Posts Tagged ‘வாழ்க்கை’

chemistry,love,metaphor,science,clever-605ff9050b2c3c7d60d6738eeeb19ea1_h

பெண்கள் காதலை அணுகுவது பற்றி ஆண்களின் முறைப்பாடு சமீபத்தில் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. தமிழ் திரை உலகில் பெண்களின் காதல் பற்றி காட்டமான விமர்சனங்கள் வர தொடங்கியிருக்கிறது. ஒரு போதும் புரிந்து கொள்ள முடியாதவர்களாக பெண்களை பற்றிய நுண் பிம்பம் மெல்ல விதைக்கபடுகிறது. உண்மையிலேயே இத்தனை தூரம் அலச படவேண்டியவர்களா பெண்கள். காதலை பற்றி இருபாலரும் கொண்டுள்ள பிம்பம் முன்னெப்போதும் இல்லாத அளவு மாறியுள்ளது.கடந்த பத்தாண்டுகளில் இல்லாத அளவு காதலிக்கப்படுவது சர்ச்சைக்குள்ளாயிருக்கிறது.

ஆண்களை நண்பர்களுடன் சேர்ந்து பார்க்கும் போது கூட்டமாக‌ தெரிந்தாலும் அவன் தனியன்.,பெண்கள் அப்படி அல்ல கூட்டமாக இருப்பதில் சற்று பாதுகாப்பை உணருகிறார்கள் இன்னும் நெருக்கம் காட்டுகிறார்கள். காதலின் ஆரம்ப நாட்களில் ஒரு ஆணும் பெண்ணும்  நெருங்கும் போது, அவர்களுடைய‌ நண்பர்கள் தரும் அழுத்தம் சற்றே சிக்கலான‌து, இவர்கள் நண்பர்களின் துணையை பற்றி மிக எளிதில் ஒரு பிம்பத்தை உருவாக்கக்கூடியவர்கள் . ஆண் நண்பர்கள் நண்பனின் காதலி பற்றிய‌ பாலியல் விவரிப்புகளை பெரும்பாலும் தவிர்க்கிறார்கள்., மறுபக்கம் பெண்ணுடைய‌ தோழிகள் ஆணின், நடை, உடை என அனைத்தையும் பந்தி வைக்கிறார்கள். இது ஒரு நாளில் நடந்து விடக்கூடயதல்ல. தொடர் நிகழ்வு. மெல்ல மெல்ல தின சந்திப்புகள், நண்பர் கூடல்கள்,தொலைபேசி உரையாடல்கள் என விரிவடைகிறது. காதலிக்க தொடங்குபவர்களின் மனம் இதிலிருந்து பெரும்பாலும் தனக்கான பிம்பத்தை எடுத்துக்கொள்கிறது. அல்லது ஏற்கனவே அவர்கள் வைத்திருக்கும் பிம்பத்தை திருத்திக்கொள்கிறது . பிறகு உள்ளுணர்வு ஒரிடத்தில் கண்டடைகிறது. ” அவ என்னோட ஆளு ” என்று பொதுவில் பகிர்ந்து கொள்ள தொடங்குகிறார்கள். அவனோ/அவளோ ஒத்திசையும் போது காதல் பூக்கிறது.

அதற்கு பிறகு ஆண்கள் குழம்பிப்போகிறார்கள் பெண்களை ஹேண்டில் செய்வது தெரியாமல். அவளின் அருகாமை பதட்டத்தை தருகிறது, பெண்ணை மிக அருகில் பார்க்கும் போது சமநிலை தவறுவதை உணர்கிறான்.காதலின் ஆரம்ப நாட்கள் அவை. வருடங்கள் கடந்த பின்பும் காதல் பரிமாற படுவதற்கு சற்று முன்னான‌ நாட்களையும், காதலின் ஆரம்ப நாட்களையும் தான் காதலர்கள் பசுமையாய் நினைவு கூறுகிறார்கள்.

பெண் தன்னுடை “Social Distance” யை  தாண்டி ” personal Distance”ல் அவனை அனுமதிக்கிறாள். தன்னுடைய தினசரி பிரச்சனைகள், சந்தோஷங்கள், கஷ்டங்கள் என அனைத்தையும் முறைப்பாடு வைக்கிறாள். பெண்களுக்கு மனதிலுள்ளவைகளை வார்த்தை வடிவமாக்கி வாய் வழி உதிர்த்துவிட்டால் இலகுவானதாய் உணர்வார்கள். அவர்கள் சொல்வதை கேட்பதற்கு உயிருள்ள ஒரு ஆணும் அவனுடைய இரண்டு காதுகளும் போதும். ஆண்களின் வாய்க்கு அங்கே தேவை இருப்பதில்லை. ஆனால் பெண்களின் முறைப்பாடுகளுக்கு ஆண்கள் வரிக்கு வரி தீர்வை முன்வைப்பவர்கள். ” இன்னைக்கு ரேஷ்மா கூட சண்டை” என்றால்., அவ அப்படின்னு முன்னடியே தெரியுமே நீ ஏன் போய் அதெல்லாம் செய்ற?? என்பது மாதிரி. எல்லா பிரச்சனைகளுக்கும் தீர்வு உள்ளது என்பது ஆணின் வாதம்., மனசுவிட்டு பேசுனாக்கூட சும்மா எதுனா சொல்லீட்டே இருக்கிறான் என்பது பெண்களின் தரப்பு.

தேவைப்படும் போதெல்லாம் காதலுக்காக அட்டவனைகளை மாற்றிக்கொள்வது ஆரம்பத்தில் இலகுவாக இருந்தாலும், மெல்ல இருவருக்குமான சமநிலையை அது பாதிக்கிறது. இன்னொருவரின் தினசரிக்குள் நுழைவதை சிரமமாக உணர்கிறார்கள். இப்படி பல காரணங்களால் காதலின் கணம் கூடுகிறது. மென் ஈர்ப்பு தொடர்ந்து பேசிக்கொண்டும், காதல் என்று இவர்கள் கட்டமைத்துக்கொணட பிம்பங்களை முன்நகர்த்தவும் முடிகிறது. ஏதோ ஒரு புள்ளியில் மணல் சரிந்து குமிழ் உடைகிறது,மெல்ல இருவருக்குமான தர்கங்கள் தனித்து நிற்க வைக்கிறது., சிறு கோரிக்கை நிராகரிப்பும் எரிச்சலடைய செய்கிறது.நீர் விலகுவதை போல முதல் சண்டையில் விலகுகிறார்கள்., பெரும்பாலும் ஆண்கள் இந்த பிரிவை வார்ததைகளால்  ஒட்டவைத்து விடுவார்கள், ஆனால்  சமாதானப்புறா பெண்கள் பக்கத்தில் இருந்து பறக்க விடவேண்டும் என எதிர்பார்ப்பார்கள். அடுத்தடுத்து சண்டை.,சேர்தல்., ஊடல் என காதல் நக‌ரத்தொடங்கியிருக்கும்.

பாலியல் பற்றி வெளிப்படையாக‌ பேசிக்கொள்ளவில்லை என்றாலும் கூட அந்த கணங்கள் வரும் போது அவசர அவசரமாக கடப்பார்கள். பிறகு கடந்து விட்ட கணத்தை அசைபோடுவார்கள். எதிர் பாலினத்தின் மீது தனக்காக நியாயங்களை உருவாக்கிக்கொள்ளக்கூடிய காலமிது. பேச்சிலும், அருகாமையிலும் பரிமாறிக்கொள்ளப்படாமல் இருந்தாலும்., காமம் அதன் அத்தனை கூர் முனைகளையும் தீட்டி வைத்திருக்கும். ஒரு சிறுதுகள் அப்பெரும் திரைசீலையை இரண்டாக கிழிக்கும்.

ஒருவர் மீது ஒருவருக்கு இருக்கும் உரிமைகளை கட்டளைகள் / விண்ணப்பங்கள் மூலம் உறுதி படுத்திக்கொள்கிறார்கள். பெரும்பாலும் பெண்ணை தனக்காக பொருளாக ஆண்கள் நினைப்பது இந்த காலகட்டத்தில் தான் ஆரம்பமாகிறது. ஆணாதிக்கத்தின் முதல் புள்ளியை  பெண்கள் விரும்பியே ஏற்கிறார்கள்.  யார் கூட பேசின? ஏன் இவ்ளோ நேரம் ? அன்னைக்கு ஒருத்தர் கூட பேசினயே அது யாரு ? என கேள்வியின் தொடக்க எண்களை  இருவரும் தொடங்குகிறார்கள்.ஆணின் கைகளுக்குள் சிறு பூனைகுட்டிபோல் வெதுவெதுப்பாய் உணருகிறேன் என்று கவிதையாய் கூட பெண்கள் சொல்லக்கூடும்

கேள்விகளுக்கு சரியான பதிலோ/விள‌க்கமோ கொடுத்தாலும் கூட ஏதோ ஒன்று குறைவதை ஒப்புக்கொள்கிறார்கள். இதில் ஆண்கள் கொஞ்சம் மேலே போவதை இயல்பாக காணலாம், ஏன் டிரஸ்ச இப்படி போடற ? அப்பா கிட்ட சொல்லு இனி மாமா கூட வெளிய அனுப்ப வேணான்னு.,அந்த பிரண்ட கட் பண்ணு? இந்த பிரண்ட வெச்சுக்கோ., இத்தன மணிக்கு சாப்டு.,  என ஏகத்துக்கும் ஏத்துவார்கள்.,  பிறகு மிக நாசூக்காய் அவளின் அத்தனை ஆண் நண்பர்களையும் வெறுக்க சொல்லித்தருவார்கள். possessiveness என்ற வெத்து போர்வைக்குள் அத்தனை குருரத்தையும் இருவரும் நிகழ்த்திப்பார்க்கிறார்கள்.

இதில் மனமுடைந்து , ஒத்து வராது என்று பிரிந்து போன காதல்கள் ஓரளவு பரவாயில்லை. கொஞ்சமான மன தாக்கத்துடன் அதிக வெறுப்பை சேர்த்துக்கொள்ளாமல் பிரிந்து விடுகிறார்கள். அதன் பிறகும் சண்டைகள், சமாதனங்கள் என தொடரும் காதலின் துயர நதி நீளமானது. மெல்ல தலைதூக்கும் தினசரி பிரச்சனைகள் ஒருபுறமிருக்க, இடைவெளியில் இந்த காதல் பொதுவெளியில் தெரிய அவர்கள் கொடுக்கும் புறவய அழுத்தங்கள்., நண்பர்கள்., குடும்பம், சமூகம் என அனைத்தும் சேர்ந்து ஒரு “template” அழுத்தத்தை கொடுக்க ஆரம்பித்திருப்பார்கள். நண்பர்கள் தனக்கான முக்கியத்துவம் / நேரம் ஒதுக்கவில்லை என்றும், பெற்றோர் தங்கள் பிள்ளைகளின் பரஸ்பர அன்பு பரிமாற்றத்தின் மாறுதல்களையும் பற்றியும் அங்கலாய்த்துக்கொள்வார்கள்.

il_fullxfull.206454089

தன் மகன் காதலிப்பது தெரியும் போது தந்தை பெரும்பாலும் ஒரு குறுகுறுப்புடன் அதை கடந்து செல்கிறார், அம்மா தன் மகனுடைய காதலியை ஆரம்பத்தில் தள்ளிவைத்தே பார்க்கிறார். தன்னை பொறுத்தவரை மகன் தனக்கு மட்டுமே கடமைபட்டவன் ,அவனை அத்தனை எளிதாக விட்டுவிட முடியாது. தன் மக‌னின் காதலியை பற்றிய  உடல் பிம்பத்தை அசைபோட்ட படியே இருப்பாள். தனக்கு தானே நிகழ்த்திப்பார்க்கும் ஒப்புமை. தன் மகன் கண்டையப்போகும் பெண்ணுடல் என்பது அவளை பதட்டமடைய செய்கிறது. அவளும் அவ மூக்கும்.., அவ உனக்கு வேண்டான்டா கிருஷ்ணா எனபது போல முன்தயாரிப்பு பதில்கள் இதனால் தான் வருகிறது.

இந்த காலத்தில் காதல் அதன் ஆரம்ப ஈர்ப்பும்/பரபரப்பும் தாண்டி சற்றே தணிந்திருக்கும்., எதேச்சையாக‌ சண்டைகளின் வார்த்தையால் பெண் திரும்ப தாக்க தொடங்கும் போது ஆண் மிகப்பெரும் மன அழுத்தத்திற்கு உள்ளாகிறான். வார்த்தை பொட்டலங்கள் சிதறடிக்கப்படுகின்றன. கண நேரத்தில் காதல் அதன் அத்தனை அழகியலையும் இழக்கிறது. இருவரும் தனக்கான நியாங்களின் மேல் தன்னை கட்டமைத்துக்கொள்கிறார்கள்.

அனல்காற்றில் ஜெயமோகன் இப்படி எழுதியிருப்பார் ” சுசி, உனக்கு வசைபாடவும் சாபமிடவும் பழக்கம் இல்லை. ஆண் மனதின் நுண்ணிய மென்பகுதியில் அறைவதற்கு நீ கற்றிருக்கவில்லை.  அது ஆணுடன் நெருக்கமாக பழகிப் பழகி பெண்கள் கற்றுக்கொள்வது “

அப்படித்தான்  தனக்கான ஆணுடன் நெருக்கமாக பழகிப் பழகி  அவனின் நுண்ணிய பென்பகுதியில் அறைய கற்றுக்கொள்கிறாள். ஒரு வார்த்தை போதும் அந்த நாளையே கசக்கிப்போடுவதற்கு. ஒரு வார்த்தை போதும் அவனை சுக்குநூறாய் உடைப்பதற்கு., தன்னால் அந்த பெண்ணை ஹேண்டில் செய்ய முடியாது என ஆண் உணரும் தருணம் தன்னுடைய உச்சகட்ட வெறுப்பை வார்த்தைகளாக மாற்றி காட்டுகிறான்.இது அவனுக்கு எளிதானதும் கூட. அதுதான் சமீபத்தில் வந்த அடிடா அவளை., உத‌டா அவளை., வெட்றா அவளை போன்ற வரிகள் கொண்ட பாடலை ஒரு தலைமுறை இளைஞர்கள் அனைவரையும் கொண்டாட தூண்டியது.பெண்ணுடல் மீதான் தீராத வெருப்பை கொண்டாடி தீர்த்தார்கள். வரிகளுப்பின்னான உளவியல் கொண்டாடத்தின் தொடக்கப்புள்ளியை கொடுத்தது. திரும்ப திரும்ப பெண்களை நம்பிக்கை அற்றவர்களாக ., ஏமாற்றும் பேர்வழிகளாக.,உறவின் முறிவிற்கு முதற்காரணமாக முன்வைக்கப்படும் வரிகளை இளைஞர்கள் இத்தனை உற்சாகமாக தனக்குள் தேக்கி வைப்பதை இதற்கு முன் கண்டதில்லை. காதலின் அழகியலையும் தாண்டி, காதலின் தோல்வியும் மதுவும் காதலின் கொண்டாட்ட பொருட்களாகின்றன.

ஆண்களின் வெளி உலகை பெண்களும், பெண்களின் அக உலகையும் ஆண்களும் புரிந்து கொள்வது சற்று சிரமமான காரியம் தான். ஆனால் இவர்கள் கட்டமைப்பது போன்று முடியாத காரியம‌ல்ல .காதலில் ஆண்கள் மீது வைக்கப்படும் மிகப்பெரும் குற்றச்சாட்டு “ஆண் தன் அக உலகை பகிர்ந்து கொள்ளவில்லை என்றுதான் “மற்றபடி அவன் முரடனோ, மணிக்கொருமுறை முத்தம் கேட்கிறானோ என்பதல்ல. மனித உறவுகளை புரிந்து கொள்வது உங்களை நீங்கள் புரிந்து கொள்வதை போன்று. அது எதை தருகிறதோ இல்லையோ நம் சுய‌ பிம்பங்களை கலைத்துப்போட்டு நேர்படுத்திக்கொள்ள‌ உதவும்.

பெண்களை அவர்களாகவே விடவேண்டும் என்று நினைக்கிறேன்.பெண்களே இதை விரும்புவார்களோ என்னமோ தெரியாது பெரும்பாலும் பெண்கள் ஆண்களின் அருகாமையில் தன்னை பாதுகாப்பாக உணர்கிறார்கள் என்பதை தாண்டி ஒரு மண்ணாங்கட்டியும் கிடையாது. ஆனாலும் அவர்கள் தனித்தே இயங்க‌ வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். சமீபகாலத்தில் பெண்னை தனக்கு சமமாகவோ, இல்லை தன்னை சற்றெ முன்நகர்த்தும் ஆளுமை கொண்டவர்களாகவோ இருப்பது ஆணின் விருப்பத்தேர்வாக இருக்கிறது. என்னோட ஆளுக்கு கார் ஓட்ட தெரியும், என்னோட ஆளுக்கு ஷேர் மார்கட்  தெரியும் என்று சொல்வது ஆண்கள் மத்தியில் ஒரு ஈர்ப்பாக கருதப்படுகிறது. குறைந்த பட்சம் வீதி முனைல நிக்கற நீங்க வந்து கூட்டீட்டு போங்க என்று சொல்லாமல், தனியாக வழி கண்டுபிடித்து வர வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள்.

ஒவ்வொருமுறை நண்பர்களுடன் காதலை பற்றி விவாதிக்கும் போது திரும்ப திரும்ப எதிர்கொள்ளும் ஒரு கேள்வி ” அப்ப அவ உன்ன விட்டுட்டு இன்னொருதற லவ் பண்னா ஒத்துப்பயா ” என்று. வார்த்தைகளை மென்மைபடுத்தியே பதிலளிக்கிறேன் எனக்கு ஆட்சேபனை இல்லை என. நண்பர்கள் என்னை விநோதமாக‌ பார்க்கிறார்கள். அப்படினா நீ அவள உண்மையா லவ் பண்லனு அர்த்தம் என்கிறார்கள்.உண்மையில்  உண்மையான காதலுக்கு என்று எந்த வரைமுறையும் இவர்களால் சொல்லப்படுவதில்லை.

காதலிக்கிறேன் என்று சொன்ன வார்தைக்காக தனக்கு பிடித்த நண்பருடன் உணவை பகிர்ந்து கொள்வதோ உணர்வை பகிர்ந்து கொள்வதோ தவறு என்று முன்முடிவிடுவது ஒழங்கின்மையின் வெறியாட்டம். ஒரு பெண் காதலன் தவிர்த்து ஆண் நண்பருடன் பேசுவது அப்படி ஒன்றும் நம்பிக்கையை சிதறிப்போகக்கூடிய செயல் அல்ல. அவனுக்கோ/ அவளுக்கோ தன்னைவிட இன்னொருவர் சிறந்தவராக தெரியும் போது காதலில் இருந்து முழுமையாக‌ விடுவித்து  திரும்பிபோக முழு சுதந்திரம் கொடுக்கப்பட‌ வேண்டும். இறுக்கி பிடித்துக்கொண்டு காதலிக்கலாம் காதலிக்கலாம் என்பதை விட., இலகுவாய் உனக்கு நானும் எனக்கு நீயும் பாரமல்ல என்று புரிந்து கொள்ளும் காதல் வசீகரமானது., அன்பை தவிர வேறு அழுத்தங்கள் இல்லாத காதல் அதன் அத்தனை வேதியல் கூறுகளுடன்  காதலின் உட்சபட்ச அழகியலை அடைகிறது.  அது நீங்கள் வரையறை செய்யும் எல்லா பைத்தியக்காரதனங்களையும் உள்ளடக்கியது. அவனோ/அவளோ கொண்டாடத்தின் திடப்பொருளாகின்றார்கள்.

பொருளாதாரம் சார்ந்தோ வேறு புறவய காரணிகளை ஆதாரமாய் கொண்டு கட்டமைக்கப்படும் காதல் அதன் ஆரம்பத்திலேயே நம்பிக்கை பின்னல்களை இழக்கிறது. நம்பிக்கை என்ற ஒற்றை வார்ததையின் மீது நிலைநிறுத்தப்படுவது தான் காதல் என்றே அர்த்தப்படுத்திக்கொள்ளலாம். புறவய காரணிகளை  ஆதாரமாக வைத்து  கட்டமைக்கபடும் காதல் பெரும்பாலும் அந்த கண நேரம் கடந்தவுடன் வெற்று விருப்பக்கற்பனை என்று தெரிந்துவிடும், இதில் அபூர்வமாக சில காதல்கள் காதலுக்கே உரிய “Madness” தொற்றிக்கொள்கிறது.அந்த “Madness ” காதலை அதன் வழியில் இயக்கிக்கொள்ளும்.

ilchemistry275

இப்படி இடியாப்ப சிக்கல்களையும் பிரச்சனைகளை தாண்டித்தான் உலகம் முழுக்க காதலர்கள் இணைகிறார்கள் என்பதே அதன் ரசனையியல் பிரமிப்பு. புரிந்துகொள்ளப்பட்ட காதலை காணும் போது புத்துணர்ச்சி ஆகிவிடுகிறேன் . அவர்கள் அந்த நாளையே ரசனைக்குரியதாக மாற்றிவிடுகிறார்கள். புரிந்துகொள்ளப்பட்ட காதலர்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்.  திரும்ப திரும்ப நினைத்துப்பார்க்கப்பட வேண்டியவர்கள் அவர்களே. மனிதனின் ஆதாரத்தை கண்டு கொண்டவர்களும் அவர்களே.

தொலைக்காட்சியில் ஆடுபவர்களிடம் கெமிஸ்டிரி கெமிஸ்டிரி என இவர்கள் அங்கலாய்பதன் அபத்தம் அப்போது புரியும். புரிதலும் அன்பும் காதலும் வாழ்க்கையை அழகாக்குகின்றன. புரிந்துகொள்ளப்பட்ட ஒரு துணையை கண்டடைவதைதான்  யோகம் என்கிறோம். உங்கள் இருவருக்குமான காதல் அப்படி ஒரு வேதியல் மாற்றத்தை உருவாக்கினால் இப்பூமியில் நீங்கள் நிகழ காத்திருக்கும் ஒரு அற்புதம்.

Advertisements

கேள்விகளால் ஆன விளையாட்டை
தொடங்கினாள் தூரிகா
விளையாட்டின் விதிகள்
ஒருபோதும் சொல்லப்படவில்லை
ஒவ்வொரு சொல்லாக‌
உதிர்க்க தொடங்கினாள்
தீயிலிருந்து வெம்மை பிரிப்பது
மெளனத்திலிருந்து இசை பிரிப்பது
பற்றிய குறிப்புகள் அவை
நினைவுக‌ளில் இருந்து
அவ‌ளை பிரித்து
காட்ட‌‌ சொன்ன‌ கேள்வியில்
தோற்றுப்போனேன்.
கீறல்களால் த‌ண்ட‌னை
நிறையேற‌ தொட‌ங்கிய‌
காலையில் விழித்தெழுந்தேன்
அவ‌ள் இப்போது
உடலிலிருந்து என்னை
பிரித்துக்கொண்டிருக்கிறாள்

சென்னையில் இரண்டு நாட்களாக நல்ல மழை. மும்பையில் இருந்து வந்த மறுநாள், அமைதியாக  ஜ‌ன்னல் வழியே மழையை பார்த்துக்கொண்டுருந்தேன். மழையை மட்டும் எத்தனை தடவை பார்த்தாலும் சலிப்பதேயில்லை என்று தோன்றியது. மெல்ல தொடங்கி நீண்ட நேரம் பொழிவதற்கு தகுந்தாற்போல் வானமும் இருண்டிருந்தது. நீண்ட நாட்களாக படிக்க வேண்டும் என்று வைத்திருந்த எஸ். ராமகிருஷ்ணனின் உறுபசி நாவல் கண்முன்னே இன்னும் படிக்கவில்லை என்பதை நினைவு படுத்திக்கொண்டிருந்தது.படிப்பதற்கு முன்பு தேனீர் அருந்திவிட்டு ப‌டிக்க‌லாம் என வ‌ர‌ட்டீ ( பால் க‌ல‌க்காத‌ தேனீர்) போட்டு எடுத்து வ‌ந்த‌ம‌ர்ந்தேன், தேநீரின் ஆவி ஜன்னல் வெளியே வெளியேறிக்கொண்டுருந்தது வெளிச்ச‌ம் முன்பை விட சற்று குறைந்திருந்த‌து. தொட‌ர் மழையானது த‌ரை, மேசை, நாற்காலி என‌ அனைத்தையும் சில்லிட‌ வைத்திருந்தது.

முதல் வாய் பருகியதுமே தோன்றியது தேனீர் தன்னுடைய ஆகச்சிறந்த‌ சுவையை மழைநாட்களில் தான் அடைகிறது என்ற எண்ணம்.நாற்காலியை இழுத்து ஜ‌ன்ன‌ல் ப‌க்க‌ம் போட்டுக்கொண்டேன். ஒன்றிர‌ன்டு தூற‌ல்க‌ள் அவ்வ‌ப்போது இட‌து கையை நனைத்துக்கொண்டிருந்தன. தேனீரின் கதகதப்பு மெல்ல மெல்ல உடல் முழுக்க ஊடுருவிக்கொண்டிருந்தது. உறுபசியை எடுத்தேன். முதல்  பக்கதில் ஒரு மெலிந்த மனிதனின் படம் போட்டிருந்தது அது எனக்கு மிக நெருங்கியவர்களின் புகைப்படம் என்ற எண்ணம் தேவையில்லாமல் வந்தது. மழையில் நனைந்த படி வந்த பூனைகுட்டி தன்னுடலை ஒரு குலுக்கு குலுக்கி மழைத்துளியை வெளியேற்றிய சந்தோஷ‌த்தில் தன்னுடைய முன்னங்காலை நக்கி சுத்தம் செய்ய தொடங்கியிருந்தது.

புத்தகம் படிப்பது என்றால் முதலில் எனக்கு முதல் பக்கத்தையும் அதன் வண்ணம், தலைப்பு, படங்கள் பிறகு கடைசி பக்க அட்டையும் அதன் எழுத்துக்களையும் முழுதாக உள்வாங்க வேண்டும். பிறகு முதல் பக்கம், முதல் எழுத்து  தொடங்கி லயிக்க ஆரம்பித்து விடுவேன். அப்படி தான் உறுபசியியும் ஆரம்பித்தது. எஸ். ரா வின் எழுத்துக்களை எப்போதும் எனக்கு நெருக்கமான உணர்வுகளை தருபவை. ஆனால் உறுபசியில் இந்த சம்பத் கதாபத்திரம் இன்னும் அதிக நெருக்கத்தை தருவதாக உணர்ந்தேன்.ச‌ம்ப‌த்தை மைய‌மாக‌ வைத்தே நாவ‌ல் பின்ன‌ப்ப‌ட்டிருந்தது. ஒவ்வொரு பக்கமும் அனுபவித்து படிக்க தொடங்கியிருந்தேன். நாவல் நாயகன் சம்பத் எனக்குள் மெல்ல இறங்கிக்கொண்டிருந்தான். ஒரு பத்து பக்கம் முடிந்ததும் தோன்றியது நான் படிக்க போகும் ஆகச்சிறந்த நாவலில் இதுவும் ஒன்றாக இருக்க கூடும் என்று. மெல்ல எழுந்து ஒரு பிளாஸ்க் நிறைய தேனீர் போட்டு எடுத்து வந்து அருகில் வைத்துக்கொண்டு படிக்க ஆரம்பித்தேன்.சம்பத், நண்பர்கள், சம்பத் மனைவி என கதை சுழன்று கொண்டே இருந்தது. படிக்கும் போது காட்சிகளை கண்முன் கொண்டுவந்து நிறுத்துவது எஸ்.ராவிற்கு கை வந்த கலை அதை கச்சிதமாக செய்து முடித்திருந்தார்.

ஒரு முப்பது பக்கம் முடிந்ததும் புத்தகத்தை திறந்து வைத்தபடியே மீண்டும் ஒரு தேனீர் குடித்தேன். தேனீர் முடிவதற்கு கூட மனம் ஒப்பவில்லை மீண்டும் படிக்க ஆரம்பித்துவிட்டேன். கதையின் பாத்திரங்கள் சென்னை மதுரை என ஓடிக்கொண்டிருந்தன நானும் கூடவே போய்க்கொண்டிருந்தேன். ஜன்னல் வெளியே மழை இன்னும் அதிக லயத்துடன் பேசிக்கொண்டிருந்த்தது. சம்பத் ஒரு வேளை நான் தானோ என தோன்றியது. நிறைய இடங்களில் சம்பத்திற்கு பதிலாக என்னை பொருத்திப்பர்த்தால் சரியாக இருக்கும் எனவும் தோன்றியது. பெயர்களையும் வார்த்தைகளையும இந்த மனிதர் எங்கிருந்து பிடிக்கிறார் என்று யோசனையாக இருந்தது . நிலாரகிகன் போன் பண்ணினார் மாலை சந்திக்கலாமா என்றார். மாலை தானே அதற்குள் உறுபசியை முடுத்துவிடலாம் என்ற எண்ணத்தில் கண்டிப்பாக சந்திக்கலாம் நிலா என சொல்லிவிட்டு மீண்டும் படிக்க ஆரம்பித்தேன். திடிரென புத்தகத்தை மூடிவைத்துவிட்டு படித்த வரை கதையை ரசித்து அசை போடலாம் என்று தோன்றிய‌து. கொஞ்ச நேரம் புத்தகத்தை மூடி வைத்தேன். இசையை சுழல விட்டு  ஹெட்செட்டை காதுக்கு கொடுத்தேன். என்னமோ சோகமான இசை கேட்க வேண்டும் போல இருந்தது. கேட்டுக்கொண்டிருந்தேன். பேசாமல் வெளியே  போய் மழையில் நனையலாமா என்று கூட தோன்றியது, புதுமழை நனையாதே என்று அம்மா சொல்லிவைத்தது வேறு நினைவிற்கு வந்தது. சம்பத் இப்படியெல்லாம் இல்லை அவனுக்கு என்ன தோன்றியதோ கடைசி வரை அதை எல்லாத்தையும் செய்தான், காலை வரை கடற்கறை மணலில் படுத்துக்கிடந்ததாக நாவலில் ஒரு பகுதி வரும், அது மாதிரியெல்லாம் என்னால் ஏன் செய்ய முடியவில்லை என்ற எண்ணம் வந்தது.

சம்பத்தை பற்றிதான் நினைவு சுழன்று கொண்டுருக்கிறது இசையை ரசிக்கவே இல்லை என்பது உறைக்கத்தொடங்கியது. இசையை நிறுத்திவிட்டு மீண்டும் படிக்க தொடங்கினேன். வெளியே மழை அதே மாதிரி பெய்துகொண்டிருந்தது.வெளியே பெய்யும் மழை, உள்ளங்கை சூடாக்கும் தேனீர் , நீண்ட நாள் சந்திக்காத நண்பர்களின் அழைப்புகள் , இன்றைக்கு முடிக்க வேண்டிய ப‌ணிகள் என எல்லாத்திற்கும் விடைகொடுத்து என்னை முழுதாக நாவலில் ஒப்படைத்திருந்தேன். என்னமோ ஒரு உணர்வு , எதோ சோகமாய் இருப்பதாக உணர்ந்தேன். கடைசி பக்கங்களை நெருங்கிக்கொண்டிருக்கிறேன் என்பதெல்லாம்  மறந்து சம்பத்துடன் பயணம் போகத்தொடங்கியிருந்தேன்.

நாவலின் கடைசி அத்தியாயத்தில் சம்பத்தின் நண்பர்கள் ஒரு மலையில் இருந்து இறங்கிக்கொண்டிருந்தார்கள். அங்கேயும் எதிரில் இருப்பவரை மறைக்கும் அளவு மழை பெய்துகொண்டிருந்தது. அடுத்த‌ பக்கத்தை புரட்டும் போது தான் தெரிந்தது அது கடைசி பக்கம் என. படித்து முடுத்ததும் கண்களை மூடி ஒரு ஐந்து நிமிடம் இருந்தேன். கண்களை திறக்கும் போது மழை மெல்ல வடியத்தொடங்கியிருந்தது. எதிரில் நீண்ட நேரமாக உட்காந்திருப்பதாக நண்பன் சொன்னான். பாதி குடித்திருந்த தேனீர் கோப்பை சில்லிட்டிருந்தது. வெளியே போகலாமா என கேட்டான் எனக்கும் அது தேவை படுவதாய் இருந்தது.

மழை சாறலாக உருமாறியிருந்தது. கடற்கறையில் வாகனத்தை நிறுத்திய போது குடைபிடித்தபடி சிலர் நடந்து கொண்டிருந்தனர், காதலர்கள் அங்காங்கே நின்று கொண்டும் பேசிக்கொண்டும்  இருந்தனர். மழையை முழுதாக உள்வாங்கி மணல் மலர்ந்திருந்தது. சைக்கிளில் டீ விற்பவர்களோ, தீயில் சுட்டு தரும் சோள தட்டு காரியோ, குழந்தைகளை பித்துபிடிக்க வைக்கும் பஞ்சுமிட்டாய் காரனோ என யாரும் இல்லாமல் என்னவோ போல் இருந்தது கடற்கறை.  தூரத்தில் இருந்து சம்பத் என்னை பார்த்துக்கொண்டிருப்பதாக தோன்றியது. வீடடிற்கு சென்றதும் மீண்டும் நாவலை வாசிக்கவேண்டும் என்று தோன்றியது. வாகனத்தில் வீடு திரும்பும் போது சம்பத் எனக்கு நெருங்கிய நண்ப‌ன் என்றேன் நண்பனிடம், யார்ரா அது? என்றான் நானாக கூட இருக்கலாம் என்றவனை வித்தியாசமாக பார்த்தான்

If you enjoyed this post, make sure you subscribe to my RSS feed!

அவள் இல்லை என்பதை நினைக்கும் போது ,

அவள் இழப்பை நான் உணரும் போது

துயர்மிகு வரிகளை இன்றிரவு நான் எழுதலாம்  …

 

– பாப்லோ நெருடா

மிக்கி என்னுடைய கேபினுக்கு வந்து Mr.முகில் அலுவலகம் முடிய இன்னும் 10 நிமிடங்களே இருக்கின்றன என்றாள். மிக்கி என்னுடைய அலுவலகத்தில் எனக்கென ஒதுக்கப்பட்ட தனி ரோபோ பணியாள்.சரி மிக்கி ஆனால் எனக்கு இன்னும் கொஞ்சம்   வேலை இருக்கிறது , முடிய இன்னும் 30 நிமிடங்கள் ஆகும் என்றேன். முடிக்கப்பட்ட பணிகளுக்கான அறிக்கை தானே முகில் அதை நான் அனுப்புகிறேன் . உங்கள் அம்மா முன்று முறை உங்களுக்கான வாய்ஸ் மெயில் செய்தியை  விட்டுள்ளார். நீங்கள் வீட்டுக்கு கிளம்பலாம் என்று தன்னுடைய மென்மையான எந்திரக்குரலில்  பேசினாள்.

நான் முகில் , இந்த கதை சொல்லுபவரின் சதியால் ராணுவ வீரனாக இருக்க வேண்டிய நான் வழக்கம் போலவே மென்பொருள் பொறியாளன் ஆக்கப்பட்டேன். மிக்கி என்னை அவசரப்படுத்தினாள் வீட்டுக்கு செல்ல வேண்டும் என்று. வீட்டுக்கு செல்வது ஒன்றும் சிரமம் தரும் விஷயம் அல்ல  அலுவலகத்தில் உள்ள DEPATURE அறைக்கு சென்று GO HOME  பட்டனை தட்டினால் போதும், அடுத்த நிமிடம் என் வீட்டில் உள்ள ARAVIAL அறையில் இருந்து வெளிப்படலாம்.

உள்ளங்கையில் இருந்த தொடுதிரை மானிட்டர்(Touch Screen Monitor) மினுக் மினுக் என மின்னியது மௌலி தான் சிங்கப்பூரில்  இருந்து அழைத்தான், தொடுதிரையில் இருந்த பச்சை நிற பட்டனை அழுத்தியதும்  மௌலி பேசியது அறுவைசிகிச்சை மூலம் காதுகளுக்குள் வைக்கப்பட்டுள்ள சிறிய நானோ மைக்கில் எந்தவித இணைப்பும் இல்லாமல் தெளிவாக கேட்டது.

ஹலோ முகில் எங்க இருக்க? உன்கிட்ட ஒன்னு சொல்லணும்  .

நீ  சொல்றது இருக்கட்டும் முதல்ல உன் இயந்திர காதலி லிச்சி எப்படி இருக்கிறாள் என்றேன்.

லிச்சிய விடு நான்  V2 பிரியாவை பார்த்தேன் என்றான் .

எனக்கு தூக்கி வாரி போட்டது, பிரியா இந்த உலகத்திலேயே இல்லை. அவள் இறந்து ஐந்து வருடங்கள் ஆகி விட்டன.

இங்கு குறிக்கப்பட வேண்டியது V2 என்ற வார்த்தை,  V2 என்றால் VERSION2 என்று அர்த்தம். நாம் வாழும் இந்த கி.பி 2080 வருடத்தில் மனிதர்கள் தங்களின் நிறைவேறாத ஆசைகளுக்காக  தன்னை போலவே உள்ள அச்சு அசலான இயந்திர  மனிதர்களை உருவாக்கி தன்னுடைய நினைவுகள், பழக்கவழக்கங்கள்,  நிறைவேறாத ஆசைகள் மற்றும் பிறப்பு முதல் இறப்பு வரை  நடந்த அனைத்தையும் Program செய்துவிட்டு இறந்து போவார்கள், இந்த இயந்திர ரோபோக்கள் அரசின் தலைமை கணிப்பொறியின்  கட்டுப்பாட்டில் இயங்கும். தன்னுடைய எஜமான் நினைத்த ஆசைகள் நிறைவேறிய அடுத்த நிமிடமே அரசுக்கு அறிக்கை சமர்ப்பித்து விடும், அரசின் தலைமை கணிப்பொறி கட்டுப்பாட்டு  அறை  அறிக்கை வந்த மறுநொடி  இந்த இயந்திர பொம்மைகளை   அழித்துவிடும்.

நானும் பிரியாவும் கல்லூரியில் படிக்கும் போது  காதலித்தோம், இப்போது மனிதர்கள் மனிதர்களை திருமணம் செய்து  கொள்வதை விட தனக்கு எப்படி வேண்டுமோ அப்படியான குணநலன்களை கொண்ட ரோபோக்களை உருவாக்கி அவர்களை மணந்து கொள்கிறார்கள், அப்படியான ஒருவனை தான் பிரியாவின் பெற்றோர்கள் அவளுக்காக பார்த்து வைத்தார்கள் , எங்கள் காதலை கடுமையாக எதிர்த்த அவளின் பெற்றோர்கள் தான் நினைத்தது போலவே ஒரு இயந்திர மனிதனை அவளுக்கு திருமணம் செய்து வைத்தார்கள் . பிரியாவும் காதலுக்காக கொஞ்சம் போராடிப்பார்த்து விட்டு அந்த இயந்திர மனிதனை  மணந்து கொண்டு ஜெர்மனியில் செட்டில் ஆகி விட்டாள்.

பிரியா இறந்த செய்தி மின்னஞ்சலாக   வந்த அன்று துக்கம் தாளாமல் 2  வோட்கா மாத்திரைகளை முழுங்கி போதையில் நினைவு தெரியாமல் அறையில் மயங்கி கிடந்தேன்.  இறப்பதற்கு முன் பிரியா தன்னுடைய இயந்திர பிரதியான  V2 பிரியாவை உருவாக்கி  விட்டு தான்  இறந்திருக்கிறாள் என்று எனக்கு தெரியாது.

–oO0–

உடனே அவளை  பார்க்க வேண்டும் போல இருந்தது. உள்ளங்கையை  விரித்தேன் அதில் இருந்த தொடுதிரை கணினி உயிர் பெற்று வணக்கம் சொன்னது. சிங்கப்பூரின் விசா அலுவலகத்துக்கு தொடர்புகொண்டு பேசினேன், எதிர்முனையில் இயந்திரப்பெண்  தன்  பெயரை வின்சி என கூறி, விசா அனுமதி எண் என் கணினிக்கு அனுப்பப்பட்டது என்றாள் , இணைப்பை துண்டித்த அடுத்த நிமிடம் அனுமதி எண் உள்ளங்கை தொடுதிரையில் பளிச்சிட்டது.

மிக்கியிடம் ஒரு வாரத்திற்கு விடுமுறை சொல்லிவிட்டு  அறைக்கு ஓடி வந்தேன். Mr.முகில் நீங்கள் பதட்டமாக இருக்கிறீர்கள் எனவே  V58 & SP1799  மருந்தை  எடுத்துக்கொள்ளுங்கள் என நீட்டினாள். எனக்கு தேவையில்லை என்று கொஞ்சம் கோபமாகவே மிக்கியிடம் சொல்லிவிட்டு  அறைக்கு வந்தேன். மிக்கிக்கு என் மீது காதல் அவளும் தன்னுடைய காதலை பல நடவடிக்கைகளில் நாசுக்காக என்னிடம் சொல்லி விட்டாள் , ஆனால் எனக்கு தான் இயந்திர பெண்ணை காதலிப்பது ஒரு மாதிரி இருக்கிறது. மிக்கி கொடுத்த மருந்துகளை எடுக்காவிட்டாலும் பரவாயில்லை அவளை திட்டி விட்டேன் ,   பாவம் மிக்கி அவளும் ஒரு இயந்திரப்பெண் தானே அவளிடம் அப்படி கடுமையான வார்த்தைகளை சொல்லியிருக்க கூடாது என்றது  உள்மனம்.

அறையில் , மௌலியின் விட்டு ARRIVAL எண்ணை அழுத்திய அடுத்த நிமிடம் மௌலியின் வீட்டுள் இருந்த வெளிப்பட்டேன். மௌலியில் காதலி லிச்சி தான் என்னை வரவேற்றாள்.மாடியில் எனக்காக  மௌலி காத்திருப்பதாக சொன்னாள்.மாடி அறைக்கு சென்றதும் கதைவை இழுத்து சாத்திக்கொண்டான் மௌலி.

முகில் இன்னைக்கு நான் V2 பிரியாவை  “சர்வேதேச பன்னாட்டு மனித உரிமைகள் கருத்தரங்கில் சந்தித்தேன் ” அவளுக்கு என்னை யார் என்று தெரியவில்லை, உங்களுடைய கல்லுரி நண்பன் சங்கரின் நண்பன் நான் எனவும் அவளை ஒரு முறை கல்லுரியில் சங்கருடன் சந்தித்திருப்தாகவும் கூறினேன். அவளும் சங்கரை நலம் விசாரித்துவிட்டு சென்று விட்டாள் . நிச்சயமாக நானும் நீயும் பள்ளிகூட நண்பர்கள் என்று அவளுக்கு தெரியாது என்றான் .

அவளிடம் அவளின் அடையாள என்னை வாங்கினாயா  என்றேன்   ஆமாம் என்று தலையசைத்த படி    தன் உள்ளங்கை தொடு திரையை     காட்டினான். அவளின் அடையாள எண் மின்னியது.

அவளுக்கு தொடர்புகொள்ள என்னுடைய   உள்ளங்கை தொடு திரையை உயிர்ப்பித்தேன் , முகில் இந்த நேரத்தில் அவளை கூப்படாதே , நாம் நடு  இரவை   தாண்டி விட்டோம், அவள் இந்நேரம் உறங்கியிருப்பாள்  என்றான். எனக்கும்  அதுவே சரி எனப்பட்டது , மௌலி எனக்கு வறுத்த சிக்கன் மாத்திரைகள் இரண்டும், வோட்கா மது பான மாத்திரை ஒன்றும் கொடுத்தான் கூடவே தூக்கத்திற்கான  மாத்திரை ஒன்றும்.

காலையில் நான் எழுந்ததும் 2  செய்திகள் வந்திருப்பததாக  உள்ளங்கையில் இருந்த கணினி காட்டியது. மிக்கிதான் அனுப்பியிருந்தாள். சிங்கப்பூரில் கால நிலை 19 டிகிரிக்கும் மேல இருப்பதால் குளிர் கண்ணாடி அணிந்து கொள்ளும் படி எழுதி  இருந்தாள்  , கடைசி வரியில் I Miss U முகில் என்றதும் காணப்பட்டது. காலையில் நான் எழுந்து கொள்வதற்கு முன்பாகவே V2பிரியாவுடன் பேசி போஸ்டன் பார்க்கிற்கு வர சொல்லியிருந்தான் மௌலி ,முகில்  இன்னும்  5 நிமிடத்தில் V2பிரியா உனக்காக போஸ்டன் பார்க்கில் காத்திருப்பாள் என்றான் . காலை கடன்களை முடிப்பதற்கான மாத்திரைகளை முழுங்கினேன். 4 நிமிடத்தில்  அனைத்தும் முடிந்ததாக தொடுதிரை கணினி காட்டியது.

அவசர அவசரமாக மௌலியில் வீட்டு DEPATURE அறைக்கு வந்தேன் . போஸ்டன் பார்க்கின் ARRIVAL அறையின் எண்ணை தட்டிய அடுத்த நிமிடம்  போஸ்டன் பார்க்கில் இருந்தேன்.

அவள் என்னை விட்டு 32  டிகிரி வட கோணத்தில்  உட்காந்திருப்பதாகவும் அவளின் முதுபுற திசையில் 45 மீட்டர்கள் தள்ளி நான் இருப்பதாகவும் என் உள்ளங்கை தொடு திரை கணினி காட்டியது.

அவளிடம் மெல்ல நெருங்கி சென்றேன், அவளுக்கும்  எனக்கும் ஒரு 10  மீட்டர்    இடைவெளி இருக்கும் சமயத்தில் அவள் பேசிக்கொண்டிருந்தது காதில் விழுந்தது.
Mr . மௌலி என்னுடைய தகவல்  சேமிப்பு அறையில் உங்களை பற்றிய தரவுகள் காணக்கிடைக்கவில்லை. நான் பிரியா இல்லை அவள் இறந்து இன்றோடு ஐந்து வருடம் 64 நாட்கள் ஆகின்றது   நான் அவளால் உருவாக்கப்பட்ட அவளில் இயந்திர பிரதி . நான் பிரியா V2 . உங்களை பற்றிய தரவுகள் எனக்கு programm செய்யப்படவில்லை என்றாலும் உங்களுக்கு பிரியாவை பற்றி எதாவது தெரிந்திருக்கலாம் என்பதால் இங்கு வந்தேன் .  நீங்கள் குறிப்பிட்ட நேரத்தை விட 30  நொடிகள் தாமதமாகி விட்டது, நீங்கள்  இங்கு வராதது என்னை வருத்தத்திற்கு உள்ளாக்குகிறது. என்னுடைய தலைமை கட்டுப்பாட்டு அறை இங்கு வந்ததற்கான காரணத்தையும் அறிக்கையும் சமர்பிக்க சொல்கிறது . நீங்கள் எப்போது இங்கு வர முடியும் என கேட்டுக்கொண்டிருந்தாள்.

—oO0–

நான் மெதுவாக இன்னும் அவளருகிள்  சென்று  பிரியா என்றேன் . சட்டென்று என்னை திரும்பி பார்த்தாள். அச்சு அசலாய் என்னுடைய பிரியாவை போலவே , அதே பிரமிக்க வைக்கும் அழகு,கிறங்கடிக்கும் கண்கள் , நவநாகரீக உடை அணிந்திருந்தாள்.

என்னை கண்டதும் அவளின் கணிப்பொறி கட்டுப்பாட்டு அறை என்னை அடையாளம் கண்டு கொண்டது போலும். நொடிகளில் அழுக தொடங்கினாள். என்ன செய்வது என தெரியாமல் விக்கித்து நின்றேன் .அவள் கையை எடுத்து என் கையில் வைத்துக்கொள்ளவேண்டும்   போல தோன்றியது. என்னை மிகவும் வருத்திற்குள்ளாக்குவது அவளின் அழுகை மட்டுமே. சிறிது நேர அழுகைக்கு பின் என் கையை பிடித்து அருகில் உட்கார  சொன்னாள், எப்படி  இருக்க முகில்  என்றாள், என்னை அவள் மீது பித்து பிடிக்க வைத்த அதே  குரல். , நல்லாயிருக்க பிரியா., நீ எப்படி இருக்கிறாய் என்று கேட்கும் முன்பாக எனக்கும்  கண்களில் கண்ணீர் முட்டிக்கொண்டது.

அவளை பற்றி நிறைய சொல்லிக்கொண்டிருந்தாள்,அவளுக்கு பிடித்த சாக்கலேட்டின் மாத்திரையை அவளிடம் கொடுத்தேன், வாங்கி வாயில் போட்டுக்கொண்டாள்,என்னுடைய கையை எடுத்து அவளின் கைக்கு நடுவே வைத்துக்கொண்டாள்.

அவளை கல்லூரிக் காலங்களில் திட்டியதற்கெல்லாம் மன்னிப்பு  கேட்டுக்கொண்டிருந்தேன். இரவு 2 மணிக்கு  என்னை பார்த்தே ஆகவேண்டும் என்று  ஒருமுறை   அடம்பிடித்தற்காக திட்டினதை நினைவு கொண்டு அதற்கு என்னை மன்னிப்பாயா  என்று  கேட்டுக்கொண்டிருந்தேன். இன்னும் எது எதற்கோ தோன்றிய அனைத்திற்கும்.என் கையை பிடித்துக்கொண்டு சோகமே உருவாக கேட்டுக்கொண்டிருந்தாள்.

முகில் நான் உன்னை புரிந்து கொண்டதே என் திருமணதிற்கு முன்று மாதங்ககுக்கு முன்பு தான். எனக்காக என்னவெல்லாம் செய்தாய் நீ, எத்தனை அன்பு  வைத்திருந்தாய், உனக்காக நான் இன்னும் கொஞ்சம் காத்திருந்திருக்கலாம்.உன்னை தனியே தவிக்கவிட்டு போய் விட்டேன், உன்னை எத்தனை முறை அழ வைத்திருப்பேன் என்னை  மன்னித்து விடு என  ஓயாமல் கேட்டுக்கொண்டிருந்தாள். உன்னுடைய வெது வெதுப்பான கைகளில் பூனை குட்டியாக உணர்த்த நாட்கள் அவை இன்னும் நினைவிருக்கிறது என்றாள்.

தனக்கு செய்யப்பட ப்ரோக்ராம்- ல் பாதிக்கும் மேல் என்னை பற்றிய நியாபகங்களும் தரவுகளும் இருக்கின்றன என்ற படியே உன்னுடைய அடையான எண்ணை கொடு அனைத்தையும் உன்னுடைய நினைவு தளத்தில் Upload   செய்கிறேன்   என்றபடி அடையாள எண்ணை பெற்று என்னுடைய நினைவுகள் சேமிக்கும் அறையில்  Upload செய்தாள்.

உள்ளங்கையில் இருந்த தொடு திரை மானிட்டரில் அவற்றை பார்தேன். எத்தனை எத்தனை நினைவுகள் என்னை  பற்றி, அவளை முதல் முறை மஞ்சள் உடையில் கல்லூரியில் பார்த்தது தொடங்கி நிறைய நினைவுகளை Upload செய்திருந்தாள்.

என்னை பற்றிய நினைவுகளும்   உன்னிடம் இருக்குமல்லவா அவற்றை எனக்கு அனுப்பு நான் அவை அனைத்தையும் பார்க்க வேண்டும் என்றாள். நானும் அவளுடைய நினைவுகள் சேமிக்கும் அறையில் அவளை பற்றிய நினைவுகளை Upload செய்யத்தொடங்கினேன் .

நான் upload  செய்ய செய்யவே ஒவ்வொன்றாக படித்து படித்து குதூகளித்தாள். என் தோளில் சாய்ந்தபடி என் கையை இறுக பற்றிக்கொண்டு அவளின் உள்ளங்கை மானிட்டரை பார்த்து சிரித்துக்கொண்டிருந்தாள்

முகில் நீ கடைசியாக பிரியாவிடம் , எதை கேட்டாய் அதற்கான தரவுகள் எனக்கு நெறிப்படுத்தபடவில்லை, அதை நான் நிறைவேற்ற வேண்டும் என என்னுடைய கட்டுப்பாட்டு செயலகம் எனக்கு தகவல் தெரிவிக்கிறது. அதை நீ சொல்லுவயானால் நிச்சயம் நிறைவேற்றுகிறேன் என்றாள்.

கடைசியாக உன்னிடம் ஒரே ஒரு  முறை I Love U சொல்லு என கேட்டேன் ஆனால் அதை கூட சொல்லாமல் நீ இணைப்பை துண்டித்து விட்டாய் என்றேன் .

பிரியா என் சட்டை காலரை பிடித்து அவளின் மூச்சுக்காற்று என் முகத்தில் படும்படி i love u சொல்வது போலவே,  மெதுவாக என் சட்டை காலரை தன்னருகே இழுத்து  அவளின் மூச்சுக்காற்று என் முகத்தில் பட I Love U டா என்றாள்.

என்னுடைய உள்ளங்கை தொடுதிரை கணினி சிவப்பு நிறத்தில் மினுக் மினுக் என மின்னியது.
Mr.V2முகில்   உங்களின் கடைசி ஆசையும் நிறைவேற்றப்பட்டது,  இந்த உலகில் இருந்து உங்களின் எந்திர உடலுக்கு விடைகொடுக்கிறோம் என்று காட்டி அணைந்தது.

தான்  இறந்து விட்டதாக முகிலை நம்ப வைத்து விட்டால் முகில் தன்னை முழுதுமாக மறந்து விடுவான் என நினைத்து பொய்யாக மின்னஞ்சல் அனுப்பிய பிரியாவுக்கு, அவள் இறந்ததாக மின்னஞ்சல் வந்த அன்று இரவே முகில் தற்கொலை செய்து கொண்டது தெரியாது.

என்னை வித்தியாசமாக பார்த்துக்கொண்டிருந்தாள் .பச்சை நிற திரவம் என்னுடைய தலைமை கட்டுப்பாட்டு அறையில்  இருந்து வெளியேறிக்கொண்டிருந்தது. என்னுடைய இயந்திர உடல் சிறிது சிறிதாக   சிதைவடைய ஆரம்பித்தது.அப்போது தான் அவளுக்கு நான் V2முகில் என   கொஞ்சம் கொஞ்சமாக புரியதொடங்கியது. தலையில் அடித்தபடி கதறி அழுக தொடங்கினாள் உண்மையான பிரியா.

–oO0–

If you enjoyed this post, make sure you subscribe to my RSS feed!

இன்று காலை 48 ‘ A’

பேருந்தில் சாம்பல் நிற

யட்சியை பார்த்தேன்

அதன் அழகு வனப்பானதும்

வெள்ளை பூவின் வாசனையை

தனதண்டையிலும் வைத்திருந்தது

யட்சிகளை பேருந்தில் காண்பது

இதுவே முதல் முறை

அதன் நகம் அழகாக ஒதுக்கப்பட்டும்

தலைமுடி சீராக வெட்டப்பட்டும் இருந்தது

யட்சியின் கண்கள் வழியே

நீளும் கரங்களில்

என்னை விடுவித்துக்கொள்ள

திரும்பும் போது

பார்த்தேன் யட்சி

என்னை உயிருடன்

தின்று கொண்டிருந்தாள்

———-oO0————-

யட்சியின் குட்டியூன்டு இதயம்

வெதுவெதுப்பாகவும் எனக்கு

ஏற்ற இடமாகவும் மாறிப்போனது

அவளின் மகரந்த வாசம்

எனக்குள் மெல்ல மெல்ல

காதலை வரவேற்றுக்கொண்டிருந்தது.

யட்சியின் அடிமை பத்திரத்தில்

கையெழுத்திட்ட மறுவருடம்

என்னை கக்கிப்போட்டது

வெம்மை நிரம்பிய கோடையில்

குருதி சகிதமாக பாதையில்

கிடந்தேன்.

இருந்தாலும் யட்சியின் மேலான

காதலும் அவளின் வாசமும்

கிலேசமடைய வைப்பவை.

———-oO0————-

மெல்ல புறப்பட்டு

வேகம்கொண்டு ஓடுகிறது

என் புரவி

கல்லூரி சாலை, மென்பொருள்

நிறுவனங்கள் வழியாக

ஓடிய புரவி கொண்டு சேர்க்கிறது

பன்னாட்டு விமான நிலையத்தில்

இறக்கை கொண்ட யந்திரம்

என்னை உள்ளிழுத்துக்கொண்டு

வான் நோக்கி பறக்கையில்

தோன்றியது

யட்சியின் மகரந்த வாசனை

மறக்கப்படும் இல்லையெனில்

மறக்கடிக்கப்படும்

If you enjoyed this post, make sure you subscribe to my RSS feed!

1.எனக்கு சவிலனை எப்போதாவது பிடிக்கும்,இதுவரை நான் அறிந்ததில் சவிலன் என்று ஒரு பெயர் குறிப்பிட்டால் அது எங்கள் வகுப்பு சவிலனை தான். சவிலன் நல்ல ஆஜானு பாகுவான ஆள். தொட்டு விளையாட்டுகளில் கடைசிவரை அவுட் ஆகாமல் தொடர்ந்து ஓடிக்கொண்டே இருப்பான்.சவிலன் எனக்கு அறிமுகமானது எங்களுடைய ஆறாம் வகுப்பில் அவனுடைய தடித்த உருவமும் சராசரிக்கும் மீறிய உயரமும், வித்தியாசமான குரலும் எங்களுக்கு பயமும் அவனிடம் ஒரு நெருக்கத்தை ஏற்படுத்த முடியாத நிலையையும் தந்தது. வகுப்பில் கடைசி இருக்கையில் எங்கள் உயரத்திற்கு ஏற்றவாறு குணா,சவிலன்,ரவி, நான் என வரிசையாக  உட்கார வைக்கப்பட்டோம். காக்கி கலர் அரை  நிஜாரும் வெள்ளை கலர் சொக்காயும் நாங்கள் அரசு பள்ளி மாணவர்கள் என்று எப்போதும் சொல்லிக்கொண்டிருந்தது.

சவிலன் எங்களுக்கு பிடிக்காத விஷயத்தை தான் அதிகம் செய்வான்.காலை இடைவெளியில் சிறுநீர் கழிப்பதற்கு எல்லாரும் கொய்யாமரத்து மேட்டுக்கு தான் செல்ல வேண்டும்.அன்று இடைவெளியில் ரவி பதட்டத்தோடே சொன்னான் சவிலன் சிறுநீர் கழிக்கும் போது தன்னையே பார்த்துக்கொண்டிருந்ததாகவும் ரவியின் மர்ம பகுதியை தொட விருப்பம் இருப்பதாக சவிலன் தன்னிடம்  கூறியதையும் சொன்னான் , அவனுடைய நடவடிக்கைகள் நமக்கு உண்டான மாதிரி  இல்லை எனவும் அவனுடைய  செய்கை அவனுக்கு அசூயை தருவதாக பேச்சில் வேறு வேறு வார்த்தை  பயன்படுத்தி சொல்ல வந்ததை ஓரளவு சொல்லிமுடித்ததும்  இடது கையால் பிடித்துக்கொண்டிருந்த டவுசர் பிடியை விலக்கி தன்  ஊளைமூக்கை துடைத்துக்கொண்டான் ,எனக்கு என்னவோ போல் ஆகிவிட்டது.

அன்று காலை இடைவெளியிலேயே ரவி அவனுடைய பையை தூக்கிக்கொண்டு வீட்டுக்கு கிளம்பிவிட்டான்.அன்றைக்கு முழுதும் கடைசி பெஞ்சில் நானும் குணாவும் உட்காரவேயில்லை. சவிலன் தொட்டாலும் தொட்டிருப்பான் டா அதான் ரவி வீட்டுக்கு போய்ட்டான் பாவம்டா என்றான்  குணா.இந்த ஆகச்சில நிமிடங்களுக்கு பிறகு வந்த நாட்களில் சவிலனை கண்டாலே தெரித்து ஓடினார்கள் குணாவும் ரவியும்.

2.நானும் ரவியும் இப்போது ஏழாம்  வகுப்பு படித்துக்கொண்டிருக்கிறோம்.ரவி படிப்பில் கொஞ்சம் சுட்டி  தான் என்றாலும் என்னை ஓட்டப்பந்தயத்தில் அவனால் ஜெயிக்கவேமுடியாது, பள்ளி இறுதி மணி அடித்ததும் வடக்கு கம்மாய் தாண்டி கே வி கே குட்டையின் ஓரமாக உள்ள சரசக்கா வீட்டின் கீழே விழும் பாதாணிக்காய் பறிப்பதறக்கான ஓட்டத்தில் வெற்றி எப்போதும் எனக்கு தான். ரவியின்  தினப்படி தோல்விக்கு அவன் அப்பா அவனுக்கு மாட்டுத்தோலால் ஆன விலை உயர்ந்த செருப்பை வாங்கி தந்ததும் ஒரு காரணமாக இருக்கலாம். ஓடும் போது பாதி ஓட்டத்தில் செருப்பை கையில் எடுத்துக்கொண்டு இன்னும் விரைவாக ஒட எத்தனிப்பான் அதற்குள்ளாக நான் வடக்கு கம்மாய் தாண்டியிருப்பேன்.

அவன் வருவதற்குள்ளாக கீழே விழுந்திருக்கும் பாதாணிக்காயில் நல்லது ஒன்றை எடுத்து என் ஜோப்புக்குள் போட்டுக்கொள்வேன்.அவன் வந்து அவனுடைய பங்கு பாதாணிக்காயை சாப்பிட்டு முடித்ததும் கடைசியாக என்னுடைய ஜோப்புக்குள் மறைத்து வைத்த செக்கசெவேறென்ற பழுத்த பாதாணிக்காயை எடுக்க அவனுக்கு ஆர்வம் தாங்காது.பாதிக்கடி அவனுக்கு தருவதாயின் நாளை வாங்கும் எழந்தை வடையின் பாதியும், ஜவ் முட்டாயின் பாதியும் எனக்கு என அப்போதே தீர்மானம் நிறைவேற்றப்படும்.தன் தலையில் அடித்து சத்தியம் செய்து அதை மேலும் உறுதி செய்வான் ரவி.

3. குணாவும் ரவியும்  சவிலனை கண்டால் தெரித்து ஒடும் வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வை எப்படி சவிலனிடம் சொல்லுவது என்று எனக்கு ஒரே குழப்பமாக இருந்தது. இதை சொல்ல ஒரு முறை சவிலனை தனியே அழைத்தபோது சவிலன் என்னை காதலிப்பதாக கூறினான். ஒரு பெண் குறு குறு வென பார்க்கும் போது கடைப்பிடிக்கவேண்டிய வழிமுறைகளை சொல்லித்தந்த நண்பர்கள் ஒரு ஆண் காதலிப்பதாக கூறினால் என்ன செய்வதென சொல்லி தராததால்  ஏதுமே சொல்லாமல் வந்துவிட்டேன்.

வெள்ளிக்கிழமையானலே எங்களுக்கு குதூகலம் தான் ஏனென்றால் அன்று மதியம் இரண்டாம் பாடவேளை அழகர் சாமி வாத்தியார் பாடவேளை , அழகர் சாமி வாத்தி எங்கள் பீட்ட்டி வாத்தியார், கட்டை குரலில் எப்போதும்  நாராசகமாகத்தான் பேசுவார். இடைவேளையில் கேட்டுக்கு வெளியே முட்டாய் தின்னும் பசங்களுக்கு அழகர் சாமி வாத்தி அடிக்கும் விசில் சத்தம் தான்  இடைவேளை முடிந்ததற்கான அடையாளம், அந்த விசில் சத்தம் கேட்டதுமே அனைவரும் டவுசரை ஒரு கையிலும், தின்று கொண்டிருக்கும் பண்டத்தை ஒரு கையிலும் என பிடித்துக்கொண்டு ஒரே ஓட்டமாய் ஓடி வகுப்பறைக்குள் நுழைந்து விடுவோம், விசில் சத்தத்திற்கு பிறகு யாரேனும் மைதானத்திலோ, கேட்டின் அருகிலோ இருந்தால்  இருப்பவனின் பின் பக்கம் பழுத்துவிடும், அதற்காகவே ஒரு கொண்டை பிரம்பு எப்போதும் வாத்தி கையிலிருக்கும். அழகர் வாத்தி ஐம்பது பைசா சீக்கிய வெச்சு ஐநூறு பேரை அடக்குவதாக சவிலன் சலித்துக்கொள்வான்.

வெள்ளிக்கிழமை மதியம் இரண்டாவது பீரியட்-ல் பசங்க எல்லாரும் பள்ளியினால் தரப்பட்ட(விலை ரூ 27) மஞ்சள் கலர் முண்டா பனியன் அணிந்து தான் கிரவுண்டுக்கு வர வேண்டும் என்பது  அழகர்சாமி வாத்தியாரின் உத்தரவு.அன்றும் அப்படித்தான் நாங்கள் எல்லாரும் முண்டா பனியன் அணிந்து மசா பந்து விளையாடிக்கொண்டிருந்தோம், ரப்பர் பந்து கொண்டு எதிரணியினரை அடிப்பது தான் அந்த விளையாட்டின் விதி. கொஞ்ச நாளைக்கு முன்பு ஒரு தடவை சவிலன் மசா பந்தில் அடித்ததில் வலிதாங்காமல் கதிரேசு அழுதுவிட்டான் அதனால் அவனை நீண்ட நாளாக நாங்கள் விளையாட்டில் சேர்த்தாமல் வைத்திருந்தோம். அவனும் நிறைய நேரம் அவன் சோட்டு பசங்களுடன் தொட்டு விளையாட்டு விளையாட போவான் போகாத அன்று மைதானத்தின் ஓரத்தில் உட்கார்ந்து கொண்டு அவனை அடி இவனை அடி என எங்களை உற்சாகப்படுத்துவான்.

அன்று நீண்ட நாட்கள் கழித்து தன்னையும் விளையாட்டில் சேர்த்திக்கொள்ள வேண்டும் என சவிலன் சொன்னான். அதற்கு முதலாவதாக பெரும் எதிர்ப்பு தெரிவித்தவன் ரவிதான், இதனால் கோபமுற்ற சவிலன் அவனை அடிக்க போனான், நீ என்னை அடித்தால் நான் உண்மையை சொல்லிவிடுவேன் என ரவி சவிலனை பயப்படுத்த, என்ன உண்மை என அனைவரும் கோரஸாக ரவி பக்கம் திரும்பின பொழுது கூட்டத்தை கிழித்துக்கொண்டு ரவியை அடிக்க சவிலன் கையை நீட்டினான், ரவி உடனே நான் தினமும் ஒன்னுக்கு இருக்கும் போது என்னோட குஞ்சாமணியதான பாக்கற, போடா குஞ்சு பாக்கறவா என சொல்லிவிட்டு சிட்டாக ஓடி மறைந்தான்.அன்று முதல் சவிலன் கு.பா என மாணவர்களால் அன்புடன் அழைக்கப்பட்டான்.

4. பள்ளி நினைவுகளை கடந்து வந்து நீண்ட நாட்கள் ஆகிவிட்டது. இந்த கல்லூரியும் கல்லூரிப்பெண்களும் தான் எத்தனை இன்பம் தருகின்றனர். இந்த கல்லூரிக்கு எங்கள் பள்ளியில் இருந்து நானும் ரவியும் மட்டுமே இங்கு படிக்கிறோம் சொல்லாப்போனால், எங்கள் ஊரிலிருந்தே நானும் ரவியும் மட்டும் தான் இந்த கல்லூரியில். எங்கள் ஊர் மத்தியில் பொறியியல் படிப்பு கொஞ்சம் ஒசத்தி என்பதால் எங்கள் ஊருக்கு நாங்கள் செல்லும்போதெல்லாம் என்ஜினியர் அண்ணண் என சிறுவர்கள் எங்கள் ஊர் பெண்கள் முன்னாடி கூப்பிடுவதும் வேறு கொஞ்சம் கிறக்கத்தை கொடுத்திருந்தது. அன்று செமஸ்டர் பருவத்தேர்வுகள் முடிந்து வீடு போவதற்காக நானும் ரவியும் நீண்ட நாட்களாக துவைக்காமல்  வைத்திருந்த அழுக்கு துணிகளையும் ,புத்தகங்களையும் ஒரு பையில் திணித்துக்கொண்டு பேருந்து நிறுத்தம் வந்தோம். ரவி நீண்ட தூர பயணத்திற்கு முன்பு சிகரெட் பிடிப்பது வழக்கம்.

அப்போது தான் எதேச்சையாக கவனித்தேன் ஒரு மூன்று நான்கு பேர்கள் கூட்டமாக  நாங்கள் இருந்த பக்கம் வருவது  போல் தெரிந்தது. நம்பவே முடியவில்லை அந்த கூட்டத்தில் எங்கள் சவிலனும்  …,சவிலனுடன் கூட்டத்தில் இருந்த ஒருத்தி என்னருகே மிக நெருக்கமாக வந்து இரண்டு கைகளையும் சேர்த்து தட்டி V வடிவில் என் முகத்திற்கு நேரே பிரித்த பின் ஒரு தட்டையான குரலில் கேட்டாள் “ என்ன மாமா ஜோப்புல எவ்ளோ வெச்சிருக்க காசு குடு ”  எங்களை அங்கு எதிர்பாக்காத சவிலன் ஒரு கணம் தடுமாறியபடியே  அவள் காதில் ஏதோ சொல்ல காசு கேட்டவள் என் கன்னத்தை தட்டியபடி சிரித்துக்கொண்டே   அவ்விடம் விட்டு நகர்ந்தனர். சற்று தூரம்  என் பார்வையை தவிர்த்தபடியே சவிலன் செல்கையில் கவனித்தேன் அவனின் சற்றே நீளமான முடியும்  அதில் வைத்திருந்த மல்லிகையுடன் சேர்ந்த கனகாம்பரமும் பேருந்து நிறுத்தம் முழுக்க அதிகதிகமாய் மனம் பரப்பியபடியே சென்றது.

நன்றி : யூத்புல் விகடன்

If you enjoyed this post, make sure you subscribe to my RSS feed!

உனக்கென படைக்கப்பட்ட
இரவுகளின் தர்க்கம்
நீண்டு கொண்டே செல்கிறது

அழுத்தம் தாங்காமல்
புரண்டு படுக்கிறேன்
நவீனத்தின் நீட்சியாக
எடுத்துக்கொள்
நகக்கண் வழியே
என் சதைப்பிண்டத்தை

வெளியேறா நித்திய
ஒப்பந்ததின் கையெழுத்து
பிரதிகளை,ஊடலின்
திறவுகோலால் மூடி
ஆழியின் மையத்தில்
எறிந்து விட்டுப்போ

மூழ்கி, தத்தளித்து
ஒதுங்கி பின்
கரைசேரட்டும்
நமக்கான பிரியங்களும்
தர்க்கத்தின் முரண்பாட்டு வரிகளும்

If you enjoyed this post, make sure you subscribe to my RSS feed!