Posts Tagged ‘நூல் விமர்சனம்’

புதுக்கவிதையில் இருந்து நவீன கவிதை வாசிப்பிற்கு வந்த பிறகு கவிதையின் சாராம்சமே முற்றிலும் மாறிப்போய் ஒரு புது உலகம் இயங்கிகொண்டிருப்பது எப்படி மகிழ்ச்சியை தந்ததோ அதே மகிழ்ச்சியை நிலா ரசிகனின் “வெயில் தின்ற மழை ” நவீன‌ கவிதை தொகுப்பும் தந்தது.

நிலாவின் மயிலிறகாய் ஒரு காதல், பட்டாம் பூச்சியின் கனவுகள் புத்தகத்தை படித்துவிட்டு வெயில் தின்ற மழை படிப்பவருக்கு இதன் ஆசிரியர் தான் இந்த புத்தகத்‌தை எழுதிய‌வ‌ர் என்ப‌து ஆச்ச‌ர்ய‌மாக‌த்தான் இருக்கும். இந்த மனிதர் கவிதைகளுக்கு வார்த்தைகளை எங்கிருந்து பிடிக்கிறார் என்பது இன்னும் எனக்கு புதிராகவே உள்ளது.

நல்ல குளிர் அன்று இரவு ப‌தினொன்று ம‌ணியிருக்கும் அப்போது தான் நிலாவிட‌ம் க‌விதை தொகுப்பை வாங்கி வ‌ந்தேன். குளிருடன் சேர்ந்த‌ இர‌வு அறையில் அனைவ‌ரையும் உற‌ங்க‌ வைத்திருந்தது. கால்கள் தரையில் பட்டவுடன் சில்லிட்டது. வழக்கமாக புத்தகம் படிக்கும் ஜன்னலருகே  இருக்கையை இழுத்துப்போட்டு உட்கார்ந்து கொண்டேன். வெளியே இருள் என்னை பார்த்துக்கொண்டிருப்பதாய் இருந்தது.

வெயில் தின்ற மழை தொகுப்பை வாசிக்க தொடங்கினேன். முதல் பக்க அட்டை , பின் பக்க மனுஷ்யபுத்திரன் வார்த்தைகள் என அனைத்தும் கடந்து உள்சென்றதும் , நிலாவின் அறிமுகம். கவிதைக்கு வந்தேன் முதல் கவிதையே புதுக்கவிதை போல எளிதில் கடந்து போக முடியாது என முரண்டு பண்ணியது. இரண்டு முறை வாசித்தேன் ஒரு அர்த்தத்தை தந்தது. அடுத்த முறையும் வாசித்தேன் இன்னொரு அர்த்தத்தை தந்தது.புதுக்கவிதையில் நமக்கான அர்த்தங்களை கவிதையோடு நாம் தான் இணைத்துக்கொள்ளவேண்டும் என்பது அலாதியாக இருந்தது. இப்போது குளிர் ஜன்னல் வழி உள்ளேறி கைகளையும் சில்லிட வைத்திருந்தது. எனக்கு ஒரு கவிதையின் வரி பிடித்துவிட்டால் அதன் தாக்கமே இரண்டு நாள் இருக்கும். எப்போதும் அதன் வரிகளையே முணுமுணுத்துக்கொண்டிருப்பேன். அடிக்கொருமுறை அந்த பக்கத்தை திருப்பி திருப்பி பார்த்தும் சிரித்துகொண்டுமிருப்பதை வித்தியாசமாக இருக்கிறது என்று நண்பர்கள் சொல்லுவதுண்டு.கவிதையை இதைவிட வேறு எதாவது முறையில் கொண்டாட முடியாதா என யோசித்திருக்கிறேன். கைகள் சில்லிட மனதுக்கு நெருக்கமான கவிதைகளை படித்துக்கொண்டிருக்கிறேன் என்ற நினைப்பே சந்தோஷத்தை கொடுத்தது. நிலாவின் பல கவிதைகளை திரும்ப திரும்ப வாசிக்கும் போது அது தரும் பரிமாண மாற்றங்கள் புதுமையான‌ வேறொரு மனநிலையில் வைத்திருந்ததாக உணர்ந்தேன்.

வார்த்தைகளற்ற மென் இசையை எனக்கு மட்டும் கேட்கும் அளவு வைத்துக்கொள்ள வேண்டும் போல தோன்றியது. மென் இசையுடன் வாசிக்கப்படும் கவிதை அதன் நிர்வாணம் கடந்து ரசிக்கப்படுகிறது என எனக்கு நானே சொல்லிக்கொண்டேன். இசையை மெல்ல சுழலவிடேன்.இன்னும் அதிக தீரத்துடன் ஜன்னல் வழியே குளிர் அறைக்குள் இறங்கிக்கொண்டிருந்தது.சில கவிதை பக்கங்கள் பல நிமிடங்களுக்கு என்னை கட்டிப்போட்டது. மெல்ல ஒவ்வொரு கவிதைகளுக்குள் இருந்து வெளிவந்து அடுத்த கவிதைக்குள் மாட்டிகொண்டேன். வெளியெங்கும் இருட்டு, சில்லிட வைக்கும் குளிர், அறையெங்கும் மென் இசை, கையில் கவிதை என இரவு அத்தனை அழகாகியிருந்தது

என்னை க‌வ‌ர்ந்த‌ சில‌ க‌விதைக‌ள்

குழ‌ந்தையாத‌லின் சாத்திய‌ங்க‌ள் ஏதும‌ற்ற‌
இர‌வொன்றில் உன‌க்கொரு
உடைந்த‌ பொம்மையை ப‌ரிச‌ளித்து
சிரிக்கிற‌து கால‌ம்.
மென்காற்றில் சித‌றும் சார‌லில்
ந‌னைந்த‌ப‌டி த‌னித்த‌ழுகிறாய்
நீ.
(வெறுமையின் அழ‌கான‌ வ‌ர்ண‌னை இது )
****

வீழ்ந்து கிட‌த்த‌லை விட‌
ப‌றந்து சாத‌லே பெரிதென‌
உண‌ர்த்தின‌
ச‌வ‌ப்பெட்டிக்கு காத்திருக்கும்
துருப்பிடித்த‌ ஆணிக‌ள்

*******

உதிர்ந்த‌ முத்தங்க‌ளை பொறுக்கும்
ந‌ட்ச‌த்திரா த‌ன் க‌ன்ன‌த்தின் சுருக்க‌ங்க‌ளை
வ‌ருடிக்கொடுக்கிறாள்.
சித‌றிக்கிட‌க்கும் முத்த‌ங்க‌ளின் ந‌டுவே
கால‌ம் க‌ண்சிமிட்டிக்கொண்டிருப்ப‌தை
வ‌லியுட‌ன் நோக்குகிற‌து அவ‌ள‌து க‌ண்க‌ள்.
தீராப்ப‌சியுட‌ன் வான‌ம் பார்த்துக்
க‌த‌றுகின்ற‌ன‌ வீழ்ந்த‌ இலைக‌ள்.
மெல்ல வழுக்கிறது
நிறமற்ற மழை

******

இந்த கடைசி கவிதையை என்னால் அத்தனை சீக்கிரம் கடந்து போக முடியவில்லை. வலிகளை வார்த்தைபடுத்துவது கடினம் என்று சொல்லிவிட்டு அனாசயமாக நட்சத்திராவின் வலிகளை வார்த்தைபடுத்தியுள்ளார். கவிதையில் வரும் நட்சத்திரா பற்றியே நீண்ட நேரம் யோசித்துக்கொண்டிருந்தேன்.

வார்த்தைக‌ளையெல்லாம் பின்னிப்போட்டு கிற‌ங்க‌டிக்கும் க‌விதை த‌ருவ‌தில் நிலா எப்போதும் தனக்கான இடத்தை தெரிந்தே வைத்திருக்கிறார் என்று தோன்றியது.  இரவுகளுக்கு கைநீளுவதும், உலகின் மிகப்பெரிய தவறை துளியாக்குவதும் என மாயவித்தைகளை கண் முன்னே கடைபரப்பிக்கொண்டிருந்தது வெயில் தின்ற மழை. சில‌ க‌விதைகளில் ஆரம்பங்களிலேயே உச்ச‌த்தை தொடுகிறார்.

க‌டைசிவ‌ரிக‌ளில் வ‌சிய‌ம் த‌ட‌வியே க‌விதைவ‌டிக்கிறார் நிலா. கடைசி கவிதையை உணர்ந்து முடித்ததும் தான் தான் தெரிந்தது வெயில் தின்ற மழை என்னுடைய பாதி இரவை முழுதாக தின்று முடித்திருந்தது என்று. நாற்காலியை விட்டு எழுந்தேன். மணி நான்கு என கடிகாரம் காட்டிய‌து.

புத்த‌க‌த்தை மூடிவைத்துவிட்டு அத‌ன் நினைவிலேயே இருந்தேன். தேனீர் குடிக்க வேண்டும் போல இருந்தது. எங்காவ‌து வெளியில் செல்ல‌ வேண்டும் என்று தோன்றிய‌து. டிச‌ம்ப‌ரில் மாதங்களின் அதிகாலை அழ‌கான‌து அவ‌ற்றை ர‌சிக்க‌ வேண்டும் போல‌ இருந்த‌து. கவிதை புத்தகத்தை எடுத்துக்கொண்டு வெளியே சென்றேன். உட‌லை ந‌டுங்க‌வைக்கும் டிசம்பர் மாத குளிர் என்னை உள்ளிழுத்துக்கொண்ட‌து

சோடியம் ஒளி மெல்ல கசிந்து கொண்டிருந்தது. பின்னிரவில் சோடியம் விளக்கை சுற்றிய விட்டில்  பூச்சிகள் விள‌க்கின் அடியில் விழுந்திருந்தன‌.சாலையில் நான், குளிர்,க‌விதை என‌ மூன்று பேர் ம‌ட்டும் இருப்ப‌தாய் தோன்றிய‌து.

சோடிய‌ம் விள‌க்கில் இன்னும் சில‌ க‌விதைக‌ளை ப‌டித்தேன். முன்பு ப‌டித்த‌தை விட‌ இன்னும் அழ‌காக‌ தோன்றிய‌து.  சூழ்நிலைகளும் கவிதையின் அழகியலை தீர்மானிக்கின்றன என்று உணர்ந்தேன். நிலாவின் க‌விதைக‌ளில் வ‌ரும் ந‌ட்ச‌த்திராவும் என்னுடைய‌ க‌விதைக‌ளில் வ‌ரும் தூரிகாவும் ஒருவ‌ரே என்று நிலா சொன்னது நியாபகம் வந்தது. ந‌ட்ச‌த்திராவை பார்க்க‌ வேண்டும் போல‌ இருந்தது.

குளிரில் நடுங்கியபடியே சைக்கிள் தள்ளிக்கொண்டு வந்த ஒருவர் என்னை பார்த்து புன்னகைத்துவிட்டுப்போனார்.அறைக்கு வந்து மீண்டும் பிடித்த கவிதைளை படித்தேன் புத்த‌க‌த்தை நெஞ்சில் சாய்த்த‌ப‌டி எப்போது உற‌ங்கிப்போனேன் என நினைவில்லை. காலை எழுந்ததும் ஒரு வரி பிசகாமல் நிறைய‌ க‌விதைக‌ள் நியாப‌க‌த்திற்கு வ‌ந்தது.இதே போல் என்னுடைய‌ ஒன்றாம் வ‌குப்பு த‌மிழின் முத‌ல் பாட‌லும் , பக்கத்தின் வண்ணம் என மாறாமல் சில‌ ச‌ம‌ய‌ம் நியாப‌க‌த்திற்கு வ‌ரும், சில நேரங்களில் அந்த புத்தகத்தின் வாசம் கூட உணர்ந்திருக்கிறேன். சிரித்துக்கொண்டேன். ப‌டுக்கையில் இருந்து கொண்டே சில‌ கவிதைக‌ள் வாசித்தேன். அன்று மாலை வ‌ரை வெயில் தின்ற மழையுடன் பேசிக்கொண்டிருந்தததாக நியாபகம்.

ம‌ழையுட‌ன் க‌ழியும் இர‌வும்,ம‌ன‌திற்கு பிடித்த‌ க‌விதைகளுடன் தொடங்கும் காலையும் எப்போதுமே வ‌சீக‌ர‌மான‌வைகள்.

புத்த‌க‌த்தின் பெய‌ர்: வெயில் தின்ற‌ ம‌ழை ஆசிரிய‌ர் : நிலார‌சிக‌ன் ‌ ( உயிர்மை பதிப்பகம் ) விலை : 50 ரூபாய் ‌ இணையத்தில் பெற‌: http://tinyurl.com/2uqqkta

Advertisements

********************

நூலின் பெயர் : ராஜிவ் கொலை வழக்கு
வெளியீடு : கிழக்கு பதிப்பகம்
விலை : ரூ.100
பக்கம் : 232
நூலாசிரியர் : ரகோத்தமன்

**********************

புத்தக திருவிழா ஆரம்பமான முதலே பெரும் எதிர்பார்ப்பிற்குள்ளான புத்தகம் கிழக்கு பதிப்பகத்தின் ராஜிவ்  கொலை வழக்கு. ராஜிவ் காந்தி கொலை வழக்கில்  தலைமை புலனாய்வு அதிகாரியாக இருந்த  ரகோத்தமனால் எழுதப்பட்டதும் இந்த புத்தகத்தின் மீதான ஒரு கனமான பார்வையை படிய வைத்திருக்கலாம்.

ஒருவரின் கொலை இவ்வளவு விடயங்களை தர்க்க கோட்பாடுகளுக்கு உட்படுத்துமா என்று மிக ஆழமாக நுண்ணிய கருத்தாய்வு செய்யப்பட்ட புத்தகம் இது.புத்தகத்தின் தாக்கம் படித்து முடித்த அதே இடத்தில் உட்கார்ந்து சில மணி நேரங்கள் எதிலும் மனது ஈடுபடாமல் இந்த புத்தகம் பற்றியும் அதன் நிகழ்வுகளுக்குள்ளுமே சுழன்று வந்ததை மறக்க முடியாது.

வழக்கின் ஆரம்பத்தில் காவல் துறை எப்படி ஆதாரங்களற்று நின்றதும், மெல்ல மெல்ல ஆதாரங்கள் திரட்டி தொகுக்கையில் ஒரு கொலையை இவ்வளவு திட்டமிட்டு வெகு நேர்த்தியாக ,இம்மி பிசகாமல் ஒரு இயக்கம் செய்து முடித்தது தெரிந்த போது அது உண்டாக்கின அதிர்வு மயிர் கூச்சிட வைக்கிறது.

யார் யார் கொலையில் சம்மந்தபட்டவர்கள், அவர்களுக்கு இடையேயான கடித்தப்போக்குவரத்து,அது தொடர்பான அரசின் ஷரத்துக்கள், முருகன் -நளினிக்கிடையான காதல்,அமைப்பின் கட்டுப்பாடு மற்றும் உள்ளார்ந்த கட்டமைப்பு, கொலையின் தேர்ந்த திட்டமிடல், வழிநடத்துதல்,கணகச்சிதமாக கொலை திட்டம் முடித்தல்,கைதின் போதான சைனைடு மரணங்கள்,விசாரனை., என முதல் பக்கம் தொடங்கி ஒரு விளிப்பு நிலையிலேயே நம்மை  இழுத்துப்போகிறது  இந்த புத்தகம்.

அப்போதிருந்த தமிழக போலீஸ் துறையை விட பன் மடங்கு நுட்பங்களை கொலைக்கு காரணமான இயக்கத்தில் இருந்தவர் மிக தெளிவான வரைபடங்களுடன் ஒரு பிரதமரின் நிகழ்சி வருகையை போலீஸ் துறையே அறியாத போது துல்லியமாக எழுதி வைத்திருந்தது பார்த்து பிரமித்துப்போனேன்.ஒரு பக்கத்தில் அவர்கள் பயன் படுத்திய சங்கேத குறியீட்டு வார்த்தைகள் அட்டவனை( encryption- de cryption) திட்டமிடலுக்காக அவர்கள் எடுத்துக்கொண்ட பிரயத்தனத்தை காட்டுகிறது.

வார்த்தைகளால் விவரிக்க முடியாத கொலையின் நுட்பங்களையும்,கொலையின் சம்மந்தப்பட்ட அனைவரின் தொடர்புகள் மற்றும் விவரனைகளை ஒரு சீராக தொகுப்பட்ட புத்தகம் ராஜீவ் கொலை வழக்கு. அனைவரும் கட்டாயம் படிக்க வேண்டிய புத்தகம்.

If you enjoyed this post, make sure you subscribe to my RSS feed!

——————————–—————————————–

நூலின் பெயர் : யாரோ ஒருத்தியின் டைரி குறிப்புகள்
பகுப்பு : சிறுகதைகள்
வெளியீடு : திரிசத்தி பதிப்பகம்
விலை : ரூ.70
பக்கம் : 90
நூலாசிரியர் : நிலா ரசிகன்

————————————————————————–

எழுத்தாளனின் தீர்க்கமான நுண்ணிய அவதானிப்புகள் மட்டுமே ஒரு சிறந்த படைப்பின் ஆதர்ச புள்ளியாக இருக்க முடியும். அதற்காக அவன் தன்னுடைய மறந்த பால பருவத்தை மீண்டும் அதன் கால போக்கிலேயே சென்று ஒவ்வொரு இடமாக தேடி ரசனை தன்மை மிக்கவைகளை மட்டும் தனக்கானவையாக மீண்டு எடுத்து வருகிறான்.ஒவ்வொரு படைப்பாளியும் இதில் ஒரளவேனும் சொல்லிக்கொள்ளும் படியான வெற்றியை பெருகிறான் என்பது நிதர்சனம்.

செவ்வியல் கூறுகளை மிக கூர்மையாக சேகரித்திருக்கிறார் நிலா ரசிகன் “ யாரோ ஒருத்தியின் டைரி குறிப்புகளில்”.எழுத்து என்பது அனைத்தையும் அப்பட்டமாக அம்பலப்படுத்துவது தான் என்ற போக்கு இருக்கும் இந்த நேரத்தில் விரசம் கலக்காமல் சொல்ல வந்த விடயத்தை மட்டும்  மயிலிறகாய் மனதில் பட்டுத்தெறிக்கும் படி இருக்கிறது இந்த சிறுகதை தொகுப்பில் உள்ள பல கதைகள்.பெரும்பான்மையான கதைகளில் கடைசி வரியில் வாசிப்பாளை மீண்டும் படிக்கவைக்கும் தந்திரம் ஆசிரியருக்கு நன்றாக கை கூடியுள்ளது. இந்த தொகுப்பில் கடைசி கதை “ மை லிட்டில் ஏலியன் ப்ரெண்ட்” மேற்சொன்ன படிமத்தை தனக்கு சாதகமாக பெற்றுக்கொள்கிறது. ”சேமியா ஐஸ்“ சிறுகதை நாயகனை பள்ளி பருவத்தில் நாம் நிச்சயம்  எப்போதாவது கடந்து வந்திருப்போம். வால் பாண்டியின் சரித்திரம் வால் பாண்டியனை ஒரு ரசனை  சிறுவனாக உலவிட்டுள்ளது நம் மனதில் ,சிறுவர்களின் உலகம் தான் எவ்வளவு எளிமையானதும்,இயல்பானதும் என்பதை வாசிப்பாளன் இச்சிறுகதையின் இரண்டு வரிகளுக்கும் நடுவே தனக்கான சிறு வயது நினைவுகளை நிச்சயம்  திருப்பிப்பார்த்த படியே தான் கடந்திருப்பான்.தொகுப்பின் முதல் கதை யாரோ ஒருத்தியின் டைரி குறிப்புகள் எனக்கான முத்திரை கதை வரிசைகளின் நிச்சயம் இடம் பெரும்,பொருத்திப்பார்த்தல் என்பது பெருப்பான்மையாக வாசகன் வசம் விட்டு விட்டு கதைகளுக்கு பின்னால் ஒளிந்து கொள்வான் எழுத்தாளன் ஆனால் இந்த கதையின் ஆரம்பமே கதையில் இறுதியில் கதாசிரியரின் பொருத்திப்பார்த்தலில் இருந்து ஆரம்பித்து கதை முடிந்ததற்கு பிறகும் அதன் நீட்சி  நம்மில்  ஏற்படுத்தும் அதிர்வுகளில் காணலாம்.அப்பா சொன்ன நரிக்கதை  சிறுமியின் வெண் பட்டு மனதையும் அதற்கு பின்னான  நிசப்த நிமிடங்களையும் நம் முன்  ஒரு கணம் நிறுத்திப்போகிறது.

கதைகள் ஒவ்வொன்றும் தனக்கு சாதகமாக கதை மாந்தர்களை தன் வசமே வைத்துக்கொள்கின்றன. இது இவர் கதைகளின் மிகப்பெரிய பலம்.ஒரு ஆரம்ப கட்ட இலக்கிய வாசிப்பாளனுக்கு நிச்சயம் ஒரு புதுவித அனுபவத்தை “யாரோ ஒருத்தியின் டைரி குறிப்புகள்” தரும் என்பதில் சந்தேகமில்லை.முழுதுமாக படித்து முடித்ததும் மீள் வாசிப்பிற்கு “யாரோ ஒருத்தியின் டைரி குறிப்புகள்” என்னை மீண்டும் உட்படுத்தவில்லை என்பது ஒரு வருத்தம். குறைகள் வெகு சில இருப்பினும் ஒரு படைப்பாளியின் முதல் சிறுகதை தொகுப்பு இத்தனை நேர்த்தியாகவும் ,அழகியல் கூறுகளின் கோட்பாட்டுவிவாத மதிப்பீடுகளை வெகு இயல்பாய் உருவகமொழியில் திறனாய்வு செய்ததும் நிச்சயம் பாராட்டுக்குரியது. ஆழச்சென்று ரசிக்க நிலா ரசிகனின் யாரோ ஒருத்தியின் டைரிக்குறிப்புகள் ஒரு நல்ல தேர்வு.

If you enjoyed this post, make sure you subscribe to my RSS feed!

——————————–

நூலின் பெயர் : தலைச்சுமை
வெளியீடு : நிவேதிதா பதிப்பகம்
விலை : ரூ.55
பக்கம்: 144
நூலாசிரியர் : பழமன்
———————————
வட்டார இலக்கியங்கள் தமிழில் எப்போதும் ஒரு தனி முத்திரை படைப்புகளாக வலம் வந்திருக்கின்றன. கொங்கு வட்டார இலக்கியங்களில் பழமன் குறிப்பிடத்தக்கவர்.‘பொன் ஊற்று’, ‘நந்தியா வட்டம்’ என்ற இரண்டு நாவல்களை எழுதிய பழமனின் மூன்றாவது நாவல்‘தலைச்சுமை’. தலைச்சுமை நாவலில் கொங்கு வட்டார மொழியில் கிராமமும் அதன் சார்ந்த இடங்களையும் தாண்டி கிராமத்தின் எதார்த்த மனிதர்களையும் அவர்களின் வாழ்வியல் கூறுகளையும் ஆசிரியர் பழமன் புத்தகம்  முழுக்க அள்ளித்தெளித்திருக்கிறார்.

கொங்கு வட்டாரத்திற்கே உரிய மரியாதை வரிகளிலும், கதை மாந்தர்களின் வடிவத்திலும் சரியாக பொருத்தியிருக்கிறார் ஆசிரியர். நாவலின் நாயகன்  வேலுவை ஒரு சராசரி மனிதனாகவும் கிராமத்தின் தின வாழ்க்கையில் தன்னை இனைத்துக்கொண்டு ஓடும் ஒரு சாதாரண மனிதனாக வலம் வர விட்டிருக்கிறார். நாவலின் முதல் வரி “மணி பத்து இருக்கும் , பழைய சோத்து நேரம்” என ஆரம்பிக்கும்  இடத்தில் இருந்து  நம்மை கை பிடித்து கூட்டிச்செல்கிறார் கொங்கு தேசத்தின் ஒரு கிராமத்திற்கு. கிராமத்திற்கே உரிய விளிம்பு நிலை மனிதர்கள் கிட்டான் மாதாரி, டெம்போ ரங்கநாதன், மினிடோர் மருதாசலம், ட்ராக்டர் அருணாசலம், கால் டாக்சி கருப்புசாமி, பவர்ஸ்ப்ரேயர் பொன்னு சாமி, போரிங் மெஷின் பூங்காவனம், மெக்கானிக் மாரிமுத்து, ஊராட்சி உறுப்பினர் வேலாயுதம் அழகாக பாத்திரங்கங்கள் நாவல் முழுக்க தன் பங்கு நியாங்களையும், தனக்கே உரிய கிராமத்தின் விவரனைகளையும் தனக்குள் பொதித்து வைத்திருக்கின்றன.

நாவலின் நாயகி சாந்தியின் சொந்த ஊர் பொள்ளாச்சி பக்கம் நெகமம் , கொங்கு வட்டார கிராமத்தின் தேர்ச்சியை மிக ரசனையுடன் நாவலின் மேற்கோள் காட்டப்பட்டிருக்கிறது. நாயகி மின்சாரத்துறையில் வீடு வீடாக சென்று மின் கணக்கு எடுக்கும் பாத்திரமாகவும், பெண்னைகே உரிய நளினத்தை அந்த பாத்திரம் எப்படி வெளிப்படுத்துகிறது என்பதையும் பார்க்கையில் நிஜமாகவே ஒரு கொங்கு  தேச நாயகியை நம் கண்முன் உலவவிட்டிருக்கிறார். நிச்சயமாக சாந்தியை கொங்கு வட்டார மக்கள் தினமும் சந்திருக்ககூடும். ஒரு கட்டத்தில் வேலு ஒரு தாழ்ந்த சாதி வீட்டில் தேனீர் அருந்துவதாக குறிக்கப்பட்ட இடத்தில் அந்த பெண் ‘ எங்க வீட்டிலயெல்லாம் நீங்க குடிப்பீங்களா’? என கேட்கிறார் இது அப்பட்டமான மனதின் ஏக்கம், கொங்கு தேசத்தின் மரபுகளை முதன் முதலில் தாண்டும் ஒருவனை பார்த்து முன் வைக்கும் வார்த்தை கோப்புகள். நாயகனின் தவறை ஒற்றை வரி சொல்லில் மறந்துவிட்டதாக  சொல்லி நம் மனதை விட்டு நீங்க மறுக்கிறார் நாயகி. இலை மறை காயாக கிராமத்தில் நடக்கும் தவறுக்கான காரணமும் அழகியல் சார்ந்து சிறப்பாக விளக்கப்பட்டுள்ளது

கொங்கு தேச கிராமத்தின் வாழ்க்கையும்,காதலும் எந்த வித விரசமும் இல்லாமல் அள்ளிப்பருக தலைசுமை ஒரு அருமையான நாவல்