Posts Tagged ‘காதல்’

chemistry,love,metaphor,science,clever-605ff9050b2c3c7d60d6738eeeb19ea1_h

பெண்கள் காதலை அணுகுவது பற்றி ஆண்களின் முறைப்பாடு சமீபத்தில் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. தமிழ் திரை உலகில் பெண்களின் காதல் பற்றி காட்டமான விமர்சனங்கள் வர தொடங்கியிருக்கிறது. ஒரு போதும் புரிந்து கொள்ள முடியாதவர்களாக பெண்களை பற்றிய நுண் பிம்பம் மெல்ல விதைக்கபடுகிறது. உண்மையிலேயே இத்தனை தூரம் அலச படவேண்டியவர்களா பெண்கள். காதலை பற்றி இருபாலரும் கொண்டுள்ள பிம்பம் முன்னெப்போதும் இல்லாத அளவு மாறியுள்ளது.கடந்த பத்தாண்டுகளில் இல்லாத அளவு காதலிக்கப்படுவது சர்ச்சைக்குள்ளாயிருக்கிறது.

ஆண்களை நண்பர்களுடன் சேர்ந்து பார்க்கும் போது கூட்டமாக‌ தெரிந்தாலும் அவன் தனியன்.,பெண்கள் அப்படி அல்ல கூட்டமாக இருப்பதில் சற்று பாதுகாப்பை உணருகிறார்கள் இன்னும் நெருக்கம் காட்டுகிறார்கள். காதலின் ஆரம்ப நாட்களில் ஒரு ஆணும் பெண்ணும்  நெருங்கும் போது, அவர்களுடைய‌ நண்பர்கள் தரும் அழுத்தம் சற்றே சிக்கலான‌து, இவர்கள் நண்பர்களின் துணையை பற்றி மிக எளிதில் ஒரு பிம்பத்தை உருவாக்கக்கூடியவர்கள் . ஆண் நண்பர்கள் நண்பனின் காதலி பற்றிய‌ பாலியல் விவரிப்புகளை பெரும்பாலும் தவிர்க்கிறார்கள்., மறுபக்கம் பெண்ணுடைய‌ தோழிகள் ஆணின், நடை, உடை என அனைத்தையும் பந்தி வைக்கிறார்கள். இது ஒரு நாளில் நடந்து விடக்கூடயதல்ல. தொடர் நிகழ்வு. மெல்ல மெல்ல தின சந்திப்புகள், நண்பர் கூடல்கள்,தொலைபேசி உரையாடல்கள் என விரிவடைகிறது. காதலிக்க தொடங்குபவர்களின் மனம் இதிலிருந்து பெரும்பாலும் தனக்கான பிம்பத்தை எடுத்துக்கொள்கிறது. அல்லது ஏற்கனவே அவர்கள் வைத்திருக்கும் பிம்பத்தை திருத்திக்கொள்கிறது . பிறகு உள்ளுணர்வு ஒரிடத்தில் கண்டடைகிறது. ” அவ என்னோட ஆளு ” என்று பொதுவில் பகிர்ந்து கொள்ள தொடங்குகிறார்கள். அவனோ/அவளோ ஒத்திசையும் போது காதல் பூக்கிறது.

அதற்கு பிறகு ஆண்கள் குழம்பிப்போகிறார்கள் பெண்களை ஹேண்டில் செய்வது தெரியாமல். அவளின் அருகாமை பதட்டத்தை தருகிறது, பெண்ணை மிக அருகில் பார்க்கும் போது சமநிலை தவறுவதை உணர்கிறான்.காதலின் ஆரம்ப நாட்கள் அவை. வருடங்கள் கடந்த பின்பும் காதல் பரிமாற படுவதற்கு சற்று முன்னான‌ நாட்களையும், காதலின் ஆரம்ப நாட்களையும் தான் காதலர்கள் பசுமையாய் நினைவு கூறுகிறார்கள்.

பெண் தன்னுடை “Social Distance” யை  தாண்டி ” personal Distance”ல் அவனை அனுமதிக்கிறாள். தன்னுடைய தினசரி பிரச்சனைகள், சந்தோஷங்கள், கஷ்டங்கள் என அனைத்தையும் முறைப்பாடு வைக்கிறாள். பெண்களுக்கு மனதிலுள்ளவைகளை வார்த்தை வடிவமாக்கி வாய் வழி உதிர்த்துவிட்டால் இலகுவானதாய் உணர்வார்கள். அவர்கள் சொல்வதை கேட்பதற்கு உயிருள்ள ஒரு ஆணும் அவனுடைய இரண்டு காதுகளும் போதும். ஆண்களின் வாய்க்கு அங்கே தேவை இருப்பதில்லை. ஆனால் பெண்களின் முறைப்பாடுகளுக்கு ஆண்கள் வரிக்கு வரி தீர்வை முன்வைப்பவர்கள். ” இன்னைக்கு ரேஷ்மா கூட சண்டை” என்றால்., அவ அப்படின்னு முன்னடியே தெரியுமே நீ ஏன் போய் அதெல்லாம் செய்ற?? என்பது மாதிரி. எல்லா பிரச்சனைகளுக்கும் தீர்வு உள்ளது என்பது ஆணின் வாதம்., மனசுவிட்டு பேசுனாக்கூட சும்மா எதுனா சொல்லீட்டே இருக்கிறான் என்பது பெண்களின் தரப்பு.

தேவைப்படும் போதெல்லாம் காதலுக்காக அட்டவனைகளை மாற்றிக்கொள்வது ஆரம்பத்தில் இலகுவாக இருந்தாலும், மெல்ல இருவருக்குமான சமநிலையை அது பாதிக்கிறது. இன்னொருவரின் தினசரிக்குள் நுழைவதை சிரமமாக உணர்கிறார்கள். இப்படி பல காரணங்களால் காதலின் கணம் கூடுகிறது. மென் ஈர்ப்பு தொடர்ந்து பேசிக்கொண்டும், காதல் என்று இவர்கள் கட்டமைத்துக்கொணட பிம்பங்களை முன்நகர்த்தவும் முடிகிறது. ஏதோ ஒரு புள்ளியில் மணல் சரிந்து குமிழ் உடைகிறது,மெல்ல இருவருக்குமான தர்கங்கள் தனித்து நிற்க வைக்கிறது., சிறு கோரிக்கை நிராகரிப்பும் எரிச்சலடைய செய்கிறது.நீர் விலகுவதை போல முதல் சண்டையில் விலகுகிறார்கள்., பெரும்பாலும் ஆண்கள் இந்த பிரிவை வார்ததைகளால்  ஒட்டவைத்து விடுவார்கள், ஆனால்  சமாதானப்புறா பெண்கள் பக்கத்தில் இருந்து பறக்க விடவேண்டும் என எதிர்பார்ப்பார்கள். அடுத்தடுத்து சண்டை.,சேர்தல்., ஊடல் என காதல் நக‌ரத்தொடங்கியிருக்கும்.

பாலியல் பற்றி வெளிப்படையாக‌ பேசிக்கொள்ளவில்லை என்றாலும் கூட அந்த கணங்கள் வரும் போது அவசர அவசரமாக கடப்பார்கள். பிறகு கடந்து விட்ட கணத்தை அசைபோடுவார்கள். எதிர் பாலினத்தின் மீது தனக்காக நியாயங்களை உருவாக்கிக்கொள்ளக்கூடிய காலமிது. பேச்சிலும், அருகாமையிலும் பரிமாறிக்கொள்ளப்படாமல் இருந்தாலும்., காமம் அதன் அத்தனை கூர் முனைகளையும் தீட்டி வைத்திருக்கும். ஒரு சிறுதுகள் அப்பெரும் திரைசீலையை இரண்டாக கிழிக்கும்.

ஒருவர் மீது ஒருவருக்கு இருக்கும் உரிமைகளை கட்டளைகள் / விண்ணப்பங்கள் மூலம் உறுதி படுத்திக்கொள்கிறார்கள். பெரும்பாலும் பெண்ணை தனக்காக பொருளாக ஆண்கள் நினைப்பது இந்த காலகட்டத்தில் தான் ஆரம்பமாகிறது. ஆணாதிக்கத்தின் முதல் புள்ளியை  பெண்கள் விரும்பியே ஏற்கிறார்கள்.  யார் கூட பேசின? ஏன் இவ்ளோ நேரம் ? அன்னைக்கு ஒருத்தர் கூட பேசினயே அது யாரு ? என கேள்வியின் தொடக்க எண்களை  இருவரும் தொடங்குகிறார்கள்.ஆணின் கைகளுக்குள் சிறு பூனைகுட்டிபோல் வெதுவெதுப்பாய் உணருகிறேன் என்று கவிதையாய் கூட பெண்கள் சொல்லக்கூடும்

கேள்விகளுக்கு சரியான பதிலோ/விள‌க்கமோ கொடுத்தாலும் கூட ஏதோ ஒன்று குறைவதை ஒப்புக்கொள்கிறார்கள். இதில் ஆண்கள் கொஞ்சம் மேலே போவதை இயல்பாக காணலாம், ஏன் டிரஸ்ச இப்படி போடற ? அப்பா கிட்ட சொல்லு இனி மாமா கூட வெளிய அனுப்ப வேணான்னு.,அந்த பிரண்ட கட் பண்ணு? இந்த பிரண்ட வெச்சுக்கோ., இத்தன மணிக்கு சாப்டு.,  என ஏகத்துக்கும் ஏத்துவார்கள்.,  பிறகு மிக நாசூக்காய் அவளின் அத்தனை ஆண் நண்பர்களையும் வெறுக்க சொல்லித்தருவார்கள். possessiveness என்ற வெத்து போர்வைக்குள் அத்தனை குருரத்தையும் இருவரும் நிகழ்த்திப்பார்க்கிறார்கள்.

இதில் மனமுடைந்து , ஒத்து வராது என்று பிரிந்து போன காதல்கள் ஓரளவு பரவாயில்லை. கொஞ்சமான மன தாக்கத்துடன் அதிக வெறுப்பை சேர்த்துக்கொள்ளாமல் பிரிந்து விடுகிறார்கள். அதன் பிறகும் சண்டைகள், சமாதனங்கள் என தொடரும் காதலின் துயர நதி நீளமானது. மெல்ல தலைதூக்கும் தினசரி பிரச்சனைகள் ஒருபுறமிருக்க, இடைவெளியில் இந்த காதல் பொதுவெளியில் தெரிய அவர்கள் கொடுக்கும் புறவய அழுத்தங்கள்., நண்பர்கள்., குடும்பம், சமூகம் என அனைத்தும் சேர்ந்து ஒரு “template” அழுத்தத்தை கொடுக்க ஆரம்பித்திருப்பார்கள். நண்பர்கள் தனக்கான முக்கியத்துவம் / நேரம் ஒதுக்கவில்லை என்றும், பெற்றோர் தங்கள் பிள்ளைகளின் பரஸ்பர அன்பு பரிமாற்றத்தின் மாறுதல்களையும் பற்றியும் அங்கலாய்த்துக்கொள்வார்கள்.

il_fullxfull.206454089

தன் மகன் காதலிப்பது தெரியும் போது தந்தை பெரும்பாலும் ஒரு குறுகுறுப்புடன் அதை கடந்து செல்கிறார், அம்மா தன் மகனுடைய காதலியை ஆரம்பத்தில் தள்ளிவைத்தே பார்க்கிறார். தன்னை பொறுத்தவரை மகன் தனக்கு மட்டுமே கடமைபட்டவன் ,அவனை அத்தனை எளிதாக விட்டுவிட முடியாது. தன் மக‌னின் காதலியை பற்றிய  உடல் பிம்பத்தை அசைபோட்ட படியே இருப்பாள். தனக்கு தானே நிகழ்த்திப்பார்க்கும் ஒப்புமை. தன் மகன் கண்டையப்போகும் பெண்ணுடல் என்பது அவளை பதட்டமடைய செய்கிறது. அவளும் அவ மூக்கும்.., அவ உனக்கு வேண்டான்டா கிருஷ்ணா எனபது போல முன்தயாரிப்பு பதில்கள் இதனால் தான் வருகிறது.

இந்த காலத்தில் காதல் அதன் ஆரம்ப ஈர்ப்பும்/பரபரப்பும் தாண்டி சற்றே தணிந்திருக்கும்., எதேச்சையாக‌ சண்டைகளின் வார்த்தையால் பெண் திரும்ப தாக்க தொடங்கும் போது ஆண் மிகப்பெரும் மன அழுத்தத்திற்கு உள்ளாகிறான். வார்த்தை பொட்டலங்கள் சிதறடிக்கப்படுகின்றன. கண நேரத்தில் காதல் அதன் அத்தனை அழகியலையும் இழக்கிறது. இருவரும் தனக்கான நியாங்களின் மேல் தன்னை கட்டமைத்துக்கொள்கிறார்கள்.

அனல்காற்றில் ஜெயமோகன் இப்படி எழுதியிருப்பார் ” சுசி, உனக்கு வசைபாடவும் சாபமிடவும் பழக்கம் இல்லை. ஆண் மனதின் நுண்ணிய மென்பகுதியில் அறைவதற்கு நீ கற்றிருக்கவில்லை.  அது ஆணுடன் நெருக்கமாக பழகிப் பழகி பெண்கள் கற்றுக்கொள்வது “

அப்படித்தான்  தனக்கான ஆணுடன் நெருக்கமாக பழகிப் பழகி  அவனின் நுண்ணிய பென்பகுதியில் அறைய கற்றுக்கொள்கிறாள். ஒரு வார்த்தை போதும் அந்த நாளையே கசக்கிப்போடுவதற்கு. ஒரு வார்த்தை போதும் அவனை சுக்குநூறாய் உடைப்பதற்கு., தன்னால் அந்த பெண்ணை ஹேண்டில் செய்ய முடியாது என ஆண் உணரும் தருணம் தன்னுடைய உச்சகட்ட வெறுப்பை வார்த்தைகளாக மாற்றி காட்டுகிறான்.இது அவனுக்கு எளிதானதும் கூட. அதுதான் சமீபத்தில் வந்த அடிடா அவளை., உத‌டா அவளை., வெட்றா அவளை போன்ற வரிகள் கொண்ட பாடலை ஒரு தலைமுறை இளைஞர்கள் அனைவரையும் கொண்டாட தூண்டியது.பெண்ணுடல் மீதான் தீராத வெருப்பை கொண்டாடி தீர்த்தார்கள். வரிகளுப்பின்னான உளவியல் கொண்டாடத்தின் தொடக்கப்புள்ளியை கொடுத்தது. திரும்ப திரும்ப பெண்களை நம்பிக்கை அற்றவர்களாக ., ஏமாற்றும் பேர்வழிகளாக.,உறவின் முறிவிற்கு முதற்காரணமாக முன்வைக்கப்படும் வரிகளை இளைஞர்கள் இத்தனை உற்சாகமாக தனக்குள் தேக்கி வைப்பதை இதற்கு முன் கண்டதில்லை. காதலின் அழகியலையும் தாண்டி, காதலின் தோல்வியும் மதுவும் காதலின் கொண்டாட்ட பொருட்களாகின்றன.

ஆண்களின் வெளி உலகை பெண்களும், பெண்களின் அக உலகையும் ஆண்களும் புரிந்து கொள்வது சற்று சிரமமான காரியம் தான். ஆனால் இவர்கள் கட்டமைப்பது போன்று முடியாத காரியம‌ல்ல .காதலில் ஆண்கள் மீது வைக்கப்படும் மிகப்பெரும் குற்றச்சாட்டு “ஆண் தன் அக உலகை பகிர்ந்து கொள்ளவில்லை என்றுதான் “மற்றபடி அவன் முரடனோ, மணிக்கொருமுறை முத்தம் கேட்கிறானோ என்பதல்ல. மனித உறவுகளை புரிந்து கொள்வது உங்களை நீங்கள் புரிந்து கொள்வதை போன்று. அது எதை தருகிறதோ இல்லையோ நம் சுய‌ பிம்பங்களை கலைத்துப்போட்டு நேர்படுத்திக்கொள்ள‌ உதவும்.

பெண்களை அவர்களாகவே விடவேண்டும் என்று நினைக்கிறேன்.பெண்களே இதை விரும்புவார்களோ என்னமோ தெரியாது பெரும்பாலும் பெண்கள் ஆண்களின் அருகாமையில் தன்னை பாதுகாப்பாக உணர்கிறார்கள் என்பதை தாண்டி ஒரு மண்ணாங்கட்டியும் கிடையாது. ஆனாலும் அவர்கள் தனித்தே இயங்க‌ வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். சமீபகாலத்தில் பெண்னை தனக்கு சமமாகவோ, இல்லை தன்னை சற்றெ முன்நகர்த்தும் ஆளுமை கொண்டவர்களாகவோ இருப்பது ஆணின் விருப்பத்தேர்வாக இருக்கிறது. என்னோட ஆளுக்கு கார் ஓட்ட தெரியும், என்னோட ஆளுக்கு ஷேர் மார்கட்  தெரியும் என்று சொல்வது ஆண்கள் மத்தியில் ஒரு ஈர்ப்பாக கருதப்படுகிறது. குறைந்த பட்சம் வீதி முனைல நிக்கற நீங்க வந்து கூட்டீட்டு போங்க என்று சொல்லாமல், தனியாக வழி கண்டுபிடித்து வர வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள்.

ஒவ்வொருமுறை நண்பர்களுடன் காதலை பற்றி விவாதிக்கும் போது திரும்ப திரும்ப எதிர்கொள்ளும் ஒரு கேள்வி ” அப்ப அவ உன்ன விட்டுட்டு இன்னொருதற லவ் பண்னா ஒத்துப்பயா ” என்று. வார்த்தைகளை மென்மைபடுத்தியே பதிலளிக்கிறேன் எனக்கு ஆட்சேபனை இல்லை என. நண்பர்கள் என்னை விநோதமாக‌ பார்க்கிறார்கள். அப்படினா நீ அவள உண்மையா லவ் பண்லனு அர்த்தம் என்கிறார்கள்.உண்மையில்  உண்மையான காதலுக்கு என்று எந்த வரைமுறையும் இவர்களால் சொல்லப்படுவதில்லை.

காதலிக்கிறேன் என்று சொன்ன வார்தைக்காக தனக்கு பிடித்த நண்பருடன் உணவை பகிர்ந்து கொள்வதோ உணர்வை பகிர்ந்து கொள்வதோ தவறு என்று முன்முடிவிடுவது ஒழங்கின்மையின் வெறியாட்டம். ஒரு பெண் காதலன் தவிர்த்து ஆண் நண்பருடன் பேசுவது அப்படி ஒன்றும் நம்பிக்கையை சிதறிப்போகக்கூடிய செயல் அல்ல. அவனுக்கோ/ அவளுக்கோ தன்னைவிட இன்னொருவர் சிறந்தவராக தெரியும் போது காதலில் இருந்து முழுமையாக‌ விடுவித்து  திரும்பிபோக முழு சுதந்திரம் கொடுக்கப்பட‌ வேண்டும். இறுக்கி பிடித்துக்கொண்டு காதலிக்கலாம் காதலிக்கலாம் என்பதை விட., இலகுவாய் உனக்கு நானும் எனக்கு நீயும் பாரமல்ல என்று புரிந்து கொள்ளும் காதல் வசீகரமானது., அன்பை தவிர வேறு அழுத்தங்கள் இல்லாத காதல் அதன் அத்தனை வேதியல் கூறுகளுடன்  காதலின் உட்சபட்ச அழகியலை அடைகிறது.  அது நீங்கள் வரையறை செய்யும் எல்லா பைத்தியக்காரதனங்களையும் உள்ளடக்கியது. அவனோ/அவளோ கொண்டாடத்தின் திடப்பொருளாகின்றார்கள்.

பொருளாதாரம் சார்ந்தோ வேறு புறவய காரணிகளை ஆதாரமாய் கொண்டு கட்டமைக்கப்படும் காதல் அதன் ஆரம்பத்திலேயே நம்பிக்கை பின்னல்களை இழக்கிறது. நம்பிக்கை என்ற ஒற்றை வார்ததையின் மீது நிலைநிறுத்தப்படுவது தான் காதல் என்றே அர்த்தப்படுத்திக்கொள்ளலாம். புறவய காரணிகளை  ஆதாரமாக வைத்து  கட்டமைக்கபடும் காதல் பெரும்பாலும் அந்த கண நேரம் கடந்தவுடன் வெற்று விருப்பக்கற்பனை என்று தெரிந்துவிடும், இதில் அபூர்வமாக சில காதல்கள் காதலுக்கே உரிய “Madness” தொற்றிக்கொள்கிறது.அந்த “Madness ” காதலை அதன் வழியில் இயக்கிக்கொள்ளும்.

ilchemistry275

இப்படி இடியாப்ப சிக்கல்களையும் பிரச்சனைகளை தாண்டித்தான் உலகம் முழுக்க காதலர்கள் இணைகிறார்கள் என்பதே அதன் ரசனையியல் பிரமிப்பு. புரிந்துகொள்ளப்பட்ட காதலை காணும் போது புத்துணர்ச்சி ஆகிவிடுகிறேன் . அவர்கள் அந்த நாளையே ரசனைக்குரியதாக மாற்றிவிடுகிறார்கள். புரிந்துகொள்ளப்பட்ட காதலர்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்.  திரும்ப திரும்ப நினைத்துப்பார்க்கப்பட வேண்டியவர்கள் அவர்களே. மனிதனின் ஆதாரத்தை கண்டு கொண்டவர்களும் அவர்களே.

தொலைக்காட்சியில் ஆடுபவர்களிடம் கெமிஸ்டிரி கெமிஸ்டிரி என இவர்கள் அங்கலாய்பதன் அபத்தம் அப்போது புரியும். புரிதலும் அன்பும் காதலும் வாழ்க்கையை அழகாக்குகின்றன. புரிந்துகொள்ளப்பட்ட ஒரு துணையை கண்டடைவதைதான்  யோகம் என்கிறோம். உங்கள் இருவருக்குமான காதல் அப்படி ஒரு வேதியல் மாற்றத்தை உருவாக்கினால் இப்பூமியில் நீங்கள் நிகழ காத்திருக்கும் ஒரு அற்புதம்.

Advertisements

கேள்விகளால் ஆன விளையாட்டை
தொடங்கினாள் தூரிகா
விளையாட்டின் விதிகள்
ஒருபோதும் சொல்லப்படவில்லை
ஒவ்வொரு சொல்லாக‌
உதிர்க்க தொடங்கினாள்
தீயிலிருந்து வெம்மை பிரிப்பது
மெளனத்திலிருந்து இசை பிரிப்பது
பற்றிய குறிப்புகள் அவை
நினைவுக‌ளில் இருந்து
அவ‌ளை பிரித்து
காட்ட‌‌ சொன்ன‌ கேள்வியில்
தோற்றுப்போனேன்.
கீறல்களால் த‌ண்ட‌னை
நிறையேற‌ தொட‌ங்கிய‌
காலையில் விழித்தெழுந்தேன்
அவ‌ள் இப்போது
உடலிலிருந்து என்னை
பிரித்துக்கொண்டிருக்கிறாள்

கல்லூரி கள்வன்

Posted: ஏப்ரல் 16, 2011 by அடலேறு in கவிதை, காதல்
குறிச்சொற்கள்:, , ,

கல்லூரியில்
முதல் நாள் வகுப்பில்
கிரங்கடிக்கும்
பார்வையுடன்
என்னையே
பார்த்துக்கொண்டிருந்தாயே
அதற்கு என்ன அர்த்தம் ?

–oO0–

மென் இதய‌ம் கிழித்து
குருதி புசித்து
உள்ள‌ம் தொடும்
உன் பார்வை

–oO0–

எப்ப‌டி த‌ய‌க்க‌மில்லாம‌ல்
கைகுலுக்கி
பெய‌ர் கேட்டாய்
போடா! நான் தூங்கவேயில்லை

–oO0–

கரும்பலகை எழுத்துக்களை
அழிக்கும் ஒவ்வொரு முறையும்
அழித்துக்கொண்டுருந்தாய்
என் தயக்கத்தை

–oO0–

எளிதாய் ம‌ய‌க்கி வைத்தாய்
இய‌ல்பாய் ர‌சிக்க‌ வைத்தாய்
என்னையே மெதுவாய்
இழ‌க்க‌ வைத்தாய்

–oO0–

உன்னுட‌ன் பேசுகையில்
எதேச்சையாக‌ காத‌லை
சொல்லிவிடுவேன் என்று தான்
பேசுவ‌தேயில்லை

–oO0–

ஒரு ப‌க்க‌ம் த‌லை சாய்த்து
குட் மார்னிங் சொல்லும் போது
ஹைய்யோ!!
க‌ட்டிப்பிடித்து கொள்ள‌லாம்
போல‌ தோன்றும்

–oO0–

ச‌த்திய‌மிட்டு சொல்கிறேன்
உன்னை நினைக்கும்
போதெல்லாம்
க‌ருக்கென்று நெஞ்சுக்குழிக்குள்
ஏதோ ஒன்று இழுக்கிற‌து

–oO0–

உன்பெய‌ரை
யார் அழைத்தாலும்
திரும்பிப்பார்ப்ப‌தை
த‌விர்க்க‌முடிய‌வில்லை
ஏன்?

–oO0–

புத‌ன்கிழ‌மை லேப்புக்கு
அணிந்து வ‌ரும் முழுநீள‌
வெள்ளை ச‌ட்டையில்
கொள்ளை அழ‌குடா நீ

–oO0–

தின‌மும் ஏழு ம‌ணி
லேண்ட் லைக்கு
மிஸ்டு கால் கொடுப்ப‌து
நான் தான்

–oO0–

முத‌ன் முறையாக‌
நீ க‌ல்லூரி வ‌ராத‌
அன்று தான்
தெரிந்து கொண்டேன்
வ‌குப்ப‌றை எத்த‌னை
அந்நிய‌ம் என்று

–oO0–

காய்ச்ச‌ல் என்ப‌து
இத்த‌னை கொடிய‌து என்று
உன‌க்கு வ‌ந்த‌ பின் தான்
உண‌ர்ந்தேன்

–oO0–

நேரில் சொன்னால்
அழுது விடுவேன்
என்று தான்
போனில் சொன்னேன் காத‌லை

–oO0–

நிராக‌ரிப்பை
நாசூக்காய் உண‌ர்த்திய‌தால்
நீ மெதுன‌ன்

–oO0–

உன் என்றைக்குமான
தோழி நான்
என் என்றைக்குமான‌
காத‌ல‌ன் நீ

–oO0–

நிராக‌ரிப்பின் உச்ச‌ம்
உன்
மெள‌ன‌ம்

–oO0–

இப்போதெல்லாம்
என்னையே
பார்த்துக்கொண்டிருக்கிறாய்
ஏன்?

–oO0–

ஹார்மோன் பீய்ச்சிய‌டித்து
முதுகுத்த‌ண்டில்
மின‌சார‌ம் பாய்ந்து
த‌ண்டுவ‌ட‌ம் வ‌ழியே
மூளையை தாக்கிய‌து
நீ காத‌லை சொன்ன‌ போது

–oO0–

நெற்றி முத்த‌மிட்டு
என்னை ஏற்றுகொண்ட‌
அன்று தான்
ஜன‌ன‌மானேன்

–oO0–

உன் சகர்தர்மிணி நான்
என் சகலமும்
நீ

–oO0–

முத‌ன் செம‌ஸ்ட‌ரிலேயே
எப்ப‌டி காத‌லை
சொன்னாய் என்றாய்
முத‌ல் நாளே
சொல்லியிருப்பேன்
நீ சிறுவ‌ன்

–oO0–

தேர்வு அறையில்
ப‌க்க‌த்தில் உட்காராதே
ம‌ற‌ந்து தொலைக்கிற‌து
அனைத்தும்
–oO0–
நீ ப‌தித்த‌‌ முத‌ல் முத்த‌ம்
தான் கிள‌றிவிட்ட‌து
என் பெண்மையை
–oO0–
கையை பிடித்துக்கொண்டு
அனாய‌ச‌மாக‌ பேசுகிறாய் நீ
கிட‌ந்து த‌விக்கிறேன் நான்
–oO0–

உன்னைக்காட்டாத‌
ச‌னி, ஞாயிறுக‌ளை
அற‌வே
வெறுக்கிறேன்

–oO0–

இடைஇழுத்து
முத்த‌மிடும் போது
எல்லை தாண்ட‌
சொல்லும்
உன் மூச்சுக்காற்று

–oO0–

வில‌க்கான‌ நாட்க‌ளில்
ம‌டிகிட‌த்தி
த‌லை கோகி
க‌ர‌ம் ப‌ற்றி
கால் விர‌ல்
சொடுக்கெடுக்கும் நீ
என் தாயுமான‌வ‌ன்

–oO0–

கன்னத்தின்
நேரெதிர் த‌ட‌வ‌
நேற்று ம‌ழித்த‌ தாடி
உலை வைக்கும்
என் பெண்மைக்கு

–oO0–

உள் நுழைந்து
உயிர் புசித்து
சந்தோஷப்படுத்தியே
சாகடிப்பாய்
என்று தெரிந்திருந்தால்
உன்னை
காதலித்திருக்கவே மாட்டேன்

–oO0–

கோடு போட்ட‌
ஆர‌ஞ்சு ச‌ட்டை
காட்டும் உன்னை
திமிராக‌
–oO0–
நீயும் நானும்
ப‌கிர்ந்துண்ண‌ தொட‌ங்கிய‌பின்
ச‌மைக்க‌ விடுவ‌தில்லை
அம்மாவை
–oO0–
எப்ப‌டி
க‌ண்டுபிடித்தாய்
நானும் நானும்
ஒன்றில்லையென
உன்னுட‌ன் இருக்கும்
த‌ருண‌ங்க‌ளில்
–oO0–

வாக‌ன‌ ச‌த்த‌மும்
உன் மென் வாச‌மும்
அறிந்து வைத்திருக்கிறேன்

–oO0–

நீ ஈர‌க்கை துடைத்த‌
துப்பட்டா
த‌லைய‌னையென‌க்கு
இர‌வில்

–oO0–

யாரும‌ற்ற‌ வ‌குப்பில்
த‌னியாய் உன்னிட‌ம்
மாட்டிக்கொள்வ‌து
அவ‌ஸ்தை பேர‌வ‌ஸ்தை

–oO0–

வகுப்பறையில் நான்
இல்லாததை தேடும்
உன் கண்கள்
எனக்கு பிடித்த உறுப்பு

–oO0–

உன்னிட‌ம்
பொய்யாய் கூட‌
கோபப்ப‌ட‌ முடிய‌வில்லை
அப்ப‌டி கெடுத்து வைத்திருக்கிறாய்

–oO0–

இய‌ல்பாக‌ பேசி விடுகிறாய்
எதோ ஒன்றை.,
நினைத்து நினைத்து
நீர்த்துப் போகிற‌து இர‌வு

–oO0–

அதிகாலையில்
அருகில் நீ இருப்ப‌தாய்
நினைத்துக்கொள்ளும்
க‌ற்ப‌னைக‌ளின்
வ‌சீக‌ர‌ம்
வ‌ன் ஸ்ப‌ரிச‌ம்

–oO0–

எப்போதும் என்னையே
நினைத்துக்கொண்டிருப்பாயா
என்று கேட்கிறாய்
எப்போதும்
சுவாசித்துகொண்டே
இருப்பாயா என்று
கேட்ப‌து போல‌
இருக்கிற‌து
செல்ல‌ ம‌டைய‌னே

–oO0–

ஆணாதிக்க‌ம் பிடிக்க‌த்தான்
செய்கிற‌து
அதிகார‌த்தொனியில்
முத்த‌ம் வேண்டும் என்ப‌து

–oO0–

ம‌ற்ற‌ பெண்க‌ளுட‌ன்
பேசும்போதெல்லாம்
நான் கோப‌ப்ப‌டுவ‌தே இல்லை
நான் ர‌சித்த‌ உன் பேச்சை
அவ‌ர்க‌ளும் கேட்க‌ட்டும்.
பேச்சை ம‌ட்டும்

–oO0–

த‌ட்ட‌ச்சு ப‌ல‌கையில்
ஊர்ந்து செல்லும் உன்
விர‌ல்க‌ளை பார்க்க‌
ஆசையாயிருக்கும்
நினைத்துப்பார்கவே
வெட்க‌மாய் இருக்கிற‌து
ச்சீ போடா

–oO0–

க‌ல்லூரியின்
இர‌ண்டாம் வ‌ருட‌
முடிவு நம்மை
ஒன்றாகிப் போன‌து

–oO0–

வ‌ளாக‌த்தேர்வுக்கான‌
பேருந்து ப‌ய‌ண‌த்திலுன்
கரம் பிடித்து
தோள் சாய்த்து
நானுற‌ங்கும் போது
புகுத்திக் கொண்டேன்
உன் க‌த‌க‌த‌ப்பை

–oO0–

நீ அடிக்கடி மீசை
ம‌ழிப்ப‌த‌ற்கான‌
கார‌ண‌த்தை
காதில் சொன்ன‌து
இர‌ண்டு நாள் தூக்க‌ம் கெடுத்த‌து

–oO0–

வ‌குப்ப‌றை மேசையில்
க‌ருப்புமை கொண்டு
என்பேரெழுதும் நீ
காதல்‌ அர‌க்க‌ன்

–oO0–

உன‌க்கான‌ அசைமென்ட்
எழுதும் பேப்ப‌ர்க‌ளில்
மூன்றாவ‌து வ‌ரியில்
உல‌ர்ந்து போன‌
என் முத்த‌ங்க‌ள்
இருக்கும்

–oO0–

க‌டைசி செம‌ஸ்ட‌ர்
நாட்க‌ளை
என் ஆயுசுக்கும்
நீட்டிக்க‌ச்சொல்

–oO0–

ச‌ட்டென கோப‌ம்
பட்டுத்தெரிக்கும்
என‌க்கு.,நீயில்லாம‌ல்
இத்த‌னை நீண்ட‌ அன்பு
சாத்திய‌மில்லை

–oO0–

கல்லூரியில்
க‌டைசி நாள் வகுப்பு
முடிந்து வெளியேரும் போது
க‌ல‌ங்கிய‌ க‌ண்க‌ளோடு
என்னையே
பார்த்துக்கொண்டிருந்தாயே
அதற்கு என்ன அர்த்தம் ?

–oO0–

If you enjoyed this post, make sure you subscribe to my RSS feed!

காதல் பொங்கல்

Posted: ஜனவரி 10, 2011 by அடலேறு in அடலேறு, கவிதை, காதல்
குறிச்சொற்கள்:, ,

பொங்கலுக்கு ஊருக்கு
வரும் போது
கூடவே பயணிக்கிறது
உன் பட்டு தாவணியும்
ஊடுருவும் பார்வையும்
சுற்றம் பார்த்து நீ
தரும் திருட்டு முத்தமென‌

-0O0-

உன்னுடைய‌
நீலமும் வெள்ளையும் கலந்த
தாவ‌ணியில் உள்ள
ஜரிகை பானை
அது தான் உச‌த்தி என‌
பெருமை பேசி திரிகிற‌து
பொங்கல் பானைக‌ளிட‌ம்

-0O0-

சந்தையில் நீ ஒரே
ஒரு பானையை
எடுத்துக்கொண்டு
மற்றவைகளை
நிராகரித்தது
அவமானத்தின் உச்சமாம்.
குறைப‌ட்டுக்கொள்கிற‌து
அழகான பானைகள்

-0O0-

டேய் அதென்ன‌மோ
முத்தப் பொங்க‌லாம்
அப்ப‌டின்னா என்ன ?
என்று உத‌ட்டை
ஈர‌ப்ப‌டுத்திய‌ப‌டியே கேட்கிறாய்
போடி!! வெட்கம் பிடுங்கிதின்கிறது

-0O0-

என்னால‌ க‌டிக்க‌ முடில‌டா
நீயே க‌டிச்சு கொடு என
நீ கொடுத்த க‌ரும்பு
என்னிட‌ம் வ‌ந்த‌தும்
சொல்லிய‌து
ஆனாலும் இத்த‌னை
சுவை இருக்க‌க்கூடாது
உன் காதலியின்
எச்சிலுக்கு என்று

-0O0-

சென்ற‌ பொங்க‌லுக்கு
மாடுக‌ள் இல்லாத்தால்
ஒரு பூனையை நீ
குளிப்பாட்டிய‌தை
நினைத்து இன்ன‌மும்
சிரித்துக்கொள்கிறேன்

-0O0-

புத்தாண்டு பிற‌ந்த‌தும்
அய் புத்தாண்டு பிற‌ந்த‌து
புத்தாண்டு பிற‌‌ந்த‌து
என்று துள்ளி குதித்தாய் நீ
அப்போது தான் தோன்றியது
நீ பிற‌ந்த‌நாள‌ன்று
அய் தேவ‌தை பிற‌ந்துவிட்டாள்
தேவ‌தை பிற‌ந்துவிட்டாள்
என்று துள்ளிக்குதித்திருக்கும்
அந்த‌ நாளும்

-0O0-

சென்ற‌ பொங்க‌லுக்கு
வாழ்த்து சொல்லி பின்
முத்த‌மிட்டாயே
அப்போதே
நினைக்க‌ துவ‌ங்கிவிட்டேன்
இந்த பொங்கலை

-0O0-

த‌மிழ் புத்தாண்டை
எப்ப‌டி வ‌ர‌வேற்ப‌து
என்றேன்
முத்த‌ம் கொடுத்துத்தான் என்றாய்
புத்தாண்டுக்கா என்ற‌த‌ற்கு
இல்லை என‌க்கு தான் என‌
மூன்று முத்தம் வாங்கிச்சென்ற‌வ‌ள் நீ

-0O0-

அதென்ன‌டி க‌ண‌க்கு
ஒரு க‌ரும்பில்
எத்த‌ணை க‌ணுக்க‌ள்
இருக்கிற‌தோ
அத்த‌னை முத்த‌ம்
தர‌வேண்டும் என்ப‌து

-0O0-

தூக்கிச்சொருகிய‌
அந்த‌ முந்தானையை
கொஞ்ச‌ம் எடுத்துவிடு
மூச்சுவிட்டுக்கொள்கிறேன்
சிறிது நேர‌ம்

-0O0-

சென்ற‌ பொங்க‌ல்
முடிந்து ஊருக்கு திரும்பும்
போது அடுத்து
பார்க்கும் வ‌ரை இதுதான்
என‌ சொல்லி த‌ந்த‌ முத்த‌ம்
நாளை உன்னை பார்க்க‌ போகிற‌து

-0O0-

மெல்ல‌ க‌ண்மூடி ஏற்றுக்கொள்
என்று சொல்லி
நீ கொடுக்கும்
முத்த‌த்திற்காக‌ தான்
கொண்டாப்ப‌டுகிற‌து பொங்கல்

-0O0-

நீ சாப்பிட்டு
பாதி த‌ரும் பொங்க‌ல்
தான்
ச‌க்க‌ரைப்பொங்க‌ல்

( உலகத்தமிழர் அனைவருக்கும் தமிழர் திருநாள் வாழ்த்துக்கள் )

If you enjoyed this post, make sure you subscribe to my RSS feed!

அழகான கொலு பொம்மைகளை
பார்த்து கை தட்டி
குதுகலிக்கிறாய் நீ
உன்னை ஏன் கொலுவில்
வைக்கவில்லை என்று
குழம்பிப்போகின்றன பொம்மைகள்
–0@0–

நவராத்திரி கொலுவில்
தேவதை பொம்மைகள்
வைக்கிறார்களாம்.
பிறகு உன்னை எப்படி
விட்டு வைத்தாள்
ஜான‌கி ஆண்டி

–0@0–

ந‌வாராத்திரி என்றாலே
திருவிழாவும்,சுண்டலும்.
சுண்டல் என்றாலே
கொலுவும்,பொம்மைக‌ளும்.
மொம்மைக‌ள் என்றாலே
நீயும், உன் ப‌ட்டாம்பூச்சி
சுடிதாரும் தான் வ‌ந்து
நிற்கிற‌தென் ம‌ன‌தில்

–0@0–

தேவ‌தைக‌ள் எல்லாம் வைத்த‌
கொலுவில் அழ‌கான பொம்மையை
அப்ச‌ர‌ஸ் தேவ‌தை தொட்ட‌தால்
உயிர் பெற்று வ‌ந்த‌வ‌ள், ‘நீ’
என்று தான் இன்ன‌மும் ந‌ம்புகிறேன்

–0@0–

அந்த‌ மூன்றாவ‌து வ‌ரிசை
மொம்மையை எடுத்து
பொட்டு வைத்த பின் முத்த‌மிட்டாயே
அப்போது தான் தோன்றிய‌து
பேசாம‌ல் பொம்மையாய்
பிற‌ந்திருக்க‌லாம் என்று

–0@0–

ஒவ்வொரு பொம்மையாய் எடுத்து
இது முல்லா பொம்மை
இது காயத்ரி மொம்மை
இது உழ‌வ‌ன் பொம்மை
என்று சொல்லிக்கொண்டிருந்தாய்
பொம்மைக‌ள் எல்லாம்
உன்னைபார்த்து
முணுமுணுத்துக்கொண்ட‌து
இவ‌ள் தேவ‌தை மொம்மை என்று

–0@0–

If you enjoyed this post, make sure you subscribe to my RSS feed!

              

வார்த்தைகளற்ற நடுநிசியில் பொத்துக்கொண்டு வரும் அழுகை தொண்டை குழி வரை நிரம்பி வழியும் இந்த பொழுதில் உன்னை நினைக்காமல் எப்படி இருக்க முடியும் , எனக்கான எல்லாவற்றையும் எடுத்துக்கொண்டு உயிரை மட்டும் விட்டு போன என் உயிரானவள் நீ , எப்படி சமதானப்படுதியும் தனிமை கண்டுபிடித்து இன்னும் கொஞ்சம் அழுக வேண்டும் போல உள்ளது .

நரம்பின்  குருதி வற்றி நான் என்ற அகங்காரம் திறந்து போன இரவில் உன்னிடம் என்றுமே சேராத இந்த கடிதங்கள் எழுதுவதில் தான் எப்படியும் அமைதலாகிறது இந்த நீண்ட இரவு.

அனைவரும் இருக்கும் போது ஏற்படும் இரைச்சலை விட நீ இல்லாத மொழுதுகளின் தனிமை என்னை பயமுறுத்துவதாய் இருக்கிறது. எப்போது என்னை விழுங்கலாம் என்றபடி மெளனம் என்னை வெறிக்கிறது. கொடுமையான இந்த தனிமையை போக்கி என்னை ஆம்பல் மலருக்குள் ஒளித்துக்கொண்டால் எவ்வளவு இனிமையாய் இருக்கும். நிராகரித்தலின் வழி பின் கெண்டை சதை வழி ஏறி தண்டுவடம் விரிந்து மூளையை தாக்குகிறது.

இதே நிராகரிப்பின் வலியை உணரும் போது நீ நாற்பது வயதை கடந்திருக்கலாம் மிருதுளா. வாழ்வின் பிற்பாதியில் கணவன், குழந்தைகள் என அனைவரையும் அலுவலகத்திற்கு அனுப்பிவிட்ட பகல் பொழுதிலோ மெளனம் கசிந்து போன மாலையிலோ என்றேனும் என்னை நினைத்துக்கொள்ளும் போது நான் எழுதின இந்த வரிகள் உன் கண் முன் நிழ‌லாடும் அப்போது எனக்காக ஒரு வறண்ட‌ புன்னகை உதிர்ப்பாயே அது தான் இந்த கடிதத்தின் நிறைவாக நான் என்னுகிறேன்.போய் வா மிருதுளா, உலகம் மிக சிறியது என்றேனும் ஒரு நாள் பேருந்திலோ, விமானத்திலோ, இரயிலிலோ சந்திக்கும் போது ஒரு புன்னகையை தவழ விட்டுச்செல்., அப்படியாவது ஓட்டை விழுந்த என் அன்பின் பாத்திரத்தை உன் புன்னகைகளால் இட்டு நிரப்பிக்கொள்கிறேன்.

உன்னை உன் தவறுகளோடு கூட ஏற்றுக்கொள்ளவில்லை என்றால் பிறகு நான் என்ன உன்னில் பாதி என்றாய்,ஒவ்வொரு முறை தவறு செய்யும் போதும் ஒரு அன்னை போல தலை கோதி அனைத்துக்கொண்ட நீ, கடைசி தவறுக்கு மட்டும் என்னை அமிலத்தில் தள்ளிவிட்டு கைதட்டி சிரித்ததென்ன.என்றேனும் மீண்டும் என்னை அழைப்பாய் என்ற நினைப்பில் தான் உடலோடு இந்த உயிரையும் சேர்த்து சுமைந்தலைகிறேன்

யாருக்காகவும் என்னுடைய முடிவுகளை மறுபரிசீலனை செய்யமாட்டேன் என்றாயே, வாழ்வின் பல முடிவுகளை கட்டாயத்தின் பேரில் மாற்றிக்கொள்ளும் போது உன்னுடைய காத்திருத்தலுக்காக, வெளி தள்ளப்பட்டு கதவை சாத்தின சிறு குழந்தை போல உனக்கான விளிம்பு நிலையில் மனம் பதறி நான் காத்திருந்த நிமிடங்களை நினைத்துக்கொள். எது எப்படியோ என் வாழ்வின் மிக உன்னதமான தருணங்களை உன்னுடன் கழித்திருக்கிறேன். பேருந்து பயணங்களில் தோழ் சாய்ந்து தூங்குவதும், உன் கைகுட்டை வாசனையும் கதகதப்பும் என்னை எப்போதும் லயிப்பிற்குள்ளாக்குபவை,  தனிமையின் இரவில் காதலியின் பிரிவை தாங்காமல் நெஞ்சிலடித்தபடி கதறி அழுகும் ஒருவன் புனிதனென்றால் நான் அவன் தான்.

கடிதம் எழுதி முடித்ததும் கதறி அழுதான் நல்லதம்பி, நெற்றி விகாரமாகவும் மூக்கு சற்றே வளைந்தும், மூன்று பற்கள் துருத்திக்கொண்டிருப்பதால் தான் தன்னுடைய முப்பத்தியாறாவது வயது வரை ஒரு பெண்ணின் ஸ்பரிசம் கூட‌ கிடைக்கவில்லை என எண்ணும் போது வெறுப்பாக இருந்தது

ச்சே! என்ன இது இல்லாத ஒருத்திக்காகவும் இதுவரை வராத ஒரு காதலிக்காகவும் இப்படி மாய்ந்து மாய்ந்து கடிதம் எழுதுவது., அதுவும் நூற்றி நாற்பத்தியாறாவது முறை. தனிமை முகத்திலறைய எழுந்து சென்று ஒரு சிகரெட் பற்ற வைத்தான். எப்படியும் சுவைத்து முடிந்தததும் காலில் மிதித்து அணைப்பான்  இது தங்கள் குலத்திற்கே ஏற்படும் மிகப்பெரிய அவமானம் என சொல்லியபடியே பற்றி எரியத்தொடங்கியது அன்றைய இரவின் நாற்பத்தியெட்டாவது சிகரெட்.

இது வ‌ரை இந்த‌ க‌தையை எழுதிய‌தும் என்ன‌ செய்வ‌தென்று தெரியாம‌ல் விழித்தாள் மிருதுளா. நெற்றியை தொட்டுப்பார்த்தாள் நெற்றி நீண்டு விகாரமாக இருந்தது ,மூக்கு சற்றே வளைந்தும், மூன்று பற்கள் துருத்திக்கொண்டிருப்ப‌து தான் இது வ‌ரை எந்த ஆணின் காதலும்,ஸ்ப‌ரிச‌மும் கிடைக்காதத‌ற்கு கார‌ண‌ம் என்றாள்.  ச்சே!!! என்ன ஆண்கள் இவர்கள் எனக்காக இப்படி காதலால் கசிந்துருகி கடிதம் எழுதாவிட்டாலும் பரவாயில்லை, ஒரு சின்ன புன்னகை கூட காட்ட மறுப்பது அவமானத்தின் உச்சம் என்றாள். நூற்றி நாற்பத்தி ஏழாவது கடிதம் எழுதுவதற்கு த‌யாராய் மேசையில் இருந்தது..

— முற்றும் — 

எப்படியும் தொடங்கி விடுகிறது
நீயில்லா தனிமையின்
இரவுகளும்
அதன் பின்னான வெறுமையின்
வியர்வை துளிகளும்
உன் அளவான சிரிப்பும்
பேருந்து பயணங்களில்
தோள் சாய்ந்து தூங்குவதும்
நீ வைக்கும் தலைகீழ் ” ப “
வடிவிலான மல்லிகை பூவும் ,
உன் நினைவுகளும், உனக்கான
காதலும் இன்னும் நிறம்
மாறாமல் இருக்கின்றன.
நீ விட்டு சென்ற பிரிவின்
வலியை பின்னிரவுகளில்
நனைந்து போன என்
தலையணையை கேட்டுப்பார்.
உனக்கான காதலும் கவிதையும்
இன்னும் பிரிக்கப்படாமலேயே உள்ளது
குடைக்குள் இருந்து மழையை
நனைக்கும்  உன்னுடன்
மழையில் நனைந்து
காதல்  பேச ஆசை
என்  காதல்  கேட்க
எப்போது வருவாய்
என் லகர தமிழச்சி
If you enjoyed this post, make sure you subscribe to my RSS feed!