Archive for the ‘விளையாட்டு’ Category

rio_olympics_0

கோலாகலமாக நடந்து முடிந்தது ரியோ ஒலிம்பிக் .ஒலிம்பிக் தடகள வரலாற்றில் இந்தியா ஒரு தங்கம் கூட வாங்கியதில்லை என்ற கசப்பான உண்மை தொடர்கிறது. தடகளத்தில் ஏன் இந்த முறையும் இந்தியா மண்ணை கவ்வியது ?

ஊழல்,அரசியல் என்று அதரப்பழசான வார்த்தைகளையே சொல்லி தப்பிக்கபோகிறோமா? தோற்றுப்போன களத்தை ஆய்வு செய்யாமல் விடுவது அடுத்த தோல்வியின் முதல் படி. இந்த ஒலிம்பிக்கை கள ஆய்வு செய்வோம்.

இந்தியாவின் சார்பில் தடகள குழு தான் அதிகமான வீரர்களை அனுப்பியது 34 பேர். ஒலிம்பிக் முடிவில் அவர்களின் தர பட்டியல். டூட்டி சந்த் (100 மீ) – 50வது இடம், ஸ்சரபானி (200 மீ) – 55வது , நிர்மலா (400மீ )- 44வது அங்கித் சர்மா (நீளம் தாண்டுதல்) – 24வது விகாஸ் கெளடா ( வ‌ட்டு எறிதல் ) – 28வது டின்டு லூகா (800 மீ) – 29வது சுதா சிங் (3000 மீ) – 30வது ரஞ்சித் மகேஷ்வரி (நீளம் தாண்டுதல்) – 30வது , தொனக்கல் கோபி (மாரத்தான்) -25வது , கீடா ராம் (மாரத்தான்)- 26வது ராவத் சிங் (மாரத்தான்) – 84வது கவூர் (50 கிமீ நடை) – 54வது பெண்கள் மாரத்தான் ஜைஷா – 89வது கவிதா – 120வது இடம்.

மேலே உள்ள பட்டியலை நுட்பமாக பார்த்தால் தெரிந்திருக்கும். இவர்கள் யாரும் முதல் 25 இடங்களில் கூட இல்லையென்பது ஆச்சர்யமாகவும் வேதனையாகவும் உள்ளது. இரண்டு தமிழக வீரர்களை கொண்ட இந்திய தொடர் ஓட்ட அணி தகுதிநீக்கம் செய்யப்பட்டது. வட்டு எறிதலில் தகுதி தூரம் 66.00 மீ கெளடா வீசியதோ 58.99மீ. ரஞ்சித் மகேஷ்வரி மும்முறை நீளம் தாண்டுதலில் தகுதி அளவான 16.85மீ விட குறைவாக 16.13மீ தான் தாண்டினார். நீளம் தாண்டுதலில் தகுதி அளவு 8.15மீ நம்மவர் குதித்தது 7.67மீ.

இவ்வளவு மனித சக்தியை கொண்ட ஒரு தேசம் தடகளத்தில் தகுதி சுற்றுக்கு கூட தடுமாறுகிறது என்பதை எப்படி மென்மையுடன் அணுக முடியும்? ஒரு வீரர் முன்னனி ரேங்கிங்கை வைத்திருக்கும் போது அணியில் இருந்து அவரை கழட்டி விடுவது சிரமமான ஒன்று. கிரிக்கெட் போன்று குழு விளையாட்டு போட்டிகளில் ஒருவரின் திறமையை காரணம் காட்டி அரசியல் செய்து நீக்கி விடலாம். ஆனால் தடகளத்தில் வாழ்வதும் வீழ்வதும் ஒரு வீரனின் தனிப்பட்ட செயல்பாடு. இப்படி தனி ஆளுமை கொண்ட விளையாட்டுகளில் ஏன் முதல் 10 இடங்களில் கூட இந்தியர்களால் வர முடியவில்லை ? மிக முக்கிய காரணம் பயிற்சியின்மை.

ncs_modified20160812194227maxw640imageversiondefaultar-160819748

அதிர்ச்சியாக இருக்கலாம், ஒவ்வொரு வீரனும் எவ்வளவு பயிற்சி செய்கிறார்கள் மிக சாதரணமாக பயிற்சியின்மை என்பதை எப்படி ஒத்துக்கொள்ள முடியும் என கேட்கலாம். பயிற்சிக்காக தடகளத்தில் அசைக்க முடியாத நாடுகளான ஜமைக்காவையும், அமெரிக்காவையும், ஆப்பிரிக்காவையும் நோக்கி கை நீட்டுவேன். அவர்களின் பயிற்சியையும் நம் பயிற்சியையும் தராசிடுங்கள், பிறகு தெரியும் இந்தியா ஏன் சர்வதேச வீரர்களை உருவாக்கவில்லை என்று.

ரியோ ஒலிம்பிக்கில் கலந்து கொண்ட ரஞ்சித் மகேஷ்வரி, டின்டு போல பெரும்பான்மையானோர் தேசிய சாதனையை தன்வசம் கொண்டவர்கள். இந்தியர்களில் தேசிய சாதனை ஒலிம்பிக்கில் 25வது இடத்துக்கு தள்ளப்படுகிறது. 2000 ம் ஆண்டு சிட்னி ஒலிம்பிக் பதக்க பட்டியலில் 56 இடத்தில் இருந்த ஜமைக்கா ரியோவில் 16வது இடத்திற்கு எப்படி வந்தது ?.கென்யா, ஜமைக்கா போன்ற நாடுகள் இந்தியாவின் மனிதவளத்திற்கோ, பொருளாதாரத்திற்கோ பக்கத்தில் கூட வரமுடியாத நாடுகள் என்பதை அறிவோம். அப்படி இருந்தும் அவர்கள் ஜொலிப்பது எதனால் ? திட்டமிட்ட பயிற்சி.

ந‌ம் வீரர்களை ஆப்பிரிக்காவிற்கும், ஜமைக்காவிற்கும் பயிற்சிக்காய் அனுப்ப வேண்டும். சுழற்சி முறைகளில் வீரர்களை அனுப்பி நம்மை களத்தை மீட்டெடுக்க வேண்டும். வீரர்களின் செயல்பாடுகள் , தேர்வு முறையில் வெளிப்படை தன்மையை கட்டாயமாக்கவேண்டும்.

ஆப்பிரிக்க நாடுகள் பயிற்சிக்கு கண்டிப்பு பெற்றது. வீரர்கள் பயிற்சியை தவிர வேறெந்த சலுகையையும் எதிர்பார்க்க முடியாது. டூட்டி சந்த் விமானத்தில் தனக்கு உயர் வகுப்பு இருக்கை கிடைக்கவில்லை என்கிறார். போட்டிகள் முடிந்து ஆப்பிரிக்க கண்டத்திலேயே ஆறு தங்கம் உட்பட அதிக பதக்கங்கள் குவித்த கென்யா, எப்போது விமான கட்டணங்கள் குறையும் ஊருக்கு போலாம் என்பதற்காய் ஒலிம்பிக் கிராமம் மூடப்பட்ட நிலையில் பிரேசிலில் ஒரு ஒதுக்குபுற கிராமத்தில் இன்னமும் தங்கியிருக்கிறது.

image-20160526-16681-jjm6cz

தோற்று போனதற்கு இன்னொரு முக்கிய காரணம் நம்மிடையே இருக்கும் திறமையானவர்களை பயன்படுத்திக்கொள்ளாதது . தடகள வீராங்கனையை செங்கல் சூளையில் அடைத்தது உட்ச பட்ச அவமானம்., சாந்தி 200மீ ஓட்டத்தில் ஆசிய அளவில் வெள்ளி பதக்கம் வென்றது ஆகச்சிறந்த தொடக்கம். பாலின சோதனையில் அவர் தவறியது துரதிஷ்டம். இப்பிரச்சனையை இந்தியா கண்டுகொள்ளாமல் விட்டதை போல ஒரு அவலம் இனி நடக்க கூடாது.

சாந்திக்கு நடந்ததை போலவே தென் அப்பிரிக்கா வீராங்கனைக்கு பிரச்சனை வந்த போது அந்த தேசமே வெகுண்டெழுந்தது. 2009 பெர்லினில் நடந்த உலக சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வென்ற செமன்யாவின் பதக்கம், பாலின பரிசோதனையால் பறிக்கப்பட்டது. நாடு திரும்பிய செமன்யாவை தென்னாப்ரிக்க விளையாட்டுத்துறை அமைச்சரே நேரில் சென்று ‘தாங்கள் இருப்பதாக’ ஆறுதல் கூறினார். தென்னாப்ரிக்க பிரதமர் செமன்யாவிற்கு ஆதரவாக, அந்தச் சோதனையை எதிர்த்து கடுமையான எதிர்ப்பை பதிவுசெய்தார். அந்நாட்டு அரசே அவருக்கு ஆதரவாக ஐக்கிய நாடுகள் அவையில் வழக்கு தொடர்ந்து, வெற்றியும் கண்டது . தென் ஆப்பிரிக்காவின் பெருமை மிகு அடையாளமாக செமன்யா பார்க்கப்பட்டார். 2012ஆம் ஆண்டு லண்டண் ஒலிம்பிக் தொடக்க விழாவில், தென்னாப்ரிக்காவின் சார்பாக அந்நாட்டு கொடியை கையில் ஏந்தி சென்றவர் அதே காஸ்டர் செமன்யாதான். இதோ தன் தேசத்திற்காய ரியோவிலும் தங்கம் வாங்கி கொடுத்துள்ளார். அமெரிக்க‌ நாடுகளில் கவுண்டி எனப்படும் உள்ளூர் விளையாட்டுகளில் ஜெயித்தவர் கூட நட்சத்திர அந்தஸ்துடன் வலம் வருவார். நாம் தான் ஆசிய வீராங்கனையை செங்கல் பொறுக்க விடுகிறோம்.

justieforsanthi

கண்டுகொள்ளபடாத வீரர்களை போல புதிய வீரர்களை கண்டு பிடிக்காத்ததும் தோல்வியின் காரணம். திறன் மேம்பாட்டு பயிற்சி மற்றும் வாழ்வாதார தேவைகளை அரசு பொருப்பெடுத்துக்கொள்ள வேண்டும். சர்வதேச தரத்திலான விளையாட்டு மைதானங்கள், உள்கட்டமைப்பு வசதிகளை படிபடியாக‌ உருவாக்க வேண்டும்.கிராமம், நகரம் மாவட்ட வாரியான தடகள போட்டிகளை நடத்த ஊக்கப்படுத்தவும் , கலந்து கொள்ளும் வீரர்களை மதிப்புடனும், கரிசனத்துடனும் தேர்வு செய்யவேண்டும்.

இந்திய சாரசரி மனநிலையும் நம்மை தோல்விக்கு இட்டுச்சென்றது. இந்தியர்கள் விளையாட்டு துறைக்கு வராததன் காரணம், பணம் சம்பாரிக்க முடியாது என்ற நினைப்பு. உங்களுக்கு பணம் தான் முக்கியமென்றால் 21 வயதில் பிவி சிந்து சம்பாரித்ததை விட மனப்பாட கல்வியை படிக்கும் நாம் யாரும் சம்பாரிக்க முடியாது என்பதை தாழ்மையுடன் நினைவுபடுத்துகிறேன்.

இந்த கசப்பான தோல்விக்கு இன்னொரு காரணம். நாம். ஆம்! நாமே தான். கிராம புற விளையாட்டு வீரனுக்கு ஒரு குடிமனாக நாம் என்ன செய்திருக்கிறோம் ? அவர்களை கண்டால் புன்னகையுடன் கைகுலுக்குங்கள், அவர்கள் இந்தியாவின் கனவுகளை சுமக்கிறார்கள். ஏன் அவர்களுடன் ஒரு இரவு உணவையோ, தேனீரையோ பகிர்ந்து கொள்ளகூடாது ? நண்பர்கள் சேர்ந்து அவர்களுக்கு ஒரு காலணியை பரிசாக தரகூடாது? மைதானத்தில் அவர்களுடன் செல்பி எடுத்துக்கொள்ளுங்கள். மெனக்கெட்டு உள்ளூர் விளையாட்டு போட்டிகளை போய் பாருங்கள். உங்கள் செய்கைகள் மூலம் அவர் அசாத்தியமான ஒன்றை சாத்தியமாக்க‌ முயற்சிசெய்கிறார் என்ற பெருமையை உணர வையுங்கள்.

நீண்ட நெடிய பாரம்பரியமும், வீரமும் கொண்ட தேசத்திற்காய் ஒலிம்பிக்கில் பதக்கம் வாங்கி தருவதை விட சிறந்த சாதனை இருந்து விடமுடியாது. நீங்கள் தேசத்திற்காய் புழுதிபடிய களத்தில் நின்றீர்கள் என்றால் இந்த தேசம் ஒருபோதும் உங்களை கைவிடாது. அது நம்தேசத்தின் அறம்.

-நிலன்

தி இந்துவில் வெளியான என் கட்டுரையின் மூல வடிவம்

Advertisements