய்

–oO0–

உன்னுட‌ன் பேசுகையில்
எதேச்சையாக‌ காத‌லை
சொல்லிவிடுவேன் என்று தான்
பேசுவ‌தேயில்லை

–oO0–

ஒரு ப‌க்க‌ம் த‌லை சாய்த்து
குட் மார்னிங் சொல்லும் போது
ஹைய்யோ!!
க‌ட்டிப்பிடித்து கொள்ள‌லாம்
போல‌ தோன்றும்

–oO0–

ச‌த்திய‌மிட்டு சொல்கிறேன்
உன்னை நினைக்கும்
போதெல்லாம்
க‌ருக்கென்று நெஞ்சுக்குழிக்குள்
ஏதோ ஒன்று இழுக்கிற‌து

–oO0–

உன்பெய‌ரை
யார் அழைத்தாலும்
திரும்பிப்பார்ப்ப‌தை
த‌விர்க்க‌முடிய‌வில்லை
ஏன்?

–oO0–

புத‌ன்கிழ‌மை லேப்புக்கு
அணிந்து வ‌ரும் முழுநீள‌
வெள்ளை ச‌ட்டையில்
கொள்ளை அழ‌குடா நீ

–oO0–

தின‌மும் ஏழு ம‌ணி
லேண்ட் லைக்கு
மிஸ்டு கால் கொடுப்ப‌து
நான் தான்

–oO0–

முத‌ன் முறையாக‌
நீ க‌ல்லூரி வ‌ராத‌
அன்று தான்
தெரிந்து கொண்டேன்
வ‌குப்ப‌றை எத்த‌னை
அந்நிய‌ம் என்று

–oO0–

காய்ச்ச‌ல் என்ப‌து
இத்த‌னை கொடிய‌து என்று
உன‌க்கு வ‌ந்த‌ பின் தான்
உண‌ர்ந்தேன்

–oO0–

நேரில் சொன்னால்
அழுது விடுவேன்
என்று தான்
போனில் சொன்னேன் காத‌லை

–oO0–

நிராக‌ரிப்பை
நாசூக்காய் உண‌ர்த்திய‌தால்
நீ மெதுன‌ன்

–oO0–

உன் என்றைக்குமான
தோழி நான்
என் என்றைக்குமான‌
காத‌ல‌ன் நீ

–oO0–

நிராக‌ரிப்பின் உச்ச‌ம்
உன்
மெள‌ன‌ம்

–oO0–

இப்போதெல்லாம்
என்னையே
பார்த்துக்கொண்டிருக்கிறாய்
ஏன்?

–oO0–

ஹார்மோன் பீய்ச்சிய‌டித்து
முதுகுத்த‌ண்டில்
மின‌சார‌ம் பாய்ந்து
த‌ண்டுவ‌ட‌ம் வ‌ழியே
மூளையை தாக்கிய‌து
நீ காத‌லை சொன்ன‌ போது

–oO0–

நெற்றி முத்த‌மிட்டு
என்னை ஏற்றுகொண்ட‌
அன்று தான்
ஜன‌ன‌மானேன்

–oO0–

உன் சகர்தர்மிணி நான்
என் சகலமும்
நீ

–oO0–

முத‌ன் செம‌ஸ்ட‌ரிலேயே
எப்ப‌டி காத‌லை
சொன்னாய் என்றாய்
முத‌ல் நாளே
சொல்லியிருப்பேன்
நீ சிறுவ‌ன்

–oO0–

தேர்வு அறையில்
ப‌க்க‌த்தில் உட்காராதே
ம‌ற‌ந்து தொலைக்கிற‌து
அனைத்தும்
–oO0–
நீ ப‌தித்த‌‌ முத‌ல் முத்த‌ம்
தான் கிள‌றிவிட்ட‌து
என் பெண்மையை
–oO0–
கையை பிடித்துக்கொண்டு
அனாய‌ச‌மாக‌ பேசுகிறாய் நீ
கிட‌ந்து த‌விக்கிறேன் நான்
–oO0–

உன்னைக்காட்டாத‌
ச‌னி, ஞாயிறுக‌ளை
அற‌வே
வெறுக்கிறேன்

–oO0–

இடைஇழுத்து
முத்த‌மிடும் போது
எல்லை தாண்ட‌
சொல்லும்
உன் மூச்சுக்காற்று

–oO0–

வில‌க்கான‌ நாட்க‌ளில்
ம‌டிகிட‌த்தி
த‌லை கோகி
க‌ர‌ம் ப‌ற்றி
கால் விர‌ல்
சொடுக்கெடுக்கும் நீ
என் தாயுமான‌வ‌ன்

–oO0–

கன்னத்தின்
நேரெதிர் த‌ட‌வ‌
நேற்று ம‌ழித்த‌ தாடி
உலை வைக்கும்
என் பெண்மைக்கு

–oO0–

உள் நுழைந்து
உயிர் புசித்து
சந்தோஷப்படுத்தியே
சாகடிப்பாய்
என்று தெரிந்திருந்தால்
உன்னை
காதலித்திருக்கவே மாட்டேன்

–oO0–

கோடு போட்ட‌
ஆர‌ஞ்சு ச‌ட்டை
காட்டும் உன்னை
திமிராக‌
–oO0–
நீயும் நானும்
ப‌கிர்ந்துண்ண‌ தொட‌ங்கிய‌பின்
ச‌மைக்க‌ விடுவ‌தில்லை
அம்மாவை
–oO0–
எப்ப‌டி
க‌ண்டுபிடித்தாய்
நானும் நானும்
ஒன்றில்லையென
உன்னுட‌ன் இருக்கும்
த‌ருண‌ங்க‌ளில்
–oO0–

வாக‌ன‌ ச‌த்த‌மும்
உன் மென் வாச‌மும்
அறிந்து வைத்திருக்கிறேன்

–oO0–

நீ ஈர‌க்கை துடைத்த‌
துப்பட்டா
த‌லைய‌னையென‌க்கு
இர‌வில்

–oO0–

யாரும‌ற்ற‌ வ‌குப்பில்
த‌னியாய் உன்னிட‌ம்
மாட்டிக்கொள்வ‌து
அவ‌ஸ்தை பேர‌வ‌ஸ்தை

–oO0–

வகுப்பறையில் நான்
இல்லாததை தேடும்
உன் கண்கள்
எனக்கு பிடித்த உறுப்பு

–oO0–

உன்னிட‌ம்
பொய்யாய் கூட‌
கோபப்ப‌ட‌ முடிய‌வில்லை
அப்ப‌டி கெடுத்து வைத்திருக்கிறாய்

–oO0–

இய‌ல்பாக‌ பேசி விடுகிறாய்
எதோ ஒன்றை.,
நினைத்து நினைத்து
நீர்த்துப் போகிற‌து இர‌வு

–oO0–

அதிகாலையில்
அருகில் நீ இருப்ப‌தாய்
நினைத்துக்கொள்ளும்
க‌ற்ப‌னைக‌ளின்
வ‌சீக‌ர‌ம்
வ‌ன் ஸ்ப‌ரிச‌ம்

–oO0–

எப்போதும் என்னையே
நினைத்துக்கொண்டிருப்பாயா
என்று கேட்கிறாய்
எப்போதும்
சுவாசித்துகொண்டே
இருப்பாயா என்று
கேட்ப‌து போல‌
இருக்கிற‌து
செல்ல‌ ம‌டைய‌னே

–oO0–

ஆணாதிக்க‌ம் பிடிக்க‌த்தான்
செய்கிற‌து
அதிகார‌த்தொனியில்
முத்த‌ம் வேண்டும் என்ப‌து

–oO0–

ம‌ற்ற‌ பெண்க‌ளுட‌ன்
பேசும்போதெல்லாம்
நான் கோப‌ப்ப‌டுவ‌தே இல்லை
நான் ர‌சித்த‌ உன் பேச்சை
அவ‌ர்க‌ளும் கேட்க‌ட்டும்.
பேச்சை ம‌ட்டும்

–oO0–

த‌ட்ட‌ச்சு ப‌ல‌கையில்
ஊர்ந்து செல்லும் உன்
விர‌ல்க‌ளை பார்க்க‌
ஆசையாயிருக்கும்
நினைத்துப்பார்கவே
வெட்க‌மாய் இருக்கிற‌து
ச்சீ போடா

–oO0–

க‌ல்லூரியின்
இர‌ண்டாம் வ‌ருட‌
முடிவு நம்மை
ஒன்றாகிப் போன‌து

–oO0–

வ‌ளாக‌த்தேர்வுக்கான‌
பேருந்து ப‌ய‌ண‌த்திலுன்
கரம் பிடித்து
தோள் சாய்த்து
நானுற‌ங்கும் போது
புகுத்திக் கொண்டேன்
உன் க‌த‌க‌த‌ப்பை

–oO0–

நீ அடிக்கடி மீசை
ம‌ழிப்ப‌த‌ற்கான‌
கார‌ண‌த்தை
காதில் சொன்ன‌து
இர‌ண்டு நாள் தூக்க‌ம் கெடுத்த‌து

–oO0–

வ‌குப்ப‌றை மேசையில்
க‌ருப்புமை கொண்டு
என்பேரெழுதும் நீ
காதல்‌ அர‌க்க‌ன்

–oO0–

உன‌க்கான‌ அசைமென்ட்
எழுதும் பேப்ப‌ர்க‌ளில்
மூன்றாவ‌து வ‌ரியில்
உல‌ர்ந்து போன‌
என் முத்த‌ங்க‌ள்
இருக்கும்

–oO0–

க‌டைசி செம‌ஸ்ட‌ர்
நாட்க‌ளை
என் ஆயுசுக்கும்
நீட்டிக்க‌ச்சொல்

–oO0–

ச‌ட்டென கோப‌ம்
பட்டுத்தெரிக்கும்
என‌க்கு.,நீயில்லாம‌ல்
இத்த‌னை நீண்ட‌ அன்பு
சாத்திய‌மில்லை

–oO0–

கல்லூரியில்
க‌டைசி நாள் வகுப்பு
முடிந்து வெளியேரும் போது
க‌ல‌ங்கிய‌ க‌ண்க‌ளோடு
என்னையே
பார்த்துக்கொண்டிருந்தாயே
அதற்கு என்ன அர்த்தம் ?

–oO0–

If you enjoyed this post, make sure you subscribe to my RSS feed!

புகைப்படம்

Posted: ஜனவரி 22, 2011 by அடலேறு in கவிதை, தமிழ், வாழ்க்கை
குறிச்சொற்கள்:,

ஒருவருக்கு அதிக மகிழ்ச்சி அளிக்கக்கூடியது என்னவென்றால் அவருடைய ஆகச்சின்ன வயது புகைப்படத்தை  பார்ப்பது -‍ அ.முத்துலிங்க‌ம்

என்னுடைய சிறு வயது புகைப்படம் ஒன்று வீட்டில்  இருக்கிறது.வீட்டுக்கு செல்லும் போது எப்போதாவது அதை பார்த்துக்கொள்வேன். புகைப்படத்தில் இருக்கும் முகத்துடன் கண்ணாடியில் என்னை பார்த்ததாக நியாபகமே இல்லை. அந்த புகைப்படத்தை எடுக்கும் போதெல்லாம் அம்மா பழைய கதைகள் எதாவது ஒன்றை சொல்லதொடங்குவாள். புகைப்படத்தில் நான் போட்டிருக்கும் பச்சை உடை, போட்டோ பிடித்த‌ நாள், அன்று காலையில் நடந்தது என்று நினைவில் உள்ள‌வைக‌ளை அடுக்கதொடங்குவாள். அவளை தவிர வேறு யாராலும் என்னுடைய சிறுவயது நினைவுகளை இத்தனை லயத்துடன் சொல்ல முடியாது.  கதைக‌ளை கேட்ப‌த‌ற்கு அப்பாவிற்கு ஆசை இருந்தாலும் நேர‌டியாக‌ க‌வ‌னிக்காம‌ல் காதை ம‌ட்டும் இங்கே வைத்துக்கொண்டு  வேறு வேலையில் மும்ம‌ராமாக‌ இருந்துகொண்டிருப்பார்.

புகைப்படம் எடுத்த‌ நாள் எவ‌வ‌ள‌வு முய‌ன்றும் நினைவிற்கு கொண்டுவ‌ர‌ முடிய‌வில்லை. சிறுவ‌ய‌து நினைவுக‌ளை போல‌ இப்போது இருக்கும் நினைவுக‌ளையும் பின்பு ஒரு நாளில் ம‌றந்து போவோம் என்ப‌து வேத‌னை த‌ருவ‌தாய் இருந்த‌து.

புகைப்படங்க‌ள் எப்போதுமே இற‌ந்த‌ கால‌த்தை நினைவுப‌டுத்திக்கொண்டிருக்கும் நினைவின் பிம்ப‌ம். கடந்த காலத்தை திரும்பி பார்க்க புகைப்படத்தை தவிற வேறு ஒன்றும் சிறந்தவையாக இருக்க முடியாது. புகைப்ப‌ட‌த்தை பார்க்கையில் புகைப்படம் எடுக்கப்பட்ட சூழ்நிலை, அதன் சார்பு நிகழ்வுகளை மீட்டு தரும் அது த‌ரும் சுக‌மே கதகதப்பானது. அத‌ற்காக‌த்தான் ம‌னித‌ர்க‌ள் த‌ங்க‌ளை புகைப்ப‌ட‌த்திற்குள் அடைத்துக்கொள்வ‌தில் பெரும‌கிழ்ச்சி அடைகிறார்க‌ள். தேர்ந்த‌ புகைப்ப‌ட‌க‌லைஞ‌னின் க‌ண்க‌ள் வ‌ழியே அவ‌ன‌து உல‌கை பார்ப்ப‌து வாழ்வின் உன்ன‌த‌மான‌ த‌ருண‌ம்.

ப‌க‌த்,கார்த்தி வ‌லைப‌க்க‌த்திலும் முக‌ப்புப‌க்க‌த்திலும் இவ‌ர்க‌ளின் புகைப்ப‌ட‌ங்க‌ள் பெருத்த‌ வ‌ர‌வேற்பை பெற்ற‌து. ப‌க‌த்தை ச‌ந்திக்க‌ முடியுமா என்று மும்பையில் இருந்த போதே கேட்டிருந்தேன். சென்னை வ‌ந்த‌தும் ச‌ந்திக்கலாம் என்றிருந்தார். சென்னை வந்து புது அலுவலகம், புது முகங்கள் என  என்னை சமநிலை படுத்திக்கொள்ளவே இரண்டு வாரங்கள் ஆனது. அலுவ‌ல‌க‌த்தின் வெளியே தேநீர் குடித்துக்கொண்டுருந்தேன். அருகில் ப‌க‌த், அப்போது தான் முத‌ல்முறை நேரில் ச‌ந்திக்கிறோம்.  மிக‌ இய‌ல்பாக‌ இருந்தார். என‌க்கு நிறைய‌ கேள்விக‌ள் இருந்த‌ன‌ அவ‌ரிட‌ம். வீட்டிற்கு போய் பேசலாம் என்று கூட்டிச்சென்றார்.

அழ‌கிய‌ பூக்க‌ள்,வித விதமான புகைப்ப‌ட‌ க‌ருவி, பெரிய‌ வெள்ளை திரை என‌ வீடு அழ‌காயிருந்த‌து. பேச‌த்தொட‌ங்கினேன். குடும்ப‌ம், ப‌டிப்பு, வேலை என‌ போய்க்கொண்டிருந்த‌து. ம‌க்கா ஸ்டுடியோஸின் ஆரம்ப‌ தூண்க‌ள், கார்த்திக் உட‌னான‌ ந‌ட்பின் ஆர‌ம்ப‌கால‌ நாட்க‌ளை ப‌கிர்ந்து கொண்டார். பொறாமையாக இருந்தது. புகைப்ப‌ட‌த்தினுட‌னான‌ நெகிழ்ச்சி த‌ருண‌ங்க‌ளையும் ப‌திவு செய்தார். அவரின் புகைப்படங்கள்  நாளிதழ்கள், தினசரிகள், வலைபக்கங்களில் என எங்கும் வியாபித்திருக்கிறது.  அவரின் சில புகைப்படங்களை தருகிறேன். வலிகளை கடந்து தான் எந்த ஒரு கலைஞனும் கலையுடன் தன்னை இணைத்துக்கொள்கிறான். புகைப்படம் கற்றுக்கொள்ள எடுத்த முயற்சி, முதலீடு, காலம் என அனைத்தையும் பட்டியலிட்டார்.

பக‌த் அமெரிக்கா, இந்தியா என‌ பல தேசங்களில் பல‌ புகைப்ப‌ட‌ க‌லைஞ‌ர்க‌ளை ச‌ந்தித்துள்ளார். நுண்ணிய வேலைப்பாடுகள் தான் புகைப்படம். ஒவ்வொரு புகைப்படமும் அதை எடுப்பவரின் மனநிலை சார்ந்தே உருவாக்கம் பெருகின்றன. என்னை க‌வ‌ர்ந்த‌ ப‌க‌த் , கார்த்தியின் சில‌ புடைப்ப‌ட‌ங்க‌ளை இங்கு ப‌கிர்கிறேன்.

எந்த ஒரு கலைஞனும் கலையின் வழி தான் தன் சக மனிதனிடம் அதிகமாக பேசிக்கொள்கிறான் என்பதை பகத், கார்த்தியின் படங்கள் நிறுபிக்கின்றன

 

( மேலே உள்ள கவிதையும் புகைப்படமும் எத்தனை இயல்பாய் இணக்கம் கொள்கிறது)

மனிதன் தன் முகத்தை கண்ணாடி , புகைப்படம் என இரண்டில் மட்டும் தான் நுட்பங்களுடன் பார்த்துக்கொள்கிறான்.

புகைப்ப‌ட‌த்தின் வ‌ழியே காணும் ம‌னித‌ர்க‌ள் அழ‌கான‌வ‌ர்க‌ள். ம‌னிதர்க‌ளிட‌ம் காணும் எந்த‌ கெட்ட‌ குண‌ங்க‌ளும் அவர்களுக்கு இல்லை. ம‌னிதனுக்கு புகைப்ப‌ட‌ம் மிக நெருக்க‌மான‌து. அத‌னால் தான் அதை எரிப்ப‌து நிராக‌ரிப்பின் உச்ச‌ம் என‌ நினைக்கிறான்.

மக்கா ஸ்டுடியோஸ் வலைபக்கம் : http://www.makkastudios.in/
முக நூலில் மக்கா ஸ்டுடியோஸ் :  http://www.facebook.com/makkastudios

If you enjoyed this post, make sure you subscribe to my RSS feed!

காதல் பொங்கல்

Posted: ஜனவரி 10, 2011 by அடலேறு in அடலேறு, கவிதை, காதல்
குறிச்சொற்கள்:, ,

பொங்கலுக்கு ஊருக்கு
வரும் போது
கூடவே பயணிக்கிறது
உன் பட்டு தாவணியும்
ஊடுருவும் பார்வையும்
சுற்றம் பார்த்து நீ
தரும் திருட்டு முத்தமென‌

-0O0-

உன்னுடைய‌
நீலமும் வெள்ளையும் கலந்த
தாவ‌ணியில் உள்ள
ஜரிகை பானை
அது தான் உச‌த்தி என‌
பெருமை பேசி திரிகிற‌து
பொங்கல் பானைக‌ளிட‌ம்

-0O0-

சந்தையில் நீ ஒரே
ஒரு பானையை
எடுத்துக்கொண்டு
மற்றவைகளை
நிராகரித்தது
அவமானத்தின் உச்சமாம்.
குறைப‌ட்டுக்கொள்கிற‌து
அழகான பானைகள்

-0O0-

டேய் அதென்ன‌மோ
முத்தப் பொங்க‌லாம்
அப்ப‌டின்னா என்ன ?
என்று உத‌ட்டை
ஈர‌ப்ப‌டுத்திய‌ப‌டியே கேட்கிறாய்
போடி!! வெட்கம் பிடுங்கிதின்கிறது

-0O0-

என்னால‌ க‌டிக்க‌ முடில‌டா
நீயே க‌டிச்சு கொடு என
நீ கொடுத்த க‌ரும்பு
என்னிட‌ம் வ‌ந்த‌தும்
சொல்லிய‌து
ஆனாலும் இத்த‌னை
சுவை இருக்க‌க்கூடாது
உன் காதலியின்
எச்சிலுக்கு என்று

-0O0-

சென்ற‌ பொங்க‌லுக்கு
மாடுக‌ள் இல்லாத்தால்
ஒரு பூனையை நீ
குளிப்பாட்டிய‌தை
நினைத்து இன்ன‌மும்
சிரித்துக்கொள்கிறேன்

-0O0-

புத்தாண்டு பிற‌ந்த‌தும்
அய் புத்தாண்டு பிற‌ந்த‌து
புத்தாண்டு பிற‌‌ந்த‌து
என்று துள்ளி குதித்தாய் நீ
அப்போது தான் தோன்றியது
நீ பிற‌ந்த‌நாள‌ன்று
அய் தேவ‌தை பிற‌ந்துவிட்டாள்
தேவ‌தை பிற‌ந்துவிட்டாள்
என்று துள்ளிக்குதித்திருக்கும்
அந்த‌ நாளும்

-0O0-

சென்ற‌ பொங்க‌லுக்கு
வாழ்த்து சொல்லி பின்
முத்த‌மிட்டாயே
அப்போதே
நினைக்க‌ துவ‌ங்கிவிட்டேன்
இந்த பொங்கலை

-0O0-

த‌மிழ் புத்தாண்டை
எப்ப‌டி வ‌ர‌வேற்ப‌து
என்றேன்
முத்த‌ம் கொடுத்துத்தான் என்றாய்
புத்தாண்டுக்கா என்ற‌த‌ற்கு
இல்லை என‌க்கு தான் என‌
மூன்று முத்தம் வாங்கிச்சென்ற‌வ‌ள் நீ

-0O0-

அதென்ன‌டி க‌ண‌க்கு
ஒரு க‌ரும்பில்
எத்த‌ணை க‌ணுக்க‌ள்
இருக்கிற‌தோ
அத்த‌னை முத்த‌ம்
தர‌வேண்டும் என்ப‌து

-0O0-

தூக்கிச்சொருகிய‌
அந்த‌ முந்தானையை
கொஞ்ச‌ம் எடுத்துவிடு
மூச்சுவிட்டுக்கொள்கிறேன்
சிறிது நேர‌ம்

-0O0-

சென்ற‌ பொங்க‌ல்
முடிந்து ஊருக்கு திரும்பும்
போது அடுத்து
பார்க்கும் வ‌ரை இதுதான்
என‌ சொல்லி த‌ந்த‌ முத்த‌ம்
நாளை உன்னை பார்க்க‌ போகிற‌து

-0O0-

மெல்ல‌ க‌ண்மூடி ஏற்றுக்கொள்
என்று சொல்லி
நீ கொடுக்கும்
முத்த‌த்திற்காக‌ தான்
கொண்டாப்ப‌டுகிற‌து பொங்கல்

-0O0-

நீ சாப்பிட்டு
பாதி த‌ரும் பொங்க‌ல்
தான்
ச‌க்க‌ரைப்பொங்க‌ல்

( உலகத்தமிழர் அனைவருக்கும் தமிழர் திருநாள் வாழ்த்துக்கள் )

If you enjoyed this post, make sure you subscribe to my RSS feed!

புதுக்கவிதையில் இருந்து நவீன கவிதை வாசிப்பிற்கு வந்த பிறகு கவிதையின் சாராம்சமே முற்றிலும் மாறிப்போய் ஒரு புது உலகம் இயங்கிகொண்டிருப்பது எப்படி மகிழ்ச்சியை தந்ததோ அதே மகிழ்ச்சியை நிலா ரசிகனின் “வெயில் தின்ற மழை ” நவீன‌ கவிதை தொகுப்பும் தந்தது.

நிலாவின் மயிலிறகாய் ஒரு காதல், பட்டாம் பூச்சியின் கனவுகள் புத்தகத்தை படித்துவிட்டு வெயில் தின்ற மழை படிப்பவருக்கு இதன் ஆசிரியர் தான் இந்த புத்தகத்‌தை எழுதிய‌வ‌ர் என்ப‌து ஆச்ச‌ர்ய‌மாக‌த்தான் இருக்கும். இந்த மனிதர் கவிதைகளுக்கு வார்த்தைகளை எங்கிருந்து பிடிக்கிறார் என்பது இன்னும் எனக்கு புதிராகவே உள்ளது.

நல்ல குளிர் அன்று இரவு ப‌தினொன்று ம‌ணியிருக்கும் அப்போது தான் நிலாவிட‌ம் க‌விதை தொகுப்பை வாங்கி வ‌ந்தேன். குளிருடன் சேர்ந்த‌ இர‌வு அறையில் அனைவ‌ரையும் உற‌ங்க‌ வைத்திருந்தது. கால்கள் தரையில் பட்டவுடன் சில்லிட்டது. வழக்கமாக புத்தகம் படிக்கும் ஜன்னலருகே  இருக்கையை இழுத்துப்போட்டு உட்கார்ந்து கொண்டேன். வெளியே இருள் என்னை பார்த்துக்கொண்டிருப்பதாய் இருந்தது.

வெயில் தின்ற மழை தொகுப்பை வாசிக்க தொடங்கினேன். முதல் பக்க அட்டை , பின் பக்க மனுஷ்யபுத்திரன் வார்த்தைகள் என அனைத்தும் கடந்து உள்சென்றதும் , நிலாவின் அறிமுகம். கவிதைக்கு வந்தேன் முதல் கவிதையே புதுக்கவிதை போல எளிதில் கடந்து போக முடியாது என முரண்டு பண்ணியது. இரண்டு முறை வாசித்தேன் ஒரு அர்த்தத்தை தந்தது. அடுத்த முறையும் வாசித்தேன் இன்னொரு அர்த்தத்தை தந்தது.புதுக்கவிதையில் நமக்கான அர்த்தங்களை கவிதையோடு நாம் தான் இணைத்துக்கொள்ளவேண்டும் என்பது அலாதியாக இருந்தது. இப்போது குளிர் ஜன்னல் வழி உள்ளேறி கைகளையும் சில்லிட வைத்திருந்தது. எனக்கு ஒரு கவிதையின் வரி பிடித்துவிட்டால் அதன் தாக்கமே இரண்டு நாள் இருக்கும். எப்போதும் அதன் வரிகளையே முணுமுணுத்துக்கொண்டிருப்பேன். அடிக்கொருமுறை அந்த பக்கத்தை திருப்பி திருப்பி பார்த்தும் சிரித்துகொண்டுமிருப்பதை வித்தியாசமாக இருக்கிறது என்று நண்பர்கள் சொல்லுவதுண்டு.கவிதையை இதைவிட வேறு எதாவது முறையில் கொண்டாட முடியாதா என யோசித்திருக்கிறேன். கைகள் சில்லிட மனதுக்கு நெருக்கமான கவிதைகளை படித்துக்கொண்டிருக்கிறேன் என்ற நினைப்பே சந்தோஷத்தை கொடுத்தது. நிலாவின் பல கவிதைகளை திரும்ப திரும்ப வாசிக்கும் போது அது தரும் பரிமாண மாற்றங்கள் புதுமையான‌ வேறொரு மனநிலையில் வைத்திருந்ததாக உணர்ந்தேன்.

வார்த்தைகளற்ற மென் இசையை எனக்கு மட்டும் கேட்கும் அளவு வைத்துக்கொள்ள வேண்டும் போல தோன்றியது. மென் இசையுடன் வாசிக்கப்படும் கவிதை அதன் நிர்வாணம் கடந்து ரசிக்கப்படுகிறது என எனக்கு நானே சொல்லிக்கொண்டேன். இசையை மெல்ல சுழலவிடேன்.இன்னும் அதிக தீரத்துடன் ஜன்னல் வழியே குளிர் அறைக்குள் இறங்கிக்கொண்டிருந்தது.சில கவிதை பக்கங்கள் பல நிமிடங்களுக்கு என்னை கட்டிப்போட்டது. மெல்ல ஒவ்வொரு கவிதைகளுக்குள் இருந்து வெளிவந்து அடுத்த கவிதைக்குள் மாட்டிகொண்டேன். வெளியெங்கும் இருட்டு, சில்லிட வைக்கும் குளிர், அறையெங்கும் மென் இசை, கையில் கவிதை என இரவு அத்தனை அழகாகியிருந்தது

என்னை க‌வ‌ர்ந்த‌ சில‌ க‌விதைக‌ள்

குழ‌ந்தையாத‌லின் சாத்திய‌ங்க‌ள் ஏதும‌ற்ற‌
இர‌வொன்றில் உன‌க்கொரு
உடைந்த‌ பொம்மையை ப‌ரிச‌ளித்து
சிரிக்கிற‌து கால‌ம்.
மென்காற்றில் சித‌றும் சார‌லில்
ந‌னைந்த‌ப‌டி த‌னித்த‌ழுகிறாய்
நீ.
(வெறுமையின் அழ‌கான‌ வ‌ர்ண‌னை இது )
****

வீழ்ந்து கிட‌த்த‌லை விட‌
ப‌றந்து சாத‌லே பெரிதென‌
உண‌ர்த்தின‌
ச‌வ‌ப்பெட்டிக்கு காத்திருக்கும்
துருப்பிடித்த‌ ஆணிக‌ள்

*******

உதிர்ந்த‌ முத்தங்க‌ளை பொறுக்கும்
ந‌ட்ச‌த்திரா த‌ன் க‌ன்ன‌த்தின் சுருக்க‌ங்க‌ளை
வ‌ருடிக்கொடுக்கிறாள்.
சித‌றிக்கிட‌க்கும் முத்த‌ங்க‌ளின் ந‌டுவே
கால‌ம் க‌ண்சிமிட்டிக்கொண்டிருப்ப‌தை
வ‌லியுட‌ன் நோக்குகிற‌து அவ‌ள‌து க‌ண்க‌ள்.
தீராப்ப‌சியுட‌ன் வான‌ம் பார்த்துக்
க‌த‌றுகின்ற‌ன‌ வீழ்ந்த‌ இலைக‌ள்.
மெல்ல வழுக்கிறது
நிறமற்ற மழை

******

இந்த கடைசி கவிதையை என்னால் அத்தனை சீக்கிரம் கடந்து போக முடியவில்லை. வலிகளை வார்த்தைபடுத்துவது கடினம் என்று சொல்லிவிட்டு அனாசயமாக நட்சத்திராவின் வலிகளை வார்த்தைபடுத்தியுள்ளார். கவிதையில் வரும் நட்சத்திரா பற்றியே நீண்ட நேரம் யோசித்துக்கொண்டிருந்தேன்.

வார்த்தைக‌ளையெல்லாம் பின்னிப்போட்டு கிற‌ங்க‌டிக்கும் க‌விதை த‌ருவ‌தில் நிலா எப்போதும் தனக்கான இடத்தை தெரிந்தே வைத்திருக்கிறார் என்று தோன்றியது.  இரவுகளுக்கு கைநீளுவதும், உலகின் மிகப்பெரிய தவறை துளியாக்குவதும் என மாயவித்தைகளை கண் முன்னே கடைபரப்பிக்கொண்டிருந்தது வெயில் தின்ற மழை. சில‌ க‌விதைகளில் ஆரம்பங்களிலேயே உச்ச‌த்தை தொடுகிறார்.

க‌டைசிவ‌ரிக‌ளில் வ‌சிய‌ம் த‌ட‌வியே க‌விதைவ‌டிக்கிறார் நிலா. கடைசி கவிதையை உணர்ந்து முடித்ததும் தான் தான் தெரிந்தது வெயில் தின்ற மழை என்னுடைய பாதி இரவை முழுதாக தின்று முடித்திருந்தது என்று. நாற்காலியை விட்டு எழுந்தேன். மணி நான்கு என கடிகாரம் காட்டிய‌து.

புத்த‌க‌த்தை மூடிவைத்துவிட்டு அத‌ன் நினைவிலேயே இருந்தேன். தேனீர் குடிக்க வேண்டும் போல இருந்தது. எங்காவ‌து வெளியில் செல்ல‌ வேண்டும் என்று தோன்றிய‌து. டிச‌ம்ப‌ரில் மாதங்களின் அதிகாலை அழ‌கான‌து அவ‌ற்றை ர‌சிக்க‌ வேண்டும் போல‌ இருந்த‌து. கவிதை புத்தகத்தை எடுத்துக்கொண்டு வெளியே சென்றேன். உட‌லை ந‌டுங்க‌வைக்கும் டிசம்பர் மாத குளிர் என்னை உள்ளிழுத்துக்கொண்ட‌து

சோடியம் ஒளி மெல்ல கசிந்து கொண்டிருந்தது. பின்னிரவில் சோடியம் விளக்கை சுற்றிய விட்டில்  பூச்சிகள் விள‌க்கின் அடியில் விழுந்திருந்தன‌.சாலையில் நான், குளிர்,க‌விதை என‌ மூன்று பேர் ம‌ட்டும் இருப்ப‌தாய் தோன்றிய‌து.

சோடிய‌ம் விள‌க்கில் இன்னும் சில‌ க‌விதைக‌ளை ப‌டித்தேன். முன்பு ப‌டித்த‌தை விட‌ இன்னும் அழ‌காக‌ தோன்றிய‌து.  சூழ்நிலைகளும் கவிதையின் அழகியலை தீர்மானிக்கின்றன என்று உணர்ந்தேன். நிலாவின் க‌விதைக‌ளில் வ‌ரும் ந‌ட்ச‌த்திராவும் என்னுடைய‌ க‌விதைக‌ளில் வ‌ரும் தூரிகாவும் ஒருவ‌ரே என்று நிலா சொன்னது நியாபகம் வந்தது. ந‌ட்ச‌த்திராவை பார்க்க‌ வேண்டும் போல‌ இருந்தது.

குளிரில் நடுங்கியபடியே சைக்கிள் தள்ளிக்கொண்டு வந்த ஒருவர் என்னை பார்த்து புன்னகைத்துவிட்டுப்போனார்.அறைக்கு வந்து மீண்டும் பிடித்த கவிதைளை படித்தேன் புத்த‌க‌த்தை நெஞ்சில் சாய்த்த‌ப‌டி எப்போது உற‌ங்கிப்போனேன் என நினைவில்லை. காலை எழுந்ததும் ஒரு வரி பிசகாமல் நிறைய‌ க‌விதைக‌ள் நியாப‌க‌த்திற்கு வ‌ந்தது.இதே போல் என்னுடைய‌ ஒன்றாம் வ‌குப்பு த‌மிழின் முத‌ல் பாட‌லும் , பக்கத்தின் வண்ணம் என மாறாமல் சில‌ ச‌ம‌ய‌ம் நியாப‌க‌த்திற்கு வ‌ரும், சில நேரங்களில் அந்த புத்தகத்தின் வாசம் கூட உணர்ந்திருக்கிறேன். சிரித்துக்கொண்டேன். ப‌டுக்கையில் இருந்து கொண்டே சில‌ கவிதைக‌ள் வாசித்தேன். அன்று மாலை வ‌ரை வெயில் தின்ற மழையுடன் பேசிக்கொண்டிருந்தததாக நியாபகம்.

ம‌ழையுட‌ன் க‌ழியும் இர‌வும்,ம‌ன‌திற்கு பிடித்த‌ க‌விதைகளுடன் தொடங்கும் காலையும் எப்போதுமே வ‌சீக‌ர‌மான‌வைகள்.

புத்த‌க‌த்தின் பெய‌ர்: வெயில் தின்ற‌ ம‌ழை ஆசிரிய‌ர் : நிலார‌சிக‌ன் ‌ ( உயிர்மை பதிப்பகம் ) விலை : 50 ரூபாய் ‌ இணையத்தில் பெற‌: http://tinyurl.com/2uqqkta

கடவுளை இன்று
“டைடல்பார்க்”கில் சந்தித்தேன்
கோட் சூட் சகிதமாக கையில்
பிளாக் பெரியுடன் லிப்டில்
இருந்து வெளிப்பட்டார்.
ஆச்சர்யம் அடைந்தவனாய்
உங்களிடம் பேச வேண்டும்
என்றதற்கு தற்போது
பிஸியாக இருப்பதாக
சொல்லி செல்போன் நம்பர்
வாங்கிக்கொண்டார்.
கழுத்தில் தொங்கிய நிறுவன
அடையாள அட்டையை காட்டி
பெருமை பட்டுக்கொண்டார்.
இங்கே எப்படி வேலைக்கு
சேர்ந்தீர்கள் என்றதற்கு
சிக்கலான கணக்கு கேள்விகள் 50ம்
புதிர் வினாக்கள் 20ம்
கடைசி அறையில் நடைபெற்ற
குழு விவாதத்தில் வெற்றி பெற்றும்
வேலைக்கு சேர்ந்ததாக கூறினார்
என‌க்கு வ‌ர‌ம் வேண்டும் என்ற‌த‌ற்கு
அதெல்லாம் ஓல்டு பேஷ‌ன் என‌வும்
வேண்டுமென்றால் எதாவ‌து
பிர‌ப‌ல‌ வ‌ங்கியில் கிரெடிட் கார்டு
வாங்க சிபாரிசு செய்வதாக‌வும் சொன்னார்
நீங்கள் கடவுளா !? என்று
சந்தேகமாய் இருக்கிறது
என்றதற்கு அருகே நடந்து
வந்த பெண்னை நோக்கி
விரலை நீட்டினார்.
அவள் அருள் வந்ததாய்
தலைவிரி கோலமாய் ஆடினாள்,
வாயில் இருந்து
பூக்களை வரவழைத்தார்
உள்ளங்கையில் இருந்து
தண்ணீரை வரவழைத்தார்
சுற்றி நின்ற கூட்டம்
ஆர்ப்பரித்தது.
கடவுளுக்கு வெட்கம் தாளவில்லை.
அடுத்த வருடம் நடக்கும்
கம்பெனியின் கல்சுரல்சில் தன்னுடைய
வித்தைகளை காட்டி
எல்லாரையும் அசத்தப்போவதாக
சொல்லிவிட்டு தோளில்
மாட்டியிருந்த லாப்டாப்
பேக்கை இறுக்கி பிடித்தபடி
பதினொன்றாம் மாடிக்கு பறந்து சென்றார்

If you enjoyed this post, make sure you subscribe to my RSS feed!