Archive for the ‘Adaleru’ Category

அழகான கொலு பொம்மைகளை
பார்த்து கை தட்டி
குதுகலிக்கிறாய் நீ
உன்னை ஏன் கொலுவில்
வைக்கவில்லை என்று
குழம்பிப்போகின்றன பொம்மைகள்
–0@0–

நவராத்திரி கொலுவில்
தேவதை பொம்மைகள்
வைக்கிறார்களாம்.
பிறகு உன்னை எப்படி
விட்டு வைத்தாள்
ஜான‌கி ஆண்டி

–0@0–

ந‌வாராத்திரி என்றாலே
திருவிழாவும்,சுண்டலும்.
சுண்டல் என்றாலே
கொலுவும்,பொம்மைக‌ளும்.
மொம்மைக‌ள் என்றாலே
நீயும், உன் ப‌ட்டாம்பூச்சி
சுடிதாரும் தான் வ‌ந்து
நிற்கிற‌தென் ம‌ன‌தில்

–0@0–

தேவ‌தைக‌ள் எல்லாம் வைத்த‌
கொலுவில் அழ‌கான பொம்மையை
அப்ச‌ர‌ஸ் தேவ‌தை தொட்ட‌தால்
உயிர் பெற்று வ‌ந்த‌வ‌ள், ‘நீ’
என்று தான் இன்ன‌மும் ந‌ம்புகிறேன்

–0@0–

அந்த‌ மூன்றாவ‌து வ‌ரிசை
மொம்மையை எடுத்து
பொட்டு வைத்த பின் முத்த‌மிட்டாயே
அப்போது தான் தோன்றிய‌து
பேசாம‌ல் பொம்மையாய்
பிற‌ந்திருக்க‌லாம் என்று

–0@0–

ஒவ்வொரு பொம்மையாய் எடுத்து
இது முல்லா பொம்மை
இது காயத்ரி மொம்மை
இது உழ‌வ‌ன் பொம்மை
என்று சொல்லிக்கொண்டிருந்தாய்
பொம்மைக‌ள் எல்லாம்
உன்னைபார்த்து
முணுமுணுத்துக்கொண்ட‌து
இவ‌ள் தேவ‌தை மொம்மை என்று

–0@0–

If you enjoyed this post, make sure you subscribe to my RSS feed!

Advertisements

கனவுகளால் ஆனவள்

Posted: செப்ரெம்பர் 10, 2010 by அடலேறு in Adaleru, அடலேறு, கவிதை, தமிழ், புனைவு, பெண்
குறிச்சொற்கள்:, , , ,

கனவுகளால் ஆனவளை 

வார்த்தைகளால் ஆனவளை சந்தித்த

‌அதே பேருந்தில் இன்று சந்தித்தேன்.

கண்ணை மூடி கன‌வு  கொண்டிருந்தாள்.

என்னை பற்றி அவள் கனவு என்னவாக இருக்கும்

என்ற எண்ணத்தில்அவளையே உற்று நோக்கினேன்,

மெல்ல கண் திறந்தவள்,

இங்கே என்ன செய்கிறாய் என்றாள்?

எனக்கு கனவுகளே வருவதில்லை என்றேன்,

இந்தா பிடி ! என மூன்று மூட்டை

கனவுகளை கொடுத்தனுப்பினாள்.

தூக்க முடியாமல் தூக்கிக்கொண்டு வீடு சேர்ந்தேன்,

முதல் மூட்டை பிரித்து மூன்றாம் கனவை எடுத்துப்பார்த்தேன்

அதில் நீங்கள் அனைவரும்

இந்த கவிதை படித்துக்கொண்டிருக்கிறீர்கள்

-அடலேறு 

If you enjoyed this post, make sure you subscribe to my RSS feed!

வார்த்தைகளால் ஆனவள்

Posted: செப்ரெம்பர் 4, 2010 by அடலேறு in Adaleru, அடலேறு, கவிதை, தமிழ், பெண், Girl, Imagination
குறிச்சொற்கள்:, ,

வார்த்தைகளால் ஆனவளை

இன்று பேருந்தில் சந்திதேன்

வெறும் வார்த்தைகளால் மூடப்பட்டிருந்தது

அவள் உடம்பு.

கண் இருக்க வேண்டிய இடத்தில்

கண் என்று எழுதியிருந்தது

காது மூக்கு என அனைத்திற்கும் அப்படியே

விகாரமில்லாமல் அழகாகவே இருந்தாள்

நீ யார் என்றதற்கு

மெல்லிய புன்னகை ததும்பியவளாக

வாய் திறந்தாள்.

வார்த்தைகள் ஒவ்வொன்றாக‌ கீழே விழுந்தது

விழுந்த வார்த்தையை பொறுக்கி

சட்டைபைக்குள் போட்டுக்கொண்டேன்

சட்டைபை நிரம்ப‌ நிரம்ப‌ பேசினாள்

அப்படி நிரப்பப்பட்ட வார்த்தைகளை கொண்டு

எழுதப்பட்டது தான்  இந்த கவிதை

-அடலேறு

If you enjoyed this post, make sure you subscribe to my RSS feed!

கடைசி ஆண்

Posted: ஓகஸ்ட் 18, 2010 by அடலேறு in Adaleru, அடலேறு, கவிதை, புனைவு, Girl, life
குறிச்சொற்கள்:, ,

கருஞ்சிவப்பான இரவில்

தீக்கிரையாக்கினாள் மதுரையை

கையில் சிலம்பு தகிக்கிறது

ஆண்களற்ற உலகமாய் மாற சாபமிடுகிறாள்

விதை கிழிபட்டு

மரிக்கின்றனர் அனைவரும்

படக்கென போர்வை நீக்கியவள்

விந்து வற்றிப்போன இரவில்

என்னை புணர சொல்கிறாள்

நானோ இப்பூமியின்

கடைசி ஆண்

பிறந்த நாள்

Posted: ஓகஸ்ட் 13, 2010 by அடலேறு in Adaleru, அடலேறு, பதிவர்
குறிச்சொற்கள்:, ,

இன்று எனது பிறந்த நாள். பள்ளிக்கூட நாட்களில் பல  பிறந்தநாட்களை வீட்டில் இருந்து கொண்டாடி உள்ளேன். காலை எழுந்ததும் அம்மாவின் முத்தமும் அவள் செய்யும் வடையும் பாயாசத்திற்குமாகவே பிறந்தநாட்கள் அடிக்கடி வராதா என் காத்திருந்த நாட்கள் நிறைய உண்டு.எஙகள் பள்ளியில் பிறந்தநாளன்று யூனிபார்ம்களுக்கு விடை கொடுத்துவிட்டு புத்தாடைகள் அணிந்துகொள்ளலாம்.

பிறந்த நாட்களில் கூட வறுமை காரணமாக புத்தாடை அணியாமல் வந்த பால்ய நண்பர்களை விளிம்பு நிலையில் இருந்து நினைத்துப்பார்க்கிறேன்.பிறந்த நாள் வருவதற்கு  ஆண்டின் தொடக்கத்தில் இருந்தே நாட்களை எண்ணிக்கொண்டிருந்ததை நினைக்கையில் சிரிப்பாக  இருக்கிறது.

சிறுவயதில் அம்மா என் பிறந்தநாளன்று  சந்தையில் இருந்து வாங்கி வந்த பலகாரங்கள், அடுத்த நாள் பள்ளியில் கொடுப்பதற்கு வாங்கிவந்த சாக்லேட்டுகள்,  பலகார கடைக்காரர், அந்த கடையின் நிறம்(குகன் பேக்கரி-நெகமம்)., வாசம் அவர் அணிந்திருந்த உடை என எல்லாமே இன்னும் நினைவில் இருக்கின்றன.

பள்ளியில் பிறந்தநாள் கொண்டாடும் மாணவனுக்கு தனி மரியாதை தான். அவனை தவிர இனாமாக  சாக்லேட் வேறு யார்  தருவார்கள். பிறந்தநாளன்று சாக்லேட்டுக்காக என்னை சுற்றி சுற்றி வந்த நண்பர்கள், அவர்கள் பிறந்தநாள் அன்று நான் சுற்றி சுற்றி  சென்ற நண்பர்கள், பிறந்த நாள் சாக்லேட் தராததால்  பென்சிலால் முழங்காலில் குத்திய ராமராஜ், பிறந்தநாள் உடை வாங்கிய லஷ்மி அக்கா   என அனைவரையும் மகிழ்ச்சியுடன் நினைத்துப்பார்க்கிறேன்.அன்று இருந்த பரபரப்பு புத்தாடை, இனிப்புகள் மீதான காதல் இன்றில்லை.

கல்லூரி காலங்களில் கொண்டாடிய பிறந்தநாட்கள் வாழ்த்திய ஆசிரியர்கள்,நண்பர்கள், வாழ்த்து அட்டைகள், கச்சேரிகள் , நீண்ட தூர வாகன பயணங்கள்,12 மணி அழைப்புகள்,நடுநிசியில்  போர்வைக்குள் மறைந்து கொண்டு மெல்லிசான குரலில் அலைபேசியில் வாழ்த்துக்கள் சொன்ன  நண்பிகள், என அனைவரையும் இதழோரம் சிறு புன்னைகையுடன் நினைத்துக்கொள்கிறேன்.

அலுவலகம் வந்த பின்பு கொண்டாடிய பிறந்ததினங்கள், வெட்டிய கேக்குகள், நீண்ட இரவுக்கச்சேரிகள்,காதலியின் பிறந்தநாளுக்கு என்னிடம் கவிதை வாங்கிசென்ற நண்பர்கள், நாயரே! மாப்ளைக்கு இன்னைக்கு பிறந்த நாளு ஸ்பெஷலா ஒரு சாயா போடு என்றதற்காக ஸ்பெஷல் சாயா போட்டுக்கொடுத்த டீக்கடை நாயர், பெட்டிக்குள் சில் வண்டு வைத்து கிப்ட் கொடுத்த நவீன் என அனைவரையும் மகிழ்ச்சியுடன் நினைத்துப்பார்க்கிறேன்.

ஒரு மனிதனின் வாழ்வில் ஒரே ஒரு முறை தான் “”பிறந்த‍நாள்”” கொண்டாடப்படுகிறது, அதுவும் அவனோ(ளோ) அந்த நாளை கொண்டாடுவதே இல்லை அவர்களுக்காக மற்றவர்கள் தான் அந்த நாளை கொண்டாடுகின்றனர். அதற்கு பின்வரும் பிறந்த நாட்கள்., பிறந்தநாட்கள் அல்ல, அதன் சாயல் கொண்ட வேறு ஒன்றை கொண்டாடிக்கொண்டிருக்கிறோம் என்ற உண்மையும் கொஞ்சமாய் உறைக்கத்தொடங்கியுள்ளது

நாம் “பிறந்த அன்று” ஒரு நாள் மட்டும் தான் உலகெங்கிலும் அம்மாக்கள் சிரிக்கிறார்கள் தங்கள் குழந்தைகள் கதறி அழுகும் போது.

என் மீது அன்பும் அக்கறையும் கொண்ட நண்பர்கள், சக வலைபதிவர்கள்,குடும்பத்தினர் மற்றும் யாவருக்கும் இந்த நிமிடத்தில் நன்றி தெரிவித்து கொள்ள விரும்புகிறேன். உங்களின் அழியாத அன்பு தான் என்னை இயக்குகிறது.

பகிர்தலும்,அன்பும்,காதலும் வாழ்க்கையை அழகாக்குகின்றன. அப்படிப்பட்ட அழகான தருணங்களை வாழ்க்கையில் கொடுத்த,கொடுத்துக்கொண்டிருக்கும்    அனைத்து உள்ளங்களுக்கு என் நிறைந்த நேசத்தையும் நன்றியையும் பகிர்ந்து கொள்கிறேன்.

உலகெங்கும் இதே நாளில் பிறந்த நாள் கொண்டாடும் முகம் அறியாத மனிதர்கள்,ஆதரவற்றோர்,அனாதைகள்,வயது முதிர்ந்த காலத்தில் குழந்தைகளால் கைவிடப்பட்ட பெற்றோர்கள், விளிம்பு நிலை மனிதர்கள்,தூக்கி எறியப்பட்ட பூனைக்குட்டிகள், என அத்தனை பேர்களுக்கும் வாழ்த்து சொல்ல விரும்புகிறேன்

எனக்கு நானே வாழ்த்து சொல்லிக் கொள்ளவும் விரும்புகிறேன்.

எனக்கு பிடித்த தேவதச்சனின் ஒரு கவிதை இங்கே:

துணி துவைத்துக் கொண்டிருந்தேன்
காதில் விழுந்தது குருவிகள் போடுகிற சப்தம்
தொடர்ந்து துவைத்துக் கொண்டிருந்தேன்
காதில் விழுகிறது குருவிகள் போய்விட்ட நிசப்தம்
அடுத்த துணி எடுத்தேன்
காதில் விழுந்தது நிசப்தம் போடுகிற குருவிகள் சப்தம்
‍‍‍‍‍-தேவதச்சன்

நிலா பார்த்தல்

Posted: ஓகஸ்ட் 5, 2010 by அடலேறு in Adaleru, அடலேறு, கவிதை, புனைவு
குறிச்சொற்கள்:, ,
சத்தம்மின்றி
கசிந்து  கொண்டிருந்தது இரவு,
வெளியெங்கும்  பெய்ய
தொடங்கியது   அயோடைட் மழை ,
ஏணியில்  ஏறிகொண்டிருக்கிறான் 
பூமியின் கடைசி மனிதன்,
நாய்களற்ற தெருவில் 
குரைத்துக்கொண்டிருக்கின்றன
எலக்ட்ரானிக் பொம்மைகள்   ,
எடையற்று காற்றில்
மிதந்து  கொண்டிருக்கிறேன் நான் ,
“நிலவிற்கு  வருக” பெயர் பலகையை        
துடைத்துக்கொண்டிருக்கிறாள்
யாருமற்ற அனாதை சிறுமி.
எப்படியும் தொடங்கி விடுகிறது
நீயில்லா தனிமையின்
இரவுகளும்
அதன் பின்னான வெறுமையின்
வியர்வை துளிகளும்
உன் அளவான சிரிப்பும்
பேருந்து பயணங்களில்
தோள் சாய்ந்து தூங்குவதும்
நீ வைக்கும் தலைகீழ் ” ப “
வடிவிலான மல்லிகை பூவும் ,
உன் நினைவுகளும், உனக்கான
காதலும் இன்னும் நிறம்
மாறாமல் இருக்கின்றன.
நீ விட்டு சென்ற பிரிவின்
வலியை பின்னிரவுகளில்
நனைந்து போன என்
தலையணையை கேட்டுப்பார்.
உனக்கான காதலும் கவிதையும்
இன்னும் பிரிக்கப்படாமலேயே உள்ளது
குடைக்குள் இருந்து மழையை
நனைக்கும்  உன்னுடன்
மழையில் நனைந்து
காதல்  பேச ஆசை
என்  காதல்  கேட்க
எப்போது வருவாய்
என் லகர தமிழச்சி
If you enjoyed this post, make sure you subscribe to my RSS feed!