Posts Tagged ‘அன்பு’

கேள்விகளால் ஆன விளையாட்டை
தொடங்கினாள் தூரிகா
விளையாட்டின் விதிகள்
ஒருபோதும் சொல்லப்படவில்லை
ஒவ்வொரு சொல்லாக‌
உதிர்க்க தொடங்கினாள்
தீயிலிருந்து வெம்மை பிரிப்பது
மெளனத்திலிருந்து இசை பிரிப்பது
பற்றிய குறிப்புகள் அவை
நினைவுக‌ளில் இருந்து
அவ‌ளை பிரித்து
காட்ட‌‌ சொன்ன‌ கேள்வியில்
தோற்றுப்போனேன்.
கீறல்களால் த‌ண்ட‌னை
நிறையேற‌ தொட‌ங்கிய‌
காலையில் விழித்தெழுந்தேன்
அவ‌ள் இப்போது
உடலிலிருந்து என்னை
பிரித்துக்கொண்டிருக்கிறாள்

Advertisements

சென்னையில் வேலைக்கு சேர்ந்த நாட்கள் அவை. பின்னிரவில்  சக்கையாய் பிழியப்பட்டு வேலையில் இருந்து வருவேன். நாங்கள் ஆறு பேர் அந்த அறையில் தங்கியிருந்தோம்.மிக குறைவான சம்பளம் எப்படி பிடித்து வைத்தாலும்  இருபதாம் தேதிக்கு மேல் கையில் காசு இருக்காது.அன்று இரவு கடைசியாகத்தான் அலுவலகத்தில் இருந்து வந்தேன். யாரிடமும் காசு இல்லை நண்பர்கள் அனைவரும் கடைசியாக இருந்த காசில் கிடைத்ததை சாப்பிட்டு விட்டனர். மதியமும் சாப்பிடவில்லை பசி கண்ணை கட்டியது. மிக சோகமாக இருந்தது.யாரிடமாவது காசு இருக்கிறதா என்றதற்கு அனைவரும் முகத்தை முகத்தை பார்த்துக்கொண்டனர்.

மாதத்தின் கடைசி நாட்களில் இருந்தோம்.எனக்கு என்ன செய்வதென்றேதெரியவில்லை. அந்த அறையின் வீதியிலேயே நின்று கொண்டிருந்தேன்.பசியை விடவும் இந்த நகரத்தில் என்னுடைய இருப்பு இப்படி தான் இருக்கிறது என்பது இன்னும் வேதனைதருவதாய் இருந்தது.இப்படி தான் இந்த நகரத்தில் நாட்களை கழித்துக்கொண்டிருக்கிறேனா என்று வருந்தினேன்.நீண்ட பின்னிரவில் தனியாக அதே சாலையில் நின்று கொண்டிருந்தேன்.

சென்னையின் மீது வெருப்பு வந்தது.ஒரு நண்பன் கூட இல்லையா பசிக்கும் போது சாப்பாடு வாங்கித்தர என்று நினைக்கும் போது என்மேலேயே எனக்கு வெறுப்பு வந்தது.பசியுடன் நீண்டதூரம் நடந்திருப்பேன்.பசி மறைந்து கால் வலிக்க ஆரம்பித்ததும் அறைக்கு வந்தேன். நண்பர்கள் அனைவரும் உறங்கியிருந்தனர். நகரத்தை பற்றிய பயம் கவ்விக்கொண்டது .உறங்கிப்போனேன்.
  
நேற்று  ஈரோடில் நடந்த சங்கமம் வலை பதிவர் சந்திப்பிற்கு சென்றிருந்தேன். கொங்கு தேசம்  விருந்தோம்பலுக்கு சிறந்தது என்பதை மீண்டும் நினைவுபடுத்தியது.அத்தனை அழகான மனிதர்கள், வரவேற்பில் ஒரு சிறுமி கையெழுத்து வாங்கிக்கொண்டு வெல்கம் என்று சொல்லி வரவேற்றாள்.அந்த கணம் தொடங்கி மிக நெருக்கமாக உணர்ந்தேன்.பாமரன், அருண், ஓசை செல்லா , PIT  வலைகுழும நண்பர்கள் இன்னும் சில நண்பர்களும் பேசினர்.

மதிய உணவு, நீண்ட நாட்களுக்கு பிறகு  நான் சாப்பிட்ட எங்கள் ஊரின் மிக சுவையான உணவு இதுவாகத்தான் இருக்கும்.அத்தனை வகைகளையும் நேர்த்தியுடன் செய்திருந்தனர்.சாப்பிடும் போது திடிரென சென்னையின் ஆரம்ப நாட்கள் நினைவிற்கு வந்தது. நண்பர்கள் நிறைய பேரை இன்று தான் நேரில் சந்தித்தேன். ஆனால் இத்தனை அன்பா என்று பொறாமையாக இருந்தது.ஜாக்கி திடிரென வந்தார். பேச ஆரம்பித்தோம்., சென்னையின் வெறுமை தன்னை ஈரோடு நோக்கிவரவைத்ததாக சொன்னார்.சிரித்துக்கொண்டேன். சென்னையில் பதிவர் சந்திப்பு வழக்காமாக ஒரு தேனிருடன் நினைவு பெறும். ஆனால் ஒரு பதிவர் சந்திப்பில் இருக்கை, தொழில்நுட்ப சாதனங்கள், இடம் , உணவு, புத்தகம், பேனா,பதிவர்கள் என அனைத்தையும்  ஒருங்கினைப்பது எத்தனை பெரிய விஷயம் , எதற்காக இவர்கள் இப்படி வலிந்து வந்து நம்மை வரவேற்கிறார்கள், இத்தனை பிரம்பாண்ட வரவேற்பு, அறை, உணவு என அனைத்தையும் இவர்கள் ஒருங்கிணைத்து எதற்காக என்ற கேள்விகளை நீண்ட நேரமாக எனக்குள்ளேயே கேட்டுக்கொண்டிருந்தேன். அன்பு என்ற மூன்று எழுத்தில் பதில் தந்துவிடலாம் என்றும் தோன்றியது.

சந்திப்பு முடிந்தும் பொள்ளாச்சிக்கு பேருந்து ஏறினேன். சில்லென்று காற்று முகத்தில் அடித்தது. உடல் மெல்ல அதற்கு இசைந்தாற்போல் ஒரு ஆனந்தத்தை தந்தது. நீண்ட நாள் கழித்து எங்கள் ஊர் சாலைகளில் பகலில் பயணம் செய்கிறேன் என்ற நினைப்பே சந்தோஷத்தை தந்தது. சாலைகளில் இரு பக்கமும் பச்சை பசேலென்ற தாவரங்கள் பேருந்தின் வேகத்தில் பின் சென்று கொண்டிருந்தன.சந்திப்பில் கொடுத்த பழமை பேசி புத்தகம் கையில் இருந்தது. ஆரம்ப பக்கங்களை வாசித்தேன். என்னுடைய கிராம நினைவுகளை இந்த மனிதர் எப்படி வார்த்தைபடுத்தினார் என்று ஆச்சர்யமாக இருந்தது. சென்னையின் ஆரம்ப நாட்கள் மீண்டும் நினைவிற்கு வந்தது.நண்பர்கள் அனைவரோடும் பட்டினியாய் இருந்த நாட்களும் , முதல் முறை சந்தித்த நண்பர்களுடன் விருந்து சாப்பிட்டதற்கும் இடையான நீளம் எவ்வளவு என்று நினைத்துக்கொண்டே இருந்தேன். 
 
இருத்தலின் விதி தான் என்னை எப்போதும் இயக்கி கொண்டிருக்கிறது என்பது  என்னவோ போல் இருந்தது. பொள்ளாச்சி நெருங்கும் முன்பாகவே பேருந்து நிறுத்தத்தில் நண்பர்கள் காத்திருப்பதாக சொன்னார்கள். இறங்கியதும் வாகனத்தில் நண்பன் வீட்டுற்கு கூட்டிச்சென்றான். நாளை அனைவரும் வேலை நிமித்தமாக பிரிய போவதால் நீண்ட நேரம் பேசிக்கொண்டும் சிரித்துக்கொண்டும் இருந்தோம். பின்னிரவில் நண்பன் வீட்டில்  வந்து விட்டுச்சென்றான். என் வாசனை கண்டுபிடித்தது போலும்  பூனை வெளியே வந்து என்னை பார்த்துவிட்டு வீட்டிற்குள் சென்றது.
 
காலையில் பேருந்து ஏறியதும் சந்தித்த கூத்துப்பட்டறை சுரேஷ், நீண்ட நாளாக தொலைபேசியில் பேச வேண்டும் என்று சொல்லிக்கொண்டிருந்த தோழி அழைத்தது, சங்கமம் நண்பர்கள், பால்ய நண்பர்கள் என நண்பர்களுக்குள்ளே கலந்து போனேன் இந்த ஞாயிறு.
 I feel richer, richer by few more friends who I can say are “Friends for Life”

பிறந்த நாள்

Posted: ஓகஸ்ட் 13, 2010 by அடலேறு in Adaleru, அடலேறு, பதிவர்
குறிச்சொற்கள்:, ,

இன்று எனது பிறந்த நாள். பள்ளிக்கூட நாட்களில் பல  பிறந்தநாட்களை வீட்டில் இருந்து கொண்டாடி உள்ளேன். காலை எழுந்ததும் அம்மாவின் முத்தமும் அவள் செய்யும் வடையும் பாயாசத்திற்குமாகவே பிறந்தநாட்கள் அடிக்கடி வராதா என் காத்திருந்த நாட்கள் நிறைய உண்டு.எஙகள் பள்ளியில் பிறந்தநாளன்று யூனிபார்ம்களுக்கு விடை கொடுத்துவிட்டு புத்தாடைகள் அணிந்துகொள்ளலாம்.

பிறந்த நாட்களில் கூட வறுமை காரணமாக புத்தாடை அணியாமல் வந்த பால்ய நண்பர்களை விளிம்பு நிலையில் இருந்து நினைத்துப்பார்க்கிறேன்.பிறந்த நாள் வருவதற்கு  ஆண்டின் தொடக்கத்தில் இருந்தே நாட்களை எண்ணிக்கொண்டிருந்ததை நினைக்கையில் சிரிப்பாக  இருக்கிறது.

சிறுவயதில் அம்மா என் பிறந்தநாளன்று  சந்தையில் இருந்து வாங்கி வந்த பலகாரங்கள், அடுத்த நாள் பள்ளியில் கொடுப்பதற்கு வாங்கிவந்த சாக்லேட்டுகள்,  பலகார கடைக்காரர், அந்த கடையின் நிறம்(குகன் பேக்கரி-நெகமம்)., வாசம் அவர் அணிந்திருந்த உடை என எல்லாமே இன்னும் நினைவில் இருக்கின்றன.

பள்ளியில் பிறந்தநாள் கொண்டாடும் மாணவனுக்கு தனி மரியாதை தான். அவனை தவிர இனாமாக  சாக்லேட் வேறு யார்  தருவார்கள். பிறந்தநாளன்று சாக்லேட்டுக்காக என்னை சுற்றி சுற்றி வந்த நண்பர்கள், அவர்கள் பிறந்தநாள் அன்று நான் சுற்றி சுற்றி  சென்ற நண்பர்கள், பிறந்த நாள் சாக்லேட் தராததால்  பென்சிலால் முழங்காலில் குத்திய ராமராஜ், பிறந்தநாள் உடை வாங்கிய லஷ்மி அக்கா   என அனைவரையும் மகிழ்ச்சியுடன் நினைத்துப்பார்க்கிறேன்.அன்று இருந்த பரபரப்பு புத்தாடை, இனிப்புகள் மீதான காதல் இன்றில்லை.

கல்லூரி காலங்களில் கொண்டாடிய பிறந்தநாட்கள் வாழ்த்திய ஆசிரியர்கள்,நண்பர்கள், வாழ்த்து அட்டைகள், கச்சேரிகள் , நீண்ட தூர வாகன பயணங்கள்,12 மணி அழைப்புகள்,நடுநிசியில்  போர்வைக்குள் மறைந்து கொண்டு மெல்லிசான குரலில் அலைபேசியில் வாழ்த்துக்கள் சொன்ன  நண்பிகள், என அனைவரையும் இதழோரம் சிறு புன்னைகையுடன் நினைத்துக்கொள்கிறேன்.

அலுவலகம் வந்த பின்பு கொண்டாடிய பிறந்ததினங்கள், வெட்டிய கேக்குகள், நீண்ட இரவுக்கச்சேரிகள்,காதலியின் பிறந்தநாளுக்கு என்னிடம் கவிதை வாங்கிசென்ற நண்பர்கள், நாயரே! மாப்ளைக்கு இன்னைக்கு பிறந்த நாளு ஸ்பெஷலா ஒரு சாயா போடு என்றதற்காக ஸ்பெஷல் சாயா போட்டுக்கொடுத்த டீக்கடை நாயர், பெட்டிக்குள் சில் வண்டு வைத்து கிப்ட் கொடுத்த நவீன் என அனைவரையும் மகிழ்ச்சியுடன் நினைத்துப்பார்க்கிறேன்.

ஒரு மனிதனின் வாழ்வில் ஒரே ஒரு முறை தான் “”பிறந்த‍நாள்”” கொண்டாடப்படுகிறது, அதுவும் அவனோ(ளோ) அந்த நாளை கொண்டாடுவதே இல்லை அவர்களுக்காக மற்றவர்கள் தான் அந்த நாளை கொண்டாடுகின்றனர். அதற்கு பின்வரும் பிறந்த நாட்கள்., பிறந்தநாட்கள் அல்ல, அதன் சாயல் கொண்ட வேறு ஒன்றை கொண்டாடிக்கொண்டிருக்கிறோம் என்ற உண்மையும் கொஞ்சமாய் உறைக்கத்தொடங்கியுள்ளது

நாம் “பிறந்த அன்று” ஒரு நாள் மட்டும் தான் உலகெங்கிலும் அம்மாக்கள் சிரிக்கிறார்கள் தங்கள் குழந்தைகள் கதறி அழுகும் போது.

என் மீது அன்பும் அக்கறையும் கொண்ட நண்பர்கள், சக வலைபதிவர்கள்,குடும்பத்தினர் மற்றும் யாவருக்கும் இந்த நிமிடத்தில் நன்றி தெரிவித்து கொள்ள விரும்புகிறேன். உங்களின் அழியாத அன்பு தான் என்னை இயக்குகிறது.

பகிர்தலும்,அன்பும்,காதலும் வாழ்க்கையை அழகாக்குகின்றன. அப்படிப்பட்ட அழகான தருணங்களை வாழ்க்கையில் கொடுத்த,கொடுத்துக்கொண்டிருக்கும்    அனைத்து உள்ளங்களுக்கு என் நிறைந்த நேசத்தையும் நன்றியையும் பகிர்ந்து கொள்கிறேன்.

உலகெங்கும் இதே நாளில் பிறந்த நாள் கொண்டாடும் முகம் அறியாத மனிதர்கள்,ஆதரவற்றோர்,அனாதைகள்,வயது முதிர்ந்த காலத்தில் குழந்தைகளால் கைவிடப்பட்ட பெற்றோர்கள், விளிம்பு நிலை மனிதர்கள்,தூக்கி எறியப்பட்ட பூனைக்குட்டிகள், என அத்தனை பேர்களுக்கும் வாழ்த்து சொல்ல விரும்புகிறேன்

எனக்கு நானே வாழ்த்து சொல்லிக் கொள்ளவும் விரும்புகிறேன்.

எனக்கு பிடித்த தேவதச்சனின் ஒரு கவிதை இங்கே:

துணி துவைத்துக் கொண்டிருந்தேன்
காதில் விழுந்தது குருவிகள் போடுகிற சப்தம்
தொடர்ந்து துவைத்துக் கொண்டிருந்தேன்
காதில் விழுகிறது குருவிகள் போய்விட்ட நிசப்தம்
அடுத்த துணி எடுத்தேன்
காதில் விழுந்தது நிசப்தம் போடுகிற குருவிகள் சப்தம்
‍‍‍‍‍-தேவதச்சன்

எப்படியும் தொடங்கி விடுகிறது
நீயில்லா தனிமையின்
இரவுகளும்
அதன் பின்னான வெறுமையின்
வியர்வை துளிகளும்
உன் அளவான சிரிப்பும்
பேருந்து பயணங்களில்
தோள் சாய்ந்து தூங்குவதும்
நீ வைக்கும் தலைகீழ் ” ப “
வடிவிலான மல்லிகை பூவும் ,
உன் நினைவுகளும், உனக்கான
காதலும் இன்னும் நிறம்
மாறாமல் இருக்கின்றன.
நீ விட்டு சென்ற பிரிவின்
வலியை பின்னிரவுகளில்
நனைந்து போன என்
தலையணையை கேட்டுப்பார்.
உனக்கான காதலும் கவிதையும்
இன்னும் பிரிக்கப்படாமலேயே உள்ளது
குடைக்குள் இருந்து மழையை
நனைக்கும்  உன்னுடன்
மழையில் நனைந்து
காதல்  பேச ஆசை
என்  காதல்  கேட்க
எப்போது வருவாய்
என் லகர தமிழச்சி
If you enjoyed this post, make sure you subscribe to my RSS feed!

என் அன்பின் விழிநிலைகளை
நீ அறிந்ததே கிடையாது
கோபமுற்ற பொழுதுகளில்
என் எதிரிலேயே
கிழித்துப்போடுகிறாய்
உனக்கான அன்பின் ஸ்பரிசங்களை
யாருமற்ற பின்னிரவுகளில்
கன்னங்களில் வழிந்து
கொண்டிருக்கிறது
தனித்துவிடப்பட்ட என் பெண்மை
எனதன்பை
பார்க்காமல் போ ,
உணராமலும் போ,
ஆனால் உனக்காக
அன்பை கடைவைத்து
கடைசிவரை காத்திருந்தேன்
என்று மட்டும் அறியாமல் போகாதே

பூவின் இதழ்களில்

பதித்துத் தருகிறேன்

எனதன்பின் ஸ்பரிசங்களை

முகர்ந்து பார்த்தான்

கட்டிக்கொண்டான், குதுகலித்தான்

அவன் உலகமே நான் என

என்னை கிறங்கடித்தான்

முன்னெப்போதும் இல்லாதளவு

இருள் படிந்த கூதல் காற்றில்

மகரந்த வாசனை கேட்டு

அடம்பிடித்த அன்று

தெருமுனை விலங்காய்

மாறியது அவனுடல்

காமமிகுதி அவனுடல் கலக்க

செயவதறியாது பேதை நான்

விக்கித்த கணத்தில்

என்னிடமே கொடுத்துச்சென்றான்

இரத்தம் படிந்த

எனதன்பின் பூவிதழை

If you enjoyed this post, make sure you subscribe to my RSS feed!

இன்று காலை 48 ‘ A’

பேருந்தில் சாம்பல் நிற

யட்சியை பார்த்தேன்

அதன் அழகு வனப்பானதும்

வெள்ளை பூவின் வாசனையை

தனதண்டையிலும் வைத்திருந்தது

யட்சிகளை பேருந்தில் காண்பது

இதுவே முதல் முறை

அதன் நகம் அழகாக ஒதுக்கப்பட்டும்

தலைமுடி சீராக வெட்டப்பட்டும் இருந்தது

யட்சியின் கண்கள் வழியே

நீளும் கரங்களில்

என்னை விடுவித்துக்கொள்ள

திரும்பும் போது

பார்த்தேன் யட்சி

என்னை உயிருடன்

தின்று கொண்டிருந்தாள்

———-oO0————-

யட்சியின் குட்டியூன்டு இதயம்

வெதுவெதுப்பாகவும் எனக்கு

ஏற்ற இடமாகவும் மாறிப்போனது

அவளின் மகரந்த வாசம்

எனக்குள் மெல்ல மெல்ல

காதலை வரவேற்றுக்கொண்டிருந்தது.

யட்சியின் அடிமை பத்திரத்தில்

கையெழுத்திட்ட மறுவருடம்

என்னை கக்கிப்போட்டது

வெம்மை நிரம்பிய கோடையில்

குருதி சகிதமாக பாதையில்

கிடந்தேன்.

இருந்தாலும் யட்சியின் மேலான

காதலும் அவளின் வாசமும்

கிலேசமடைய வைப்பவை.

———-oO0————-

மெல்ல புறப்பட்டு

வேகம்கொண்டு ஓடுகிறது

என் புரவி

கல்லூரி சாலை, மென்பொருள்

நிறுவனங்கள் வழியாக

ஓடிய புரவி கொண்டு சேர்க்கிறது

பன்னாட்டு விமான நிலையத்தில்

இறக்கை கொண்ட யந்திரம்

என்னை உள்ளிழுத்துக்கொண்டு

வான் நோக்கி பறக்கையில்

தோன்றியது

யட்சியின் மகரந்த வாசனை

மறக்கப்படும் இல்லையெனில்

மறக்கடிக்கப்படும்

If you enjoyed this post, make sure you subscribe to my RSS feed!