Archive for the ‘வாழ்க்கை’ Category

CLASS_ROOM

மழைசாரலில் பள்ளி மைதானத்தில் உதிர்ந்த இலையின் வாசனையை இப்பொழுதும் என்னால் அடையாளம் கண்டுகொள்ளமுடியும்.பால்யத்தின் நினைவடுக்குகளில் பள்ளிநினைவுகளே என்னை பெரிதும் ஆட்கொண்டிருக்கிறது.

என் கிராமத்திலிருந்து 14 கி.மீ பொள்ளாச்சி, குப்பாண்ட கவுண்டர் தொடக்கப்பள்ளி, பச்சை கலர் டவுசரும் , மஞ்சள் கலர் சட்டை. எனக்கு தெரிந்து 3 செட் உடைகள் தான் 5 வது வரைபோட்டிருப்பேன். இரண்டாம் வகுப்பில் தான் அந்த பள்ளியில் சேர்ந்தேன். மிக நீண்ட மைதானம்., ஒடிக்கொண்டே இருப்பேன்., பின்னாட்களில் பல்கலை கழக போட்டிகளில்பதக்கங்களை வாங்க இந்த மைதானம் காரணமாக இருந்திருக்கலாம்., கண்டொளி , தொட்டுவிளையாட்டு, நாடு பிரித்து விளையாடுதல் என காலை முதலேஅமர்க்களப்படும்.,அடிக்கடி காலை சுளிக்கொள்வேன், என பால்யம் முழுக்க பெண் ஆசிரியர்களால் வளர்க்கப்பட்டவன். என்ன வேண்டுமானலும் சொல்லுங்கள் பெண் ஆசிரியர்களைபோல ஆரம்பப்பளியில் ஆண் ஆசிரியர்கள் இல்லை., சகிப்புத்தன்மை, பொறுமை என அனைத்திலும் பெண்கள் தான் தி பெஸ்ட்.,

இப்படி பெருகங்கருனை கொண்ட பெண் ஆசிரியர்களையே டரியல் ஆக்குபவன் நான். ஒரு போதும் சொல்பேச்சு கேப்பவனல்ல. சக மாணவர்களுடன் போட்டி, மாணவிகளுடன் கேட்கவே வேண்டாம் சதா சண்டைதான், நந்தினி, சூர்யா, சிவகாமி, அனிதா, வனிதா என சண்டை போட்டவர்களின் பட்டியல் நீளம்,

கிராமத்திலிருந்து விடுபட்டு செல்வது., பயணம், வீட்டுப்பாடம் என தொல்லைகள் தான் பள்ளியில் அதிகம் என்று நினைத்துக்கொண்டிடுந்தேன் 3வது வரும் வரை. 3ம் வகுப்பு ” பரிமளா டீச்சர் ” இந்த ஒரு சொல் போதும் அன்பின் பேருருவமும் , கண்டிப்பின் நினைவுகளும் மனதில் நிலழாடும். 3 வது வகுப்பில் நான் மட்டுமல்ல ஏறக்குறைய என் வகுப்பில் அனைவரும் இவரின்அன்பின் சுருண்டு கிடந்தவர்கள் தான். என் அம்மாவை போலவே அழகாக இருப்பார். இவர்கள் வகுப்பில் மட்டும் தான் ” சத்தமில்லாம பேசுங்க ” எனபார்., மற்றவர்கள் பீரியடில் பேசினால் முட்டி தான் போட வேண்டும்.

விமானம் இயக்குவதை கூட ஒருவனுக்கு சொல்லி கொடுத்து விடலாம் ஏனென்றால் அவனுக்கு “எழுத்து” என்ற ஒன்று தெரியும், எழுத்தில் மூலமாக பல கலைகளைசொல்லிக்கொடுக்கலாம் ஆனால் எழுத்தை சொல்லிக்கொடுப்பது. அ.,ஆ, என தமிழ் தொடங்கி வேறு மொழியான ஆங்கிலத்தின் ஏ பி சி டி என ஆதாரம் சொல்லிக்கொடுப்பது எத்தனைசிரமம்., எதுவும் எழுதப்படாத குழந்தை மனதிற்குள் ஒன்றை விதைப்பது அத்தனை எளிதான காரியமில்லை, அது வெள்ளை காகிதத்தில் கால்களால் நேர் கோடு வரைய முயற்சிசெய்வது போன்று, கடினமான காரியத்தை மிக கச்சிதமான செய்து முடிப்பார் ” பரிமளா டீச்சர்” எனக்கும் அப்படித்தான் செய்து முடித்தார். எனக்கே தெரியவில்லை மூன்றாம்வகுப்பு முடிக்கையில் ஏ பிசி டி இன்னும் கொஞ்ச ஆங்கில வார்த்தைகள் எனக்கு அத்துப்படி.

மீட்டிங் ஹாலில் கோட்டை போட்டுக்கொண்டு இன்று நான் அளந்து விடும் அனைத்து ஆங்கிலமும் ‘பரிமளா டீச்சர்’ எங்கிருந்தோ காலையில் அவதி அவதியாக வந்து மதியவெயிலில் அடைக்கப்பட்ட சாப்பாட்டை சாப்பிட்டுவிட்டு நெற்றி வியர்வை முகத்தில் படர எனக்காக சொல்லிக்கொடுத்த ஏ பிசிடி க்கள் தான். இந்த அன்பின் பெருங்கணையை நான்என்றும் நினைத்துப்பார்க்கிறேன். வாழ்க்கையின் மீப்பெரும் அன்பின் கணங்கள் அவை. நான் நினைத்தாலும் திரும்பி பெறமுடியாத அழகிய நிமிடங்களை எனக்காகவிட்டுச்சென்றிருக்கிறீர்கள் டீச்சர்.

பேருந்து நிலையத்திலிருந்து எனது பள்ளிக்கு வர 20 நிமிட நடை தேவைப்படும், மிக சமீபத்தில் தான் இதை பற்றி யோசித்துப்பார்த்தேன், காலை ஏறு வெயிலில் வியர்வை வடிய 20நிமிடம் நடந்து வந்து , பிரேயரில் வாசிக்கவேண்டிய செய்திகளை குறித்துக்கொடுத்து வரிசையில் நிற்க வைத்து பிரேயர் முடித்து , வகுப்பிற்குள் வந்து ” ஹோ” வென கத்தும்மாணவர்களை பார்த்து அன்பின் புன்னகை புரிய உங்களால் தான் முடியும் டீச்சர்.

இன்றும் என்னுடைய அங்கில வழி பள்ளி நண்பர்கள் , அலுவலகம் நண்பர்கள் என மற்றவர்களில் ஆங்கில அறிவுக்கு மேல் தான் என் அறிவு இருக்கிறதென சொல்வார்கள், எந்த ஒருஆங்கில வழி செயல்பாடும் நான் சரியாக செய்கிறேன் என நினைக்கிறார்கள். அதற்கு காரணம் ‘பரிமளா டீச்சரின்’ ஆங்கிலம் தான். ஆழ்ந்து நோக்கும் போது ஒரு வேளை பரிமளா டீச்சர்சொல்லித்தராமால் வேறு யாராவது எனக்கு ஆங்கிலம் சொல்லித்தந்து பிடிக்காமல் போயிருந்தால் அது கடைசி வரை அப்படியேதான் இருந்த்திருக்கும்.

இன்று எத்தனையோ மேடைகள் ஏறுகிறேன்( அட,நம்புகப்பா) ஆனால் என்னை முதன் முறையாக மேடை ஏற்றி அழகு பார்த்த’பரிமளா டீச்சர்’ தான். இரண்டாம் வகுப்பில் ஆண்டுவிழா நாளன்று முதன் அரங்கேற்றம் டேன்ஸ் தான், நான் மேலே சொன்னது போல என்னிடம் சண்டை போட்ட மகளிர் சங்கத்தினர் அப்பறம் கொஞ்சம் ஆண் சிங்கங்கள்., வளர்ர பையன்தான நல்லா லூஸ் விட்டு தெய்ங்க என பெரியப்பா  கேஜி டெய்லரிடன் சொன்னது தன் வேலையை காட்டியது.அரங்கேற்றத்திற்கு சில மணித்துளிகளுக்கு முன்பு என் டவுசர் கழன்று விழுத்தது,வரலாற்று சிறப்புமிக்க நடனத்தின் நடுவே கழன்டிருந்தால் அய்யகோ நினைக்கவே முடியவில்லை.

3ம் வகுப்பில் காலை சுழிக்கி கொண்டதால் ஆண்டு விழாவில் கலந்து கொள்ளவில்லை, 4ம் வகுப்பில்
தெனாலிராமன் நாடகம். எழுத்து இயக்கம் ‘ பரிமளா டீச்சர்’ தான். எனக்கு தான் லீடிங் ரோல். நான் தான் தெனாலிராமன். தெனாலிராமனாக நினைத்துக்கொண்டு நான் அடித்தகூத்துகளை பார்த்து அரங்கமே வெடித்து சிரித்தது. சும்மாவா ஒவ்வொரு டையலாக்கும் மூன்று முறை சொல்லி பார்வையாளர்களை டரியலாக்கினேன். 5 ம் வகுப்பில் ” ரோபோட் “நாடகம் அதிலும் ‘ பரிமளா டீச்சர்’ தான் என் மீது கொண்ட அபார நம்பிக்கையில் மீண்டும் லீடிங் ரோல் கொடுத்திருந்தார். நம்பிக்கையை காப்பாற்றி விட்டேன்,

ஒவ்வொரு ஆசிரியர் தினத்திற்கும் தவறாமல் பரிமளா டீச்சருக்கு வாழ்த்து தெரிவிக்கிறேன். அதே அன்பின் குரலில் இன்றும் கேட்கிறார்கள் ‘எப்படி இருக்க கண்ணா’ என்று.நெகிழ்ந்து போகிறேன் டீச்சர். கையில் வைத்திருக்கும் அடி ஸ்கேலால் ஒரு போதும் என்னை அடித்ததாக நியாபகம் இல்லை, நீங்கள் சொல்லிக்கொடுத்த எழுத்தின் மூலம் தான் இந்தகடிதம் கூட எழுதியிருக்கிறேன். உங்கள் வகுப்பில் எத்தனை முறை பேசிக்கொண்டும், கத்திக்கொண்டும், விளையாடிக்கொண்டும் உங்களை கோவப்படுத்தியிருப்பேன் என்றுதெரியவில்லை அவை அனைத்திற்கும் என்னை மன்னித்துக்கொள்ளுங்கள் டீச்சர். அறம் செய விரும்பு! ஆறுவது சினம் ! என இன்றும் கண்முன் அமைதியே உருவாக பாடம்நடத்திக்கொண்டிருக்கிறீர்கள். தீர்க்க முடியாத இந்த அன்பின் பெருங்கருணைக்கு நான் என்ன தரமுடியும்.

ஐ லவ் யூ டீச்சர்.

Advertisements

Image

வாழ்வும் கலையும் பின்னிப்பினைந்த இரட்டையர்கள்.  சந்தோஷம் , துக்கம், வேதனை என எல்லா காலத்திலும் கலையை மனிதன் தனக்குள் நிகழ்திப்பார்க்கிறான், அது சத்தமிட்டு சினிமா பாடலை பாடுவதாகட்டும், உட்ச போதையில் வேட்டியை மடித்து கட்டி குத்தாட்டம் போடுவதாகட்டும்.

கலையை தொழிலாக வைத்திருப்பவர்களுக்கு கலை எல்லாமுமாய் இருக்கிறது. பெரும்பாலன கலைஞன் இழப்புகளையும், வலிகளையும் தாண்டி தான் கலையின் முதல் துளியை சுவைக்கிறான். தன் அவமானங்களுக்கு கலையின் மூலம் ஒரு காத்திரமான பதிலை கொடுக்க முடியும் என்பது அவன் எண்ணம்.

அட! விடு மாப்ள நானா பொண்ணு பொண்ணுகுடு கல்யாணம் பண்ணிக்கறனு சொன்ன அப்பா தா தேவையில்லாம பேச்ச எடுத்தாரு , இப்ப பாரு சினிமா காரனுக்கு பொண்ணு தர மாட்டன்னு அசிங்க படுத்தி அனுப்ச்டாங்க., வேணான்னு சொன்னா கேக்கனும் மாப்ள , ஆனா சதீசா ஒன்னுமட்டும் பாத்துக்க முத படம் வந்து பிச்சுட்டு ஓடும் அப்ப சொல்லுவாங்கடா அய்யோ மிஸ் பண்ணிட்டமேன்னு அதான் மாப்ள நமக்கு வேணும். எடுத்துக்க சியர்ஸ் என்றான் பாலா..

நீண்ட நாள் கழித்து வட பழனி கடையில் டீ மாஸ்டராய் எனக்கு டீ கொடுத்தது பாலாவின் கரங்கள். சிரித்த படியே கையில் ஒரு டீ கிளாசுடன் வந்தவன், மச்சா எப்படி இருக்க ,  கைல 3 ஸ்கிரிப்ட் ரெடி பண்ணீட்டண்டா, நம்ம அப்பார்ட்மெண்ட் மாடில அந்த ஒரத்துல இருந்து டாப் வீயூ சாட் வெச்சா செமயா இருக்கும்ல டா, என்ன சொல்ற.., என்றான் புன்னகைத்துவிட்டு வந்தேன்.பெண் கொடுக்க மறுத்த வீட்டிற்கு தரும் காத்திரமான பதிலுக்காய் கோடம்பாக்க சாலைகளின்  சுற்றிக்கொண்டிருக்கிறான் பாலா.

_DSC9509

கார்த்தியை டவுசர் போட்ட காலத்திலிருந்து தெரியும்.,நெகமம் சுறாமீன் ஜிக்காட்ட குழு சுத்துப்பட்டு ஏரியாவில் ஏகத்துக்கும் பேமஸ். இறப்பு, கல்யாணம், திருவிழா, வரவேற்பு என எங்கும் தலையில் ஒரு சிறு துணியை கட்டிக்கொண்டு டண்டனக்க,டண்டனக்க என ஒலியை கேட்டால் ஆட துவங்கி விடுவான்.ஒரு தாளம் மாறாது, ஒரு அசைவு கூட பல்லை இளிக்காது. அத்தனை நேர்த்தி.  இவன் ஆடுவதை பார்க்க வரும் பல பெண்களை நான் அறிவேன்.

சென்னை இலக்கிய மன்றத்தில் அவன் ஆடிய ஆட்டத்தை பார்த்துவிட்டு வந்து  இதை எழுதுகிறேன். எங்க மாப்ள பஸ் ரேட்டுல அம்மா என்னைக்கு கை வெச்சுதோ அதோட போச்சுடா எல்லாம், ஒரு நாளைக்கு 200 ரூபா சம்பளத்துல 100 ரூபா இதுக்கே எடுத்து வெக்க வேண்டியதா இருக்குடா, கஷ்டம் என்றான். வாழ்வாதாரமாய் இருந்த கலை இப்போது அவனுக்கு இரண்டாம் தொழில்., கலைஞன் கஷ்ட ஜீவனத்திற்காக கலையை விட்டுச்செல்கிறானே ஒழிய ஒரு போதும் வெறுப்பதில்லை.,

 தெரிந்தவரின் இறப்புக்காக போயிருந்தோம் அவரின் இரண்டாம் மனைவி அழுவதை பார்த்து பாலா இப்படி சொன்னான்.,” இந்தக்கா ரொம்ப லைவ்வா அழுகுதுல்லடா”  என்றான். அப்போது தோன்றியது, கலைஞனுக்குள் கலை என்பது ஓய்வில்லாத அலையை போல சதா இயங்கிக்கொண்டே இருக்கிறது. புற உலகில் இருந்து அவன் எப்போதோ தன்னை விடுவித்துக்கொண்டான். கலையாக மட்டும் தான் அவனால் காட்சியை விவரிக்க முடிகிறது.

என்னை தாளம்போட்டு ஆட வைக்கும் இசை பறை.ஆபீஸ் கல்சுரலில் பறை அடித்துக்கொண்டிருந்தார்கள். ஆபிஸ் நண்பனிடம் கேட்டேன், மச்சா உனக்கு ஆடனும்னு தோன்ல? என்றேன். மச்சி ஒரு கோட்டர் அடிச்சுட்டு ஊர்பக்கம் போய் செமயா ஒரு குத்து குத்தனும்டா என்றான், ஏண்டா இங்க ஆடக்கூடாது, வா ஆடலாம் என்றதற்கு., ஆமா நீ ரோட்ல பறை அடிக்கறத கேட்டுட்டு டண்டனக்க டண்டனக்கன்னு ஆடுவ, ஆடீட்டு ஆபீஸ்க்கு வா உன்ன எப்படி பாக்கறான்னு பாரு என்றான். தமிழனின் ஆதிகலையை கண்காணாத இடத்தில் ஆட சொல்கிறது. கையில் மது கோப்பையுடன் பெண்ணின் இடை இழுத்து ஆடுவதை மற்றவர்கள் பார்க்க வேண்டும் என்பதற்காக ஸ்டார் ஹோட்டலில் நடத்தப்படும் எத்தனை பர்த் டே பார்ட்டிகளை பார்த்திருக்கிறேன்.

பறையை பற்றி உனக்கு தெரியுமா என்றேன் தோழியிடம், அய்யே! அது மாட்டு தோல்ல செஞ்சது, அத எப்படி தான் தொடறங்களோ உவ்வே! என்றாள் . பறை வாசிப்பதற்கு முன், தன் தோலையே தனக்கு வாழ்வாய் கொடுத்த மாட்டிற்கு தான் முதன் வணக்கம் வைக்கிறான், அது எத்தனை பேருக்கு தெரியும், இத சொல்றியே நீ சாப்பிடும் மஸ்ரூம்கு மட்டும் உயிர் இல்லைன்னு யார் சொன்னது என்றேன் ? போடா போங்கு என தலையில் தட்டி விட்டு ஓடிப்போனாள். முடிவு பெறாத கேள்விகள் நம்மை விட்டு ஓடி ஒளிந்து கொண்டுதான் இருக்கிறது. ஒளிந்து கொண்ட இடத்தில் வெளிச்சம் அடிப்பது கார்பரேட் உலகில் முட்டாள்தனம்.

கார்த்தியிடம் ஒரு முறை மச்சா ஏன் சாவுல பறை அடிக்கறாங்க என்றேன்., அது என்னன்னா மாப்ள, பறை அடிச்சா எல்லாருக்கும் ஆடனும்னு தோனும், கை கால் கொஞ்சமாச்சும் அசையும் அது தான் இயற்கை., இப்படி ஆட வெக்கற பறை அடிச்சுமே ஒருத்தன் ஆடமா படுத்து கெடக்கான்னா  அவ பொணம், செத்துட்டான்னு ஆகுதுல்ல. அத எல்லாத்துக்கும் சொல்றதுக்கு தாண்டா பறை அடிக்கறாங்க என்றான்.

நீங்க ஜிக்காட்டம் ஆடறவருதான தம்பி என்று கார்த்திக்கின் பூச்சிக்கொள்ளி மருந்து சூப்பர் வைசர் கேட்டிருக்கிறார்.,அது முன்னாடி சார் இப்பல்லாம் இல்லை என்றிருக்கிறான். ஆமாம் என்று சொன்னால் வேலை போய்விடும். ஏன்னா ரோட்டுல ஆடீட்டு திரிறவ வேலையை ஒழுங்காக செய்ய மாட்டான் என்பது ஆவரின் அசைக்க முடியாது நம்பிக்கை. திரையில் ஆடியவர்கள் தான் நம்மை இன்று ஆள்கிறார்கள் என்பதை எப்படி அவருக்கு புரிய வைப்பது. தமிழின் ஆதிகலையை தொழிலாக வைத்திருந்தவன் கையில் பூச்சிகளுக்கு மருந்தடிக்கும் வேலையை கொடுத்தது நீங்களும் நானும் தான்.

 இப்போதெல்லாம் கலையுடன் சேர்ந்து கலைஞனும் ஒளிந்து கொள்ள வேண்டும்.,இல்லை என்றால் நம்மை வெளியே தள்ளிவிட்டு நம்மீது குத்தாட்டம் போடுவதற்கு ஒரு முதலாளிக்கூட்டமே கையில் பூதக்கண்ணாடி வைத்து நம்மை பார்த்துக்கொண்டிருக்கிறது.

நகரும் தார் சாலையை இரண்டாக பிரிக்கும் வெள்ளை கோடுகளை முன்பக்கமாக இழுத்து பின்பக்கமாக தள்ளிக்கொண்டிருந்தது வாகனம். எட்டயபுரம் 2 கி.மீ என்பது கண்ணில் பட்டதுமே மனதிற்கு மிக நெருங்கிய உறவினர்கள் வாழும் ஊருக்கும் பயணப்படுவது போலவே இருந்தது. திசை காட்டுக்குறி “பாரதி பிறந்த வீடு” பெயர்பலகையை தாங்கியிருந்தது.வாகனத்தை வீதியில் செலுத்தும் போதே மிக மெல்லிய உணர்வு ஆட்கொண்டிருந்ததை உணர்ந்தேன். பாரதியின் வீடு.

முன்பக்கமாக ஒரு சிறுவனிருந்தான். வாங்க வாங்க செருப்ப அங்கேயே கழட்டி விட்டுருங்க‌ என்றான். முன் அறையிலேயே செல்லம்மாள் பாரதிதான் வரவேற்றார். புகைப்படம் எடுக்கும் போது சிரிக்ககூடாது என்பதை கொள்கையாக கொண்டிருப்பார் போலும். அவரின் புகைப்படத்தையே பார்த்துக்கொண்டிருந்தேன்.

1951ஆம் ஆண்டு திருச்சி வானொலியில் “என் கணவர்” என்ற தலைப்பில் திருமதி செல்லம்மாள் பாரதி ஆற்றிய உரையில் சொன்ன வரிகள் தான் நியாபத்திற்கு வந்தது

“” இன்று என் கணவரின் புகழ் விண்முட்டிச் செல்கிறது. இன்று மகாகவியின் மனைவியாகப் போற்றப்படும் நான் அன்று பைத்தியக்காரன் மனைவியென்று பலராலும் ஏசப்பட்டேன்…””

செல்லம்மாள் பாரதியின் கடிதத்தை படித்த போது ஏற்பட்ட மனவீச்சை கடந்து செல்வதற்கு நீண்ட நேரம் எடுத்துக்கொண்டேன்.

வரலாற்றூப்பெண்.அமைதியான முகம்..,  அடுத்த வேளை சோற்றுக்கு வழியில்லாத போது கிடைத்த அரிசிகளை குருவிகளுக்கு போட்டு விட்டு ” காக்கை குருவி எங்கள் ஜாதி ” என்று  பாடுவ‌தை எந்த‌ பெண்ணாலும் ச‌கித்திருக்க‌முடியாது எத்தனை கோவ‌ம் வந்திருக்கும்.இவரால் கோபப்படவே முடியாது என்பது போலத்தான் முகம்.

ப‌க்க‌த்தில் இன்னொரு ப‌ட‌த்தில் பார‌தியார் செல்ல‌ம்மாளுட‌ன் இருந்தார். அதிலும் செல்ல‌ம்மாள் சிரிக்க‌வேயில்லை.இவ‌ர் சிரிக்காத‌து  உறுத்தலாக இருந்தது. க‌டைசி வ‌ரை வ‌றுமையும் , துன்ப‌த்தையும் ம‌ட்டுமே அனுப‌வித்த‌தால் புன்ன‌கையே இழந்திருப்பார் போலும்.

1901 ம் ஆண்டு த‌ன்னுடைய‌ 19வ‌து வ‌ய‌தில் செல்ல‌ம்மாளுக்கு எழுதிய‌ க‌டிதத்தில், எனதருமைக் காதலி செல்லம்மாளுக்கு ஆசிர்வாதம் என்று ஆர‌ம்பிப்பார் பார‌தி. பார‌தியை பார்த்து க‌ண்சிமிட்டி சிரித்துக்கொண்டேன். எட்டாம் வ‌குப்பில் ப‌டித்த பாரதிக்கும் என‌க்கும் எந்த‌ ச‌ம்ப‌ந்த‌மும் கிடையாது. இப்போது நான் பார்க்கும் பார‌தி ஆளுமை, என‌க்கு நெருக்க‌மான‌வ‌ர்.

அடுத்த‌ அறை ” பார‌தி பிற‌ந்த‌ இட‌ம் ” அவ‌ர் ஜ‌னித்த‌ இட‌த்தில் ஒரு சிலை இருந்தது.சிலையை தொட்டுப்பார்த்துக்கொண்டிருந்தேன். வெளியின் வெளிச்ச‌ம் த‌ரையில் ப‌ர‌வியிருந்தது.

ஆண்டுக‌ள் சென்ற‌ பின் உண‌ர்ச்சிப்பூர்வ‌மாக‌ அவ‌ரின் பிற‌ப்பை அவ‌ர் பிற‌ந்த‌ இட‌த்தில் நின்று நினைத்துப்பார்பார்க‌ள் என்று பார‌திக்கு நிச்ச‌ய‌ம் தெரிந்திருக்காது . எட்ட‌ய‌புர‌த்தில் சாதார‌ண‌மாக‌ பிற‌ந்த‌வ‌ர் ம‌றையும் போது சாதார‌ண‌மான‌வ‌ராக‌ இல்லை. அவ‌ரின் பிற‌ப்பை கொண்டாடிக்கொண்டிருந்தேன். அருகிலேயே அவ‌ர் ப‌ய‌ன்ப‌டுத்திய‌ வேலும் குத்தீட்டியும் இருந்தது, அதைவிட‌ வலிமையானதுஅவ‌ர் ச‌ட்டையில் குத்தியிருக்கும் பேனா என்ப‌தை உண‌ர்ந்துகொண்டேன். ப‌ழ‌மொழிக‌ளை நிஜ‌த்துட‌ன் உள்வாங்கிக்கொள்வ‌து என‌க்கு மிக‌ அரிதாக‌வே  நடந்திருக்கிறது.

தேடிச்சோறு நிதம் தின்று – பல
சின்னஞ்சிறு கதைகள் பேசி – மனம்
வாடித் துன்பமிக வுளன்று – பிறர்
வாடப் பல செயல்கள் செய்து – நரை
கூடிக் கிழப்பருவ மெய்தி – கொடுங்
கூற்றுக் கிரையெனப் பின் மாயும் – பல
வேடிக்கை மனிதரைப் போல – நான்
வீழ்வேனென்று நினைத்தாயோ

( சொல்லில‌ட‌க்க‌முடியாத அகச்‌சீற்ற‌த்தை இந்த‌ப்பாட‌ல் எப்போதும் என‌க்கு த‌ருகிற‌து . நரை கூடிக் கிழப்பருவ எய்த‌மாட்டேன் என்ற‌ இந்த‌ க‌விதையை எழுதினதால் தான் நரை கூடுவதற்கு முன்னமே நம்மை விட்டுச்சென்றாரோ என்னமோ )

ப‌க்க‌த்தில் 1920 ‍ல் பார‌தி சென்னையில் எடுத்த‌ புகைப்ப‌ட‌ம் ஒன்று இருந்தது. அதில் அழ‌காக‌ முண்டாசு க‌ட்டி ப‌ட‌ங்க‌ளில் நாம் பார்க்கும் பார‌தி போல‌ இருந்தார். அவர் அமர்ந்திருந்த இருக்கையின் பின்பக்கம் சற்று சரிவாக வெளியே தெரிந்தது.அதை சுற்றி ம‌ன‌ம் ப‌ல‌ சிந்த‌னைக‌ளை இழுத்துக்கொண்ட‌து. அவ‌ச‌ர‌மாக‌ வ‌ந்து உட்கார்ந்து கொண்ட‌தால் தான் ச‌ரிசெய்ய‌ வேண்டாம் என‌ நினைத்து புகைப்ப‌ட‌ம் எடுத்துக்கொண்டாரா, இல்லை அந்த‌ நாற்காலியின் ஏதோ ஒரு கால் ச‌ரியாக‌ வேலைசெய்ய‌வில்லையா என‌ இடியாப்ப‌ச்சிக்க‌லாக‌ நினைவுக‌ள் ப‌ய‌ண‌ப்ப‌ட்டுக்கொண்டே இருந்தது. நொதிக்கும் சிந்த‌னையை அமைதிப்படுத்திய‌ பிற‌கு தான் உண‌ர்ந்தேன் எட்ட‌ய‌புர‌ம் என்ற‌ பெய‌ர் ப‌ல‌கையை பார்த்த‌ முத‌ல் இப்ப‌டி தான் இருக்கிறேன் என்று. ச‌ம‌ நிலை ப‌டுத்திக்கொண்டேன்.

அடுத்து அவ‌ரின் குடும்ப‌ப்ப‌ட‌ம், அதிக‌ நேர‌ம் பார்த்த‌து அந்த‌ ப‌ட‌மாக‌த்தான் இருக்கும் என்று நினைக்கிறேன்.க‌ம்பீர‌மான‌ அப்பாவாக‌, காத‌ல்மிகு க‌ண‌வ‌ணாக‌ செல்ல‌ம்மாளில் தோளில் கை வைத்துக்கொண்டு எடுக்க‌ப்ப‌ட்ட‌து அந்த‌ப்ப‌ட‌ம்.


வ‌ல‌து புற‌மாக‌ வீட்டிற்குள்ளேயே கிண‌று. இங்கே தான் செல்லம்மாளின் குர‌லுக்கேற்ப‌ பார‌தி த‌ண்ணீர் இறைத்துக்கொடுத்திருப்பார் என்ற‌ நினைப்பே அலாதியாய் இருந்தது. இந்த‌ கிண‌ற்ற‌டியில் எத்த‌னை பாட்டெழுதியிருப்பார் என்ப‌த‌ற்கு சான்றுக‌ள் இல்லை. என்னை பொறுத்த‌வ‌ரை குறைந்த‌ப‌ட்ச‌ம் ப‌த்து பாட‌ல்க‌ள்.

மீண்டும் அதே அறை, பார‌தியின் தொட‌ர்பு கொண்டவர்களின் புகைப்ப‌ட‌ங்க‌ள், முத‌லாவ‌து ரா. க‌ன‌க‌லிங்க‌ம் ஜாதிக‌ள் இல்லைய‌டி பாப்பா என்று பாடிய‌ மகாக‌வியால் பூணுல் அணுவிக்க‌ப்ப‌ட்ட‌வ‌ர். உய‌ர் சாதியை த‌விர்த்து முத‌ல் முறையாக‌ த‌மிழ‌க‌ வ‌ர‌லாற்றில் பூணூல் அணிந்த‌து இவ‌ராக‌த்தான் இருக்கும். பார‌தி வெறும் வார்த்தைக‌ளால் ஜ‌ல்லிய‌டித்துப்போக‌வில்லை என்ப‌த‌ற்கு க‌ன‌க‌லிங்க‌ம் அவ‌ர்க‌ளே முத‌ல் சாட்சி.

அடுத்து சுதேச‌ கீத‌ங்க‌ள் வெளியிட்ட‌ கிருஷ்ண‌சாமி ஐய‌ர், அவ‌ரை அடுத்து புதுவையில் அறிமுக‌மாகி சென்னையில் பார‌தியை காப்பாற்றிய‌ குவ‌ளை க‌ண்ண‌ன்., சுதேச‌ ப‌க்தி உப‌தேச‌ம் செய்த‌ நிவேதிதா தேவியார். இவ‌ர்க‌ள் அனைவ‌ரும் பாரதி என்ற‌ ஆளுமையை அவ‌ர் வாழ்ந்த‌ ச‌ம‌ கால‌த்தில் க‌ண்டுகொண்ட‌வ‌ர்க‌ள்.

அடுத்து அவ‌ர் ப‌டித்த‌ இந்து க‌ல்லூரி, சென்னையில் வாழ்ந்த‌ வீடு, அவ‌ரின் புத‌ல்விக‌ள், அவர் எழுதிய‌ க‌டித‌ங்க‌ள். இதில் ப‌ர‌லி சு நெல்லைய‌ப்ப‌ருக்கு எழுதிய‌ க‌டித‌த்தில் ” த‌மிழ‌ச்சியை காட்டிலும் ம‌ற்றொரு ஜாதிக்காரி அழ‌காயிருப்ப‌தை க‌ண்டால் என் ம‌ன‌து  புண்ப‌டுகிற‌து என்று எழுதியிருக்கிறார்.

இதை விட‌ த‌மிழ‌ச்சிக‌ளை யாரும் காதலித்துவிட‌ முடியாது என்றே நினைக்கிறேன். இந்த இரண்டு வரிகள் மிகப்பெரும் நினைவுச்சுழலை ஆரம்பித்துவைத்தன‌‌. தமிழனும் , தமிழச்சியும் தான் எல்லாவற்றிலும் முத‌லிட‌த்தில் இருக்க‌ வேண்டும் என்பதை பாரதியார் பெரிதும் விரும்பியிருக்கிறார்.

மீப்பெரும் ஆளுமைக‌ள் அவ‌ர்க‌ளின் புகைப்ப‌டங்களின் நிழ‌ல் பிம்பத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்க‌ள். பாரதி நிஜத்திலும் கவிதையிலும் ஒருகால‌த்திலும் ச‌ம‌ர‌ச‌ம் செய்து கொள்ளாத‌வ‌ர். பைத்திய‌க்கார‌ன் என்று சொன்ன‌வ‌ரின் வாரிசுக‌ளுக்கு இன்று அவ‌ர் மகாக‌வி.

க‌விதைக்காக‌ அவ‌ர் இழ‌ந்தவைக‌ளின் கூட்டுக்தொகை மிக அட‌ர்த்தியான‌து. இருக்கும் வ‌ரை வார்த்தைக‌ளால் விளையாடிக்கொண்டிருந்த‌வ‌ர் இற‌ந்த‌ பிற‌கு அவரின் வார்த்தைக‌ள் விளையாடிக்கொண்டிருக்கிற‌து.

நேரமாகிவிட்டதாக அண்ணன் சொன்னார் . கிள‌ம்புவ‌த‌ற்கு த‌யாராக‌ சப்பாத்துகள் அணிவதற்கு முதல் அறைக்கு வந்தேன். முதலில் பார்த்த அதே படத்தில் இப்போதும் செல்ல‌ம்மாள்  சிரிக்க‌வேயில்லை. அவ‌ரின் சோக‌ம் ப‌டிந்த‌ முக‌ம் என்ன‌வோ செய்த‌து. நிராகரிக்கப்பட்ட‌  கவிஞனுடைய‌ ம‌னைவிக‌ளின் மொத்த‌ பிம்ப‌ம் அவ‌ள்.

“யாருக்கு மனைவியாக வாழ்ந்தாலும் வாய்க்கலாம். ஆனால் கவிஞன் மனைவியாயிருப்பது கஷ்டம்” என்ற‌  துன்பத்தின் மீப்பெரும் வரிகளை செல்லமாள் வ‌லிக‌ளுட‌ன் தான் சொல்லியிருக்கிறார். அவ‌ரின் சிரிக்காத‌‌ முக‌ம் தீர்க்க‌முடியாத‌ ர‌ண‌மாய் உறுத்த‌த்தொட‌ங்கிய‌து. ச‌ட்டென‌ கிள‌ம்பி வெளியேறினேன்.

 -0O0-

பின் இணைப்பு :

என் கணவர் – திருமதி. செல்லம்மாள் பாரதி

(1951ஆம் ஆண்டு திருச்சி வானொலியில் “என் கணவர்”என்ற தலைப்பில் திருமதி செல்லம்மாள் பாரதி ஆற்றிய உரை.)

வறுமை, கவிஞனின் தனி உடைமை. கவிஞனுக்கு இந்த மண்ணுலகில் இன்பம் அளிப்பது கவிதை; ஆனால் வயிற்றுக்குணவு தேடி வாழும் வகையை அவன் மனைவிதான் கண்டுபிடிக்க வேண்டி வருகிறது. காதல் ராணியாக மனைவியைப் போற்றும் கவிஞன் அவளுக்குச் சாதமும் போடவேண்டும் என்ற நினைவேயின்றிக் காலம் கழித்தானேயானால், என்ன செய்ய முடியும்?.

ஊருக்குப் பெருமை என் வாழ்வு. வையகத்தார் கொண்டாட வாழவேண்டும் என்ற என் கனவு ஓரளவு பலித்ததென்னவோ உண்மைதான். இன்று என் கணவரின் புகழ் விண்முட்டிச் செல்கிறது. இன்று மகாகவியின் மனைவியாகப் போற்றப்படும் நான் அன்று பைத்தியக்காரன் மனைவியென்று பலராலும் ஏசப்பட்டேன்… விநோதங்கள் என் வாழ்க்கையில் அதிகம்.

உலகத்தோடொட்டி வாழ வகை அறியாத கணவருடன் அமர வாழ்வு வாழ்ந்தேன் என்றால் உங்களுக்குச் சிரிப்பாகத்தான் இருக்கும். யாருக்கு மனைவியாக வாழ்ந்தாலும் வாய்க்கலாம். ஆனால் கவிஞன் மனைவியாயிருப்பது கஷ்டம்.

கவிஞர்கள் போக்கே ஒரு தனி. உண்பதிலும் உறங்குவதிலும் வட சாதாரண மனிதரைப்போல் அவர்கள் இருப்பதில்லை. கற்பனைச் சிறகு விரித்துக் கவதை வானில் வட்டமிடும் பறவை, பூலோகத்திலே இருண்ட வீட்டிலே மனைவிக்கும் மற்றவருக்கும் சம்பாத்தியம் செய்துபோட்டு, சாதாரண வாழ்க்கை வாழ முடியுமா?

வறுமை, கவிஞனின் தனி உடைமை. கவிஞனுக்கு இந்த மண்ணுலகில் இன்பம் அளிப்பது கவிதை ஆனால் வயிற்றுக்குணவு தேடி வாழும் வகையை அவன் மனைவிதான் கண்டுபிடிக்க வேண்டி வருகிறது. காதல் ராணியாக மனைவியைப் போற்றும் கவிஞன் அவளுக்குச் சாதமும் போடவேண்டும் என்ற நினைவேயின்றிக் காலம் கழித்தானேயானால், என்ன செய்ய முடியும்?

கவிஞன் விசித்திரமான தன்மை நிறைந்தவன்; அவனுக்கு எதுவும் பெரிதில்லை. ஆனால் கவலை நிறைந்த வாழ்நாளைக் கழிக்க வேண்டும் என்று எந்தப் பெண்தான் நினைக்க முடியும்? சிறு வயதில் ஆசாபாசங்களும் அபிலாஷைகளும் ஒவ்வொரு பெண்ணின் மனத்திலும் நிறைந்திருப்பது இயற்கைதானே? சுகமாக வாழுவதற்கு சொர்க்கலோகம் சென்றால்தான் முடியும் என்ற நிலை கவிஞன் மனைவிக்கு ஏற்பட்டு விடுகிறது.

அந்த நாளிலிருந்த சத்திமுத்தப் புலவரின் மனைவியிலிருந்து இன்று என்வரை சுகவாழ்வு ஒரே விதமாகத்தான் அமைந்திருக்கிறது. ஏகாந்தத்தில் அமர்ந்துவிட்டால் முனிவரும்கூட அவரிடம் பிச்சைதான் வாங்கவேண்டும். ஆனால் மனைத் தலைவியாகிய நான் அவ்வாறு நிஷ்டையிலிருக்க முடியுமா?

கவிஞர்களில் பலதரப்பட்டவர்கள் இருக்கிறார்கள். கடவுளைப் பக்தி செய்யும் கவிஞன், காவியம் எழுதும் கவிஞன், இவர்களைப் புற உலகத் தொல்லைகளை சூழ இடமில்லை. எனது கணவரோ கற்பனைக் கவியாக மட்டுமல்லாமல் தேசியக் கவியாகவும் விளங்கியவர். அதனால் நான் மிகவும் கஷ்டப்பட்டேன்.

கவிதை வெள்ளைத்தை அணை போட்டுத் தடுத்தது அடக்கு முறை. குடும்பமே தொல்லைக்குள்ளாகியது. ஆனால் நுங்கும் நுரையுமாகப் பொங்கிவரும் புது வெள்ளம் போல அடக்குமுறையை உடைத்துக்கொணடு பாய்ந்து செல்லும் அவர் கவிதை.

காலையில் எழுந்ததும் கண்விழித்து, மேநிலை மேல், மேலைச்சுடர் வானை நோக்கி வீற்றிருப்பார். ஸ்நானம் ஒவ்வொரு நாள் ஒவ்வொரு விதத்தில் அமையும். ஸூரிய ஸ்நானம்தான் அவருக்குப் பிடித்தமானது. வெளியிலே நின்று நிமிர்ந்து ஸூரியனைப் பார்ப்பதுதான் வெய்யற் குளியல். ஸூரியகிரணம் கண்களிலேயுள்ள மாசுகளை நீக்கும் என்பது அவர் அபிப்பிராயம். காலைக் காப்பி, தோசை பிரதானமாயிருக்க வேண்டும் அவருக்கு. தயிர், நெய், புது ஊறுகாய் இவைகளைத் தோசையின் மேல் பெய்து தின்பார்.

அவருக்குப் பிரியமான பொருளைச் சேகரித்துக் கொடுத்தால், அவரது நண்பர்களான காக்கையும் குருவியும் அதில் முக்கால் பாகத்தைப் புசித்து விடுவார்கள். எதை வேண்டுமானாலும் பொறுக்க முடியும்; ஆனால் கொடுத்த உணவைத் தாம் உண்ணாமல் பறவைகளுக்குப் போட்டுவிட்டு நிற்கும் அவருடைய தார்மிக உணர்ச்சியை மட்டும் என்னால் சகிக்கவே முடிந்ததில்லை.

சிஷ்யருக்குக் குறைவு இராது.செய்திகளுக்கும் குறைச்சல் இல்லை. கானாமுதமோ காதின் வழியே புகுந்து உடல் எங்கும் நிறைந்துவிடும். களிப்பை மட்டும் பூரணமாக அனுபவிக்க முடியாமல் உள்ளிருந்து ஒன்று வாட்டும். அதுதான் கவலை!

இச்சகம் பேசி வாழும் உலகத்தில் எப்பொழுதும் மெய்யே பேச வேண்டும் என்பது அவரது கட்டளை. எக்காரணத்தைக் கொண்டும் பொய் பேசக் கூடாது. இது எத்தனை சிரமமான காரியம் என்பது எல்லாருக்கும் தெரிந்த விஷயம்தான்.

புதுவை எனக்குச் சிறைச்சாலை ஆகியது. சிறைச்சாலை என்ன செய்யும்? ஞானிகளை அது ஒன்றும் செய்ய முடியாதுதான். எதையும் ஏற்றுக்கொள்ளும் மனத்திண்மை அவர்களுக்கு உண்டு. ஆனால் என்னைப்போன்ற சாதாரணப் பெண்ணுக்கு, இல்லறத்தை நல்லறமாக்க வேண்டும் என்ற ஒரே விஷயத்தை லட்சியமாகக் கொண்ட ஒருத்திக்குச் சிறைச்சாலை நவநவமான துன்பங்களை அள்ளித்தான் கொடுத்தது.

புதுவையில்தான் புதுமைகள் அதிகம் தோன்றின. புது முயற்சிகள், புதிய நாகரிகம், புதுமைப் பெண் எழுச்சி, புதுக் கவிதை இவை தோன்றின. இத்தனை புதுமைகளும் எழுவதற்கு நான்தான் ஆராய்ச்சிப் பொருளாக அமைந்தேன். பெண்களுக்குச் சம அந்தஸ்து வழங்க வேண்டுமா வேண்டாமா என்று வெகுகாலம் ஆராய்ந்த பின்னரே, பெண் விடுதலை அவசியம் என்ற முடிவு கண்டு, நடைமுறையில் நடத்துவதற்குத் துடிதுடித்தார் என் கணவர். இந்த முடிவை அவர் காண்பதற்குள் நான் பட்ட பாடு சொல்லுந்தரமன்று.

புதுவையில் அரசியலில் கலந்துகொள்ள ஒரு வசதியும் இல்லாதிருந்த போதிலும், தமிழ் இலக்கியத் தொண்டு செய்ததனால் ஒருவாறு மன அமைதி பெற்றிருந்தார். நமது பொக்கிஷங்கள் என்று கருதத் தகும்படியான அவரது கவிதைகள் எல்லாம் அங்குதான் தோன்றின.

மனிதரை அமரராக்க வேண்டும் என்று தவித்த என் கணவர், எத்தனை இடையூறுகளுக்கும் எதிர்ப்புகளும் ஏற்பட்ட போதிலும், அவற்றையெல்லாம் மோதிமிதித்துவிட்டுத் தம் லட்சியத்தில் முன்னேறும் துணிவு கொண்டு செயலாற்றினார்.

மகாகவி நாட்டிற்காக, அதன் சுதந்திரத்திற்காக வாழ்ந்தார். தமிழ் பண்பாட்டில் சிறந்த அவர் ஈகை, அன்பு, சகிப்புத்தன்மை முதலான பண்புகளைக் கடைப்பிடித்து வாழ்ந்தது ஓர் அதிசயமன்று.

தூங்கிக் கிடந்த தமிழரை விழிப்புறுத்தியதும் அதிசயமன்று; ஆனால் இன்று அவரது பூத உடல் மறைந்த பின்பும் தமிழ் பேசும் ஒவ்வோர் உயிரினிடத்தும் அவர் கலந்து நிற்பதுதான் அதிசயம் என்று எனக்குத் தோன்றுகிறது. “விண்டுரைக்க மாட்டாத விந்தையடா!” என்று அவரது கவிதை மொழியில்தான் இந்த மகிழ்ச்சியைத் தெரிவிக்க வேண்டியிருக்கிறது.

( சின்னஞ்சிறுகிளியே செல்லம்மா பாடல் கேட்க வேண்டும் போல உள்ளது )

பின் இணைப்பு படங்கள் :

புகைப்படம்

Posted: ஜனவரி 22, 2011 by அடலேறு in கவிதை, தமிழ், வாழ்க்கை
குறிச்சொற்கள்:,

ஒருவருக்கு அதிக மகிழ்ச்சி அளிக்கக்கூடியது என்னவென்றால் அவருடைய ஆகச்சின்ன வயது புகைப்படத்தை  பார்ப்பது -‍ அ.முத்துலிங்க‌ம்

என்னுடைய சிறு வயது புகைப்படம் ஒன்று வீட்டில்  இருக்கிறது.வீட்டுக்கு செல்லும் போது எப்போதாவது அதை பார்த்துக்கொள்வேன். புகைப்படத்தில் இருக்கும் முகத்துடன் கண்ணாடியில் என்னை பார்த்ததாக நியாபகமே இல்லை. அந்த புகைப்படத்தை எடுக்கும் போதெல்லாம் அம்மா பழைய கதைகள் எதாவது ஒன்றை சொல்லதொடங்குவாள். புகைப்படத்தில் நான் போட்டிருக்கும் பச்சை உடை, போட்டோ பிடித்த‌ நாள், அன்று காலையில் நடந்தது என்று நினைவில் உள்ள‌வைக‌ளை அடுக்கதொடங்குவாள். அவளை தவிர வேறு யாராலும் என்னுடைய சிறுவயது நினைவுகளை இத்தனை லயத்துடன் சொல்ல முடியாது.  கதைக‌ளை கேட்ப‌த‌ற்கு அப்பாவிற்கு ஆசை இருந்தாலும் நேர‌டியாக‌ க‌வ‌னிக்காம‌ல் காதை ம‌ட்டும் இங்கே வைத்துக்கொண்டு  வேறு வேலையில் மும்ம‌ராமாக‌ இருந்துகொண்டிருப்பார்.

புகைப்படம் எடுத்த‌ நாள் எவ‌வ‌ள‌வு முய‌ன்றும் நினைவிற்கு கொண்டுவ‌ர‌ முடிய‌வில்லை. சிறுவ‌ய‌து நினைவுக‌ளை போல‌ இப்போது இருக்கும் நினைவுக‌ளையும் பின்பு ஒரு நாளில் ம‌றந்து போவோம் என்ப‌து வேத‌னை த‌ருவ‌தாய் இருந்த‌து.

புகைப்படங்க‌ள் எப்போதுமே இற‌ந்த‌ கால‌த்தை நினைவுப‌டுத்திக்கொண்டிருக்கும் நினைவின் பிம்ப‌ம். கடந்த காலத்தை திரும்பி பார்க்க புகைப்படத்தை தவிற வேறு ஒன்றும் சிறந்தவையாக இருக்க முடியாது. புகைப்ப‌ட‌த்தை பார்க்கையில் புகைப்படம் எடுக்கப்பட்ட சூழ்நிலை, அதன் சார்பு நிகழ்வுகளை மீட்டு தரும் அது த‌ரும் சுக‌மே கதகதப்பானது. அத‌ற்காக‌த்தான் ம‌னித‌ர்க‌ள் த‌ங்க‌ளை புகைப்ப‌ட‌த்திற்குள் அடைத்துக்கொள்வ‌தில் பெரும‌கிழ்ச்சி அடைகிறார்க‌ள். தேர்ந்த‌ புகைப்ப‌ட‌க‌லைஞ‌னின் க‌ண்க‌ள் வ‌ழியே அவ‌ன‌து உல‌கை பார்ப்ப‌து வாழ்வின் உன்ன‌த‌மான‌ த‌ருண‌ம்.

ப‌க‌த்,கார்த்தி வ‌லைப‌க்க‌த்திலும் முக‌ப்புப‌க்க‌த்திலும் இவ‌ர்க‌ளின் புகைப்ப‌ட‌ங்க‌ள் பெருத்த‌ வ‌ர‌வேற்பை பெற்ற‌து. ப‌க‌த்தை ச‌ந்திக்க‌ முடியுமா என்று மும்பையில் இருந்த போதே கேட்டிருந்தேன். சென்னை வ‌ந்த‌தும் ச‌ந்திக்கலாம் என்றிருந்தார். சென்னை வந்து புது அலுவலகம், புது முகங்கள் என  என்னை சமநிலை படுத்திக்கொள்ளவே இரண்டு வாரங்கள் ஆனது. அலுவ‌ல‌க‌த்தின் வெளியே தேநீர் குடித்துக்கொண்டுருந்தேன். அருகில் ப‌க‌த், அப்போது தான் முத‌ல்முறை நேரில் ச‌ந்திக்கிறோம்.  மிக‌ இய‌ல்பாக‌ இருந்தார். என‌க்கு நிறைய‌ கேள்விக‌ள் இருந்த‌ன‌ அவ‌ரிட‌ம். வீட்டிற்கு போய் பேசலாம் என்று கூட்டிச்சென்றார்.

அழ‌கிய‌ பூக்க‌ள்,வித விதமான புகைப்ப‌ட‌ க‌ருவி, பெரிய‌ வெள்ளை திரை என‌ வீடு அழ‌காயிருந்த‌து. பேச‌த்தொட‌ங்கினேன். குடும்ப‌ம், ப‌டிப்பு, வேலை என‌ போய்க்கொண்டிருந்த‌து. ம‌க்கா ஸ்டுடியோஸின் ஆரம்ப‌ தூண்க‌ள், கார்த்திக் உட‌னான‌ ந‌ட்பின் ஆர‌ம்ப‌கால‌ நாட்க‌ளை ப‌கிர்ந்து கொண்டார். பொறாமையாக இருந்தது. புகைப்ப‌ட‌த்தினுட‌னான‌ நெகிழ்ச்சி த‌ருண‌ங்க‌ளையும் ப‌திவு செய்தார். அவரின் புகைப்படங்கள்  நாளிதழ்கள், தினசரிகள், வலைபக்கங்களில் என எங்கும் வியாபித்திருக்கிறது.  அவரின் சில புகைப்படங்களை தருகிறேன். வலிகளை கடந்து தான் எந்த ஒரு கலைஞனும் கலையுடன் தன்னை இணைத்துக்கொள்கிறான். புகைப்படம் கற்றுக்கொள்ள எடுத்த முயற்சி, முதலீடு, காலம் என அனைத்தையும் பட்டியலிட்டார்.

பக‌த் அமெரிக்கா, இந்தியா என‌ பல தேசங்களில் பல‌ புகைப்ப‌ட‌ க‌லைஞ‌ர்க‌ளை ச‌ந்தித்துள்ளார். நுண்ணிய வேலைப்பாடுகள் தான் புகைப்படம். ஒவ்வொரு புகைப்படமும் அதை எடுப்பவரின் மனநிலை சார்ந்தே உருவாக்கம் பெருகின்றன. என்னை க‌வ‌ர்ந்த‌ ப‌க‌த் , கார்த்தியின் சில‌ புடைப்ப‌ட‌ங்க‌ளை இங்கு ப‌கிர்கிறேன்.

எந்த ஒரு கலைஞனும் கலையின் வழி தான் தன் சக மனிதனிடம் அதிகமாக பேசிக்கொள்கிறான் என்பதை பகத், கார்த்தியின் படங்கள் நிறுபிக்கின்றன

 

( மேலே உள்ள கவிதையும் புகைப்படமும் எத்தனை இயல்பாய் இணக்கம் கொள்கிறது)

மனிதன் தன் முகத்தை கண்ணாடி , புகைப்படம் என இரண்டில் மட்டும் தான் நுட்பங்களுடன் பார்த்துக்கொள்கிறான்.

புகைப்ப‌ட‌த்தின் வ‌ழியே காணும் ம‌னித‌ர்க‌ள் அழ‌கான‌வ‌ர்க‌ள். ம‌னிதர்க‌ளிட‌ம் காணும் எந்த‌ கெட்ட‌ குண‌ங்க‌ளும் அவர்களுக்கு இல்லை. ம‌னிதனுக்கு புகைப்ப‌ட‌ம் மிக நெருக்க‌மான‌து. அத‌னால் தான் அதை எரிப்ப‌து நிராக‌ரிப்பின் உச்ச‌ம் என‌ நினைக்கிறான்.

மக்கா ஸ்டுடியோஸ் வலைபக்கம் : http://www.makkastudios.in/
முக நூலில் மக்கா ஸ்டுடியோஸ் :  http://www.facebook.com/makkastudios

If you enjoyed this post, make sure you subscribe to my RSS feed!

எப்படியும் தொடங்கி விடுகிறது
நீயில்லா தனிமையின்
இரவுகளும்
அதன் பின்னான வெறுமையின்
வியர்வை துளிகளும்
உன் அளவான சிரிப்பும்
பேருந்து பயணங்களில்
தோள் சாய்ந்து தூங்குவதும்
நீ வைக்கும் தலைகீழ் ” ப “
வடிவிலான மல்லிகை பூவும் ,
உன் நினைவுகளும், உனக்கான
காதலும் இன்னும் நிறம்
மாறாமல் இருக்கின்றன.
நீ விட்டு சென்ற பிரிவின்
வலியை பின்னிரவுகளில்
நனைந்து போன என்
தலையணையை கேட்டுப்பார்.
உனக்கான காதலும் கவிதையும்
இன்னும் பிரிக்கப்படாமலேயே உள்ளது
குடைக்குள் இருந்து மழையை
நனைக்கும்  உன்னுடன்
மழையில் நனைந்து
காதல்  பேச ஆசை
என்  காதல்  கேட்க
எப்போது வருவாய்
என் லகர தமிழச்சி
If you enjoyed this post, make sure you subscribe to my RSS feed!

என் அன்பின் விழிநிலைகளை
நீ அறிந்ததே கிடையாது
கோபமுற்ற பொழுதுகளில்
என் எதிரிலேயே
கிழித்துப்போடுகிறாய்
உனக்கான அன்பின் ஸ்பரிசங்களை
யாருமற்ற பின்னிரவுகளில்
கன்னங்களில் வழிந்து
கொண்டிருக்கிறது
தனித்துவிடப்பட்ட என் பெண்மை
எனதன்பை
பார்க்காமல் போ ,
உணராமலும் போ,
ஆனால் உனக்காக
அன்பை கடைவைத்து
கடைசிவரை காத்திருந்தேன்
என்று மட்டும் அறியாமல் போகாதே

கருவரையில் வெளியேறி

இருளின் நேர் கோட்டில் மிதக்கிறது

ஆதாமின் எச்சம்

எல்லா உடல் விற்பவளின்

டயரி குறிப்புகளும் தாங்கி நிற்கும்

எச்சத்தின் விளிம்பு நிலை.

பின் மாலை பொழுதுகளில்

மரணித்தவனை எழுப்பிக்கேட்டால்

ஒரு வேளை தெரியலாம்

பாவத்தின் அமைப்பு சாரா கொள்கையும்

கடவுளின் இரண்டாம் வருகையும்

If you enjoyed this post, make sure you subscribe to my RSS feed!