Posts Tagged ‘கவிதை’

நகரும் தார் சாலையை இரண்டாக பிரிக்கும் வெள்ளை கோடுகளை முன்பக்கமாக இழுத்து பின்பக்கமாக தள்ளிக்கொண்டிருந்தது வாகனம். எட்டயபுரம் 2 கி.மீ என்பது கண்ணில் பட்டதுமே மனதிற்கு மிக நெருங்கிய உறவினர்கள் வாழும் ஊருக்கும் பயணப்படுவது போலவே இருந்தது. திசை காட்டுக்குறி “பாரதி பிறந்த வீடு” பெயர்பலகையை தாங்கியிருந்தது.வாகனத்தை வீதியில் செலுத்தும் போதே மிக மெல்லிய உணர்வு ஆட்கொண்டிருந்ததை உணர்ந்தேன். பாரதியின் வீடு.

முன்பக்கமாக ஒரு சிறுவனிருந்தான். வாங்க வாங்க செருப்ப அங்கேயே கழட்டி விட்டுருங்க‌ என்றான். முன் அறையிலேயே செல்லம்மாள் பாரதிதான் வரவேற்றார். புகைப்படம் எடுக்கும் போது சிரிக்ககூடாது என்பதை கொள்கையாக கொண்டிருப்பார் போலும். அவரின் புகைப்படத்தையே பார்த்துக்கொண்டிருந்தேன்.

1951ஆம் ஆண்டு திருச்சி வானொலியில் “என் கணவர்” என்ற தலைப்பில் திருமதி செல்லம்மாள் பாரதி ஆற்றிய உரையில் சொன்ன வரிகள் தான் நியாபத்திற்கு வந்தது

“” இன்று என் கணவரின் புகழ் விண்முட்டிச் செல்கிறது. இன்று மகாகவியின் மனைவியாகப் போற்றப்படும் நான் அன்று பைத்தியக்காரன் மனைவியென்று பலராலும் ஏசப்பட்டேன்…””

செல்லம்மாள் பாரதியின் கடிதத்தை படித்த போது ஏற்பட்ட மனவீச்சை கடந்து செல்வதற்கு நீண்ட நேரம் எடுத்துக்கொண்டேன்.

வரலாற்றூப்பெண்.அமைதியான முகம்..,  அடுத்த வேளை சோற்றுக்கு வழியில்லாத போது கிடைத்த அரிசிகளை குருவிகளுக்கு போட்டு விட்டு ” காக்கை குருவி எங்கள் ஜாதி ” என்று  பாடுவ‌தை எந்த‌ பெண்ணாலும் ச‌கித்திருக்க‌முடியாது எத்தனை கோவ‌ம் வந்திருக்கும்.இவரால் கோபப்படவே முடியாது என்பது போலத்தான் முகம்.

ப‌க்க‌த்தில் இன்னொரு ப‌ட‌த்தில் பார‌தியார் செல்ல‌ம்மாளுட‌ன் இருந்தார். அதிலும் செல்ல‌ம்மாள் சிரிக்க‌வேயில்லை.இவ‌ர் சிரிக்காத‌து  உறுத்தலாக இருந்தது. க‌டைசி வ‌ரை வ‌றுமையும் , துன்ப‌த்தையும் ம‌ட்டுமே அனுப‌வித்த‌தால் புன்ன‌கையே இழந்திருப்பார் போலும்.

1901 ம் ஆண்டு த‌ன்னுடைய‌ 19வ‌து வ‌ய‌தில் செல்ல‌ம்மாளுக்கு எழுதிய‌ க‌டிதத்தில், எனதருமைக் காதலி செல்லம்மாளுக்கு ஆசிர்வாதம் என்று ஆர‌ம்பிப்பார் பார‌தி. பார‌தியை பார்த்து க‌ண்சிமிட்டி சிரித்துக்கொண்டேன். எட்டாம் வ‌குப்பில் ப‌டித்த பாரதிக்கும் என‌க்கும் எந்த‌ ச‌ம்ப‌ந்த‌மும் கிடையாது. இப்போது நான் பார்க்கும் பார‌தி ஆளுமை, என‌க்கு நெருக்க‌மான‌வ‌ர்.

அடுத்த‌ அறை ” பார‌தி பிற‌ந்த‌ இட‌ம் ” அவ‌ர் ஜ‌னித்த‌ இட‌த்தில் ஒரு சிலை இருந்தது.சிலையை தொட்டுப்பார்த்துக்கொண்டிருந்தேன். வெளியின் வெளிச்ச‌ம் த‌ரையில் ப‌ர‌வியிருந்தது.

ஆண்டுக‌ள் சென்ற‌ பின் உண‌ர்ச்சிப்பூர்வ‌மாக‌ அவ‌ரின் பிற‌ப்பை அவ‌ர் பிற‌ந்த‌ இட‌த்தில் நின்று நினைத்துப்பார்பார்க‌ள் என்று பார‌திக்கு நிச்ச‌ய‌ம் தெரிந்திருக்காது . எட்ட‌ய‌புர‌த்தில் சாதார‌ண‌மாக‌ பிற‌ந்த‌வ‌ர் ம‌றையும் போது சாதார‌ண‌மான‌வ‌ராக‌ இல்லை. அவ‌ரின் பிற‌ப்பை கொண்டாடிக்கொண்டிருந்தேன். அருகிலேயே அவ‌ர் ப‌ய‌ன்ப‌டுத்திய‌ வேலும் குத்தீட்டியும் இருந்தது, அதைவிட‌ வலிமையானதுஅவ‌ர் ச‌ட்டையில் குத்தியிருக்கும் பேனா என்ப‌தை உண‌ர்ந்துகொண்டேன். ப‌ழ‌மொழிக‌ளை நிஜ‌த்துட‌ன் உள்வாங்கிக்கொள்வ‌து என‌க்கு மிக‌ அரிதாக‌வே  நடந்திருக்கிறது.

தேடிச்சோறு நிதம் தின்று – பல
சின்னஞ்சிறு கதைகள் பேசி – மனம்
வாடித் துன்பமிக வுளன்று – பிறர்
வாடப் பல செயல்கள் செய்து – நரை
கூடிக் கிழப்பருவ மெய்தி – கொடுங்
கூற்றுக் கிரையெனப் பின் மாயும் – பல
வேடிக்கை மனிதரைப் போல – நான்
வீழ்வேனென்று நினைத்தாயோ

( சொல்லில‌ட‌க்க‌முடியாத அகச்‌சீற்ற‌த்தை இந்த‌ப்பாட‌ல் எப்போதும் என‌க்கு த‌ருகிற‌து . நரை கூடிக் கிழப்பருவ எய்த‌மாட்டேன் என்ற‌ இந்த‌ க‌விதையை எழுதினதால் தான் நரை கூடுவதற்கு முன்னமே நம்மை விட்டுச்சென்றாரோ என்னமோ )

ப‌க்க‌த்தில் 1920 ‍ல் பார‌தி சென்னையில் எடுத்த‌ புகைப்ப‌ட‌ம் ஒன்று இருந்தது. அதில் அழ‌காக‌ முண்டாசு க‌ட்டி ப‌ட‌ங்க‌ளில் நாம் பார்க்கும் பார‌தி போல‌ இருந்தார். அவர் அமர்ந்திருந்த இருக்கையின் பின்பக்கம் சற்று சரிவாக வெளியே தெரிந்தது.அதை சுற்றி ம‌ன‌ம் ப‌ல‌ சிந்த‌னைக‌ளை இழுத்துக்கொண்ட‌து. அவ‌ச‌ர‌மாக‌ வ‌ந்து உட்கார்ந்து கொண்ட‌தால் தான் ச‌ரிசெய்ய‌ வேண்டாம் என‌ நினைத்து புகைப்ப‌ட‌ம் எடுத்துக்கொண்டாரா, இல்லை அந்த‌ நாற்காலியின் ஏதோ ஒரு கால் ச‌ரியாக‌ வேலைசெய்ய‌வில்லையா என‌ இடியாப்ப‌ச்சிக்க‌லாக‌ நினைவுக‌ள் ப‌ய‌ண‌ப்ப‌ட்டுக்கொண்டே இருந்தது. நொதிக்கும் சிந்த‌னையை அமைதிப்படுத்திய‌ பிற‌கு தான் உண‌ர்ந்தேன் எட்ட‌ய‌புர‌ம் என்ற‌ பெய‌ர் ப‌ல‌கையை பார்த்த‌ முத‌ல் இப்ப‌டி தான் இருக்கிறேன் என்று. ச‌ம‌ நிலை ப‌டுத்திக்கொண்டேன்.

அடுத்து அவ‌ரின் குடும்ப‌ப்ப‌ட‌ம், அதிக‌ நேர‌ம் பார்த்த‌து அந்த‌ ப‌ட‌மாக‌த்தான் இருக்கும் என்று நினைக்கிறேன்.க‌ம்பீர‌மான‌ அப்பாவாக‌, காத‌ல்மிகு க‌ண‌வ‌ணாக‌ செல்ல‌ம்மாளில் தோளில் கை வைத்துக்கொண்டு எடுக்க‌ப்ப‌ட்ட‌து அந்த‌ப்ப‌ட‌ம்.


வ‌ல‌து புற‌மாக‌ வீட்டிற்குள்ளேயே கிண‌று. இங்கே தான் செல்லம்மாளின் குர‌லுக்கேற்ப‌ பார‌தி த‌ண்ணீர் இறைத்துக்கொடுத்திருப்பார் என்ற‌ நினைப்பே அலாதியாய் இருந்தது. இந்த‌ கிண‌ற்ற‌டியில் எத்த‌னை பாட்டெழுதியிருப்பார் என்ப‌த‌ற்கு சான்றுக‌ள் இல்லை. என்னை பொறுத்த‌வ‌ரை குறைந்த‌ப‌ட்ச‌ம் ப‌த்து பாட‌ல்க‌ள்.

மீண்டும் அதே அறை, பார‌தியின் தொட‌ர்பு கொண்டவர்களின் புகைப்ப‌ட‌ங்க‌ள், முத‌லாவ‌து ரா. க‌ன‌க‌லிங்க‌ம் ஜாதிக‌ள் இல்லைய‌டி பாப்பா என்று பாடிய‌ மகாக‌வியால் பூணுல் அணுவிக்க‌ப்ப‌ட்ட‌வ‌ர். உய‌ர் சாதியை த‌விர்த்து முத‌ல் முறையாக‌ த‌மிழ‌க‌ வ‌ர‌லாற்றில் பூணூல் அணிந்த‌து இவ‌ராக‌த்தான் இருக்கும். பார‌தி வெறும் வார்த்தைக‌ளால் ஜ‌ல்லிய‌டித்துப்போக‌வில்லை என்ப‌த‌ற்கு க‌ன‌க‌லிங்க‌ம் அவ‌ர்க‌ளே முத‌ல் சாட்சி.

அடுத்து சுதேச‌ கீத‌ங்க‌ள் வெளியிட்ட‌ கிருஷ்ண‌சாமி ஐய‌ர், அவ‌ரை அடுத்து புதுவையில் அறிமுக‌மாகி சென்னையில் பார‌தியை காப்பாற்றிய‌ குவ‌ளை க‌ண்ண‌ன்., சுதேச‌ ப‌க்தி உப‌தேச‌ம் செய்த‌ நிவேதிதா தேவியார். இவ‌ர்க‌ள் அனைவ‌ரும் பாரதி என்ற‌ ஆளுமையை அவ‌ர் வாழ்ந்த‌ ச‌ம‌ கால‌த்தில் க‌ண்டுகொண்ட‌வ‌ர்க‌ள்.

அடுத்து அவ‌ர் ப‌டித்த‌ இந்து க‌ல்லூரி, சென்னையில் வாழ்ந்த‌ வீடு, அவ‌ரின் புத‌ல்விக‌ள், அவர் எழுதிய‌ க‌டித‌ங்க‌ள். இதில் ப‌ர‌லி சு நெல்லைய‌ப்ப‌ருக்கு எழுதிய‌ க‌டித‌த்தில் ” த‌மிழ‌ச்சியை காட்டிலும் ம‌ற்றொரு ஜாதிக்காரி அழ‌காயிருப்ப‌தை க‌ண்டால் என் ம‌ன‌து  புண்ப‌டுகிற‌து என்று எழுதியிருக்கிறார்.

இதை விட‌ த‌மிழ‌ச்சிக‌ளை யாரும் காதலித்துவிட‌ முடியாது என்றே நினைக்கிறேன். இந்த இரண்டு வரிகள் மிகப்பெரும் நினைவுச்சுழலை ஆரம்பித்துவைத்தன‌‌. தமிழனும் , தமிழச்சியும் தான் எல்லாவற்றிலும் முத‌லிட‌த்தில் இருக்க‌ வேண்டும் என்பதை பாரதியார் பெரிதும் விரும்பியிருக்கிறார்.

மீப்பெரும் ஆளுமைக‌ள் அவ‌ர்க‌ளின் புகைப்ப‌டங்களின் நிழ‌ல் பிம்பத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்க‌ள். பாரதி நிஜத்திலும் கவிதையிலும் ஒருகால‌த்திலும் ச‌ம‌ர‌ச‌ம் செய்து கொள்ளாத‌வ‌ர். பைத்திய‌க்கார‌ன் என்று சொன்ன‌வ‌ரின் வாரிசுக‌ளுக்கு இன்று அவ‌ர் மகாக‌வி.

க‌விதைக்காக‌ அவ‌ர் இழ‌ந்தவைக‌ளின் கூட்டுக்தொகை மிக அட‌ர்த்தியான‌து. இருக்கும் வ‌ரை வார்த்தைக‌ளால் விளையாடிக்கொண்டிருந்த‌வ‌ர் இற‌ந்த‌ பிற‌கு அவரின் வார்த்தைக‌ள் விளையாடிக்கொண்டிருக்கிற‌து.

நேரமாகிவிட்டதாக அண்ணன் சொன்னார் . கிள‌ம்புவ‌த‌ற்கு த‌யாராக‌ சப்பாத்துகள் அணிவதற்கு முதல் அறைக்கு வந்தேன். முதலில் பார்த்த அதே படத்தில் இப்போதும் செல்ல‌ம்மாள்  சிரிக்க‌வேயில்லை. அவ‌ரின் சோக‌ம் ப‌டிந்த‌ முக‌ம் என்ன‌வோ செய்த‌து. நிராகரிக்கப்பட்ட‌  கவிஞனுடைய‌ ம‌னைவிக‌ளின் மொத்த‌ பிம்ப‌ம் அவ‌ள்.

“யாருக்கு மனைவியாக வாழ்ந்தாலும் வாய்க்கலாம். ஆனால் கவிஞன் மனைவியாயிருப்பது கஷ்டம்” என்ற‌  துன்பத்தின் மீப்பெரும் வரிகளை செல்லமாள் வ‌லிக‌ளுட‌ன் தான் சொல்லியிருக்கிறார். அவ‌ரின் சிரிக்காத‌‌ முக‌ம் தீர்க்க‌முடியாத‌ ர‌ண‌மாய் உறுத்த‌த்தொட‌ங்கிய‌து. ச‌ட்டென‌ கிள‌ம்பி வெளியேறினேன்.

 -0O0-

பின் இணைப்பு :

என் கணவர் – திருமதி. செல்லம்மாள் பாரதி

(1951ஆம் ஆண்டு திருச்சி வானொலியில் “என் கணவர்”என்ற தலைப்பில் திருமதி செல்லம்மாள் பாரதி ஆற்றிய உரை.)

வறுமை, கவிஞனின் தனி உடைமை. கவிஞனுக்கு இந்த மண்ணுலகில் இன்பம் அளிப்பது கவிதை; ஆனால் வயிற்றுக்குணவு தேடி வாழும் வகையை அவன் மனைவிதான் கண்டுபிடிக்க வேண்டி வருகிறது. காதல் ராணியாக மனைவியைப் போற்றும் கவிஞன் அவளுக்குச் சாதமும் போடவேண்டும் என்ற நினைவேயின்றிக் காலம் கழித்தானேயானால், என்ன செய்ய முடியும்?.

ஊருக்குப் பெருமை என் வாழ்வு. வையகத்தார் கொண்டாட வாழவேண்டும் என்ற என் கனவு ஓரளவு பலித்ததென்னவோ உண்மைதான். இன்று என் கணவரின் புகழ் விண்முட்டிச் செல்கிறது. இன்று மகாகவியின் மனைவியாகப் போற்றப்படும் நான் அன்று பைத்தியக்காரன் மனைவியென்று பலராலும் ஏசப்பட்டேன்… விநோதங்கள் என் வாழ்க்கையில் அதிகம்.

உலகத்தோடொட்டி வாழ வகை அறியாத கணவருடன் அமர வாழ்வு வாழ்ந்தேன் என்றால் உங்களுக்குச் சிரிப்பாகத்தான் இருக்கும். யாருக்கு மனைவியாக வாழ்ந்தாலும் வாய்க்கலாம். ஆனால் கவிஞன் மனைவியாயிருப்பது கஷ்டம்.

கவிஞர்கள் போக்கே ஒரு தனி. உண்பதிலும் உறங்குவதிலும் வட சாதாரண மனிதரைப்போல் அவர்கள் இருப்பதில்லை. கற்பனைச் சிறகு விரித்துக் கவதை வானில் வட்டமிடும் பறவை, பூலோகத்திலே இருண்ட வீட்டிலே மனைவிக்கும் மற்றவருக்கும் சம்பாத்தியம் செய்துபோட்டு, சாதாரண வாழ்க்கை வாழ முடியுமா?

வறுமை, கவிஞனின் தனி உடைமை. கவிஞனுக்கு இந்த மண்ணுலகில் இன்பம் அளிப்பது கவிதை ஆனால் வயிற்றுக்குணவு தேடி வாழும் வகையை அவன் மனைவிதான் கண்டுபிடிக்க வேண்டி வருகிறது. காதல் ராணியாக மனைவியைப் போற்றும் கவிஞன் அவளுக்குச் சாதமும் போடவேண்டும் என்ற நினைவேயின்றிக் காலம் கழித்தானேயானால், என்ன செய்ய முடியும்?

கவிஞன் விசித்திரமான தன்மை நிறைந்தவன்; அவனுக்கு எதுவும் பெரிதில்லை. ஆனால் கவலை நிறைந்த வாழ்நாளைக் கழிக்க வேண்டும் என்று எந்தப் பெண்தான் நினைக்க முடியும்? சிறு வயதில் ஆசாபாசங்களும் அபிலாஷைகளும் ஒவ்வொரு பெண்ணின் மனத்திலும் நிறைந்திருப்பது இயற்கைதானே? சுகமாக வாழுவதற்கு சொர்க்கலோகம் சென்றால்தான் முடியும் என்ற நிலை கவிஞன் மனைவிக்கு ஏற்பட்டு விடுகிறது.

அந்த நாளிலிருந்த சத்திமுத்தப் புலவரின் மனைவியிலிருந்து இன்று என்வரை சுகவாழ்வு ஒரே விதமாகத்தான் அமைந்திருக்கிறது. ஏகாந்தத்தில் அமர்ந்துவிட்டால் முனிவரும்கூட அவரிடம் பிச்சைதான் வாங்கவேண்டும். ஆனால் மனைத் தலைவியாகிய நான் அவ்வாறு நிஷ்டையிலிருக்க முடியுமா?

கவிஞர்களில் பலதரப்பட்டவர்கள் இருக்கிறார்கள். கடவுளைப் பக்தி செய்யும் கவிஞன், காவியம் எழுதும் கவிஞன், இவர்களைப் புற உலகத் தொல்லைகளை சூழ இடமில்லை. எனது கணவரோ கற்பனைக் கவியாக மட்டுமல்லாமல் தேசியக் கவியாகவும் விளங்கியவர். அதனால் நான் மிகவும் கஷ்டப்பட்டேன்.

கவிதை வெள்ளைத்தை அணை போட்டுத் தடுத்தது அடக்கு முறை. குடும்பமே தொல்லைக்குள்ளாகியது. ஆனால் நுங்கும் நுரையுமாகப் பொங்கிவரும் புது வெள்ளம் போல அடக்குமுறையை உடைத்துக்கொணடு பாய்ந்து செல்லும் அவர் கவிதை.

காலையில் எழுந்ததும் கண்விழித்து, மேநிலை மேல், மேலைச்சுடர் வானை நோக்கி வீற்றிருப்பார். ஸ்நானம் ஒவ்வொரு நாள் ஒவ்வொரு விதத்தில் அமையும். ஸூரிய ஸ்நானம்தான் அவருக்குப் பிடித்தமானது. வெளியிலே நின்று நிமிர்ந்து ஸூரியனைப் பார்ப்பதுதான் வெய்யற் குளியல். ஸூரியகிரணம் கண்களிலேயுள்ள மாசுகளை நீக்கும் என்பது அவர் அபிப்பிராயம். காலைக் காப்பி, தோசை பிரதானமாயிருக்க வேண்டும் அவருக்கு. தயிர், நெய், புது ஊறுகாய் இவைகளைத் தோசையின் மேல் பெய்து தின்பார்.

அவருக்குப் பிரியமான பொருளைச் சேகரித்துக் கொடுத்தால், அவரது நண்பர்களான காக்கையும் குருவியும் அதில் முக்கால் பாகத்தைப் புசித்து விடுவார்கள். எதை வேண்டுமானாலும் பொறுக்க முடியும்; ஆனால் கொடுத்த உணவைத் தாம் உண்ணாமல் பறவைகளுக்குப் போட்டுவிட்டு நிற்கும் அவருடைய தார்மிக உணர்ச்சியை மட்டும் என்னால் சகிக்கவே முடிந்ததில்லை.

சிஷ்யருக்குக் குறைவு இராது.செய்திகளுக்கும் குறைச்சல் இல்லை. கானாமுதமோ காதின் வழியே புகுந்து உடல் எங்கும் நிறைந்துவிடும். களிப்பை மட்டும் பூரணமாக அனுபவிக்க முடியாமல் உள்ளிருந்து ஒன்று வாட்டும். அதுதான் கவலை!

இச்சகம் பேசி வாழும் உலகத்தில் எப்பொழுதும் மெய்யே பேச வேண்டும் என்பது அவரது கட்டளை. எக்காரணத்தைக் கொண்டும் பொய் பேசக் கூடாது. இது எத்தனை சிரமமான காரியம் என்பது எல்லாருக்கும் தெரிந்த விஷயம்தான்.

புதுவை எனக்குச் சிறைச்சாலை ஆகியது. சிறைச்சாலை என்ன செய்யும்? ஞானிகளை அது ஒன்றும் செய்ய முடியாதுதான். எதையும் ஏற்றுக்கொள்ளும் மனத்திண்மை அவர்களுக்கு உண்டு. ஆனால் என்னைப்போன்ற சாதாரணப் பெண்ணுக்கு, இல்லறத்தை நல்லறமாக்க வேண்டும் என்ற ஒரே விஷயத்தை லட்சியமாகக் கொண்ட ஒருத்திக்குச் சிறைச்சாலை நவநவமான துன்பங்களை அள்ளித்தான் கொடுத்தது.

புதுவையில்தான் புதுமைகள் அதிகம் தோன்றின. புது முயற்சிகள், புதிய நாகரிகம், புதுமைப் பெண் எழுச்சி, புதுக் கவிதை இவை தோன்றின. இத்தனை புதுமைகளும் எழுவதற்கு நான்தான் ஆராய்ச்சிப் பொருளாக அமைந்தேன். பெண்களுக்குச் சம அந்தஸ்து வழங்க வேண்டுமா வேண்டாமா என்று வெகுகாலம் ஆராய்ந்த பின்னரே, பெண் விடுதலை அவசியம் என்ற முடிவு கண்டு, நடைமுறையில் நடத்துவதற்குத் துடிதுடித்தார் என் கணவர். இந்த முடிவை அவர் காண்பதற்குள் நான் பட்ட பாடு சொல்லுந்தரமன்று.

புதுவையில் அரசியலில் கலந்துகொள்ள ஒரு வசதியும் இல்லாதிருந்த போதிலும், தமிழ் இலக்கியத் தொண்டு செய்ததனால் ஒருவாறு மன அமைதி பெற்றிருந்தார். நமது பொக்கிஷங்கள் என்று கருதத் தகும்படியான அவரது கவிதைகள் எல்லாம் அங்குதான் தோன்றின.

மனிதரை அமரராக்க வேண்டும் என்று தவித்த என் கணவர், எத்தனை இடையூறுகளுக்கும் எதிர்ப்புகளும் ஏற்பட்ட போதிலும், அவற்றையெல்லாம் மோதிமிதித்துவிட்டுத் தம் லட்சியத்தில் முன்னேறும் துணிவு கொண்டு செயலாற்றினார்.

மகாகவி நாட்டிற்காக, அதன் சுதந்திரத்திற்காக வாழ்ந்தார். தமிழ் பண்பாட்டில் சிறந்த அவர் ஈகை, அன்பு, சகிப்புத்தன்மை முதலான பண்புகளைக் கடைப்பிடித்து வாழ்ந்தது ஓர் அதிசயமன்று.

தூங்கிக் கிடந்த தமிழரை விழிப்புறுத்தியதும் அதிசயமன்று; ஆனால் இன்று அவரது பூத உடல் மறைந்த பின்பும் தமிழ் பேசும் ஒவ்வோர் உயிரினிடத்தும் அவர் கலந்து நிற்பதுதான் அதிசயம் என்று எனக்குத் தோன்றுகிறது. “விண்டுரைக்க மாட்டாத விந்தையடா!” என்று அவரது கவிதை மொழியில்தான் இந்த மகிழ்ச்சியைத் தெரிவிக்க வேண்டியிருக்கிறது.

( சின்னஞ்சிறுகிளியே செல்லம்மா பாடல் கேட்க வேண்டும் போல உள்ளது )

பின் இணைப்பு படங்கள் :

Advertisements

கேள்விகளால் ஆன விளையாட்டை
தொடங்கினாள் தூரிகா
விளையாட்டின் விதிகள்
ஒருபோதும் சொல்லப்படவில்லை
ஒவ்வொரு சொல்லாக‌
உதிர்க்க தொடங்கினாள்
தீயிலிருந்து வெம்மை பிரிப்பது
மெளனத்திலிருந்து இசை பிரிப்பது
பற்றிய குறிப்புகள் அவை
நினைவுக‌ளில் இருந்து
அவ‌ளை பிரித்து
காட்ட‌‌ சொன்ன‌ கேள்வியில்
தோற்றுப்போனேன்.
கீறல்களால் த‌ண்ட‌னை
நிறையேற‌ தொட‌ங்கிய‌
காலையில் விழித்தெழுந்தேன்
அவ‌ள் இப்போது
உடலிலிருந்து என்னை
பிரித்துக்கொண்டிருக்கிறாள்

கல்லூரி கள்வன்

Posted: ஏப்ரல் 16, 2011 by அடலேறு in கவிதை, காதல்
குறிச்சொற்கள்:, , ,

கல்லூரியில்
முதல் நாள் வகுப்பில்
கிரங்கடிக்கும்
பார்வையுடன்
என்னையே
பார்த்துக்கொண்டிருந்தாயே
அதற்கு என்ன அர்த்தம் ?

–oO0–

மென் இதய‌ம் கிழித்து
குருதி புசித்து
உள்ள‌ம் தொடும்
உன் பார்வை

–oO0–

எப்ப‌டி த‌ய‌க்க‌மில்லாம‌ல்
கைகுலுக்கி
பெய‌ர் கேட்டாய்
போடா! நான் தூங்கவேயில்லை

–oO0–

கரும்பலகை எழுத்துக்களை
அழிக்கும் ஒவ்வொரு முறையும்
அழித்துக்கொண்டுருந்தாய்
என் தயக்கத்தை

–oO0–

எளிதாய் ம‌ய‌க்கி வைத்தாய்
இய‌ல்பாய் ர‌சிக்க‌ வைத்தாய்
என்னையே மெதுவாய்
இழ‌க்க‌ வைத்தாய்

–oO0–

உன்னுட‌ன் பேசுகையில்
எதேச்சையாக‌ காத‌லை
சொல்லிவிடுவேன் என்று தான்
பேசுவ‌தேயில்லை

–oO0–

ஒரு ப‌க்க‌ம் த‌லை சாய்த்து
குட் மார்னிங் சொல்லும் போது
ஹைய்யோ!!
க‌ட்டிப்பிடித்து கொள்ள‌லாம்
போல‌ தோன்றும்

–oO0–

ச‌த்திய‌மிட்டு சொல்கிறேன்
உன்னை நினைக்கும்
போதெல்லாம்
க‌ருக்கென்று நெஞ்சுக்குழிக்குள்
ஏதோ ஒன்று இழுக்கிற‌து

–oO0–

உன்பெய‌ரை
யார் அழைத்தாலும்
திரும்பிப்பார்ப்ப‌தை
த‌விர்க்க‌முடிய‌வில்லை
ஏன்?

–oO0–

புத‌ன்கிழ‌மை லேப்புக்கு
அணிந்து வ‌ரும் முழுநீள‌
வெள்ளை ச‌ட்டையில்
கொள்ளை அழ‌குடா நீ

–oO0–

தின‌மும் ஏழு ம‌ணி
லேண்ட் லைக்கு
மிஸ்டு கால் கொடுப்ப‌து
நான் தான்

–oO0–

முத‌ன் முறையாக‌
நீ க‌ல்லூரி வ‌ராத‌
அன்று தான்
தெரிந்து கொண்டேன்
வ‌குப்ப‌றை எத்த‌னை
அந்நிய‌ம் என்று

–oO0–

காய்ச்ச‌ல் என்ப‌து
இத்த‌னை கொடிய‌து என்று
உன‌க்கு வ‌ந்த‌ பின் தான்
உண‌ர்ந்தேன்

–oO0–

நேரில் சொன்னால்
அழுது விடுவேன்
என்று தான்
போனில் சொன்னேன் காத‌லை

–oO0–

நிராக‌ரிப்பை
நாசூக்காய் உண‌ர்த்திய‌தால்
நீ மெதுன‌ன்

–oO0–

உன் என்றைக்குமான
தோழி நான்
என் என்றைக்குமான‌
காத‌ல‌ன் நீ

–oO0–

நிராக‌ரிப்பின் உச்ச‌ம்
உன்
மெள‌ன‌ம்

–oO0–

இப்போதெல்லாம்
என்னையே
பார்த்துக்கொண்டிருக்கிறாய்
ஏன்?

–oO0–

ஹார்மோன் பீய்ச்சிய‌டித்து
முதுகுத்த‌ண்டில்
மின‌சார‌ம் பாய்ந்து
த‌ண்டுவ‌ட‌ம் வ‌ழியே
மூளையை தாக்கிய‌து
நீ காத‌லை சொன்ன‌ போது

–oO0–

நெற்றி முத்த‌மிட்டு
என்னை ஏற்றுகொண்ட‌
அன்று தான்
ஜன‌ன‌மானேன்

–oO0–

உன் சகர்தர்மிணி நான்
என் சகலமும்
நீ

–oO0–

முத‌ன் செம‌ஸ்ட‌ரிலேயே
எப்ப‌டி காத‌லை
சொன்னாய் என்றாய்
முத‌ல் நாளே
சொல்லியிருப்பேன்
நீ சிறுவ‌ன்

–oO0–

தேர்வு அறையில்
ப‌க்க‌த்தில் உட்காராதே
ம‌ற‌ந்து தொலைக்கிற‌து
அனைத்தும்
–oO0–
நீ ப‌தித்த‌‌ முத‌ல் முத்த‌ம்
தான் கிள‌றிவிட்ட‌து
என் பெண்மையை
–oO0–
கையை பிடித்துக்கொண்டு
அனாய‌ச‌மாக‌ பேசுகிறாய் நீ
கிட‌ந்து த‌விக்கிறேன் நான்
–oO0–

உன்னைக்காட்டாத‌
ச‌னி, ஞாயிறுக‌ளை
அற‌வே
வெறுக்கிறேன்

–oO0–

இடைஇழுத்து
முத்த‌மிடும் போது
எல்லை தாண்ட‌
சொல்லும்
உன் மூச்சுக்காற்று

–oO0–

வில‌க்கான‌ நாட்க‌ளில்
ம‌டிகிட‌த்தி
த‌லை கோகி
க‌ர‌ம் ப‌ற்றி
கால் விர‌ல்
சொடுக்கெடுக்கும் நீ
என் தாயுமான‌வ‌ன்

–oO0–

கன்னத்தின்
நேரெதிர் த‌ட‌வ‌
நேற்று ம‌ழித்த‌ தாடி
உலை வைக்கும்
என் பெண்மைக்கு

–oO0–

உள் நுழைந்து
உயிர் புசித்து
சந்தோஷப்படுத்தியே
சாகடிப்பாய்
என்று தெரிந்திருந்தால்
உன்னை
காதலித்திருக்கவே மாட்டேன்

–oO0–

கோடு போட்ட‌
ஆர‌ஞ்சு ச‌ட்டை
காட்டும் உன்னை
திமிராக‌
–oO0–
நீயும் நானும்
ப‌கிர்ந்துண்ண‌ தொட‌ங்கிய‌பின்
ச‌மைக்க‌ விடுவ‌தில்லை
அம்மாவை
–oO0–
எப்ப‌டி
க‌ண்டுபிடித்தாய்
நானும் நானும்
ஒன்றில்லையென
உன்னுட‌ன் இருக்கும்
த‌ருண‌ங்க‌ளில்
–oO0–

வாக‌ன‌ ச‌த்த‌மும்
உன் மென் வாச‌மும்
அறிந்து வைத்திருக்கிறேன்

–oO0–

நீ ஈர‌க்கை துடைத்த‌
துப்பட்டா
த‌லைய‌னையென‌க்கு
இர‌வில்

–oO0–

யாரும‌ற்ற‌ வ‌குப்பில்
த‌னியாய் உன்னிட‌ம்
மாட்டிக்கொள்வ‌து
அவ‌ஸ்தை பேர‌வ‌ஸ்தை

–oO0–

வகுப்பறையில் நான்
இல்லாததை தேடும்
உன் கண்கள்
எனக்கு பிடித்த உறுப்பு

–oO0–

உன்னிட‌ம்
பொய்யாய் கூட‌
கோபப்ப‌ட‌ முடிய‌வில்லை
அப்ப‌டி கெடுத்து வைத்திருக்கிறாய்

–oO0–

இய‌ல்பாக‌ பேசி விடுகிறாய்
எதோ ஒன்றை.,
நினைத்து நினைத்து
நீர்த்துப் போகிற‌து இர‌வு

–oO0–

அதிகாலையில்
அருகில் நீ இருப்ப‌தாய்
நினைத்துக்கொள்ளும்
க‌ற்ப‌னைக‌ளின்
வ‌சீக‌ர‌ம்
வ‌ன் ஸ்ப‌ரிச‌ம்

–oO0–

எப்போதும் என்னையே
நினைத்துக்கொண்டிருப்பாயா
என்று கேட்கிறாய்
எப்போதும்
சுவாசித்துகொண்டே
இருப்பாயா என்று
கேட்ப‌து போல‌
இருக்கிற‌து
செல்ல‌ ம‌டைய‌னே

–oO0–

ஆணாதிக்க‌ம் பிடிக்க‌த்தான்
செய்கிற‌து
அதிகார‌த்தொனியில்
முத்த‌ம் வேண்டும் என்ப‌து

–oO0–

ம‌ற்ற‌ பெண்க‌ளுட‌ன்
பேசும்போதெல்லாம்
நான் கோப‌ப்ப‌டுவ‌தே இல்லை
நான் ர‌சித்த‌ உன் பேச்சை
அவ‌ர்க‌ளும் கேட்க‌ட்டும்.
பேச்சை ம‌ட்டும்

–oO0–

த‌ட்ட‌ச்சு ப‌ல‌கையில்
ஊர்ந்து செல்லும் உன்
விர‌ல்க‌ளை பார்க்க‌
ஆசையாயிருக்கும்
நினைத்துப்பார்கவே
வெட்க‌மாய் இருக்கிற‌து
ச்சீ போடா

–oO0–

க‌ல்லூரியின்
இர‌ண்டாம் வ‌ருட‌
முடிவு நம்மை
ஒன்றாகிப் போன‌து

–oO0–

வ‌ளாக‌த்தேர்வுக்கான‌
பேருந்து ப‌ய‌ண‌த்திலுன்
கரம் பிடித்து
தோள் சாய்த்து
நானுற‌ங்கும் போது
புகுத்திக் கொண்டேன்
உன் க‌த‌க‌த‌ப்பை

–oO0–

நீ அடிக்கடி மீசை
ம‌ழிப்ப‌த‌ற்கான‌
கார‌ண‌த்தை
காதில் சொன்ன‌து
இர‌ண்டு நாள் தூக்க‌ம் கெடுத்த‌து

–oO0–

வ‌குப்ப‌றை மேசையில்
க‌ருப்புமை கொண்டு
என்பேரெழுதும் நீ
காதல்‌ அர‌க்க‌ன்

–oO0–

உன‌க்கான‌ அசைமென்ட்
எழுதும் பேப்ப‌ர்க‌ளில்
மூன்றாவ‌து வ‌ரியில்
உல‌ர்ந்து போன‌
என் முத்த‌ங்க‌ள்
இருக்கும்

–oO0–

க‌டைசி செம‌ஸ்ட‌ர்
நாட்க‌ளை
என் ஆயுசுக்கும்
நீட்டிக்க‌ச்சொல்

–oO0–

ச‌ட்டென கோப‌ம்
பட்டுத்தெரிக்கும்
என‌க்கு.,நீயில்லாம‌ல்
இத்த‌னை நீண்ட‌ அன்பு
சாத்திய‌மில்லை

–oO0–

கல்லூரியில்
க‌டைசி நாள் வகுப்பு
முடிந்து வெளியேரும் போது
க‌ல‌ங்கிய‌ க‌ண்க‌ளோடு
என்னையே
பார்த்துக்கொண்டிருந்தாயே
அதற்கு என்ன அர்த்தம் ?

–oO0–

If you enjoyed this post, make sure you subscribe to my RSS feed!

அவள்

Posted: ஜனவரி 18, 2011 by அடலேறு in அடலேறு, பெண்
குறிச்சொற்கள்:,
நூற்றாண்டின் வலியை
அனுபவித்துவிட்டாள்
அவள்

உதிர்வ‌த‌ற்கு த‌யாராய்
திர‌ண்டிருக்கிறது
வருடத்தின் முதல் க‌ண்ணீர்துளி

சிற‌குக‌ள‌ற்ற‌ தேவ‌தை மெல்ல‌
நுழைகிறாள் தனி அறையில்

அவ‌ளின்
பேரிரைச்சல் க‌ண்டு
ந‌டுங்கிய‌ப‌டி வெளியேறுகிற‌து
அமைதியின் க‌டைசி சொல்

நீரால் சூழ்ந்த வீடு
உடைவது கண்டு
வீறிட்டு அழுகிறாய்
நீ

வெளிச்ச‌ம் க‌ண்டால்
ந‌டுங்குகிற‌து உன்னுடல்

இனி
உன் த‌லை பிடித்திழுக்கும்
கைக‌ளை கொண்டு
மெல்ல‌ வெளியேற‌லாம்
நீ

பிற‌ந்த‌ நாள் வாழ்த்துக்க‌ள்

If you enjoyed this post, make sure you subscribe to my RSS feed!

ஐரின் பாப்பா

Posted: ஜனவரி 14, 2011 by அடலேறு in irene
குறிச்சொற்கள்:, ,

தலையை
சாய்த்து சாய்த்து
கதை சொல்லுவாள்
ஐரின் பாப்பா
அவ‌ள் க‌தையில் வ‌ரும்
எல்லா வில‌ங்குக‌ளும்
பேசும் திற‌ன் கொண்ட‌வை
நரி புலியிடம் சொல்லியதாம்
புலியே புலியே என்னை
விட்டுவிடு
நான் பாவ‌ம்.
ஆமாம் நீ பாவம்
உன்னை நாளைக்கு
சாப்பிடுகிறேன் என
புலியும் போய்விட்டதாம்.
புலி எங்கே போனது
என்று ஒரு போதும் அவள்
சொல்வதில்லை
புலி மீண்டும்
எப்போதாவது வரலாம்
வராமலும் போகலாம்
அப்படியே வ‌ந்தாலும்
நாளை சாப்பிடுவ‌தாய்
சொன்ன‌ நரியை
மறந்தே போயிருக்கும் 

–0OO0–

லிவி என்ற பூனை
ஐரின் குட்டியின்
எல்லா க‌தைக‌ளிலும் வ‌ரும்
லிவி இல்லாம‌ல் அவ‌ளால்
க‌தைக‌ள் சொல்ல‌ முடியாது
என்னுடைய‌ எல்லா க‌தைக‌ளிலும்
லிவி பூனைக்குட்டி
க‌ண்டிப்பாக‌ இட‌ம் பெற‌ வேண்டும்
லிவி பூனைக்குட்டி அவ‌ளுக்கு
முறுக்கு வாங்கி த‌ரும்
வாக்கிங் கூட்டிச்செல்லும் என்றாள்
லிவி பூனைக்குட்டி
க‌த‌வின் பின்னாடி ஒளிந்திருப்ப‌தாக‌
சொல்லி க‌த‌வை திற‌க்க
“மியாவ்” என்ற‌ ச‌த்த‌த்துட‌ன்
வெளிவ‌ந்தார்
லிவி பூனைக்குட்டியாய்
மாறிப்போன‌ அவள்
தாத்தா

(இது சென்னை சங்கமத்தில் வாசிக்கப்பட்ட கவிதை)

–0OO0–

குருவி என்றால் திவிலி
பொம்மை என்றால் மித்தி
முத்தம் என்றால் இத்துக்கோ
என‌ அவ‌ளில் உல‌க‌ம்
புதுவ‌கை சொற்க‌ளால்
நிர‌ம்பிய‌து
நான் யார் என்று கேட்டால்
டிட்ட‌ப்பா
என்று  சொல்லி
கண்சிமிட்டி குழையும் போது
தூக்கி முத்தமிடுவ‌த‌ற்கான‌
கார‌ண‌த்தை நான்
சொல்வதேயில்லை

–0OO0–

பேசும் குர‌ங்கு பொம்மையை
எப்போதும் கையில்
வைத்திருப்பாள்
ஐரின் பாப்பா.
அசிரிய‌ர் அடிக்கும் போது
அம்மா திட்டும் போது
என‌ எல்லா இர‌வுக‌ளிலும்
குர‌ங்கு பொம்மை
பேசிக்கொண்டே
இருக்கிற‌து அவ‌ளுட‌ன்
யாருக்கும் தெரியாம‌ல்

If you enjoyed this post, make sure you subscribe to my RSS feed!

புதுக்கவிதையில் இருந்து நவீன கவிதை வாசிப்பிற்கு வந்த பிறகு கவிதையின் சாராம்சமே முற்றிலும் மாறிப்போய் ஒரு புது உலகம் இயங்கிகொண்டிருப்பது எப்படி மகிழ்ச்சியை தந்ததோ அதே மகிழ்ச்சியை நிலா ரசிகனின் “வெயில் தின்ற மழை ” நவீன‌ கவிதை தொகுப்பும் தந்தது.

நிலாவின் மயிலிறகாய் ஒரு காதல், பட்டாம் பூச்சியின் கனவுகள் புத்தகத்தை படித்துவிட்டு வெயில் தின்ற மழை படிப்பவருக்கு இதன் ஆசிரியர் தான் இந்த புத்தகத்‌தை எழுதிய‌வ‌ர் என்ப‌து ஆச்ச‌ர்ய‌மாக‌த்தான் இருக்கும். இந்த மனிதர் கவிதைகளுக்கு வார்த்தைகளை எங்கிருந்து பிடிக்கிறார் என்பது இன்னும் எனக்கு புதிராகவே உள்ளது.

நல்ல குளிர் அன்று இரவு ப‌தினொன்று ம‌ணியிருக்கும் அப்போது தான் நிலாவிட‌ம் க‌விதை தொகுப்பை வாங்கி வ‌ந்தேன். குளிருடன் சேர்ந்த‌ இர‌வு அறையில் அனைவ‌ரையும் உற‌ங்க‌ வைத்திருந்தது. கால்கள் தரையில் பட்டவுடன் சில்லிட்டது. வழக்கமாக புத்தகம் படிக்கும் ஜன்னலருகே  இருக்கையை இழுத்துப்போட்டு உட்கார்ந்து கொண்டேன். வெளியே இருள் என்னை பார்த்துக்கொண்டிருப்பதாய் இருந்தது.

வெயில் தின்ற மழை தொகுப்பை வாசிக்க தொடங்கினேன். முதல் பக்க அட்டை , பின் பக்க மனுஷ்யபுத்திரன் வார்த்தைகள் என அனைத்தும் கடந்து உள்சென்றதும் , நிலாவின் அறிமுகம். கவிதைக்கு வந்தேன் முதல் கவிதையே புதுக்கவிதை போல எளிதில் கடந்து போக முடியாது என முரண்டு பண்ணியது. இரண்டு முறை வாசித்தேன் ஒரு அர்த்தத்தை தந்தது. அடுத்த முறையும் வாசித்தேன் இன்னொரு அர்த்தத்தை தந்தது.புதுக்கவிதையில் நமக்கான அர்த்தங்களை கவிதையோடு நாம் தான் இணைத்துக்கொள்ளவேண்டும் என்பது அலாதியாக இருந்தது. இப்போது குளிர் ஜன்னல் வழி உள்ளேறி கைகளையும் சில்லிட வைத்திருந்தது. எனக்கு ஒரு கவிதையின் வரி பிடித்துவிட்டால் அதன் தாக்கமே இரண்டு நாள் இருக்கும். எப்போதும் அதன் வரிகளையே முணுமுணுத்துக்கொண்டிருப்பேன். அடிக்கொருமுறை அந்த பக்கத்தை திருப்பி திருப்பி பார்த்தும் சிரித்துகொண்டுமிருப்பதை வித்தியாசமாக இருக்கிறது என்று நண்பர்கள் சொல்லுவதுண்டு.கவிதையை இதைவிட வேறு எதாவது முறையில் கொண்டாட முடியாதா என யோசித்திருக்கிறேன். கைகள் சில்லிட மனதுக்கு நெருக்கமான கவிதைகளை படித்துக்கொண்டிருக்கிறேன் என்ற நினைப்பே சந்தோஷத்தை கொடுத்தது. நிலாவின் பல கவிதைகளை திரும்ப திரும்ப வாசிக்கும் போது அது தரும் பரிமாண மாற்றங்கள் புதுமையான‌ வேறொரு மனநிலையில் வைத்திருந்ததாக உணர்ந்தேன்.

வார்த்தைகளற்ற மென் இசையை எனக்கு மட்டும் கேட்கும் அளவு வைத்துக்கொள்ள வேண்டும் போல தோன்றியது. மென் இசையுடன் வாசிக்கப்படும் கவிதை அதன் நிர்வாணம் கடந்து ரசிக்கப்படுகிறது என எனக்கு நானே சொல்லிக்கொண்டேன். இசையை மெல்ல சுழலவிடேன்.இன்னும் அதிக தீரத்துடன் ஜன்னல் வழியே குளிர் அறைக்குள் இறங்கிக்கொண்டிருந்தது.சில கவிதை பக்கங்கள் பல நிமிடங்களுக்கு என்னை கட்டிப்போட்டது. மெல்ல ஒவ்வொரு கவிதைகளுக்குள் இருந்து வெளிவந்து அடுத்த கவிதைக்குள் மாட்டிகொண்டேன். வெளியெங்கும் இருட்டு, சில்லிட வைக்கும் குளிர், அறையெங்கும் மென் இசை, கையில் கவிதை என இரவு அத்தனை அழகாகியிருந்தது

என்னை க‌வ‌ர்ந்த‌ சில‌ க‌விதைக‌ள்

குழ‌ந்தையாத‌லின் சாத்திய‌ங்க‌ள் ஏதும‌ற்ற‌
இர‌வொன்றில் உன‌க்கொரு
உடைந்த‌ பொம்மையை ப‌ரிச‌ளித்து
சிரிக்கிற‌து கால‌ம்.
மென்காற்றில் சித‌றும் சார‌லில்
ந‌னைந்த‌ப‌டி த‌னித்த‌ழுகிறாய்
நீ.
(வெறுமையின் அழ‌கான‌ வ‌ர்ண‌னை இது )
****

வீழ்ந்து கிட‌த்த‌லை விட‌
ப‌றந்து சாத‌லே பெரிதென‌
உண‌ர்த்தின‌
ச‌வ‌ப்பெட்டிக்கு காத்திருக்கும்
துருப்பிடித்த‌ ஆணிக‌ள்

*******

உதிர்ந்த‌ முத்தங்க‌ளை பொறுக்கும்
ந‌ட்ச‌த்திரா த‌ன் க‌ன்ன‌த்தின் சுருக்க‌ங்க‌ளை
வ‌ருடிக்கொடுக்கிறாள்.
சித‌றிக்கிட‌க்கும் முத்த‌ங்க‌ளின் ந‌டுவே
கால‌ம் க‌ண்சிமிட்டிக்கொண்டிருப்ப‌தை
வ‌லியுட‌ன் நோக்குகிற‌து அவ‌ள‌து க‌ண்க‌ள்.
தீராப்ப‌சியுட‌ன் வான‌ம் பார்த்துக்
க‌த‌றுகின்ற‌ன‌ வீழ்ந்த‌ இலைக‌ள்.
மெல்ல வழுக்கிறது
நிறமற்ற மழை

******

இந்த கடைசி கவிதையை என்னால் அத்தனை சீக்கிரம் கடந்து போக முடியவில்லை. வலிகளை வார்த்தைபடுத்துவது கடினம் என்று சொல்லிவிட்டு அனாசயமாக நட்சத்திராவின் வலிகளை வார்த்தைபடுத்தியுள்ளார். கவிதையில் வரும் நட்சத்திரா பற்றியே நீண்ட நேரம் யோசித்துக்கொண்டிருந்தேன்.

வார்த்தைக‌ளையெல்லாம் பின்னிப்போட்டு கிற‌ங்க‌டிக்கும் க‌விதை த‌ருவ‌தில் நிலா எப்போதும் தனக்கான இடத்தை தெரிந்தே வைத்திருக்கிறார் என்று தோன்றியது.  இரவுகளுக்கு கைநீளுவதும், உலகின் மிகப்பெரிய தவறை துளியாக்குவதும் என மாயவித்தைகளை கண் முன்னே கடைபரப்பிக்கொண்டிருந்தது வெயில் தின்ற மழை. சில‌ க‌விதைகளில் ஆரம்பங்களிலேயே உச்ச‌த்தை தொடுகிறார்.

க‌டைசிவ‌ரிக‌ளில் வ‌சிய‌ம் த‌ட‌வியே க‌விதைவ‌டிக்கிறார் நிலா. கடைசி கவிதையை உணர்ந்து முடித்ததும் தான் தான் தெரிந்தது வெயில் தின்ற மழை என்னுடைய பாதி இரவை முழுதாக தின்று முடித்திருந்தது என்று. நாற்காலியை விட்டு எழுந்தேன். மணி நான்கு என கடிகாரம் காட்டிய‌து.

புத்த‌க‌த்தை மூடிவைத்துவிட்டு அத‌ன் நினைவிலேயே இருந்தேன். தேனீர் குடிக்க வேண்டும் போல இருந்தது. எங்காவ‌து வெளியில் செல்ல‌ வேண்டும் என்று தோன்றிய‌து. டிச‌ம்ப‌ரில் மாதங்களின் அதிகாலை அழ‌கான‌து அவ‌ற்றை ர‌சிக்க‌ வேண்டும் போல‌ இருந்த‌து. கவிதை புத்தகத்தை எடுத்துக்கொண்டு வெளியே சென்றேன். உட‌லை ந‌டுங்க‌வைக்கும் டிசம்பர் மாத குளிர் என்னை உள்ளிழுத்துக்கொண்ட‌து

சோடியம் ஒளி மெல்ல கசிந்து கொண்டிருந்தது. பின்னிரவில் சோடியம் விளக்கை சுற்றிய விட்டில்  பூச்சிகள் விள‌க்கின் அடியில் விழுந்திருந்தன‌.சாலையில் நான், குளிர்,க‌விதை என‌ மூன்று பேர் ம‌ட்டும் இருப்ப‌தாய் தோன்றிய‌து.

சோடிய‌ம் விள‌க்கில் இன்னும் சில‌ க‌விதைக‌ளை ப‌டித்தேன். முன்பு ப‌டித்த‌தை விட‌ இன்னும் அழ‌காக‌ தோன்றிய‌து.  சூழ்நிலைகளும் கவிதையின் அழகியலை தீர்மானிக்கின்றன என்று உணர்ந்தேன். நிலாவின் க‌விதைக‌ளில் வ‌ரும் ந‌ட்ச‌த்திராவும் என்னுடைய‌ க‌விதைக‌ளில் வ‌ரும் தூரிகாவும் ஒருவ‌ரே என்று நிலா சொன்னது நியாபகம் வந்தது. ந‌ட்ச‌த்திராவை பார்க்க‌ வேண்டும் போல‌ இருந்தது.

குளிரில் நடுங்கியபடியே சைக்கிள் தள்ளிக்கொண்டு வந்த ஒருவர் என்னை பார்த்து புன்னகைத்துவிட்டுப்போனார்.அறைக்கு வந்து மீண்டும் பிடித்த கவிதைளை படித்தேன் புத்த‌க‌த்தை நெஞ்சில் சாய்த்த‌ப‌டி எப்போது உற‌ங்கிப்போனேன் என நினைவில்லை. காலை எழுந்ததும் ஒரு வரி பிசகாமல் நிறைய‌ க‌விதைக‌ள் நியாப‌க‌த்திற்கு வ‌ந்தது.இதே போல் என்னுடைய‌ ஒன்றாம் வ‌குப்பு த‌மிழின் முத‌ல் பாட‌லும் , பக்கத்தின் வண்ணம் என மாறாமல் சில‌ ச‌ம‌ய‌ம் நியாப‌க‌த்திற்கு வ‌ரும், சில நேரங்களில் அந்த புத்தகத்தின் வாசம் கூட உணர்ந்திருக்கிறேன். சிரித்துக்கொண்டேன். ப‌டுக்கையில் இருந்து கொண்டே சில‌ கவிதைக‌ள் வாசித்தேன். அன்று மாலை வ‌ரை வெயில் தின்ற மழையுடன் பேசிக்கொண்டிருந்தததாக நியாபகம்.

ம‌ழையுட‌ன் க‌ழியும் இர‌வும்,ம‌ன‌திற்கு பிடித்த‌ க‌விதைகளுடன் தொடங்கும் காலையும் எப்போதுமே வ‌சீக‌ர‌மான‌வைகள்.

புத்த‌க‌த்தின் பெய‌ர்: வெயில் தின்ற‌ ம‌ழை ஆசிரிய‌ர் : நிலார‌சிக‌ன் ‌ ( உயிர்மை பதிப்பகம் ) விலை : 50 ரூபாய் ‌ இணையத்தில் பெற‌: http://tinyurl.com/2uqqkta

கடவுளை இன்று
“டைடல்பார்க்”கில் சந்தித்தேன்
கோட் சூட் சகிதமாக கையில்
பிளாக் பெரியுடன் லிப்டில்
இருந்து வெளிப்பட்டார்.
ஆச்சர்யம் அடைந்தவனாய்
உங்களிடம் பேச வேண்டும்
என்றதற்கு தற்போது
பிஸியாக இருப்பதாக
சொல்லி செல்போன் நம்பர்
வாங்கிக்கொண்டார்.
கழுத்தில் தொங்கிய நிறுவன
அடையாள அட்டையை காட்டி
பெருமை பட்டுக்கொண்டார்.
இங்கே எப்படி வேலைக்கு
சேர்ந்தீர்கள் என்றதற்கு
சிக்கலான கணக்கு கேள்விகள் 50ம்
புதிர் வினாக்கள் 20ம்
கடைசி அறையில் நடைபெற்ற
குழு விவாதத்தில் வெற்றி பெற்றும்
வேலைக்கு சேர்ந்ததாக கூறினார்
என‌க்கு வ‌ர‌ம் வேண்டும் என்ற‌த‌ற்கு
அதெல்லாம் ஓல்டு பேஷ‌ன் என‌வும்
வேண்டுமென்றால் எதாவ‌து
பிர‌ப‌ல‌ வ‌ங்கியில் கிரெடிட் கார்டு
வாங்க சிபாரிசு செய்வதாக‌வும் சொன்னார்
நீங்கள் கடவுளா !? என்று
சந்தேகமாய் இருக்கிறது
என்றதற்கு அருகே நடந்து
வந்த பெண்னை நோக்கி
விரலை நீட்டினார்.
அவள் அருள் வந்ததாய்
தலைவிரி கோலமாய் ஆடினாள்,
வாயில் இருந்து
பூக்களை வரவழைத்தார்
உள்ளங்கையில் இருந்து
தண்ணீரை வரவழைத்தார்
சுற்றி நின்ற கூட்டம்
ஆர்ப்பரித்தது.
கடவுளுக்கு வெட்கம் தாளவில்லை.
அடுத்த வருடம் நடக்கும்
கம்பெனியின் கல்சுரல்சில் தன்னுடைய
வித்தைகளை காட்டி
எல்லாரையும் அசத்தப்போவதாக
சொல்லிவிட்டு தோளில்
மாட்டியிருந்த லாப்டாப்
பேக்கை இறுக்கி பிடித்தபடி
பதினொன்றாம் மாடிக்கு பறந்து சென்றார்

If you enjoyed this post, make sure you subscribe to my RSS feed!