Posts Tagged ‘சோகம்’

எப்படியும் தொடங்கி விடுகிறது
நீயில்லா தனிமையின்
இரவுகளும்
அதன் பின்னான வெறுமையின்
வியர்வை துளிகளும்
உன் அளவான சிரிப்பும்
பேருந்து பயணங்களில்
தோள் சாய்ந்து தூங்குவதும்
நீ வைக்கும் தலைகீழ் ” ப “
வடிவிலான மல்லிகை பூவும் ,
உன் நினைவுகளும், உனக்கான
காதலும் இன்னும் நிறம்
மாறாமல் இருக்கின்றன.
நீ விட்டு சென்ற பிரிவின்
வலியை பின்னிரவுகளில்
நனைந்து போன என்
தலையணையை கேட்டுப்பார்.
உனக்கான காதலும் கவிதையும்
இன்னும் பிரிக்கப்படாமலேயே உள்ளது
குடைக்குள் இருந்து மழையை
நனைக்கும்  உன்னுடன்
மழையில் நனைந்து
காதல்  பேச ஆசை
என்  காதல்  கேட்க
எப்போது வருவாய்
என் லகர தமிழச்சி
If you enjoyed this post, make sure you subscribe to my RSS feed!
Advertisements

 தூக்கம் தொலைத்த இரவில் 
எப்போதும் சாலையில் உறங்கும்
ஒருவனை கண்டேன்
பல்வேறு கவிதைகளை
ஒன்றன் பின் ஒன்றாக
சொல்லிக்கொண்டிருந்தான்
கவிதைகளை எப்படி
பிடிக்கிறாய் என்றதற்கு
இரவுகளில் கவிதை
பிடிப்பது எளிது என்றான்
இரவு என்பதே 
அவளின் நினைவு சிகரெட் தனிமை
அவளின் நினைவு தவிப்பு கோபம்
அவளின் நினைவு கவிதை கண்ணீர்
அவளின் நினைவு தயக்கம் வெறுமை
அவளின் நினைவுகளுடே     
கலந்திருந்தவனுக்கு
போத்தல் சாராயத்தை
 ஊற்றிக்கொடுத்த பின்    
முனகதொடங்கினான்
கடவுள் காதல் கலவி
கடவுள் காதல் கலவி

 If you enjoyed this post, make sure you subscribe to my RSS feed!

என் அன்பின் விழிநிலைகளை
நீ அறிந்ததே கிடையாது
கோபமுற்ற பொழுதுகளில்
என் எதிரிலேயே
கிழித்துப்போடுகிறாய்
உனக்கான அன்பின் ஸ்பரிசங்களை
யாருமற்ற பின்னிரவுகளில்
கன்னங்களில் வழிந்து
கொண்டிருக்கிறது
தனித்துவிடப்பட்ட என் பெண்மை
எனதன்பை
பார்க்காமல் போ ,
உணராமலும் போ,
ஆனால் உனக்காக
அன்பை கடைவைத்து
கடைசிவரை காத்திருந்தேன்
என்று மட்டும் அறியாமல் போகாதே

பூவின் இதழ்களில்

பதித்துத் தருகிறேன்

எனதன்பின் ஸ்பரிசங்களை

முகர்ந்து பார்த்தான்

கட்டிக்கொண்டான், குதுகலித்தான்

அவன் உலகமே நான் என

என்னை கிறங்கடித்தான்

முன்னெப்போதும் இல்லாதளவு

இருள் படிந்த கூதல் காற்றில்

மகரந்த வாசனை கேட்டு

அடம்பிடித்த அன்று

தெருமுனை விலங்காய்

மாறியது அவனுடல்

காமமிகுதி அவனுடல் கலக்க

செயவதறியாது பேதை நான்

விக்கித்த கணத்தில்

என்னிடமே கொடுத்துச்சென்றான்

இரத்தம் படிந்த

எனதன்பின் பூவிதழை

If you enjoyed this post, make sure you subscribe to my RSS feed!

இன்று காலை 48 ‘ A’

பேருந்தில் சாம்பல் நிற

யட்சியை பார்த்தேன்

அதன் அழகு வனப்பானதும்

வெள்ளை பூவின் வாசனையை

தனதண்டையிலும் வைத்திருந்தது

யட்சிகளை பேருந்தில் காண்பது

இதுவே முதல் முறை

அதன் நகம் அழகாக ஒதுக்கப்பட்டும்

தலைமுடி சீராக வெட்டப்பட்டும் இருந்தது

யட்சியின் கண்கள் வழியே

நீளும் கரங்களில்

என்னை விடுவித்துக்கொள்ள

திரும்பும் போது

பார்த்தேன் யட்சி

என்னை உயிருடன்

தின்று கொண்டிருந்தாள்

———-oO0————-

யட்சியின் குட்டியூன்டு இதயம்

வெதுவெதுப்பாகவும் எனக்கு

ஏற்ற இடமாகவும் மாறிப்போனது

அவளின் மகரந்த வாசம்

எனக்குள் மெல்ல மெல்ல

காதலை வரவேற்றுக்கொண்டிருந்தது.

யட்சியின் அடிமை பத்திரத்தில்

கையெழுத்திட்ட மறுவருடம்

என்னை கக்கிப்போட்டது

வெம்மை நிரம்பிய கோடையில்

குருதி சகிதமாக பாதையில்

கிடந்தேன்.

இருந்தாலும் யட்சியின் மேலான

காதலும் அவளின் வாசமும்

கிலேசமடைய வைப்பவை.

———-oO0————-

மெல்ல புறப்பட்டு

வேகம்கொண்டு ஓடுகிறது

என் புரவி

கல்லூரி சாலை, மென்பொருள்

நிறுவனங்கள் வழியாக

ஓடிய புரவி கொண்டு சேர்க்கிறது

பன்னாட்டு விமான நிலையத்தில்

இறக்கை கொண்ட யந்திரம்

என்னை உள்ளிழுத்துக்கொண்டு

வான் நோக்கி பறக்கையில்

தோன்றியது

யட்சியின் மகரந்த வாசனை

மறக்கப்படும் இல்லையெனில்

மறக்கடிக்கப்படும்

If you enjoyed this post, make sure you subscribe to my RSS feed!

********************

நூலின் பெயர் : ராஜிவ் கொலை வழக்கு
வெளியீடு : கிழக்கு பதிப்பகம்
விலை : ரூ.100
பக்கம் : 232
நூலாசிரியர் : ரகோத்தமன்

**********************

புத்தக திருவிழா ஆரம்பமான முதலே பெரும் எதிர்பார்ப்பிற்குள்ளான புத்தகம் கிழக்கு பதிப்பகத்தின் ராஜிவ்  கொலை வழக்கு. ராஜிவ் காந்தி கொலை வழக்கில்  தலைமை புலனாய்வு அதிகாரியாக இருந்த  ரகோத்தமனால் எழுதப்பட்டதும் இந்த புத்தகத்தின் மீதான ஒரு கனமான பார்வையை படிய வைத்திருக்கலாம்.

ஒருவரின் கொலை இவ்வளவு விடயங்களை தர்க்க கோட்பாடுகளுக்கு உட்படுத்துமா என்று மிக ஆழமாக நுண்ணிய கருத்தாய்வு செய்யப்பட்ட புத்தகம் இது.புத்தகத்தின் தாக்கம் படித்து முடித்த அதே இடத்தில் உட்கார்ந்து சில மணி நேரங்கள் எதிலும் மனது ஈடுபடாமல் இந்த புத்தகம் பற்றியும் அதன் நிகழ்வுகளுக்குள்ளுமே சுழன்று வந்ததை மறக்க முடியாது.

வழக்கின் ஆரம்பத்தில் காவல் துறை எப்படி ஆதாரங்களற்று நின்றதும், மெல்ல மெல்ல ஆதாரங்கள் திரட்டி தொகுக்கையில் ஒரு கொலையை இவ்வளவு திட்டமிட்டு வெகு நேர்த்தியாக ,இம்மி பிசகாமல் ஒரு இயக்கம் செய்து முடித்தது தெரிந்த போது அது உண்டாக்கின அதிர்வு மயிர் கூச்சிட வைக்கிறது.

யார் யார் கொலையில் சம்மந்தபட்டவர்கள், அவர்களுக்கு இடையேயான கடித்தப்போக்குவரத்து,அது தொடர்பான அரசின் ஷரத்துக்கள், முருகன் -நளினிக்கிடையான காதல்,அமைப்பின் கட்டுப்பாடு மற்றும் உள்ளார்ந்த கட்டமைப்பு, கொலையின் தேர்ந்த திட்டமிடல், வழிநடத்துதல்,கணகச்சிதமாக கொலை திட்டம் முடித்தல்,கைதின் போதான சைனைடு மரணங்கள்,விசாரனை., என முதல் பக்கம் தொடங்கி ஒரு விளிப்பு நிலையிலேயே நம்மை  இழுத்துப்போகிறது  இந்த புத்தகம்.

அப்போதிருந்த தமிழக போலீஸ் துறையை விட பன் மடங்கு நுட்பங்களை கொலைக்கு காரணமான இயக்கத்தில் இருந்தவர் மிக தெளிவான வரைபடங்களுடன் ஒரு பிரதமரின் நிகழ்சி வருகையை போலீஸ் துறையே அறியாத போது துல்லியமாக எழுதி வைத்திருந்தது பார்த்து பிரமித்துப்போனேன்.ஒரு பக்கத்தில் அவர்கள் பயன் படுத்திய சங்கேத குறியீட்டு வார்த்தைகள் அட்டவனை( encryption- de cryption) திட்டமிடலுக்காக அவர்கள் எடுத்துக்கொண்ட பிரயத்தனத்தை காட்டுகிறது.

வார்த்தைகளால் விவரிக்க முடியாத கொலையின் நுட்பங்களையும்,கொலையின் சம்மந்தப்பட்ட அனைவரின் தொடர்புகள் மற்றும் விவரனைகளை ஒரு சீராக தொகுப்பட்ட புத்தகம் ராஜீவ் கொலை வழக்கு. அனைவரும் கட்டாயம் படிக்க வேண்டிய புத்தகம்.

If you enjoyed this post, make sure you subscribe to my RSS feed!

இலக்கிய காதல் எப்போதும் மனதை லயிப்புக்குள் உள்ளாக்குபவை. இவை அனைத்தும் என்னை ஈர்த்த வரிகளின் பகிர்வுகள்.

பாடல்:

வாரணமாயிரம் சூழ வலம் செய்து
நாரண நம்பி நடக்கின்றான்
என்னெதிர் பூரண பொற்குடம்
வைத்து புறமெங்கும் தோரணம் நாட்ட
கனாக் கண்டேன்.. தோழி நான் கனாக் கண்டேன்

ஆசிரியர்: ஆண்டாள்-நாச்சியார் திருமொழி

பொருள்: வாரணமாயிரம்=ஆயிரம் யானைகள்

விளக்கம்:

ஆயிரம் யானைகள் சுற்றி நிற்க, என் வீரத்தலைவன்(மணமகன்) கம்பீரமாக நடந்து வருகின்றான். சுத்த தங்கத்தாலான குடங்களை எங்கும் சூழ வைத்து அழகிய தோரணம் கட்டி என் தலைவன் மணம் செய்வதாய் கனவு கண்டதாக  ஆண்டாள் தலைவி கூற்றாக தோழிக்கு கூறுகிறாள்.

————————
பாடல்:

கன்றும் முன்னாது களத்தினும் படாது
நல் லான் தீம் பால் நிலத்தில் உக்குகக்கும்
எனக்கும் மாகது எம்மைக்கும் முதவாது
பசலை பனி யியர் தீதலை
அல்குல் என் மாமனிக் கவினே

ஆசிரியர்:வெள்ளிவீதியார்- குறுந்தொகை

விளக்கம்:

பசுவின் பாலை கன்றும் குடிக்காமல், பதப்படுத்தியும் வைக்காமல் நிலத்தினில் கொட்டி வீணாவதை போல, எனக்கும் உதவாது என் தலைவனுக்கும் உதவாத என்னுடைய இந்த அழகிய உடல் இருந்தென்ன பயன், இந்த அழகிய உடம்பை பசலை நோய் ஆட்கொண்டு  போக வேண்டும் என்பதாக தலைவி கூறிய பாடல்.

———————
பாடல்:

கான மஞ்ஞை அறைஈன் முட்டை
வெயில்ஆடு முசுவின் குருளை உருட்டும்
குன்ற நாடன் கேண்மை என்றும்
நன்றுமன் வாழி தோழி! உண்கண்
நீரொடு ஒராங்குத் தணப்ப
உள்ளாது ஆற்றல் வல்லு வோர்க்கே

ஆசிரியர்: கபிலர் – குறுந்தொகை

விளக்கம்:

காட்டில் உள்ள மயில் பாறையில் ஈன்ற முட்டையை  கருங்குரங்கின் குட்டிகள் உருட்டி விளையாடும் மலை நாட்டைச் சார்ந்தவன் தலைவன். அழகிய கண்களில் வழிந்தோடும் நீரைப் பார்த்தும் இரக்கமில்லாமல் அப்படியே பிரிந்து சென்ற அந்த கடும் மனம் உடையவனை எப்பொழுதும் நினைந்து வருத்தப்படாதவர்களுக்கு மட்டுமே தலைவனது நட்பு எப்பொழுதும் இன்பம் அளிக்க வல்லது.
இவ்வாறு கூறும் தலைவி தன் பிரிவாற்றாமை (I Miss u) , தலைவன் இல்லாமை கண்டு வருந்துகிறாள்.

If you enjoyed this post, make sure you subscribe to my RSS feed!