Posts Tagged ‘பெண்கள்’

my_girl

எப்படியான ஆண்களை பெண்களுக்கு பிடிக்கும்?

எழுத்தாளுரும் நண்பருமான அபிலாஷ் எப்படியான ஆண்களை பெண்களுக்கு பிடிக்கும் என்பது பற்றி தன்னுடைய வலை பக்கத்தில் எழுதி இருந்தார். அதை பற்றிய என்னுடைய கருத்துகளை இங்கே பதிவிடுகிறேன்.

உளவியல் ரீதியாக ஒருவரை அணுக பிராய்ட் கண்களின் வழிதான்  தொடங்க வேண்டும் என நினைப்பேன். இடியாப்ப சிக்கல்களுக்கு பிராய்ட் எப்போதும் ஒரு உளவியல் தீர்வை வைத்திருப்பார். எதிர்பாலினத்தின் மீதான ஈர்ப்பை வகைப்படுத்தினாலே ஒருவருக்கு எப்படிப்பட்ட குணாதிசயங்களை கொண்டவரை பிடிக்கும் என்பதை ஓரளவு கண்டுகொள்ளலாம்.

ஒரு பெண் குழந்தையின் பாலியல் சார்ந்த ரசனை அதன் குழந்தைமை வயதில் ( 4 – 6 வயது ) தீர்மானிக்கப்படுகிறது ஆச்சர்யமாக இருக்கலாம் உளவியலில்  இதை எலக்ட்ரா காம்ளக்ஸ் என்கிறார்கள். பெரும்பாலும் பெண் குழந்தையின் அருகில் இருக்கும்  ஆணான அவள் அப்பாவை ஒற்றிய ரசனையாக அது அமையும். எதிர் காலத்தில் அப்பா சாயலில், அவரது குண நலன்கள் கொண்ட ஒரு துணையை தேர்தெடுப்பதை அவர்கள் பாதுகாப்பாக உணர்வார்கள். எலக்ட்ரா காம்ளஸ் ஒரு பெண்ணின் உறவுகளை,  பாலியல் விருப்பத்தேர்வுகளை பெரும்பாலும் தீர்மானிக்கிறது. இதனால் தான் வளர்ந்த பின்பும் அப்பா பற்றிய இரசனைகளை பெண்கள் விடுவதில்லை. இதே போல  ஆண் குழந்தைகளுக்கானது ஒடிபஸ் காம்ளக்ஸ்.

இதை மிக‌ எளிமையாக புரிந்து கொள்ளலாம், பெண்கள் திருமணம் முடிந்து, வயதான பின்பும் கூட  புகுந்த வீட்டிலோ, கணவனிடமோ எங்க அப்பா என்ன எப்படி பாத்துக்கிட்டாரு தெரியுமா?  என திரும்ப திரும்ப சொல்வதை நீங்கள் கேட்டிருக்கலாம்.  ஏனெனில் அப்பா என்பவர் அவர்களின் தினசரியை தீர்மானிக்கிறவராய்  இருக்கிறார். அவர் கண்டித்தாலும், கண்டிக்காவிட்டாலும், அந்த மனிதர் பெரும் ஆளுமையை கையில் வைத்திருக்கிறார்., ஆளுமை கொண்ட ஆண்கள் எப்போதும் பெண்களை ஈர்க்கிறார்கள். மகள்கள் கொண்டாடுகிறார்கள்.

ஏன் அவர்களால் அப்பாவை  கொண்டாடுவதை போல அம்மாவை கொண்டாட‌ முடிந்ததில்லை? காரணம் 4 வயதில் இயற்கை அவர்களின் மனதில்   பதித்தவைகள் தான். அம்மா என்பவள் தன்னை போன்ற உடல் கூறு கொண்டவள், அவளிடம் வியப்பதற்கு ஒன்றும் இல்லை. ஆனால் அப்பா என்பவர் அப்படி அல்ல‌,

ஆண்கள் மிகை உணர்ச்சியில் அனுகும் தாய்மையை பெண்கள் அனாயசமாக கடந்து போவார்கள்.  எப்படி இருந்தாலும் ஒரு நாள் தானும் தாய்மையை அனுபவிக்க போகிறவர்கள் தான் என்பது அவர்களின் ஆழ்மனதில் பதிந்திருக்கும்.  அதனால் தான் பெண்கள் பெரும்பாலும் அம்மாவிடம் முரண்படுகிறார்கள். ஆனால் எலக்ட்ரா காம்ளஸ்யை வைத்து மட்டும் ஒரு பெண்ணின் ரசனையை முழுவதுமாக‌ தீர்மானிக்க முடியாது .

பெண் குழந்தைகள் வளர்கிறார்கள், குழந்தைமையிலிருந்து விடுபட்டு பூப்பெய்துகிறார்கள் புறவய காரணிகளான கேளிக்கை, படிப்பு,சினிமா, புத்தக அறிவு,சம கால நிகழ்வுகள், நண்பிகள் என அவர்களின் தளம் விரிவடைகிறது. இது அவர்களின் ரசனைக்குரிய துணையின் பிம்மத்தை கலைத்து ஒழுங்கு படுத்துக்கொள்ளும் காலம். அவர்களின் மனது எதில் ஈடுபாட்டுடன் இருக்கிறதோ அதை சார்ந்த ஒத்த ரசனையுள்ள ஆண் அவர்களை ஈர்க்கிறான்.

வித்யாசமாக படலாம் ஒவ்வொரு பெண்ணுமா தனக்கு துணையான ஆணை கண்டைய சினிமா பார்க்கும் போது, படிக்கும் போதும் சதா நினைத்துக்கொண்டிருப்பாள் என கேட்கலாம், அப்படி இல்லை., ஆனால் ஒரு ரசனைக்குரிய விஷயத்தை பார்க்கும் போதோ , கேட்கும் போதோ ஆழ்மனம் அதன் படிமங்களை திருத்திக்கொண்டே இருக்கும்.

என்றைக்கும் இல்லாம இன்னைக்கு சந்தோஷமா இருக்க, என்ன காரணம்னே தெரியல என ஒரு பெண் உங்களிடம் சொன்னால், அது அவளின் ஆழ்மனம் தனக்கு பிடித்த எதோ ஒன்றை கண்டடைந்த நாளாக இருக்கலாம். இது ஒரு ஆணைபற்றி மட்டுமல்ல, தனக்கு பிடித்த கலை , அறிவியல், இசை என ஏதோ ஒன்றின் கண்ணியை அவர்களின் ஆழ்மனம் அறிந்த நாளாக இருக்கலாம்.  இவ்வளவு ஏன் யாரோ ஒருவர் கோலம் போடுவதை பார்த்து அதிலிருந்து சிக்கலான விஷயம் என்று நினைத்த ஒன்றை  ஆழ் மனம் தெளிவு படுத்திக்கொண்டிருக்கலாம்.

ஆண்களை விட பெண்கள் மகிழ்ச்சியாய் இருப்பதை விரும்புவார்கள். தன்னையும்,  சுற்றி இருக்கும் பொருட்களை அழகு படுத்திக்கொள்வதும் , நேற்று பார்த்த தோழியை இன்று சந்தித்தால் கூட மிகையுணர்ச்சியுடன் கைபிடித்து மகிழ்ச்சி பரிமாறுவதும் இதனால் தான். ஆனால் ஆண்கள் இதற்கு நேர் எதிரானவர்கள் ஒரு ஆண் எதை பற்றியும் சிந்திக்காமல் மணிக்கணக்காக வெறுமனே சும்மாக‌ உக்காந்திருக்க முடியும். அவனுடைய தேவை அது. தேவையா? ஆமாம் தேவைதான்.

இதை கற்காலத்திற்கு போய்தான் புரிந்து கொள்ள முடியும். அடிப்படையில் ஆண் என்பவன் வேட்டைக்காக படைக்கப்பட்டவன், ஆதிகாலத்தில் மனிதர்கள் குகைகளிலும் , பாறைகளிலும் வாழும் போது , ஆண்கள் குழுவாக வேட்டைக்கு   செல்வார்கள்.  இப்போது போல துப்பாக்கிகள், நவீன‌ வலைகள் என வசதிகள் இல்லாத காலம்.  வேட்டை விலங்கை துரத்திக்கொண்டே பல மைல் ஓட வேண்டும், அந்த மிருகம் கலைத்து ஓட முடியாமல் நிற்கும் போது அவர்களின் வில் விலங்கின் இதயத்தை துளைக்கும்(இன்னும் ஆப்பிரிக்க காடுகளில் இந்த முறை உள்ளது விடியோ இணைப்பு). குழுவாக,ஓசை எழுப்பாமல்,சைகைகளில் மட்டும் தகவல் பறிமாறி பதுங்கியிருந்தால் தான் அந்த விலங்கை வேட்டையாட முடியும்.  தேவயற்ற சிறு பேச்சும் சத்தமும் கூட அன்றை தேவைக்கான இரையை தவறவிட காரணமாக அமைந்து விடும், பிறகு குகைகளில் வாழும் தன் மனைவியும், குழந்தைகளும் பட்டினியாய் படுக்கவேண்டியது தான் . இதனால் தான் இயற்கை ஆண்களில் மொழி மையத்தை அளவு குறைவாக படைத்தது.

angel1

பெண்களின் மொழி மையம் ஆண்களை விட பெரியது. பெண்கள் குகைகளில் கூட்டாக இருந்து சக பெண்ணுடன் பேசி தனக்காக நாட்களை போக்கிக்கொண்டனர். ஒரு பெண் ஒரு நாளைக்கு குறைந்தது 3000 வார்த்தைகளாவது பேச வேண்டும் அப்போது தான் அவர்கள் இயல்பாய் இருப்பதாய் உணர்வார்கள். இன்றைய தனிக்குடும்ப வாழ்க்கையில் பேசுவதற்கான வாய்புகளே அற்ற சூழ்நிலையில் அந்த இடத்தை கச்சிதமாய் மெகா சீரியல்கள் பிடித்துள்ளன . மெகா சீரியல் கேரக்டர்கள் பேசிக்கொண்டே இருக்கும் இவர்கள் லயித்து அந்த கேரக்டராய் எப்போதோ மாறி இருப்பார்கள். வேலைக்கு போகாமல் வீட்டிலிருக்கும் பெண்களை சந்தித்த சில நிமிடத்திலேயே மனித உறவுகளை பற்றி விவாதிக்க தொடங்கிவிடுவார்கள். அவர்களுக்கு தெரியும் உறவுகள் எப்போதும் பேச்சை வளர்த்திக்கொண்டே இருக்கும் என.

இதிலிருந்து பெண்களின் ரசனைக்கான குறிப்பு கிடைக்கிறது. அது பேச்சு.  எந்த ஆண் தன்னுடன் சலிக்காமல் பேசுகிறானோ, தான் சொல்வதை “ம்” கொட்டி கேட்கிறானோ அந்த ஆணை பெண்களுக்கு பிடிக்கும். பெரும்பாலன பெண்கள் தனக்கு பிடித்த ஆணை பற்றி இன்னொரு பெண்ணுடன் விவ‌ரிக்கும் போது அவன் ஜாலியா பேசுவாண்டி., டைம் போறதே தெரியாது என்பார்கள். இதை எதிர் முனையில் கேட்கும் பெண்ணுக்கு அது தன் தோழி ஒரு ஆணுடன் பேசுவதற்கான நியாயமான காரணமாய் தெரியும்.

நீங்கள் ஆண்களை இதே கோணத்தில் அனுக முடியாது. ஆண்கள் பெண்களின் அம்சத்துடன் முற்றாய் முரண் படுவார்கள். யார் அதிகாரத்தை பற்றி பேசுகிறார்களோ அவர்களை நோக்கியே ஒரு ஆண் ஈர்க்கப்படுவான். அந்த அதிகாரம் பணம் , உறவுகள் என எதை பற்றி வேண்டுமானாலும் இருக்கலாம். அதிகாரம் என்பது முக்கியம். ஒரு கல்லூரி மாணவனை அழைத்து “ பகுதி நேர வேலையை ( பார்ட் டைம் ஜாப்) பற்றி பேசினால் மாணவியை விட மாணவன் ஆர்வமாகி விடுவான். காரணம் பணத்தின் மூலம் அதிகாரத்தை பெற முடியும் என்பதை அந்த‌ ஆணின் ஜீன் அறிந்துவைத்திருக்கிறது.

எல்லாவகை ஆண் பெண் உறவில் பாலியல் கோணம் இருந்தே தீரும் என்கிறார் பிராய்ட். பெண்களால் முகத்தின் உணர்ச்சிகளை எளிதில் அடையாளம் கண்டு கொள்ள முடியும், அதற்கு பல உளவியல் காரணிகள் இருக்கின்றன. முக்கியமானது பெண்களின் பெரிய மொழி மையம்.

இதனால் தான் பார்த்தவுடன் எளிமையையாக ஒரு ஆணை பெண்களால் இனம் பிரிக்க முடிகிறது.  ஆண் தனதருகில் இருக்கும் போது தன்னை பற்றி என்ன நினைக்கிறான் என்பதை பெரும்பாலும் சரியாகவே யூகிக்கிறார்கள்.  ஒரு உண்மை தெரியுமா?  ஆண் அவள் மீதான காதலை சொல்ல வருவதை 90% பெண்கள் ஏற்கனவே அறிந்து வைத்திருக்கிறார்கள். அந்த அளவு பெண்கள் கூர்மையானவர்கள்.

மேலே சொன்ன எலக்ட்ரா காம்ளக்ஸ் , சூழ்நிலை விருப்பங்கள் இவற்றில் சேராமல் தனித்து இயங்கும் இன்னொரு வகை பெண்கள் இருக்கிறார்கள்.  அவர்கள் சேப்பியோ செக்ஸுவல் (sapiosexual)  பெண்கள்.  ஒரு ஆணை அவனின் புற அழகு, குணாதிஸ்யம், பண்பு என எதை பற்றியும் கணக்கில் கொள்ளாமல் ”அறிவு சார்ந்த ஆளுமையை” மட்டுமே பார்த்து காதல் கொள்வது. இந்த காதல்  வயது வித்தியாசம், பொருளாதாரம் பற்றியெல்லாம்  கவலை கொள்ளாது. ஆணின் அறிவுத்திறன், ஆளுமை இது மட்டும் தான் இவ்வகை பெண்களின் விருப்பத்தேர்வாக இருக்கும். நிறைய சர்ச்சைகளை ஏற்படுத்தியிருக்கிறது இவ்வகை காதல். இந்த வகை பெண்கள் ஆணுக்கு சரியான துணையாய் அவனை உந்தித்தள்ளும் சத்தியாய் இருப்பார்கள். இந்த காதல் மிகை உணர்ச்சியுடன் அனுகப்படும்.

எடுத்துக்காட்டாக‌ கல்லூரி விரிவுரையாளரை அவரின் ஆளுமைக்காக காதலிப்பதும் இதில் சேர்த்திதான், கலை, அறிவியல், விஞ்ஞானம் என ஆற்றல் மிகு துறையின் ஆண்களை நோக்கி இவ்வகை பெண்கள் ஈர்க்கப்படுவார்கள். மேரி கியூரி தொடங்கி இன்போசிஸ் நாரயண்மூர்த்தி வரை அடுக்கிக்கொண்டே போகலாம்.

அபிலாஷ் சொன்னது போல தன்னை சிரிக்கவைக்கும் ஆண் எப்போதுமே பெண்களுக்கு ஈர்ப்பானவன். எதிர்பாலினத்தை சிரிக்க வைக்கும் ஆணை ரசனையின் குறியீடாக பெண்கள் பார்க்கிறார்கள்.

பெண்களின் ரசனை காலத்திற்கு காலம் மாறிக்கொண்டே இருக்கிறது. சங்க காலத்தில் முரட்டுத்தனமான ஆண்மையுடன் , பெண்கள் அனுகுவதற்கே சிரமப்படும் ஆணை விருப்பினார்கள், அதன் பிறகு சாகசங்கள் செய்யும் ஆண் பெண்களின் தேர்வாக இருந்தது, அதன் பிறகு பெல்பாட்டம் அணித்த ஆண்கள், அதன் பிறகு தலைகீழ் ப வடிவ மீசை என நீண்டு கொண்டே போனது.

சமூகம் கல்வியை நோக்கி சார்ந்திருந்த போது கல்வியில் முதலிடத்தில் இருப்பவனை ரசித்தார்கள். பொருளாதாரம் சார்ந்திருந்த போது பொருளாதாரத்தில் நிறைவு கொண்டவன். இரண்டாயிரத்தின் ஆரம்பத்தில் பெண்மையும், ஆண்மையும் கலந்து இருக்கும் ஆண்களை ரசித்தார்கள்  ஆரம்ப கால நடிகர் மாதவன் போன்றவர்களை உதாரணமாக கொள்ளலாம். இப்போது கரண்ட் டிரெண்ட் தாடி வைத்தவர்கள்.

ஆண்கள் வெறுமனே தாடி வைத்துக்கொண்டு குறுக்கும் மறுக்கும் நடக்கிறார்கள் என நினைக்க வேண்டாம். அந்த தாடியை ரசிக்க  ஒருத்தி இரு(க்)ந்திருக்கிளாள். யாரோ ஒரு பெண்ணின் விருப்பம் இன்றைய டிரெண்ட் ஆகிவிட்டது. உண்மையில் ஆண்கள் பெண்களை தேர்தெடுப்பதில்லை. பெண்கள் தான் ஆண்களை உருவாக்கி தனக்கானவனை கண்டடைகிறார்கள்.

இவை எல்லாவற்றையும் விட ஆண்களின் வியர்வை வாசனையில் கவரப்படும் பெண்கள், மேற்கத்திய நாடுகளில் நீலக்கண் ஆண்களால் கவரப்படும் பெண்கள், உயரமாய் இருப்பவரால் மட்டும் கவரப்படும் பெண்கள் என தனி அகராதியே போடலாம். இது ஒவ்வொரு பெண்ணுக்கும் மாறுபடுகிறது. ஒரு ஆண் பெண்ணின் விருப்பத்தேர்வுகளை தெரிந்துகொள்வது கம்பசூத்திரம் இல்லை. அவளை மதித்து, ஒரு ஆண் எப்படி சக ஆணை தன்னுளகிற்குள் ஏற்றுக்கொள்வானோ அதே போல் அவளையும் நடத்தும் போது ஒரு பெண் சோஷியல் சர்கிளில் இருந்து ஒரு ஆணை பர்ஸனல் சர்கிளுக்கு அனுமதிக்கலாம். அப்போது அவளின் விருப்பதேர்வுகளை அவளில் நண்பனான ஆண் பெரும்பாலும் அறிந்திருப்பான்.இது காலகாலமாக நடக்கிறது.

இது அறிமுகமான பெண்களுக்கு சரி., அறிமுகமில்லாத , பார்த்திராத பெண்ணாக இருந்தால்?? அதை இன்னொரு நாள் பார்க்கலாம் 😉

 

Advertisements