Posts Tagged ‘sad’

 தூக்கம் தொலைத்த இரவில் 
எப்போதும் சாலையில் உறங்கும்
ஒருவனை கண்டேன்
பல்வேறு கவிதைகளை
ஒன்றன் பின் ஒன்றாக
சொல்லிக்கொண்டிருந்தான்
கவிதைகளை எப்படி
பிடிக்கிறாய் என்றதற்கு
இரவுகளில் கவிதை
பிடிப்பது எளிது என்றான்
இரவு என்பதே 
அவளின் நினைவு சிகரெட் தனிமை
அவளின் நினைவு தவிப்பு கோபம்
அவளின் நினைவு கவிதை கண்ணீர்
அவளின் நினைவு தயக்கம் வெறுமை
அவளின் நினைவுகளுடே     
கலந்திருந்தவனுக்கு
போத்தல் சாராயத்தை
 ஊற்றிக்கொடுத்த பின்    
முனகதொடங்கினான்
கடவுள் காதல் கலவி
கடவுள் காதல் கலவி

 If you enjoyed this post, make sure you subscribe to my RSS feed!

Advertisements

பூவின் இதழ்களில்

பதித்துத் தருகிறேன்

எனதன்பின் ஸ்பரிசங்களை

முகர்ந்து பார்த்தான்

கட்டிக்கொண்டான், குதுகலித்தான்

அவன் உலகமே நான் என

என்னை கிறங்கடித்தான்

முன்னெப்போதும் இல்லாதளவு

இருள் படிந்த கூதல் காற்றில்

மகரந்த வாசனை கேட்டு

அடம்பிடித்த அன்று

தெருமுனை விலங்காய்

மாறியது அவனுடல்

காமமிகுதி அவனுடல் கலக்க

செயவதறியாது பேதை நான்

விக்கித்த கணத்தில்

என்னிடமே கொடுத்துச்சென்றான்

இரத்தம் படிந்த

எனதன்பின் பூவிதழை

If you enjoyed this post, make sure you subscribe to my RSS feed!

இன்று காலை 48 ‘ A’

பேருந்தில் சாம்பல் நிற

யட்சியை பார்த்தேன்

அதன் அழகு வனப்பானதும்

வெள்ளை பூவின் வாசனையை

தனதண்டையிலும் வைத்திருந்தது

யட்சிகளை பேருந்தில் காண்பது

இதுவே முதல் முறை

அதன் நகம் அழகாக ஒதுக்கப்பட்டும்

தலைமுடி சீராக வெட்டப்பட்டும் இருந்தது

யட்சியின் கண்கள் வழியே

நீளும் கரங்களில்

என்னை விடுவித்துக்கொள்ள

திரும்பும் போது

பார்த்தேன் யட்சி

என்னை உயிருடன்

தின்று கொண்டிருந்தாள்

———-oO0————-

யட்சியின் குட்டியூன்டு இதயம்

வெதுவெதுப்பாகவும் எனக்கு

ஏற்ற இடமாகவும் மாறிப்போனது

அவளின் மகரந்த வாசம்

எனக்குள் மெல்ல மெல்ல

காதலை வரவேற்றுக்கொண்டிருந்தது.

யட்சியின் அடிமை பத்திரத்தில்

கையெழுத்திட்ட மறுவருடம்

என்னை கக்கிப்போட்டது

வெம்மை நிரம்பிய கோடையில்

குருதி சகிதமாக பாதையில்

கிடந்தேன்.

இருந்தாலும் யட்சியின் மேலான

காதலும் அவளின் வாசமும்

கிலேசமடைய வைப்பவை.

———-oO0————-

மெல்ல புறப்பட்டு

வேகம்கொண்டு ஓடுகிறது

என் புரவி

கல்லூரி சாலை, மென்பொருள்

நிறுவனங்கள் வழியாக

ஓடிய புரவி கொண்டு சேர்க்கிறது

பன்னாட்டு விமான நிலையத்தில்

இறக்கை கொண்ட யந்திரம்

என்னை உள்ளிழுத்துக்கொண்டு

வான் நோக்கி பறக்கையில்

தோன்றியது

யட்சியின் மகரந்த வாசனை

மறக்கப்படும் இல்லையெனில்

மறக்கடிக்கப்படும்

If you enjoyed this post, make sure you subscribe to my RSS feed!

உறுதி செய்யப்படாத

இரவொன்றில்

நிகழ்ந்து கொண்டிருக்கிறது

என் மரணம்

மரணத்தின் நீட்சி

அறையெங்கும்

விரவிக்கிடக்கின்றது

நிசப்த இரவுகளின்

மத்தியில் தினம் தினம்

தேடிக்கொண்டிருக்கிறது

மனம் இறப்பதற்கான காரணங்களை

மனதின் மரணத்திற்கும்

உடலின் மரணத்திற்கும்

பிண்டம் மட்டுமே எச்சம்

எச்சத்தை எண்ணிக்கொண்டிருக்கும்

அதிகாலையில் தட்டி எழுப்பி

சொன்னார்கள்

நான் இறந்து விட்டதாய்

கவுண்டர் காட்டுக்கு

கதிரறுக்க  போனவளே

மத்தியானம் ஆச்சுதே

இந்த மாம(ன்) மேல

நெனப்பிருக்கா

உச்சி பொழுதாச்சுதே உசுரு

நீ வந்துருவன்னு கண்ணு முழிச்சு

காத்திருக்க படுத்தபடியே

நம்மூட்டு எறுப்புக்குதா

சோறு வெக்கற

போதையில அடிபட்ட காலுக்கு

வருத்தப்படாத மூணே மாசத்துல

சரியாகி போகுமுன்னு

சொல்லிப்புட்டா மருத்துவச்சி

அடிபட்ட நேரத்தவிட என்னக்காக

வேல செஞ்சு நீ வூடு வந்து சாயும் போது

எ(ன்) ஒடம்பு முழுக்க ரணம் கண்டு போச்சுதடி

ஓரே நாளுள உன் நிறம் மங்கி போச்சுதடி

என் உயிர் மங்கி போச்சுதடி

இனி செத்தாலும்  கள்ளு குடிக்க போகமாட்ட

அது கல்லா போன கருவாச்சி கோயிலு

கருப்புசாமி மேல சத்தியம்

உரையாடல் போட்டிக்கவிதை

If you enjoyed this post, make sure you subscribe to my RSS feed!

இலக்கிய காதல் எப்போதும் மனதை லயிப்புக்குள் உள்ளாக்குபவை. இவை அனைத்தும் என்னை ஈர்த்த வரிகளின் பகிர்வுகள்.

பாடல்:

வாரணமாயிரம் சூழ வலம் செய்து
நாரண நம்பி நடக்கின்றான்
என்னெதிர் பூரண பொற்குடம்
வைத்து புறமெங்கும் தோரணம் நாட்ட
கனாக் கண்டேன்.. தோழி நான் கனாக் கண்டேன்

ஆசிரியர்: ஆண்டாள்-நாச்சியார் திருமொழி

பொருள்: வாரணமாயிரம்=ஆயிரம் யானைகள்

விளக்கம்:

ஆயிரம் யானைகள் சுற்றி நிற்க, என் வீரத்தலைவன்(மணமகன்) கம்பீரமாக நடந்து வருகின்றான். சுத்த தங்கத்தாலான குடங்களை எங்கும் சூழ வைத்து அழகிய தோரணம் கட்டி என் தலைவன் மணம் செய்வதாய் கனவு கண்டதாக  ஆண்டாள் தலைவி கூற்றாக தோழிக்கு கூறுகிறாள்.

————————
பாடல்:

கன்றும் முன்னாது களத்தினும் படாது
நல் லான் தீம் பால் நிலத்தில் உக்குகக்கும்
எனக்கும் மாகது எம்மைக்கும் முதவாது
பசலை பனி யியர் தீதலை
அல்குல் என் மாமனிக் கவினே

ஆசிரியர்:வெள்ளிவீதியார்- குறுந்தொகை

விளக்கம்:

பசுவின் பாலை கன்றும் குடிக்காமல், பதப்படுத்தியும் வைக்காமல் நிலத்தினில் கொட்டி வீணாவதை போல, எனக்கும் உதவாது என் தலைவனுக்கும் உதவாத என்னுடைய இந்த அழகிய உடல் இருந்தென்ன பயன், இந்த அழகிய உடம்பை பசலை நோய் ஆட்கொண்டு  போக வேண்டும் என்பதாக தலைவி கூறிய பாடல்.

———————
பாடல்:

கான மஞ்ஞை அறைஈன் முட்டை
வெயில்ஆடு முசுவின் குருளை உருட்டும்
குன்ற நாடன் கேண்மை என்றும்
நன்றுமன் வாழி தோழி! உண்கண்
நீரொடு ஒராங்குத் தணப்ப
உள்ளாது ஆற்றல் வல்லு வோர்க்கே

ஆசிரியர்: கபிலர் – குறுந்தொகை

விளக்கம்:

காட்டில் உள்ள மயில் பாறையில் ஈன்ற முட்டையை  கருங்குரங்கின் குட்டிகள் உருட்டி விளையாடும் மலை நாட்டைச் சார்ந்தவன் தலைவன். அழகிய கண்களில் வழிந்தோடும் நீரைப் பார்த்தும் இரக்கமில்லாமல் அப்படியே பிரிந்து சென்ற அந்த கடும் மனம் உடையவனை எப்பொழுதும் நினைந்து வருத்தப்படாதவர்களுக்கு மட்டுமே தலைவனது நட்பு எப்பொழுதும் இன்பம் அளிக்க வல்லது.
இவ்வாறு கூறும் தலைவி தன் பிரிவாற்றாமை (I Miss u) , தலைவன் இல்லாமை கண்டு வருந்துகிறாள்.

If you enjoyed this post, make sure you subscribe to my RSS feed!

vex_boy_final

வாழ்க்கைல எவ்வளவோ நொந்த அனுபவம் இருந்தாலும் என்னோட பேரே எனக்கு நொந்த அனுபவமா ஆனது தான் கொடுமை வெச்சாலும் வெச்ச பேரு ”அடலேறு”னு நம்ம மக்களோட அழிச்சாட்டியம் தாங்க முடியல..

தொலைபேசி உரையாடல் -1

நான்:ஹலோ கேஸ் ஏஜன்சியா?

எதிர்முனை:ஆமாங்க, நீங்க யார் பேசறீங்க?

நான்:அடலேறு பேசறங்க…

எதிர்முனை: என்ன அடையாறுல இருந்து பேசறீங்களா?

நான்: இல்லங்க என் பேரு அடலேறு..

எதிர்முனை:என்ன அடலொரு ஆ..
(டென்சஹனாகி என்ன பேசுவது என்று தெரியாமல் அமைதியாய் இருக்க)

அலோவ் அடலொரு சொல்லுங்க , எந்த ஏரியா நீங்க?

நான்:நான் கோடம்பாக்கம் ..,வீட்ல கேஸ் தீந்துருச்சு அதான்           போன் பன்ன

எதிர்முனை:முன்னாடி அடையாறுனு சொன்னீங்க..

நான்:இல்லங்க அது எம் பேரு..

எதிர்முனை:அடையாறுனு பேரா ?

நான்:இல்லங்க அடலேறு தான் என் பேரு.

எதிர்முனை:சரி அடலொரு வீட்டு அட்ரெஸ் சொல்லுஙக…

என் பெயரை தப்பாக சொன்னால் கூட பரவாயில்லை அவர் ஒரு பெயர் படுகொலையை அரங்கேற்றி கொண்டிருந்தார்.

இதுக்கு மேல என் பெயரை ஒருவர் கொலை செய்வது பொருக்க முடியாமல் ஏதும் சொல்லாமலேயே ரிசீவரை வைத்து விட்டேன்.

எதிர்முனை:அலோவ் அலோவ் அலோவ்வ்வ்வ்வ்

தொலைபேசி உரையாடல்-2
நான்: வணக்கம் , புத்தககடையா?

எதிர்முனை:ஆமா சொல்லுங்க சார்,

நான்:(குறிப்பிட்ட புத்தகதின் பெயரை சொல்லி ) வந்துருச்சுங்களா?

எ.மு: இல்ல சார் இன்னும் வர்ல ,வந்தா கூப்பிட்டு சொல்லறோம் , உஙக பேரு, செல் போன் நம்பர் சொல்லுங்க..
(இந்த முறையும் எதாவது ஏழரை நடக்கும் என எண்ணியவாறே)

என் பெயர் அடலேறு, அலைபேசி எண் வந்து..

என்ன சொன்னீங்க அடலாறா? இல்லங்க அடலேறு .. ஓ அடவாரா சரி செல் போன் நம்பர் சொல்லுங்க..
இல்ல சார் என் பேரு அடலேறு..

அது தான் அடவாரு செல் போன் நம்பர் சொல்லுங்க..

வழக்கம் போல பெயரை கெடுத்துக்கொள்ள விரும்பாதலால் போல இந்த முறையும் போன் துண்டிப்பு.

எதிர் முனை: ஹலோ அடவாறு ,அடவாறு லைன்ல இருக்கீங்களா?

தொலைபேசி உரையாடல்-3

நான்: ஹலோ, டிராவல்ஸ் ஆபீஸா?

எ.மு: ஆமா சார் சொல்லுங்க..

நான்:சார் வெள்ளிக்கிழமை பொள்ளாச்சிக்கு ஒரு டிக்கெட் வேணும்

எ.மு:இருங்க பாத்து சொல்ற… ஒரே சீட் தா இருக்கு சார்

நான்:நானும் ஒருத்தன் தான் சார் இருக்க

எ.மு:சரி சார் , உங்க பேரு , போன் நம்பர் சொல்லுங்க.

நான்:(சனி இன்னைக்கு பொட்டு வெச்சு , பூவும் வெச்சு விளையாடாம போகாதே என நினைத்தவாரே)

பேரு அடலேறு, அலைபேசி எண்.^&*^(*&^*(

எ.மு:சரி சார் ,  புக் பண்ணிட்ட 7 மணிக்குள்ள வநது டிக்கெட் வாங்கிகோங்க..
(ஆச்சர்யம் கொண்டவனாய் முதல் முறையே நம்ம பெயர சரியா எழுதீட்டாரே ! இவன் ஒரு மிக பெரிய அறிவாளி என எண்ணியபடியே)

சார் பேர சரியா எழுத்தீட்டீங்களா?

சரியா எழுதீட்ட சார், தினமும் எவ்வளோ பேரு போன் பண்றாங்க, அதெல்லாம் கரெக்டா  எழுதீட்ட ”கடலாறு தான சொன்னீங்க”னு

சொன்னானே பாக்கனும்…, இடியே என் தலை மீது விழுந்தது

தொலைபேசி உரையாடல்-4

பெண்: நான் விமலா பேசர , அரவிந்த் தான பேசறது

நான் : இல்லங்க ராங் கால்.

பெண்:இல்ல அரவிந்த் இந்த நம்பர் தான் குடுத்தாரு

நான் :அப்படினா அரவிந்த்கிட்டயே கேளுங்க
பெண்: யூ ஆர் ச்சீட்டிங் ஐ நோ யூ ஆர் அரவிந்த்.

நான் :செத்துப்போன பாட்டி மேல சத்தியமா நான் அரவிந்த் இல்ல நான் அடலேறு.

பெண்:என்ன அடில ஆறா.. வாட் யூ மீன் ?

நான் : இந்த முறை சிக்க கூடாதுனு நினைத்தவாரே பொறுமையாக அது இல்லங்க விமலா “ என் பேர் அட’லேறு என அழுத்தமாக சொன்னேன்.

பெண்: என்னங்க வெரும் ”லேரு”னு ஒரு பேரா, ஆமா ஏன் எப்பவும் அட அட னு சொல்றீங்க,

நான் : இல்லங்க அட அட னு சொல்லுல, அது தான் என் பேரு..

பெண்: என்னங்க ’அட’ னு ஒரு பேரா முன்னாடி ’லேறு’ னு தான சொன்னீங்க..

நான் : இல்லங்க ’அட’ வும் ’லேறு’ ம் சேர்த்தி சொல்லுங்க அது தான் என் பேரு

பெண்:ஓ அடலாறா சரிசரி ..

இவளை திருத்த முடியாது என முடிவு செய்து .. விமலா ஆள விடுங்க என் பேரு எனக்கே தெரியாது போன வைங்க என சொல்லி இனைப்பை துண்டித்தேன் .

வீனா போனவள பெத்து விமலானு பேரு வெச்சாங்களானு கேட்க தோன்றியது வேற .