Posts Tagged ‘பெண்’

chemistry,love,metaphor,science,clever-605ff9050b2c3c7d60d6738eeeb19ea1_h

பெண்கள் காதலை அணுகுவது பற்றி ஆண்களின் முறைப்பாடு சமீபத்தில் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. தமிழ் திரை உலகில் பெண்களின் காதல் பற்றி காட்டமான விமர்சனங்கள் வர தொடங்கியிருக்கிறது. ஒரு போதும் புரிந்து கொள்ள முடியாதவர்களாக பெண்களை பற்றிய நுண் பிம்பம் மெல்ல விதைக்கபடுகிறது. உண்மையிலேயே இத்தனை தூரம் அலச படவேண்டியவர்களா பெண்கள். காதலை பற்றி இருபாலரும் கொண்டுள்ள பிம்பம் முன்னெப்போதும் இல்லாத அளவு மாறியுள்ளது.கடந்த பத்தாண்டுகளில் இல்லாத அளவு காதலிக்கப்படுவது சர்ச்சைக்குள்ளாயிருக்கிறது.

ஆண்களை நண்பர்களுடன் சேர்ந்து பார்க்கும் போது கூட்டமாக‌ தெரிந்தாலும் அவன் தனியன்.,பெண்கள் அப்படி அல்ல கூட்டமாக இருப்பதில் சற்று பாதுகாப்பை உணருகிறார்கள் இன்னும் நெருக்கம் காட்டுகிறார்கள். காதலின் ஆரம்ப நாட்களில் ஒரு ஆணும் பெண்ணும்  நெருங்கும் போது, அவர்களுடைய‌ நண்பர்கள் தரும் அழுத்தம் சற்றே சிக்கலான‌து, இவர்கள் நண்பர்களின் துணையை பற்றி மிக எளிதில் ஒரு பிம்பத்தை உருவாக்கக்கூடியவர்கள் . ஆண் நண்பர்கள் நண்பனின் காதலி பற்றிய‌ பாலியல் விவரிப்புகளை பெரும்பாலும் தவிர்க்கிறார்கள்., மறுபக்கம் பெண்ணுடைய‌ தோழிகள் ஆணின், நடை, உடை என அனைத்தையும் பந்தி வைக்கிறார்கள். இது ஒரு நாளில் நடந்து விடக்கூடயதல்ல. தொடர் நிகழ்வு. மெல்ல மெல்ல தின சந்திப்புகள், நண்பர் கூடல்கள்,தொலைபேசி உரையாடல்கள் என விரிவடைகிறது. காதலிக்க தொடங்குபவர்களின் மனம் இதிலிருந்து பெரும்பாலும் தனக்கான பிம்பத்தை எடுத்துக்கொள்கிறது. அல்லது ஏற்கனவே அவர்கள் வைத்திருக்கும் பிம்பத்தை திருத்திக்கொள்கிறது . பிறகு உள்ளுணர்வு ஒரிடத்தில் கண்டடைகிறது. ” அவ என்னோட ஆளு ” என்று பொதுவில் பகிர்ந்து கொள்ள தொடங்குகிறார்கள். அவனோ/அவளோ ஒத்திசையும் போது காதல் பூக்கிறது.

அதற்கு பிறகு ஆண்கள் குழம்பிப்போகிறார்கள் பெண்களை ஹேண்டில் செய்வது தெரியாமல். அவளின் அருகாமை பதட்டத்தை தருகிறது, பெண்ணை மிக அருகில் பார்க்கும் போது சமநிலை தவறுவதை உணர்கிறான்.காதலின் ஆரம்ப நாட்கள் அவை. வருடங்கள் கடந்த பின்பும் காதல் பரிமாற படுவதற்கு சற்று முன்னான‌ நாட்களையும், காதலின் ஆரம்ப நாட்களையும் தான் காதலர்கள் பசுமையாய் நினைவு கூறுகிறார்கள்.

பெண் தன்னுடை “Social Distance” யை  தாண்டி ” personal Distance”ல் அவனை அனுமதிக்கிறாள். தன்னுடைய தினசரி பிரச்சனைகள், சந்தோஷங்கள், கஷ்டங்கள் என அனைத்தையும் முறைப்பாடு வைக்கிறாள். பெண்களுக்கு மனதிலுள்ளவைகளை வார்த்தை வடிவமாக்கி வாய் வழி உதிர்த்துவிட்டால் இலகுவானதாய் உணர்வார்கள். அவர்கள் சொல்வதை கேட்பதற்கு உயிருள்ள ஒரு ஆணும் அவனுடைய இரண்டு காதுகளும் போதும். ஆண்களின் வாய்க்கு அங்கே தேவை இருப்பதில்லை. ஆனால் பெண்களின் முறைப்பாடுகளுக்கு ஆண்கள் வரிக்கு வரி தீர்வை முன்வைப்பவர்கள். ” இன்னைக்கு ரேஷ்மா கூட சண்டை” என்றால்., அவ அப்படின்னு முன்னடியே தெரியுமே நீ ஏன் போய் அதெல்லாம் செய்ற?? என்பது மாதிரி. எல்லா பிரச்சனைகளுக்கும் தீர்வு உள்ளது என்பது ஆணின் வாதம்., மனசுவிட்டு பேசுனாக்கூட சும்மா எதுனா சொல்லீட்டே இருக்கிறான் என்பது பெண்களின் தரப்பு.

தேவைப்படும் போதெல்லாம் காதலுக்காக அட்டவனைகளை மாற்றிக்கொள்வது ஆரம்பத்தில் இலகுவாக இருந்தாலும், மெல்ல இருவருக்குமான சமநிலையை அது பாதிக்கிறது. இன்னொருவரின் தினசரிக்குள் நுழைவதை சிரமமாக உணர்கிறார்கள். இப்படி பல காரணங்களால் காதலின் கணம் கூடுகிறது. மென் ஈர்ப்பு தொடர்ந்து பேசிக்கொண்டும், காதல் என்று இவர்கள் கட்டமைத்துக்கொணட பிம்பங்களை முன்நகர்த்தவும் முடிகிறது. ஏதோ ஒரு புள்ளியில் மணல் சரிந்து குமிழ் உடைகிறது,மெல்ல இருவருக்குமான தர்கங்கள் தனித்து நிற்க வைக்கிறது., சிறு கோரிக்கை நிராகரிப்பும் எரிச்சலடைய செய்கிறது.நீர் விலகுவதை போல முதல் சண்டையில் விலகுகிறார்கள்., பெரும்பாலும் ஆண்கள் இந்த பிரிவை வார்ததைகளால்  ஒட்டவைத்து விடுவார்கள், ஆனால்  சமாதானப்புறா பெண்கள் பக்கத்தில் இருந்து பறக்க விடவேண்டும் என எதிர்பார்ப்பார்கள். அடுத்தடுத்து சண்டை.,சேர்தல்., ஊடல் என காதல் நக‌ரத்தொடங்கியிருக்கும்.

பாலியல் பற்றி வெளிப்படையாக‌ பேசிக்கொள்ளவில்லை என்றாலும் கூட அந்த கணங்கள் வரும் போது அவசர அவசரமாக கடப்பார்கள். பிறகு கடந்து விட்ட கணத்தை அசைபோடுவார்கள். எதிர் பாலினத்தின் மீது தனக்காக நியாயங்களை உருவாக்கிக்கொள்ளக்கூடிய காலமிது. பேச்சிலும், அருகாமையிலும் பரிமாறிக்கொள்ளப்படாமல் இருந்தாலும்., காமம் அதன் அத்தனை கூர் முனைகளையும் தீட்டி வைத்திருக்கும். ஒரு சிறுதுகள் அப்பெரும் திரைசீலையை இரண்டாக கிழிக்கும்.

ஒருவர் மீது ஒருவருக்கு இருக்கும் உரிமைகளை கட்டளைகள் / விண்ணப்பங்கள் மூலம் உறுதி படுத்திக்கொள்கிறார்கள். பெரும்பாலும் பெண்ணை தனக்காக பொருளாக ஆண்கள் நினைப்பது இந்த காலகட்டத்தில் தான் ஆரம்பமாகிறது. ஆணாதிக்கத்தின் முதல் புள்ளியை  பெண்கள் விரும்பியே ஏற்கிறார்கள்.  யார் கூட பேசின? ஏன் இவ்ளோ நேரம் ? அன்னைக்கு ஒருத்தர் கூட பேசினயே அது யாரு ? என கேள்வியின் தொடக்க எண்களை  இருவரும் தொடங்குகிறார்கள்.ஆணின் கைகளுக்குள் சிறு பூனைகுட்டிபோல் வெதுவெதுப்பாய் உணருகிறேன் என்று கவிதையாய் கூட பெண்கள் சொல்லக்கூடும்

கேள்விகளுக்கு சரியான பதிலோ/விள‌க்கமோ கொடுத்தாலும் கூட ஏதோ ஒன்று குறைவதை ஒப்புக்கொள்கிறார்கள். இதில் ஆண்கள் கொஞ்சம் மேலே போவதை இயல்பாக காணலாம், ஏன் டிரஸ்ச இப்படி போடற ? அப்பா கிட்ட சொல்லு இனி மாமா கூட வெளிய அனுப்ப வேணான்னு.,அந்த பிரண்ட கட் பண்ணு? இந்த பிரண்ட வெச்சுக்கோ., இத்தன மணிக்கு சாப்டு.,  என ஏகத்துக்கும் ஏத்துவார்கள்.,  பிறகு மிக நாசூக்காய் அவளின் அத்தனை ஆண் நண்பர்களையும் வெறுக்க சொல்லித்தருவார்கள். possessiveness என்ற வெத்து போர்வைக்குள் அத்தனை குருரத்தையும் இருவரும் நிகழ்த்திப்பார்க்கிறார்கள்.

இதில் மனமுடைந்து , ஒத்து வராது என்று பிரிந்து போன காதல்கள் ஓரளவு பரவாயில்லை. கொஞ்சமான மன தாக்கத்துடன் அதிக வெறுப்பை சேர்த்துக்கொள்ளாமல் பிரிந்து விடுகிறார்கள். அதன் பிறகும் சண்டைகள், சமாதனங்கள் என தொடரும் காதலின் துயர நதி நீளமானது. மெல்ல தலைதூக்கும் தினசரி பிரச்சனைகள் ஒருபுறமிருக்க, இடைவெளியில் இந்த காதல் பொதுவெளியில் தெரிய அவர்கள் கொடுக்கும் புறவய அழுத்தங்கள்., நண்பர்கள்., குடும்பம், சமூகம் என அனைத்தும் சேர்ந்து ஒரு “template” அழுத்தத்தை கொடுக்க ஆரம்பித்திருப்பார்கள். நண்பர்கள் தனக்கான முக்கியத்துவம் / நேரம் ஒதுக்கவில்லை என்றும், பெற்றோர் தங்கள் பிள்ளைகளின் பரஸ்பர அன்பு பரிமாற்றத்தின் மாறுதல்களையும் பற்றியும் அங்கலாய்த்துக்கொள்வார்கள்.

il_fullxfull.206454089

தன் மகன் காதலிப்பது தெரியும் போது தந்தை பெரும்பாலும் ஒரு குறுகுறுப்புடன் அதை கடந்து செல்கிறார், அம்மா தன் மகனுடைய காதலியை ஆரம்பத்தில் தள்ளிவைத்தே பார்க்கிறார். தன்னை பொறுத்தவரை மகன் தனக்கு மட்டுமே கடமைபட்டவன் ,அவனை அத்தனை எளிதாக விட்டுவிட முடியாது. தன் மக‌னின் காதலியை பற்றிய  உடல் பிம்பத்தை அசைபோட்ட படியே இருப்பாள். தனக்கு தானே நிகழ்த்திப்பார்க்கும் ஒப்புமை. தன் மகன் கண்டையப்போகும் பெண்ணுடல் என்பது அவளை பதட்டமடைய செய்கிறது. அவளும் அவ மூக்கும்.., அவ உனக்கு வேண்டான்டா கிருஷ்ணா எனபது போல முன்தயாரிப்பு பதில்கள் இதனால் தான் வருகிறது.

இந்த காலத்தில் காதல் அதன் ஆரம்ப ஈர்ப்பும்/பரபரப்பும் தாண்டி சற்றே தணிந்திருக்கும்., எதேச்சையாக‌ சண்டைகளின் வார்த்தையால் பெண் திரும்ப தாக்க தொடங்கும் போது ஆண் மிகப்பெரும் மன அழுத்தத்திற்கு உள்ளாகிறான். வார்த்தை பொட்டலங்கள் சிதறடிக்கப்படுகின்றன. கண நேரத்தில் காதல் அதன் அத்தனை அழகியலையும் இழக்கிறது. இருவரும் தனக்கான நியாங்களின் மேல் தன்னை கட்டமைத்துக்கொள்கிறார்கள்.

அனல்காற்றில் ஜெயமோகன் இப்படி எழுதியிருப்பார் ” சுசி, உனக்கு வசைபாடவும் சாபமிடவும் பழக்கம் இல்லை. ஆண் மனதின் நுண்ணிய மென்பகுதியில் அறைவதற்கு நீ கற்றிருக்கவில்லை.  அது ஆணுடன் நெருக்கமாக பழகிப் பழகி பெண்கள் கற்றுக்கொள்வது “

அப்படித்தான்  தனக்கான ஆணுடன் நெருக்கமாக பழகிப் பழகி  அவனின் நுண்ணிய பென்பகுதியில் அறைய கற்றுக்கொள்கிறாள். ஒரு வார்த்தை போதும் அந்த நாளையே கசக்கிப்போடுவதற்கு. ஒரு வார்த்தை போதும் அவனை சுக்குநூறாய் உடைப்பதற்கு., தன்னால் அந்த பெண்ணை ஹேண்டில் செய்ய முடியாது என ஆண் உணரும் தருணம் தன்னுடைய உச்சகட்ட வெறுப்பை வார்த்தைகளாக மாற்றி காட்டுகிறான்.இது அவனுக்கு எளிதானதும் கூட. அதுதான் சமீபத்தில் வந்த அடிடா அவளை., உத‌டா அவளை., வெட்றா அவளை போன்ற வரிகள் கொண்ட பாடலை ஒரு தலைமுறை இளைஞர்கள் அனைவரையும் கொண்டாட தூண்டியது.பெண்ணுடல் மீதான் தீராத வெருப்பை கொண்டாடி தீர்த்தார்கள். வரிகளுப்பின்னான உளவியல் கொண்டாடத்தின் தொடக்கப்புள்ளியை கொடுத்தது. திரும்ப திரும்ப பெண்களை நம்பிக்கை அற்றவர்களாக ., ஏமாற்றும் பேர்வழிகளாக.,உறவின் முறிவிற்கு முதற்காரணமாக முன்வைக்கப்படும் வரிகளை இளைஞர்கள் இத்தனை உற்சாகமாக தனக்குள் தேக்கி வைப்பதை இதற்கு முன் கண்டதில்லை. காதலின் அழகியலையும் தாண்டி, காதலின் தோல்வியும் மதுவும் காதலின் கொண்டாட்ட பொருட்களாகின்றன.

ஆண்களின் வெளி உலகை பெண்களும், பெண்களின் அக உலகையும் ஆண்களும் புரிந்து கொள்வது சற்று சிரமமான காரியம் தான். ஆனால் இவர்கள் கட்டமைப்பது போன்று முடியாத காரியம‌ல்ல .காதலில் ஆண்கள் மீது வைக்கப்படும் மிகப்பெரும் குற்றச்சாட்டு “ஆண் தன் அக உலகை பகிர்ந்து கொள்ளவில்லை என்றுதான் “மற்றபடி அவன் முரடனோ, மணிக்கொருமுறை முத்தம் கேட்கிறானோ என்பதல்ல. மனித உறவுகளை புரிந்து கொள்வது உங்களை நீங்கள் புரிந்து கொள்வதை போன்று. அது எதை தருகிறதோ இல்லையோ நம் சுய‌ பிம்பங்களை கலைத்துப்போட்டு நேர்படுத்திக்கொள்ள‌ உதவும்.

பெண்களை அவர்களாகவே விடவேண்டும் என்று நினைக்கிறேன்.பெண்களே இதை விரும்புவார்களோ என்னமோ தெரியாது பெரும்பாலும் பெண்கள் ஆண்களின் அருகாமையில் தன்னை பாதுகாப்பாக உணர்கிறார்கள் என்பதை தாண்டி ஒரு மண்ணாங்கட்டியும் கிடையாது. ஆனாலும் அவர்கள் தனித்தே இயங்க‌ வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். சமீபகாலத்தில் பெண்னை தனக்கு சமமாகவோ, இல்லை தன்னை சற்றெ முன்நகர்த்தும் ஆளுமை கொண்டவர்களாகவோ இருப்பது ஆணின் விருப்பத்தேர்வாக இருக்கிறது. என்னோட ஆளுக்கு கார் ஓட்ட தெரியும், என்னோட ஆளுக்கு ஷேர் மார்கட்  தெரியும் என்று சொல்வது ஆண்கள் மத்தியில் ஒரு ஈர்ப்பாக கருதப்படுகிறது. குறைந்த பட்சம் வீதி முனைல நிக்கற நீங்க வந்து கூட்டீட்டு போங்க என்று சொல்லாமல், தனியாக வழி கண்டுபிடித்து வர வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள்.

ஒவ்வொருமுறை நண்பர்களுடன் காதலை பற்றி விவாதிக்கும் போது திரும்ப திரும்ப எதிர்கொள்ளும் ஒரு கேள்வி ” அப்ப அவ உன்ன விட்டுட்டு இன்னொருதற லவ் பண்னா ஒத்துப்பயா ” என்று. வார்த்தைகளை மென்மைபடுத்தியே பதிலளிக்கிறேன் எனக்கு ஆட்சேபனை இல்லை என. நண்பர்கள் என்னை விநோதமாக‌ பார்க்கிறார்கள். அப்படினா நீ அவள உண்மையா லவ் பண்லனு அர்த்தம் என்கிறார்கள்.உண்மையில்  உண்மையான காதலுக்கு என்று எந்த வரைமுறையும் இவர்களால் சொல்லப்படுவதில்லை.

காதலிக்கிறேன் என்று சொன்ன வார்தைக்காக தனக்கு பிடித்த நண்பருடன் உணவை பகிர்ந்து கொள்வதோ உணர்வை பகிர்ந்து கொள்வதோ தவறு என்று முன்முடிவிடுவது ஒழங்கின்மையின் வெறியாட்டம். ஒரு பெண் காதலன் தவிர்த்து ஆண் நண்பருடன் பேசுவது அப்படி ஒன்றும் நம்பிக்கையை சிதறிப்போகக்கூடிய செயல் அல்ல. அவனுக்கோ/ அவளுக்கோ தன்னைவிட இன்னொருவர் சிறந்தவராக தெரியும் போது காதலில் இருந்து முழுமையாக‌ விடுவித்து  திரும்பிபோக முழு சுதந்திரம் கொடுக்கப்பட‌ வேண்டும். இறுக்கி பிடித்துக்கொண்டு காதலிக்கலாம் காதலிக்கலாம் என்பதை விட., இலகுவாய் உனக்கு நானும் எனக்கு நீயும் பாரமல்ல என்று புரிந்து கொள்ளும் காதல் வசீகரமானது., அன்பை தவிர வேறு அழுத்தங்கள் இல்லாத காதல் அதன் அத்தனை வேதியல் கூறுகளுடன்  காதலின் உட்சபட்ச அழகியலை அடைகிறது.  அது நீங்கள் வரையறை செய்யும் எல்லா பைத்தியக்காரதனங்களையும் உள்ளடக்கியது. அவனோ/அவளோ கொண்டாடத்தின் திடப்பொருளாகின்றார்கள்.

பொருளாதாரம் சார்ந்தோ வேறு புறவய காரணிகளை ஆதாரமாய் கொண்டு கட்டமைக்கப்படும் காதல் அதன் ஆரம்பத்திலேயே நம்பிக்கை பின்னல்களை இழக்கிறது. நம்பிக்கை என்ற ஒற்றை வார்ததையின் மீது நிலைநிறுத்தப்படுவது தான் காதல் என்றே அர்த்தப்படுத்திக்கொள்ளலாம். புறவய காரணிகளை  ஆதாரமாக வைத்து  கட்டமைக்கபடும் காதல் பெரும்பாலும் அந்த கண நேரம் கடந்தவுடன் வெற்று விருப்பக்கற்பனை என்று தெரிந்துவிடும், இதில் அபூர்வமாக சில காதல்கள் காதலுக்கே உரிய “Madness” தொற்றிக்கொள்கிறது.அந்த “Madness ” காதலை அதன் வழியில் இயக்கிக்கொள்ளும்.

ilchemistry275

இப்படி இடியாப்ப சிக்கல்களையும் பிரச்சனைகளை தாண்டித்தான் உலகம் முழுக்க காதலர்கள் இணைகிறார்கள் என்பதே அதன் ரசனையியல் பிரமிப்பு. புரிந்துகொள்ளப்பட்ட காதலை காணும் போது புத்துணர்ச்சி ஆகிவிடுகிறேன் . அவர்கள் அந்த நாளையே ரசனைக்குரியதாக மாற்றிவிடுகிறார்கள். புரிந்துகொள்ளப்பட்ட காதலர்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்.  திரும்ப திரும்ப நினைத்துப்பார்க்கப்பட வேண்டியவர்கள் அவர்களே. மனிதனின் ஆதாரத்தை கண்டு கொண்டவர்களும் அவர்களே.

தொலைக்காட்சியில் ஆடுபவர்களிடம் கெமிஸ்டிரி கெமிஸ்டிரி என இவர்கள் அங்கலாய்பதன் அபத்தம் அப்போது புரியும். புரிதலும் அன்பும் காதலும் வாழ்க்கையை அழகாக்குகின்றன. புரிந்துகொள்ளப்பட்ட ஒரு துணையை கண்டடைவதைதான்  யோகம் என்கிறோம். உங்கள் இருவருக்குமான காதல் அப்படி ஒரு வேதியல் மாற்றத்தை உருவாக்கினால் இப்பூமியில் நீங்கள் நிகழ காத்திருக்கும் ஒரு அற்புதம்.

Advertisements

என்னமோ தெரிய‌வில்லை உங்களுக்கு க‌டித‌ம் எழுத‌ வேண்டும் போல் உள்ள‌து. என்னுடைய‌ க‌டித‌ங்க‌ளை சிர‌த்தையுட‌ன் வாசிப்ப‌வ‌ர்க‌ள் யாரேனும் உள்ள‌ன‌ரா என்பதில் அச்சமூட்டும் பயம் இருந்துகொண்டுதான் இருக்கிறது . நீங்க‌ள‌ இருக்கிறீர்க‌ள் என்ற நினைவின் துவாரங்களில் மெல்ல‌ என்னை ஆசுவாச‌ப்ப‌டுத்திக்கொள்கிறேன்.

மிக நீண்ட பயணங்களின் முடிவில் யாரையாவ‌து ஒருவ‌ரை ச‌ந்திக்கிறோம். ப‌ய‌ண‌ங்க‌ளின் த‌னிமையும் சோர்வையும் நீங்கள் எப்போதும் அறிவ‌தில்லை பிர‌ப‌ஞ்சிதா. ப‌ய‌ண‌ம் என்ப‌தே யாரோ ஒருவ‌ரை ச‌ந்திப்ப‌த‌ற்குதானே. இல‌க்க‌ற்ற‌ ப‌ய‌ண‌ங்க‌ளின் முடிவிலும் கூட‌ யாரோ ஒருவ‌ரை ச‌ந்திக்கிறேன். பெரும்பாலும் அவர் ஒரு டீக்கடைக்காரராக இருக்கிறார்.

50 ரூயாய்க்குள் ப‌ய‌ண‌த்தை முடிக்க‌ வேண்டும் என்ற‌ நாட்க‌ளில் அருகில் உள்ள‌ பேருந்து நிறுத்த‌த்திற்கு வ‌ரும் 7வ‌து பேருந்தில் என்னை துணித்துக்கொள்கிறேன். அதிக‌ப‌ட்ச‌மாக‌ 15 ரூயாக்கு ப‌ய‌ண‌ச்சீட்டு, இற‌ங்கிய‌ நிறுத்த‌த்தில் மீண்டும் 7வ‌தாக‌ வ‌ரும் பேருந்திற்கான‌ காத்திருப்பு என‌ இல‌க்க‌ற்ற‌ ப‌ய‌ண‌ங்க‌ளில் என் நாட்க‌ளை நிறைத்துக்கொள்கிறேன். அது என்ன‌ 7வ‌து பேருந்து என்று கேட்காதீர்க‌ள் 7வ‌து பேருந்து அவ்வ‌ள‌வுதான். அந்த‌ 7வ‌து பேருந்திற்காக‌ 7 நாட்க‌ள் காத்திருந்த‌ நாட்க‌ளும் உண்டு ஏனென்றால் அந்த‌ கிராம‌த்திற்கு ஒரு நாளில் ஒருமுறை ம‌ட்டுமே வ‌ரும் பேருந்து அது.

கையில் 50ருபாய் வைத்துக்கொண்டு எப்ப‌டி 7 நாள் க‌ழிப்ப‌து. க‌ழித்திருக்கிறேன் உங்க‌ள் நினைவுக‌ளோடு. சுளுக்கென்ற‌ பார்வையோடு ” உன்ன‌ய‌ யாரு இங்க‌ வ‌ர‌ சொன்னா” என்ற‌ கேள்வியில் அந்த‌ விமான‌ நிலைய‌த்தில் என்னை விட்டுச்சென்றீர்க‌ள். உங்க‌ளை ஏற்றிச்சென்ற‌ விமான‌ம் தூரச் சென்று வானில் புள்ளியாய் ம‌றையும் வ‌ரை பார்த்துவிட்டு வீடுசேர்ந்தேன்.

அன்று பிடித்துக்கொண்ட‌து இந்த‌ ப‌ய‌ண‌ங்க‌ளில் மீதான‌ விருப்ப‌ம். அன்று ந‌ண்ப‌னிட‌ம் க‌ட‌ன் வாங்கி 3876 ருபாய் வைத்திருந்தேன். அத்தனைக்கும் ப‌ய‌ண‌ம் தான் அதே 15 ருபாய் ப‌ய‌ண‌ச்சீட்டு தான். இர‌ண்டு மாத‌ம் க‌ழித்து அறைக்கு திரும்பிய‌ அன்று ஆளே உறுமாறிப்போயிருப்ப‌தாக‌ வாட்ச்மேன் சொன்னார்.

இப்போது அதுவ‌ல்ல‌ பேச்சு, நீங்க‌ள் எப்ப‌டி இருக்கிறீர்க‌ள்? ஒருமுறை என்னை அழைத்து பேருந்தில் ப‌க்க‌த்தில் உட்கார‌ சொன்னீர்க‌ளே நியாப‌க‌ம் இருக்கிற‌தா? அந்த‌ இருக்கைக‌ள் ஆசீர்வ‌திக்க‌ப்ப‌ட்ட‌து. நீங்க‌ள் ஏன் என்னை புரிந்து கொள்ள‌வில்லை பிர‌ப‌ஞ்சிதா? க‌லைந்த‌ முடியும், அழுக்கு ஜீன்சும், கையில் ஒரு வ‌ளைய‌ம் என்றிருப்ப‌வ‌ர்க‌ளுக்கு நீங்க‌ள் காட்டும் ம‌ரியாதையோ புன்சிரிப்போ நான் எதிர்பார்க்க‌வில்லை. நீங்க‌ள் என்னை புரிந்து கொள்ள‌ முய‌ற்சி கூட‌ செய்ய‌ ம‌றுத்தீர்க‌ள். உங்க‌ளை ப‌ற்றி குறை சொல்வ‌தால் இந்த‌ க‌டித‌ம் நீர்த்துப்போகிற‌து. சாராய‌ம் ஆவியாகிற‌து என்முன்னே.

உங்க‌ள் பிரிவிற்காக‌ ஒருபோதும் சாராய‌ம் குடித்த‌வ‌ன‌ல்ல‌. நீக்க‌ முடியாத‌ த‌னிமையில் உச்ச‌த்தில் காதுக‌ளுக்குள் பேரிரைச்ச‌ல் கேட்க‌ ஆர‌ம்பிக்கிற‌து,சாராய‌ம் தேவைப்ப‌டுவ‌த‌ற்கான‌ அனைத்து ச‌ம‌ர‌ச‌ முடிவுக‌ளையும் அந்த‌ பேரிரைச்ச‌ல் கொண்டுவ‌ந்துவிடுகிற‌து. அந்த‌ ச‌த்த‌த்தை நான் விரும்பியிருக்கிறேன் அத‌ற்குள்ளாக‌ உள்ளாக‌ உள்ளாக‌ உள்ளாக‌ சென்றால் உங்க‌ள் பெய‌ரே பாறைக‌ளில் பட்டு பிர‌திப‌லிப்ப‌து போல் பிர‌ப‌ஞ்சிதா பி ர‌ ப‌ ஞ் சி த்த்த்த்த்த்த் தா என்று கேட்டுக்கொண்டேயிருக்கிற‌து. இல்லை என்றால் நான் அப்ப‌டி ந‌ம்ப‌‌ துவ‌ங்கியிருக்கிறேன். தனிமையின் பின்னிர‌வில் இந்த‌ பெய‌ர் கூச்ச‌ல்க‌ளை க‌ண்டுகொண்டேன். இவை என்னை விட்டு நீங்க‌க்கூடாது என்றும் விரும்புகிறேன்.

என்னை அழைத்து ப‌க்க‌த்தில் அம‌ர‌ சொன்ன‌ நாளின் நினைவுக‌ளை எடுத்துப்பார்க்கிறேன். அந்த‌ பேருந்து இப்போது எங்கே சென்றுகொண்டிருக்கும், எதாவ‌து நிறுத்த‌த்தில் நின்று கொண்டிருக்குமா? என்னை போல‌வே ப‌ரித‌விப்புட‌ன் யாராவ‌து ஒருவ‌ர் அந்த‌ பேருந்தில் ஏறியிருப்பார்க‌ளா? இன்னும் அந்த‌ பேருந்து அதே பாதையில் தான் சென்றுகொண்டிருக்கிற‌தா? நாம் இற‌ங்கிசென்ற‌ பின் யார் அந்த‌ இருக்கையில் அம‌ர்ந்தார்க‌ள்? அத‌ற்கு முன் யார் இருந்து உங்க‌ள‌ருகில் என‌க்கான‌ அந்த‌ காலி இருக்கையை விட்டுச்சென்ற‌து . அவ‌ர்க‌ளுக்கும் என‌க்கும் என்ன‌ ச‌ம்ப‌ந்த‌ம், வாழ்வின் மீப்பெரிய‌ அழ‌கின் த‌ருண‌த்தை என‌க்காக‌ கொடுத்துச்சென்ற‌வ‌ரின் பெய‌ரோ முக‌மோ எதுவுமே தெரிய‌வும் நினைவிலும் இல்லையே ஏன்? வாழ்வின் மிக அழகிய தருணங்கள் நாம் உணர்வது முன்பே நம்மை விட்டு கடந்து செல்கின்றனவா?

அன்றைய‌ ப‌ண‌ச்சீட்டு ப‌த்திர‌மாக‌ இருக்கிற‌து. சிற‌ப்பான‌ அந்த‌ ப‌ய‌ண‌த்தில் என‌க்காக‌ ப‌ண‌ச்சீட்டை கொடுத்த‌வ‌ருக்கு ந‌ன்றி சொல்ல‌ வேண்டும்,அதை அச்ச‌டித்த‌வ‌ருக்கு ந‌ன்றி சொல்ல‌ வேண்டும். உங்க‌ள் அருகில் அம‌ர்ந்த‌ த‌ருண‌த்தில் யாராவ‌து ஒருவ‌ர் ந‌ம்மை காத‌ல‌ர்க‌ள் என்று நினைத்திருப்பார்க‌ளே , அப்ப‌டி நினைத்த‌வ‌ர்க‌ளிட‌ம் கேட்ப‌த‌ற்கு என‌க்கு 46 கேள்விக‌ள் இருக்கின்ற‌ன‌. அத்த‌னையும் என்னுடைய‌ டைரி குறிப்பில் குறித்திருக்கிறேன் பிர‌ப‌ஞ்சிதா.

நல்ல மழை இரண்டு வாரமாக. சில்லிடும் தரை இதோ உங்களை நினைத்துத்தான் படுத்துக்கொண்டிருக்கிறேன். பெரு நகரத்தின் ரயில் சத்ததம் பெருகி பின் கணம் குறைந்து என்னறையிலேயே இருப்பது போல உணர்கிறேன். அன்றும் அப்படித்தான் உங்கள் நினைவுகளுடன் குளித்துக்கொண்டிருந்தேன். இதே ரயில் சத்தம்  அப்போது தான் முதன் முறை நீங்கள் அழைத்தீர்கள்.

அத்தனை தாள லயத்துடன் , ஒரு பெண்ணின் நுண் அதரங்களில் அதிர்ந்து பின் வாயிலிருந்து உதிர்ந்துவிழும் என் பெயரை அப்போது தான் முதன் முறை கேட்கிறேன். என்ன பேசுவதென்றே தெரியாமல் நமத்துப்போயிருந்தேன். நீங்கள் தான் என்னை இயல்பிற்கு மீட்டுக்கொண்டுவந்தீர்கள். ஆங்கிலத்திலேயே உங்களை நிறைத்துக்கொண்டீர்கள். ஆங்கிலத்தின் நம்மிருவரின் நீண்ட உரையாடலுக்கு பிறகு நான் தான் முதலில் கேட்டேன் தமிழ்ல பேசலாமா.! சற்றே சிரித்துக்கொண்டு சொல்லுங்க என்றீர்கள்.ஆங்கிலத்தில் உரையாடுவது என்பது நிழலில் தெரியும் நம் உருவம் போல கண்களுக்கு தெரியும் ஆனால் தொட்டு உணரமுயாது.  ஆங்கிலம் தாண்டி தமிழுக்கு வருவதற்கு நான் எடுத்துக்கொண்ட இடைவெளியில் என் படபடப்பு முற்றிலுமாக கரைந்து போயிருந்த்து.

என்னை பற்றி சொல்லிமுடியும் வரை காத்திருந்தீர்கள், உங்களை பற்றி ஆங்கிலத்தில் தான் சொன்னீர்கள்.

உணர்வுகளை சலனப்படுத்தும் வார்த்தைகளை ஆங்கிலத்தில் எளிதில் கடந்து விடலாம். அன்றும் அப்படித்தான் பேசினீர்கள்.

அச்சகத்தில் பிழைதிருத்தும் பணி நீங்கள் முகம் சுழித்தது போல கேவலமான தொழில் அல்ல. அது என் தொழில் என் வாழ்வாதாரம். பிழை திருத்துனனுக்கு நுண்ணுர்வு வேண்டும், ஆழ்ந்த அமைதி வேண்டும் அது யாருமற்ற கடற்கரையில் நண்டுகள் எழுப்பும் சத்தம் போன்றது. அந்த அமைதியை கிழித்துக்கொண்டு தான் நீங்கள் எப்போதும் வருவீர்கள். உங்கள் வாகனத்தின் பின்னிருக்கை இலகுவானது,தாண்டுக்கால் போட்டு உட்காரும் போது எந்த வித சலனத்தையும் எனக்கு தராது.

உங்கள் ஆண் நண்பர்களும் தோழிகளும் ஒரே அறையில் இருந்தார்கள், நண்பர் என்று அறிமுகம் செய்வீர்கள் என்று நினைத்தேன் தெரிந்தவர் என்று தான் அறிமுகப்படுத்தினீர்கள்.

ராம்கிட்ட மணி(money) வாங்கிக்கோ, அவன் என்ன சொல்றானோ அத கொஞ்சம் செஞ்சுறே என்றீர்கள், உங்கள் அனைவருக்கும் பியரும், வோட்காவும் , பிரியாணியும் வாங்கி வந்தேன். சிகரெட் புகையால் நிரம்பியிருந்த அறையில் சுஷ்மாதான் சொன்னாள் உன்னோட ஆளுக்கு தான் வோட்கா என்றாள், அதன் பிறகு ஏற்பட்ட சிரிப்பு அலைகள் அலையலையாக அடங்குவதற்கு நீண்ட நேரம் எடுத்துக்கொண்டது. அவமானத்தின் வார்த்தை ஜாலங்கள் எனக்கு அத்துப்படி. மிக நீண்ட நாட்களாக அவைகளை எனக்குள் பத்திரப்படுத்தி வைத்திருக்கிறேன்.

நீ ஸ்மோக் பண்ணுவயா என்றீர்கள், இல்லை என்று தலையாட்டிதற்கு ஒரு புன்னகையை வீசி  விட்டு போனீர்கள் பிரபஞ்சிதா, அவமானங்களால் நிறைந்த வாழ்க்கையில் நீங்கள் என் அக உலக பிரபஞ்சத்தின் அழகி. நீங்கள் எப்போதுமே என்னை புரிந்து கொள்ள முடியாது.

அனைத்தும் முடிந்ததும், அறையை சுத்தம் செய்தேன், இதை நீங்கள் சொல்லவேயில்லை அனைவரும் சென்ற பின் நீங்கள் தானே இதை செய்ய வேண்டும் அதனால்
தான் நானே அதை எடுத்துக்கொண்டேன், நிதானமாக நாம இன்னொருநாள் பார்க்கலாம் என்று சொல்லி அனுப்பினீர்கள்.நிராகப்படுதலின் கடைசியறையில் நின்றிருந்தேன் பிரபஞ்சிதா.

எனக்கென்று எதையும் கேட்டுப்பெறுபவன் அல்ல. மிக நீண்ட பயணத்தின் முடிவில் ஏற்படும் தீர்க்க முடியாத வெற்றிடத்தின் அமைதி என்னை சூழ்ந்திருக்கிறது. நீங்கள் கொண்டாடத்தின் திடப்பொருள், என் கண்கள் வழியே நீங்கள் இன்னும் அழகாகிக்கொண்டிருக்கிறீர்கள்.
நீங்கள் குடிக்கும் வோட்காவின் வாசம் ஒரு போதும் உங்களை குறைவாக காட்டியதில்லை. போதையின் உச்சத்தில் என் கையை குழிவாய் நீட்ட சொல்லி அதில் கிகரெட் சாம்பலை தட்டினீகளே அப்போதும் உங்கள் அன்பில் மீதாக சிறு சலனம் கூட ஏற்படவில்லை.

ஆழ்ந்த மூச்சை இழுத்துக்கொள்கிறேன்,நீங்கள் என்னை மெஸ்மரிசம் செய்திருக்கிறீகள். என் நண்பர்கள் நினைத்துக்கொள்ளலாம் நான் மனச்சிதைவு  கொண்டவன் என, எனக்கும் தெரிகிறது , ஆனால் அப்போது வரும் கோபத்தின் கணங்கள் மெல்ல அடங்கிவிடுகிறது உங்கள் அழைப்பில். நான்கு முறை கண்ணத்தில் அறைந்திருக்கிறீகள்,  ஜீன் மாதம் தவிர அனைத்து வார இறுதி நாட்களிலும் உங்களுக்கு பியர் வாங்கி தந்திருக்கிறேன்

நான் இப்போதும் கேட்டுப்பெறுவது உங்கள் பியர் நண்பர்களின் கரிசனம் அல்ல., என் அன்பின் புரிந்து கொள்ளுதல்.சக மனிதனை உணர்ந்து கொள்வது வாழ்வின் மிக அற்புதமானது., நாமே உணரும் முன் அந்த தருணம் நம்மை கடந்து செல்கிறது. இலையின் நுனியிலிந்து நீர்க்குமிழ் கரைந்து போவது போல நம்மை சுற்றியே நடக்கும் நாம் உணராத தருணத்தில்.அது போல ஒரு தருணத்திற்காக தான் காத்துக்கொண்டிருக்கிறேன். சாராயத்தின் கடைசி மிடறு இன்னும் அதிகமாய் கசக்கிறது.

அயல் தேசம் எப்படி இருக்கிறது ? சமரசம் செய்து கொள்ளாத அனைத்து விஷயங்களையும் அயல் தேசம் நெகிழ்த்து விடுகிறதுதானே., நான் உங்களை கொண்டாடுகிறேன். என் சந்தோஷத்தின் திடப்பொருள் நீங்கள். மிக நீண்ட தூரத்தில் இருக்கிறீர்கள். உடம்பை பார்த்துக்கொள்ளுங்கள்.  வெளியே இப்போது தான் தூவானம் ஆரம்பித்திருக்கிறது. இனி மெல்ல தொடங்கும் இப்பருவ மழை.  நான் நனையப்போகிறேன்.

வெயிலானவள் நீ

Posted: ஏப்ரல் 20, 2012 by அடலேறு in அடலேறு, கவிதை
குறிச்சொற்கள்:,

வெயில் நாட்களில்
துப்பட்டாவை பின்
கழுத்தில் சுற்றி
தலை மூடியிருப்பாயே
அதில் வடிந்து போனவன்
நான்

******

வெயிலால் உருகிப்போன
சாக்லேட்டை நுனி
மூக்கு படர நீ
சாப்பிடுவதை ரசிக்கவேணும்
நீளட்டும் இந்த கோடை

****
கோடையின் இந்த‌
நடுநிசி விழிப்புகள்
அனைத்தும்
உன்னை
நினைத்துக்கொள்ளத்தான்

******

வெட்கம் விலகிய
இரவில் போர்வை விலக்கி
அணைத்துக்கொள்
நீளட்டும் இந்த
அடர் ஜாமம்

******

நீண்ட கோடை
விடுமுறை முடிந்த‌
சந்திப்பில்
எல்லாரும் இருக்க‌
ஓடிவந்து பின்கழுத்தனைத்து
முத்தமிட்டாயே போதும்
இனி மெல்ல
தொடங்கட்டுமென் கர்வம்

********

யாருமறியா என் பிம்பத்தில்
மூழ்கி காதல் எடுக்கும்
சிறகற்ற யட்சி நீ

********

முன்கை கொஞ்சமே மடக்கி
நெற்றி வியர்வை
துடைத்த பின் பார்ப்பாயே
அதில் தான்
என்னை தேடிக்கொண்டிருக்கிறேன்

******

இத்தனை வெயிலா என‌
சலித்துக்கொள்கிறாய் நீ
இத்தனை அழகா என‌
பிரமித்துக்கொள்கிறது
வெயில்

******

உனக்கென்ன பேசாமல்
கல்லூரிக்கு சென்று
விடுகிறாய்
உன்னை காணாத கோபத்தில்
சுட்டெரிக்கிறது சூரியன்
மாலை வரை

*****

யாருமறியா பின்னிரவில்
இறுக்கி மூடிய போர்வைக்குள்
வரும் கூதல் காற்று நீ

*****

பேருந்து பயணந்தில்
ஏறும் இடம் தொடங்கி இறங்கும்
இடம் வரை கூட வந்து
இறங்குகையில் முத்தமிட்டு செல்பவள் நீ

*******

உதடு சுழித்து
வியர்வை துடைத்து
மென் துப்பட்டாவில் காற்று வீசியபின்
முணுமுணுத்துக் கொள்வாய்
சூரியனை அன்பிலன் என்று

*******

வியர்வை படிந்த
முகத்தில் முத்தக்
கோட்டோவியம்
வரையும் என்
வெயிலானவள் நீ

*****

சார்பு இடுகை : மழையானவள் நீ

கேள்விகளால் ஆன விளையாட்டை
தொடங்கினாள் தூரிகா
விளையாட்டின் விதிகள்
ஒருபோதும் சொல்லப்படவில்லை
ஒவ்வொரு சொல்லாக‌
உதிர்க்க தொடங்கினாள்
தீயிலிருந்து வெம்மை பிரிப்பது
மெளனத்திலிருந்து இசை பிரிப்பது
பற்றிய குறிப்புகள் அவை
நினைவுக‌ளில் இருந்து
அவ‌ளை பிரித்து
காட்ட‌‌ சொன்ன‌ கேள்வியில்
தோற்றுப்போனேன்.
கீறல்களால் த‌ண்ட‌னை
நிறையேற‌ தொட‌ங்கிய‌
காலையில் விழித்தெழுந்தேன்
அவ‌ள் இப்போது
உடலிலிருந்து என்னை
பிரித்துக்கொண்டிருக்கிறாள்

அவள்

Posted: ஜனவரி 18, 2011 by அடலேறு in அடலேறு, பெண்
குறிச்சொற்கள்:,
நூற்றாண்டின் வலியை
அனுபவித்துவிட்டாள்
அவள்

உதிர்வ‌த‌ற்கு த‌யாராய்
திர‌ண்டிருக்கிறது
வருடத்தின் முதல் க‌ண்ணீர்துளி

சிற‌குக‌ள‌ற்ற‌ தேவ‌தை மெல்ல‌
நுழைகிறாள் தனி அறையில்

அவ‌ளின்
பேரிரைச்சல் க‌ண்டு
ந‌டுங்கிய‌ப‌டி வெளியேறுகிற‌து
அமைதியின் க‌டைசி சொல்

நீரால் சூழ்ந்த வீடு
உடைவது கண்டு
வீறிட்டு அழுகிறாய்
நீ

வெளிச்ச‌ம் க‌ண்டால்
ந‌டுங்குகிற‌து உன்னுடல்

இனி
உன் த‌லை பிடித்திழுக்கும்
கைக‌ளை கொண்டு
மெல்ல‌ வெளியேற‌லாம்
நீ

பிற‌ந்த‌ நாள் வாழ்த்துக்க‌ள்

If you enjoyed this post, make sure you subscribe to my RSS feed!

அழகான கொலு பொம்மைகளை
பார்த்து கை தட்டி
குதுகலிக்கிறாய் நீ
உன்னை ஏன் கொலுவில்
வைக்கவில்லை என்று
குழம்பிப்போகின்றன பொம்மைகள்
–0@0–

நவராத்திரி கொலுவில்
தேவதை பொம்மைகள்
வைக்கிறார்களாம்.
பிறகு உன்னை எப்படி
விட்டு வைத்தாள்
ஜான‌கி ஆண்டி

–0@0–

ந‌வாராத்திரி என்றாலே
திருவிழாவும்,சுண்டலும்.
சுண்டல் என்றாலே
கொலுவும்,பொம்மைக‌ளும்.
மொம்மைக‌ள் என்றாலே
நீயும், உன் ப‌ட்டாம்பூச்சி
சுடிதாரும் தான் வ‌ந்து
நிற்கிற‌தென் ம‌ன‌தில்

–0@0–

தேவ‌தைக‌ள் எல்லாம் வைத்த‌
கொலுவில் அழ‌கான பொம்மையை
அப்ச‌ர‌ஸ் தேவ‌தை தொட்ட‌தால்
உயிர் பெற்று வ‌ந்த‌வ‌ள், ‘நீ’
என்று தான் இன்ன‌மும் ந‌ம்புகிறேன்

–0@0–

அந்த‌ மூன்றாவ‌து வ‌ரிசை
மொம்மையை எடுத்து
பொட்டு வைத்த பின் முத்த‌மிட்டாயே
அப்போது தான் தோன்றிய‌து
பேசாம‌ல் பொம்மையாய்
பிற‌ந்திருக்க‌லாம் என்று

–0@0–

ஒவ்வொரு பொம்மையாய் எடுத்து
இது முல்லா பொம்மை
இது காயத்ரி மொம்மை
இது உழ‌வ‌ன் பொம்மை
என்று சொல்லிக்கொண்டிருந்தாய்
பொம்மைக‌ள் எல்லாம்
உன்னைபார்த்து
முணுமுணுத்துக்கொண்ட‌து
இவ‌ள் தேவ‌தை மொம்மை என்று

–0@0–

If you enjoyed this post, make sure you subscribe to my RSS feed!

              

வார்த்தைகளற்ற நடுநிசியில் பொத்துக்கொண்டு வரும் அழுகை தொண்டை குழி வரை நிரம்பி வழியும் இந்த பொழுதில் உன்னை நினைக்காமல் எப்படி இருக்க முடியும் , எனக்கான எல்லாவற்றையும் எடுத்துக்கொண்டு உயிரை மட்டும் விட்டு போன என் உயிரானவள் நீ , எப்படி சமதானப்படுதியும் தனிமை கண்டுபிடித்து இன்னும் கொஞ்சம் அழுக வேண்டும் போல உள்ளது .

நரம்பின்  குருதி வற்றி நான் என்ற அகங்காரம் திறந்து போன இரவில் உன்னிடம் என்றுமே சேராத இந்த கடிதங்கள் எழுதுவதில் தான் எப்படியும் அமைதலாகிறது இந்த நீண்ட இரவு.

அனைவரும் இருக்கும் போது ஏற்படும் இரைச்சலை விட நீ இல்லாத மொழுதுகளின் தனிமை என்னை பயமுறுத்துவதாய் இருக்கிறது. எப்போது என்னை விழுங்கலாம் என்றபடி மெளனம் என்னை வெறிக்கிறது. கொடுமையான இந்த தனிமையை போக்கி என்னை ஆம்பல் மலருக்குள் ஒளித்துக்கொண்டால் எவ்வளவு இனிமையாய் இருக்கும். நிராகரித்தலின் வழி பின் கெண்டை சதை வழி ஏறி தண்டுவடம் விரிந்து மூளையை தாக்குகிறது.

இதே நிராகரிப்பின் வலியை உணரும் போது நீ நாற்பது வயதை கடந்திருக்கலாம் மிருதுளா. வாழ்வின் பிற்பாதியில் கணவன், குழந்தைகள் என அனைவரையும் அலுவலகத்திற்கு அனுப்பிவிட்ட பகல் பொழுதிலோ மெளனம் கசிந்து போன மாலையிலோ என்றேனும் என்னை நினைத்துக்கொள்ளும் போது நான் எழுதின இந்த வரிகள் உன் கண் முன் நிழ‌லாடும் அப்போது எனக்காக ஒரு வறண்ட‌ புன்னகை உதிர்ப்பாயே அது தான் இந்த கடிதத்தின் நிறைவாக நான் என்னுகிறேன்.போய் வா மிருதுளா, உலகம் மிக சிறியது என்றேனும் ஒரு நாள் பேருந்திலோ, விமானத்திலோ, இரயிலிலோ சந்திக்கும் போது ஒரு புன்னகையை தவழ விட்டுச்செல்., அப்படியாவது ஓட்டை விழுந்த என் அன்பின் பாத்திரத்தை உன் புன்னகைகளால் இட்டு நிரப்பிக்கொள்கிறேன்.

உன்னை உன் தவறுகளோடு கூட ஏற்றுக்கொள்ளவில்லை என்றால் பிறகு நான் என்ன உன்னில் பாதி என்றாய்,ஒவ்வொரு முறை தவறு செய்யும் போதும் ஒரு அன்னை போல தலை கோதி அனைத்துக்கொண்ட நீ, கடைசி தவறுக்கு மட்டும் என்னை அமிலத்தில் தள்ளிவிட்டு கைதட்டி சிரித்ததென்ன.என்றேனும் மீண்டும் என்னை அழைப்பாய் என்ற நினைப்பில் தான் உடலோடு இந்த உயிரையும் சேர்த்து சுமைந்தலைகிறேன்

யாருக்காகவும் என்னுடைய முடிவுகளை மறுபரிசீலனை செய்யமாட்டேன் என்றாயே, வாழ்வின் பல முடிவுகளை கட்டாயத்தின் பேரில் மாற்றிக்கொள்ளும் போது உன்னுடைய காத்திருத்தலுக்காக, வெளி தள்ளப்பட்டு கதவை சாத்தின சிறு குழந்தை போல உனக்கான விளிம்பு நிலையில் மனம் பதறி நான் காத்திருந்த நிமிடங்களை நினைத்துக்கொள். எது எப்படியோ என் வாழ்வின் மிக உன்னதமான தருணங்களை உன்னுடன் கழித்திருக்கிறேன். பேருந்து பயணங்களில் தோழ் சாய்ந்து தூங்குவதும், உன் கைகுட்டை வாசனையும் கதகதப்பும் என்னை எப்போதும் லயிப்பிற்குள்ளாக்குபவை,  தனிமையின் இரவில் காதலியின் பிரிவை தாங்காமல் நெஞ்சிலடித்தபடி கதறி அழுகும் ஒருவன் புனிதனென்றால் நான் அவன் தான்.

கடிதம் எழுதி முடித்ததும் கதறி அழுதான் நல்லதம்பி, நெற்றி விகாரமாகவும் மூக்கு சற்றே வளைந்தும், மூன்று பற்கள் துருத்திக்கொண்டிருப்பதால் தான் தன்னுடைய முப்பத்தியாறாவது வயது வரை ஒரு பெண்ணின் ஸ்பரிசம் கூட‌ கிடைக்கவில்லை என எண்ணும் போது வெறுப்பாக இருந்தது

ச்சே! என்ன இது இல்லாத ஒருத்திக்காகவும் இதுவரை வராத ஒரு காதலிக்காகவும் இப்படி மாய்ந்து மாய்ந்து கடிதம் எழுதுவது., அதுவும் நூற்றி நாற்பத்தியாறாவது முறை. தனிமை முகத்திலறைய எழுந்து சென்று ஒரு சிகரெட் பற்ற வைத்தான். எப்படியும் சுவைத்து முடிந்தததும் காலில் மிதித்து அணைப்பான்  இது தங்கள் குலத்திற்கே ஏற்படும் மிகப்பெரிய அவமானம் என சொல்லியபடியே பற்றி எரியத்தொடங்கியது அன்றைய இரவின் நாற்பத்தியெட்டாவது சிகரெட்.

இது வ‌ரை இந்த‌ க‌தையை எழுதிய‌தும் என்ன‌ செய்வ‌தென்று தெரியாம‌ல் விழித்தாள் மிருதுளா. நெற்றியை தொட்டுப்பார்த்தாள் நெற்றி நீண்டு விகாரமாக இருந்தது ,மூக்கு சற்றே வளைந்தும், மூன்று பற்கள் துருத்திக்கொண்டிருப்ப‌து தான் இது வ‌ரை எந்த ஆணின் காதலும்,ஸ்ப‌ரிச‌மும் கிடைக்காதத‌ற்கு கார‌ண‌ம் என்றாள்.  ச்சே!!! என்ன ஆண்கள் இவர்கள் எனக்காக இப்படி காதலால் கசிந்துருகி கடிதம் எழுதாவிட்டாலும் பரவாயில்லை, ஒரு சின்ன புன்னகை கூட காட்ட மறுப்பது அவமானத்தின் உச்சம் என்றாள். நூற்றி நாற்பத்தி ஏழாவது கடிதம் எழுதுவதற்கு த‌யாராய் மேசையில் இருந்தது..

— முற்றும் —