Posts Tagged ‘பயணம்’

பொள்ளாச்சி ரயில்

Posted: மார்ச் 16, 2016 by நிலன் in நிலன், பயணம், பொள்ளாச்சி ரயில்
குறிச்சொற்கள்:,

09jan_dgrajhi3__MA_2274564f

பொள்ளாச்சியிலிருந்து சென்னைக்கு ரயில் விட்டு ஒரு வருடத்திற்கு மேல் ஆகிவிட்டது, ஆனால் நேற்று தான் முதன் முதலில் பயணம் செய்தேன். கோவையிலிருந்து சென்னைக்கு வர ஏழு மணிநேரம் ஆனால் அதன் அருகாமை ஊரான பொள்ளாச்சியில் இருந்து வர பதினொன்றரை மணிநேரம். இருந்தாலும் எங்க ஊர் வண்டி எனும் சித்தாப்பில் ஏறிக்கொண்டேன். முதலில் வசீகரித்தது பொள்ளாச்சி ரயில் நிலையத்தின் அமைதி மற்றும் சுத்தம்.

ரயிலுக்கு கையசைக்கும் குழந்தைகள், மனிதர்கள் ஏறக்குறைய அருகி விட்டார்கள். அது வெரும் கையசைப்பு கிடையாது. ராட்சத உருவம் கொண்டு ஓடும் ஒரு பொருளை பார்த்து ஏற்படும் தன்னிலை மறந்த‌ சந்தோஷம். மிக நுட்பமாக நீங்கள் இதனை பார்க்கலாம். குழந்தைகளோ , குழந்தைமை (infantilization) கொண்ட மனிதர்களால் மட்டும் தான் அதை செய்ய முடியும். மற்றவர்களுக்கு தான் வளர்ந்து விட்டோம் என்ற பிரஞை எப்போதும் இருப்பதால் ரயிலை பார்த்ததும் குழந்தை மனம் கொண்டவர்களாக‌ மாறி கையசைக்க முடியவில்லை. ரயிலையோ, யானையயோ அல்லது அது ஒத்த பேருருவங்கலையோ பார்ததும் குழந்தையாதல் என்பது ஒரு வரம்.

இது தான் என்னை வியப்படைய செய்தது. என்னுடைய கப்பார்மெண்டில் பொத்தமாக மூன்று பேர் இருந்தோம். நான் படிக்கட்டருகே நின்று கொண்டிருந்தேன், சாலையில் போகிறவர்கள், ரயில் கடப்பதற்காக காத்திருப்பவர்கள் என நிறைய பேரை பார்க்க முடிந்தது, ஏறக்குறைய அனைத்து குழுந்தைகளும் ரயிலுக்கு கையசைத்தார்கள். பெரும்பாலான மனிதர்கள் புன்னையுடன் ரயிலை பார்த்தார்கள். சிலர் கையசைக்கவும் செய்தார்கள். சற்று தூரம் கடந்ததும் மேய்சல் நிலத்தை ரயில் கடந்தது கூர்ந்து கவனித்தேன் அங்கே இருந்த ஒருவர் கூட ரயிலை தவிர்த்து வேறு வேலை செய்யவில்லை. ரயில்விட்ட புதிதில் என்றால் ரயிலை பற்றிய பிரமை இருக்கும் ஆனால் ஒரு வருடம் கடந்த பின்னும் கூட இன்னும் அதன் உருவம் ஈர்க்கிறது என்றால் என்ன சொல்ல. இதற்கு முற்றிலும் எதிரானது சென்னையின் மனநினை

ரயில் கடப்பதை, சென்னை போல சலித்துக்கொள்ளும் ஒரு நகரத்தை நான் பார்த்ததில்லை.குரோம் பேட்டை ஊருக்குள் போகும் சந்திப்பில் சில நிமிடங்கள் நின்று பாருங்கள், வசைகள், கெட்ட வார்த்தைகள் காரி உமிழ்தல் என அத்தனை வெறுப்பையும் கொட்டுவார்கள். பொறுமை அற்றவர்கள் என்று சொல்ல மாட்டேன், அவர்கள் மனிதத்தை எப்போதோ தொலைத்தவர்கள். அவர்களிடம் பேச ஒன்றுமில்லை.

IMG_2509

வண்டி மெல்ல பொள்ளாச்சி தாண்டி உடுமலை வந்தது. அங்கே மகளிர் கல்லூரியில் பின்புரம் ரயில் பாதையோரம் இருக்கிறது. அப்போது மணி ஒரு 5.30 இருக்கலாம் , கல்லூரி விட்ட நேரம் பெரும்பாலன பெண்கள் பூரிப்புடன் கையசைத்தார்கள். சில பெண்கள் உயரத்திலுருந்து கையசைக்க அவரசர அவசரமாக ஏறிக்கொண்டிருந்தார்கள். இது தான் பொள்ளாச்சி வட்டத்தின் எதார்தம் என எனக்கு பட்டது. நாம் ரயிலுக்கு கையசைக்கும் போது ரயிலுக்குள் இருந்து முகம் தெரியாத மனிதன் நம்மை நோக்கி பதிலுக்கு கையசைப்பதை விரும்பாதவர்கள் யார் ?

பொய், அகங்காரம் சூழ்ந்திருக்கும் உலகத்திலுருந்து தன்னை விடுவித்துக்கொண்டு ரயிலை கண்டதும் வேறோர் உலகிற்கு தாவ முடிந்தவர்கள் என்னை பொருத்தவரை ஆசீர்வதிக்கப்பட்டவர்கள். மனிதத்தை தாங்கிபிடிப்பவர்கள் அவர்கள் தான். அப்படி ஒரு நண்பர் உங்களுக்கு இருந்தால் அவருடன் பேசிப்பாருங்கள் வேறோர் உலகிற்கு செல்லும் வழி அது.

Advertisements

slide

ரயில் பயணத்தில் சிறுவன் ஒருவன்
வண்ண கட்டங்களை சேர்க்கும்
விளையாட்டை விளையாடிக்கொண்டிருந்தான்
மஞ்சள், வெள்ளை, பச்சை, நீலம்
ஆரஞ்சு,சிவப்பு என சிதறிக்கிடந்த
நிறங்களில் ஒரே நிறம் கொண்ட
ஒன்பது கட்டங்களை ’ஒரே’
பக்கத்தில் சேர்ப்பதுதான் விதியாம்.
மஞ்சள் நிறம் சேர்க்க சிறுவன்
எத்தனிக்க மஞ்சளுக்கான
போராட்டம் நடந்தது
எங்கெல்லாமோ சிதறிக்கிடந்த
மஞ்சள் நிறத்தை இங்கு கொண்டுவர
இங்கிருந்த மஞ்சள் நிறம்
வேறெங்கோ சென்றிருந்தது
போராட்டம் சீக்கிரம்
நிறைவுருவதாய் தெரியவில்லை
வெகு நேரம் கழித்து மஞ்சளுக்கான
தோல்வியை போலவே நீலத்துக்கும் சிவப்புக்கும்
குளிகை குப்பியை விழுங்கிய பின்
சிறுவன் எடுத்தது வெள்ளை
மீண்டும் வெள்ளைக்கான வேட்டையில்
அனைத்து வெள்ளைக்கும் நடுவில்
சிக்கிகொண்டது ஒரு சிகப்பும், என் மனசும்

If you enjoyed this post, make sure you subscribe to my RSS feed!