Posts Tagged ‘கலை’

Image

வாழ்வும் கலையும் பின்னிப்பினைந்த இரட்டையர்கள்.  சந்தோஷம் , துக்கம், வேதனை என எல்லா காலத்திலும் கலையை மனிதன் தனக்குள் நிகழ்திப்பார்க்கிறான், அது சத்தமிட்டு சினிமா பாடலை பாடுவதாகட்டும், உட்ச போதையில் வேட்டியை மடித்து கட்டி குத்தாட்டம் போடுவதாகட்டும்.

கலையை தொழிலாக வைத்திருப்பவர்களுக்கு கலை எல்லாமுமாய் இருக்கிறது. பெரும்பாலன கலைஞன் இழப்புகளையும், வலிகளையும் தாண்டி தான் கலையின் முதல் துளியை சுவைக்கிறான். தன் அவமானங்களுக்கு கலையின் மூலம் ஒரு காத்திரமான பதிலை கொடுக்க முடியும் என்பது அவன் எண்ணம்.

அட! விடு மாப்ள நானா பொண்ணு பொண்ணுகுடு கல்யாணம் பண்ணிக்கறனு சொன்ன அப்பா தா தேவையில்லாம பேச்ச எடுத்தாரு , இப்ப பாரு சினிமா காரனுக்கு பொண்ணு தர மாட்டன்னு அசிங்க படுத்தி அனுப்ச்டாங்க., வேணான்னு சொன்னா கேக்கனும் மாப்ள , ஆனா சதீசா ஒன்னுமட்டும் பாத்துக்க முத படம் வந்து பிச்சுட்டு ஓடும் அப்ப சொல்லுவாங்கடா அய்யோ மிஸ் பண்ணிட்டமேன்னு அதான் மாப்ள நமக்கு வேணும். எடுத்துக்க சியர்ஸ் என்றான் பாலா..

நீண்ட நாள் கழித்து வட பழனி கடையில் டீ மாஸ்டராய் எனக்கு டீ கொடுத்தது பாலாவின் கரங்கள். சிரித்த படியே கையில் ஒரு டீ கிளாசுடன் வந்தவன், மச்சா எப்படி இருக்க ,  கைல 3 ஸ்கிரிப்ட் ரெடி பண்ணீட்டண்டா, நம்ம அப்பார்ட்மெண்ட் மாடில அந்த ஒரத்துல இருந்து டாப் வீயூ சாட் வெச்சா செமயா இருக்கும்ல டா, என்ன சொல்ற.., என்றான் புன்னகைத்துவிட்டு வந்தேன்.பெண் கொடுக்க மறுத்த வீட்டிற்கு தரும் காத்திரமான பதிலுக்காய் கோடம்பாக்க சாலைகளின்  சுற்றிக்கொண்டிருக்கிறான் பாலா.

_DSC9509

கார்த்தியை டவுசர் போட்ட காலத்திலிருந்து தெரியும்.,நெகமம் சுறாமீன் ஜிக்காட்ட குழு சுத்துப்பட்டு ஏரியாவில் ஏகத்துக்கும் பேமஸ். இறப்பு, கல்யாணம், திருவிழா, வரவேற்பு என எங்கும் தலையில் ஒரு சிறு துணியை கட்டிக்கொண்டு டண்டனக்க,டண்டனக்க என ஒலியை கேட்டால் ஆட துவங்கி விடுவான்.ஒரு தாளம் மாறாது, ஒரு அசைவு கூட பல்லை இளிக்காது. அத்தனை நேர்த்தி.  இவன் ஆடுவதை பார்க்க வரும் பல பெண்களை நான் அறிவேன்.

சென்னை இலக்கிய மன்றத்தில் அவன் ஆடிய ஆட்டத்தை பார்த்துவிட்டு வந்து  இதை எழுதுகிறேன். எங்க மாப்ள பஸ் ரேட்டுல அம்மா என்னைக்கு கை வெச்சுதோ அதோட போச்சுடா எல்லாம், ஒரு நாளைக்கு 200 ரூபா சம்பளத்துல 100 ரூபா இதுக்கே எடுத்து வெக்க வேண்டியதா இருக்குடா, கஷ்டம் என்றான். வாழ்வாதாரமாய் இருந்த கலை இப்போது அவனுக்கு இரண்டாம் தொழில்., கலைஞன் கஷ்ட ஜீவனத்திற்காக கலையை விட்டுச்செல்கிறானே ஒழிய ஒரு போதும் வெறுப்பதில்லை.,

 தெரிந்தவரின் இறப்புக்காக போயிருந்தோம் அவரின் இரண்டாம் மனைவி அழுவதை பார்த்து பாலா இப்படி சொன்னான்.,” இந்தக்கா ரொம்ப லைவ்வா அழுகுதுல்லடா”  என்றான். அப்போது தோன்றியது, கலைஞனுக்குள் கலை என்பது ஓய்வில்லாத அலையை போல சதா இயங்கிக்கொண்டே இருக்கிறது. புற உலகில் இருந்து அவன் எப்போதோ தன்னை விடுவித்துக்கொண்டான். கலையாக மட்டும் தான் அவனால் காட்சியை விவரிக்க முடிகிறது.

என்னை தாளம்போட்டு ஆட வைக்கும் இசை பறை.ஆபீஸ் கல்சுரலில் பறை அடித்துக்கொண்டிருந்தார்கள். ஆபிஸ் நண்பனிடம் கேட்டேன், மச்சா உனக்கு ஆடனும்னு தோன்ல? என்றேன். மச்சி ஒரு கோட்டர் அடிச்சுட்டு ஊர்பக்கம் போய் செமயா ஒரு குத்து குத்தனும்டா என்றான், ஏண்டா இங்க ஆடக்கூடாது, வா ஆடலாம் என்றதற்கு., ஆமா நீ ரோட்ல பறை அடிக்கறத கேட்டுட்டு டண்டனக்க டண்டனக்கன்னு ஆடுவ, ஆடீட்டு ஆபீஸ்க்கு வா உன்ன எப்படி பாக்கறான்னு பாரு என்றான். தமிழனின் ஆதிகலையை கண்காணாத இடத்தில் ஆட சொல்கிறது. கையில் மது கோப்பையுடன் பெண்ணின் இடை இழுத்து ஆடுவதை மற்றவர்கள் பார்க்க வேண்டும் என்பதற்காக ஸ்டார் ஹோட்டலில் நடத்தப்படும் எத்தனை பர்த் டே பார்ட்டிகளை பார்த்திருக்கிறேன்.

பறையை பற்றி உனக்கு தெரியுமா என்றேன் தோழியிடம், அய்யே! அது மாட்டு தோல்ல செஞ்சது, அத எப்படி தான் தொடறங்களோ உவ்வே! என்றாள் . பறை வாசிப்பதற்கு முன், தன் தோலையே தனக்கு வாழ்வாய் கொடுத்த மாட்டிற்கு தான் முதன் வணக்கம் வைக்கிறான், அது எத்தனை பேருக்கு தெரியும், இத சொல்றியே நீ சாப்பிடும் மஸ்ரூம்கு மட்டும் உயிர் இல்லைன்னு யார் சொன்னது என்றேன் ? போடா போங்கு என தலையில் தட்டி விட்டு ஓடிப்போனாள். முடிவு பெறாத கேள்விகள் நம்மை விட்டு ஓடி ஒளிந்து கொண்டுதான் இருக்கிறது. ஒளிந்து கொண்ட இடத்தில் வெளிச்சம் அடிப்பது கார்பரேட் உலகில் முட்டாள்தனம்.

கார்த்தியிடம் ஒரு முறை மச்சா ஏன் சாவுல பறை அடிக்கறாங்க என்றேன்., அது என்னன்னா மாப்ள, பறை அடிச்சா எல்லாருக்கும் ஆடனும்னு தோனும், கை கால் கொஞ்சமாச்சும் அசையும் அது தான் இயற்கை., இப்படி ஆட வெக்கற பறை அடிச்சுமே ஒருத்தன் ஆடமா படுத்து கெடக்கான்னா  அவ பொணம், செத்துட்டான்னு ஆகுதுல்ல. அத எல்லாத்துக்கும் சொல்றதுக்கு தாண்டா பறை அடிக்கறாங்க என்றான்.

நீங்க ஜிக்காட்டம் ஆடறவருதான தம்பி என்று கார்த்திக்கின் பூச்சிக்கொள்ளி மருந்து சூப்பர் வைசர் கேட்டிருக்கிறார்.,அது முன்னாடி சார் இப்பல்லாம் இல்லை என்றிருக்கிறான். ஆமாம் என்று சொன்னால் வேலை போய்விடும். ஏன்னா ரோட்டுல ஆடீட்டு திரிறவ வேலையை ஒழுங்காக செய்ய மாட்டான் என்பது ஆவரின் அசைக்க முடியாது நம்பிக்கை. திரையில் ஆடியவர்கள் தான் நம்மை இன்று ஆள்கிறார்கள் என்பதை எப்படி அவருக்கு புரிய வைப்பது. தமிழின் ஆதிகலையை தொழிலாக வைத்திருந்தவன் கையில் பூச்சிகளுக்கு மருந்தடிக்கும் வேலையை கொடுத்தது நீங்களும் நானும் தான்.

 இப்போதெல்லாம் கலையுடன் சேர்ந்து கலைஞனும் ஒளிந்து கொள்ள வேண்டும்.,இல்லை என்றால் நம்மை வெளியே தள்ளிவிட்டு நம்மீது குத்தாட்டம் போடுவதற்கு ஒரு முதலாளிக்கூட்டமே கையில் பூதக்கண்ணாடி வைத்து நம்மை பார்த்துக்கொண்டிருக்கிறது.

Advertisements

பெளர்ணமி இரவு

Posted: ஜனவரி 20, 2011 by அடலேறு in குறும்படம், நினைவு
குறிச்சொற்கள்:, ,

 

பால்ய வயது நியாபங்கள் எப்போதுமே மனதை லயிப்பிற்குள்ளாக்குபவை. நகரத்தின் இத்தனை சுகங்களை அனுபவித்து விட்டாலும் கிராமம் இன்னும்  ஈர்த்துக்கொண்டே இருக்கிறது. எங்கள் ஊரிலிருந்து சில கிலோமீட்டர் தொலைவில் உள்ள கிராமம் வீதம்பட்டி. அங்கே நடக்கும் கோயில் திருவிழா பிரசித்தமானது. திருவிழாவின் போது நடத்தும் தெருக்கூத்து, நாட்டியம் இவைகளுக்காகவே திருவிழா சென்ற நாட்கள் அவை.

இரவு பத்து மணிக்கு ஆரம்பித்து விடிய விடிய நடக்கும், புழுதி படிந்த கால்களுடன் அவர்கள் ஆடிய நடனமும், வண்ண விளக்குகளால் நிறைந்த அந்த மைதானமும் இன்னமும் கண்முன்னாடியே இருக்கிறது. பள்ளி தோழிகளை பள்ளியை தவிர வெளியே காண்பது திருவிழாக்களில்  மட்டும் தான்.இரவில் ஒளிரும் பல்பு வெளிச்சத்தில் அவர்கள் காட்டும் நமுட்டுச்சிரிப்பு அத்தனை வசீகரமானது.

இரவு முழுக்க கூத்து,கரகாட்டம் என‌ பாத்துவிட்டு நடந்தே ஊர் வந்து சேருவோம். அங்கு நடனம் ஆடிய பெண்கள் தான் எங்களை பொருத்தவரை ஆகச்சிறந்த அழகு .  அதில் நடனமாடிய ஒருவரை மையில்கல் என்ற ஊரில் ஐந்து வருடங்களுக்கு பிறகு சந்தித்தேன். எங்கள் கிராமம், கோயிலின் பெயர், அமைப்பு என அனைத்தையும் சொல்லி நியாபகப்படித்தினேன்.

மிக சந்தோஷத்துடன் டீ குடிக்கிறயா என்றார். அவரால் என்னை நம்பவே முடியவில்லை உண்மையிலேயே தன்னை அடையாளம் தெரிந்ததா என்றார். தான் எப்படி ஆடினேன், எல்லோரும் என்ன சொன்னார்கள் என கேட்டுக்கொண்டே இருந்தார். அவர் ஆடியது ஐந்து வருடத்திற்கு முன்பு, சிலவற்றை மட்டுமே என்னால் நியாபகப்படுத்த முடிந்தது. வேட்டியில் வைத்திருந்த ஒரு கசங்கிய பத்து ருபாய் நோட்டை டீகாரனிடம் கொடுத்தார். தலையை குனிந்து கொண்டு நீண்ட நேரம் அமைதியாக இருந்தார். நான் அவரின் உதடுகளையே கூர்ந்து கவனித்துக்கொண்டிருந்தேன். அவைகள் ஏதோ முணுமுணுத்தபடி இருந்தன‌. சிறிது நேரம் கழித்து இப்போதெல்லாம் கூத்திற்கு யாரும் கூப்பிடுவதில்லை என்று வருத்தப்பட்டார். “கிருஷ்ணா காலேஜ் கட்டறாங்கல்ல அங்க தான் வேலைக்கு இருக்க” என்றார்.சிறிது நேரம் என்னையே பார்த்துக்கொண்டிருந்தவர், என்னிடம் எதுமே சொல்லிக்கொள்ளாமல் வீதியில் இறங்கி நடந்து போய்விட்டார்.

கூடு தமிழ்ஸ்டுடியோ  நடத்திய பெளர்ணமி இரவு நிகழ்ச்சியில் நேற்றிரவு கலந்து கொண்டேன்.  அமைதியான மொட்டை மாடி, நடுவில் புல் தரை சுற்றிலும் பூக்கள் செடிகள் என அழகாக இருந்தது. பவா செல்லத்துரை எழுதிய ‍‍‍‍‍‍‍‍‍‍‍‍கதையை மையமாக வைத்து இயக்குனர்  கருணாவால் எடுக்கப்பட்ட குறும்படம் தான் இந்த ஏழுமலை ஜமா.

அவர் அன்று சொல்லிக்கொள்ளாமல் சென்றதன் வலியை இந்த குறும்படம் பார்த்த பின் தான் உணர்ந்தேன். சிறு வயதில் நான் பார்த்த கூத்து அதன் பின்னாடி எத்தனை மனிதர்கள் , எத்தனை வாழ்வியல் கூறுபாடுகள் இருந்திருக்கும் என நினைக்க வைத்தது.கூத்தும், கரகாட்டமும், புழுதி படிந்த  கால்கள் த‌ந்த சந்தோஷ மனநிலை அதன் பிறகு கிட்டவே இல்லை.

தெருக்கூத்து க‌லைஞ‌ர்க‌ளின் அகஉல‌க‌ம், வாழ‌விய‌ல்,ஆளுமை, வாழ‌க்கைமுறை ஆகியவைகளை பற்றிய ஒரு நுண்ணிய ஆவனம் இந்த “எழுமலை ஜமா” குறும்படம். சினிமா என்ற மாற்று ஊடகத்தால் தெருக்கூத்தின் அழிவையும் அதன் பின்னான கலைஞர்களின் வாழக்கையையும்  இந்த குறும்படம்  மிக தெளிவாக காட்சிப்படுத்துகிறது.

”தனக்தாஹ் தனக்தாஹ்”  என ஒரு பாடல் பின்னனியாக வந்து கொண்டே இருந்தது. மனதை என்னமோ செய்தது அதன் இசையும் அதன் பின்னான சொல்லப்படாத வலியும். ஆரம்ப காட்சியில் இருந்தே மிக இனக்காமன படத்தை பார்த்துக்கொண்டிருப்பதாக உணர்தேன். அதில் இடம்பெற்ற கூத்து எத்தனை நாட்கள் படமாக்க பட்டிருக்கும் என நினைத்துக்கொண்டேன். மிக நுண்ணியமாக காட்சியமைப்பு, பின்னனி இசை , கலைஞர்கள் என அத்தனையிலும் தமிழரின் ஆதிக்கலையை அழகாக காட்டியிருந்தார்கள்.

தெருக்கூத்து ஆடுபவர்களின் தலைவனை வாத்தியாரே என்று கூப்பிடுகிறார்கள். முதல் காட்சி வாத்தியார் பெங்களூர் ரயில் நிலையம் வருவதிலிருந்து ஆரம்பிக்கப்படுகிறது. அதன் பின் அவர் வருவதற்கான காரணம்,  தெருக்கூத்தின் அழகு,நிராகரிக்கப்படுதலின் வலி என நுட்பமாக காட்சிகள் செதுக்கப்பட்டுள்ளது.

ம‌ன‌திற்கு நெருக்க‌மான‌ ப‌டங்களை பார்க்கும் தருணங்கள் அழகானது. கூத்தும், அத‌ன் பின்னான‌ ந‌ம் வ‌ர‌லாறும், வாழ்க்கையையும் அழ‌காக‌ ப‌ட‌ம் பிடித்துள்ளார்க‌ள். வார்த்தைக‌ள‌ற்ற‌ உண‌ர்ச்சி வெளிப்பாடுக‌ளை காட்டும் போது அனைவரின் மத்தியிலும் க‌ண‌த்த‌ மெள‌ன‌ம் நில‌விய‌து.

நாற்பது நிமிடம் ஓடக்கூடிய இந்த படம் முடிவடைந்ததும் கலந்துரையாடல்.  ப‌ட‌த்தில் இருக்கும் குறைக‌ளை ப‌ற்றி ம‌ட்டுமே நான் பேசுவேன் என‌ எழுந்த‌ ஒருவர் படத்தை பற்றி அதன் அழகுணர்ச்சி பற்றியும் சிலாகித்தார். குறைகளை கடந்து ரசிக்க வேண்டிய குறும்படம் இது.  தெருக்கூத்தினை ஆவனப்படுத்துவதில் இந்த குறும்படம் ஒரு முக்கிய இடத்தை பெரும். எந்த வித சலனமும் இல்லாமல் நூற்றாண்டின் கலையை  தொலைத்துவிட்டு அமைதியாக இருக்கிறோம் என்ற வலி இருந்துகொண்டே இருந்தது.

படத்தை பற்றி நான், பாத்தீமாபாபு, மற்றும் நான்கு நண்பர்கள் பேசினோம்.கலந்துரையாடலில் பாத்தீமா பாபு “ ஒரு நிமிடம் கூட  கண்ணை இமைக்க முடியாமல் கட்டிப்போட்ட படம்” என்றார். நான் படத்தின் தொழில்நுட்பம் சார்ந்த விஷயங்கள் பற்றி குறிப்பிட்டேன், பின்னாடி வந்த நண்பர் ஆவணப்படுத்தப்படுதலின் முக்கியத்துவத்தை பற்றி பேசினார். அதன் பின் வந்தவர் உணர்ச்சிவயப்பட்டவராக கதையை பற்றி சொல்லி சென்றார்.

கலந்துரையாடல் முடிந்த பிற‌கு நிலாச்சோறு. பெளர்ணமி நிலாவை பார்த்துக்கொண்டே மொட்டைமாடியில் வட்டமாய் அமர்ந்து உணவருந்தினோம். நிறைய நண்பர்கள் வந்திருந்தனர். மனதிற்கு பிடித்த படம், மொட்டை மாடி,நெருக்கமான நண்பர்கள், உணவு, புல்தரை என‌ சென்னையின் இரவும் மிக அழகானதாக இருந்தது.

தமிழ் ஸ்டுடியோ இணையத்தில் வாசிக்க : http://www.thamizhstudio.com/shortfilm_guidance_fmd_12.php

நிகழ்வு தொடர்பாக மேலும் ஒளிப்படங்களைக் காண: http://picasaweb.google.com/thamizhstudio/1219012011#

If you enjoyed this post, make sure you subscribe to my RSS feed!