முன்னத்தி ஏர்

Posted: செப்ரெம்பர் 6, 2018 by நிலன் in கலைஞர், நிலன்
குறிச்சொற்கள்:, ,

கலைஞரின் ஆளுமையை புரிந்து கொள்ள அவரின் எந்த காலத்தை பிரித்துபார்த்தாலும் ஒன்றை கவனித்திருக்கலாம் அவரின் ”நுண்ணுணர்வு“.  நுண்ணுணர்வை பல வழிகளின் புரிந்துகொள்ளலாம் பொதுவாக  நுண்ணுணர்வு என்பது செய்தியையோ, உணர்வுகளையோ சரியாக உள்வாங்குவதும் , மதிப்பிடுவதும் அதை இலகுவாக இன்னொருவர் மனதிற்கு பரிமாற்றம் செய்வதாகும். இன்று கலைஞரை பற்றி போற்றி சொல்லக்கூடிய எந்த நிகழ்வும் உண்மையாக அவரின் நுண்ணுணர்வை பற்றிய பாராட்டுகள் தான்.

அறிவுசார் நுண்ணுணர்வு கொண்ட  ஒருவர் தான் சமூகத்தை முன்னகர்த்துகிறார். ஒரு சமூகம் முன்னகர்ந்ததை எப்படி அறியலாம் ? கல்வி, பெண் சுதந்திரம், பொருளாதாரம், வேலைவாய்ப்பு, தனிநபர் தினசரி வருமானம் என பல விஷயங்களை உள்ளடக்கியது சமூக முன்னகர்வு.  இன்று இந்தியாவில் கேரளா தவிர்த்து மற்ற எல்லா மாநிலங்களை விட தமிழக பெண்கள் பொது இடங்களிலும் , வேலையிலும், மிக கண்ணியத்துடன் நடத்தப்படுகிறார்கள்.  முகப்புத்தகத்தில் தமிழக ஊடகத்துறையில் வேலை செய்யும் பெண்களை பாருங்கள், மற்ற துறை மகளிரை விட நவீனத்திற்கு முன்னதாக வந்தவர்கள் .  இவர்கள் அனைவரும் ஒன்று போல கலைஞர் மேல் ஒரு ஒரிவித நன்றியுணர்வை வெளிப்படுத்துவதை காணலாம். அவர்கள் நன்றி நவிழ்வது கலைஞரின் பெண் கல்வியில்  காட்டிய அக்கறைக்காக. எட்டாவது வரை கட்டாய கல்வியை புகுத்தினார், பத்தாவது முடித்தால் தாழிக்கு தங்கம், +2 முடித்தால் கூடுதலா திருமண உதவி தொகை என பெண்களை பள்ளி நோக்கி உந்தி தள்ளினார். சம கால அம்மாக்கள் குறைந்தது 10வது முடித்திருப்பதன் ஆரம்பப்புள்ளி திரு முத்துவேல் கருணாநிதி அவர்கள்.

எதிர் காலத்தை ஏறக்குறைய சரியாக கணித்தவர். கலைஞர் இந்த நுண்ணுணர்வை எப்படி பெற்றுக்கொண்டார் ? நுண்ணுணர்வு பெரும்பாலும் ஒடிபஸ் அல்லது எலக்ட்ரா காம்ளஸ்லிருந்து பெற்றுக்கொண்டவையாக இருக்கலாம்.  பெண்கள் என்றால் தன்னுடைய அப்பாவிடமிருந்தோ ஆண்கள் என்றால் தன்னுடைய அம்மாவிடமிருந்தோ அறிவின் சிறு இழையை பெற்றிருப்பார்கள், அதிலிருந்து தன்னை வனைந்து கொள்வது தனிமனித ஆளுமை. ஏதோ ஒரு நேரத்தில் கலைஞர் தனக்குள் இருக்கும் நுண்ணுணர்வை கண்டிருப்பார். ஏதோ நமக்குள் இருக்கிறது என்றறிந்த பின் அதை நீறூற்றி வளர்ப்பது லேசான காரியமில்லை. தனக்கான நுண்ணுணர்வுக்கும் ( Telepathy ) அறிவு சார் ( Intellectual )  சிந்தனைக்கும் தான் கலைஞர் கடைசி வரை தீனி போட்டுக்கொண்டே இருந்தார். எப்போதும் படிப்பு, எழுத்து, போராட்டம், பயணம், அரசியல் என தனக்குள் இருக்கும் பசி அடங்காத ஏதோ ஒன்றிக்கு அவர் உணவிட்டுக்கொண்டே இருந்தார். தன்னுடைய கடைசி காலத்தில் கூட மற்றவர்களை படிக்க சொல்லி கேட்டுக்கொண்டிருந்தார். நுண்ணுணர்வு கொண்டவர்களுக்கு ஆரோக்கியமான மூளை இருக்கும்.

அரோக்கியமான முளை  என்பது விமர்சனங்களுக்கு பதில் தரும் நேரத்தை , தரத்தை  வைத்து மதிப்பிடப்படும். பகடியான, நகைச்சுவைகாக பதில்களுக்கு அதிக மதிப்பெண்கள் உண்டு. உங்களை ஒருவர் விமர்சனம் செய்யும் போது புன்னகை செய்தால் உங்களால் எதிராளியை சமாளிக்க முடியவில்லை என்று அர்த்தம். அதே மைனஸ் மதிப்பெண்கள் தான் பேசும் மைய கருத்துக்கு சம்பந்தமில்லாமல் பதில் சொல்வதும், கோபப்படுவதும் .

கலைஞரின் காலம் முழுவதும் அவர் விமர்சனங்களை பகடி செய்தார், நகைச்சுவையுடன் பதிலடி கொடுத்தார், ஒரு சில நேரங்களில் அவருடைய பகடி சில நொடிகள் கழித்துதான் எதிரிலிருப்பவருக்கே புரியும்.  அபாரமான பிராசிங் டைம்மை கலைஞரின் மூளை கொண்டிருந்தது. அதை புத்தகங்கள் மூலம் அவர் வளர்தெடுத்தார் என்றே சொல்லுவேன். ஒரு சராசரி இந்திய இளைஞன் தன்னுடைய வாழ்நாள் முழுக்க படிக்கும் புத்தகத்தை விட அதிக பக்கங்களை எழுதியிருக்கிறார். அவரின் நுண்ணுணர்வே அவரை நேர்த்தியானவராக மாற்றியிருக்கிறது. நூற்றுக்கணக்கான இணைய பக்கங்கள் கலைஞரின் அடுக்கு மொழியை, கிண்டல்களை சொல்கிறது, படித்துப்பாருங்கள் தனித்துவமிக்க சிலேடகளில் ஆசான் அவர்.

நேர்த்தியாய் செயல்களை செய்து முடிப்பதில் கலைஞர்  ஒரு கிளாசிக். டைடல் பார்க்கை 99-ல் ஆரபித்து 2000-ல் முடிக்கிறார் அதற்கு முன்னதாகவே 97 லேயே அரசு பள்ளிகளில் கணிணி பாடங்களை அறிமுகம் செய்வதற்கான வரைவு தயாரிக்கபடுகிறது. ஒருபுறம் படிக்கவைக்கிறார் , மறுபக்கம் அவர்கள் வேலை செய்வதற்கு ஏற்ற சூழலை உருவாக்குகிறார். டைடல் பார்க் தமிழகத்தில் தொழில் நுட்ப அலையையே உருவாக்கியது. தமிழகத்தின் தொழில்நுட்ப வளர்ச்சியின் பிதாமகன் திரு. முத்துவேல் கருணாநிதி.  தீர்க்கதரிசி போல் துல்லியமாக காலத்தை கணித்ததை இன்றும் எண்ணி வியக்கிறேன். நான் டைலல் பார்க்கில் கடந்த எட்டுவருடமாக வேலை செய்கிறேன்,  99-ல் டைடல் பார்க் கட்டும் போது கிட்டதட்ட டைடல் பார்க் போல இருமடங்கு இடம் கார்கள் நிறுத்த ஒதுக்கப்பட்டது . இவ்வளவு  இடத்தை வீணடிப்பதாக பொறியாளர் சொல்லும் போது, நம்ம பசங்க எப்பவுமே பஸ்ல தான் வர்னுமா? கார்ல வருவாங்கயா அதனால தாராளமா இடம் விடுங்க என கலைஞர் சொன்னதாக நினைவுகூர்ந்தார். இன்று டைடலில் அனைத்து வாகன நிறுத்தும் இடங்களும் வண்ணமயமான கார்களுடன் நிறைந்து காணப்படுகிறது. என்னுடைய வாகன நிறுத்துமிடத்திற்காக கூட நான் கலைஞருக்கு நன்றி செலுத்த வேண்டும்.

அதே போல தான், உழவர் சந்தைகளை மட்டும் திறக்கமாட்டார்,  உழவர் சந்தை தொடங்க அதிகாலையில் கிராமங்களில் இருந்து  போக்குவரத்து வசதி செய்துகொடுத்தார்.  போக்குவரத்தை தேசியமையமாக்கியது,மின்சாரம் அனைத்து கிராமங்களுக்கும் செல்ல வழித்தடம் அமைத்தது,முதலில் இலவச கண் சிகிச்சை முகாம் அமைத்தது, பெண்களுக்கான சொத்துரிமை,இந்தியாவிலே முதன் முறையாக விவசாயத்திற்கு இலவச மின்சாரம் தந்தது என நீண்டு கொண்டே செல்லும் பட்டியலில் எது ஒன்றை எடுத்து ஆராய்ந்தாலும் அவரின் நுண்ணர்வை கண்டுக்கொள்ளலாம்.

கலைஞரில் நினைவுகளை பற்றி சொல்லும் அனைவருமே ஒன்று சொன்னது போல ஒரு கருத்தை திரும்ப திரும்ப சொன்னதை கவனித்திர்களா? அது தன்னுளகில்  மிக எளிதாய் கலைஞர் எப்படி  நுழைந்தார் என்பதையும் , அவர் உலகில் எப்படி தன்னை அனுமதித்தார் என்பதும். ஜகத் கஸ்பரை அதிகாலையில் போனில் கலைஞர் அழைத்து அவர் நக்கீரனில் எழுதும் கட்டுரைக்காக டெல்லியில் இருந்து அவரை கைது செய்ய நிர்பந்திப்பதாக சொல்கிறார்,  ஜகத் கஸ்பருக்கு கலைஞருடனான முதல் உரையாடல், அதுவும் எதிர்பாராத நேரத்தில் மாநிலத்தின் முதல்வருடன். அவர் நிதானிப்பதற்குள் அடுத்தடுத்த விசாரிப்புகளில் கஸ்பரை இயல்பு நிலைக்கு கொண்டுவந்து அவருடன் ஒரு நீண்ட உரையாடலை துவக்குகிறார். இப்படி தான் அன்பாக அதிரடியாக அவரின் பிரவேசம் இருக்கும். ஒரு  தினசரி கட்டுரைக்காக மாநிலத்தின் முதல்வரே நேரடியாய் அழைத்து பேசுகிறார் என்பதன் பின்னான எளிமையை நீங்கள் எப்படி புரிந்துகொள்வீர்கள்?

கலைஞருரின் மிகப்பெரும் ஆளுமை ,  அவர்  அறிவு தளத்தில் செயல்படுபவர்களுக்கு கொடுக்கவேண்டிய மரியாதயை எப்போதும் கொடுத்தார். ஒருபடி மேலே போய் அவர்களை கொண்டாடிவார். அது அய்யன் திருவள்ளுவருக்கு 133 அடியில் சிலை வைத்தது தொடங்கி,  வெடித்து அழ கேப்டன் விஜி விஜி என கலைஞர் தன்னை அழைத்ததை நினைவுகூர்ந்த வரை, விஜயகாந்தின் அந்த கண்ணீர் “விஜி” என்ற கலைஞரின் வார்த்தைக்கானது மட்டுமல்ல.  அதன் பின்னான கலைஞரின் பாசாங்கில்லாத அன்பிற்கானது. அதை அந்தரங்கமாக  விஜயகாந்த் உணர்ந்திருக்க வேண்டும்.

கலைஞரின் ஆட்சி காலத்தில் எதாவது ஒரு துறையில் சாதனை செய்தவர்களை கேட்டுப்பாருங்கள், நிச்சயம் கலைஞர் அவர்களுடன் பேசியிருப்பார், இல்லை என்றால் கலைஞர் கையில் விருது வாங்கியிருப்பார்கள். தி இந்துவின் கே கே மகேஷசை நினைவு வைத்து அவர் எழுதிய கட்டுரையை மேற்கோள் காட்டும் போது கலைஞரின் வயது 90. அரசியலில் அவர் போல ஊடகத்தை கையாண்டவர்களே இல்லை. உலகின் மிக நீண்ட கடித தொகுப்பு கலைஞர் முரசொலியில் உடன் பிறப்புகளுக்கு எழுதியது தான்.

நுண்ணூணர்வு கொண்டவர்களின் நினைவாற்றல் அபாரமானது.  அவரின்  அபார நினைவாற்றலும், அசைக்க முடியாத மன உறுதியும் பற்றி அண்ணா பலமுறை சொல்லியது உண்டு. அண்ணாவின் தாக்கம் கலைஞரின் கடைசி வரை இருந்தது. மிகை படுத்தி சொன்னதல்ல , கலைஞர் உண்மையில் அண்ணாவின் இதயத்தை தான் தன்னுடன் வைத்திருந்தார்.  தன்னுடைய இறுதி நாட்களில் பேசமுடியாமல் தொண்டையில் முழாய் வைத்து கட்டு பிரித்தபின் கலைஞரிடம் கேட்கிறார்கள் , இந்த உலகில் உங்களுக்கு மிக பிடித்தவர் யார் என. ஒருவருடம் கழித்து கலைஞர் பேசும் வார்த்தை அது தன் கரகர குரலில் தடுமாறியபடி அண்ணா என்கிறார். இதை முதல் முறை கேட்ட போது எழுந்த மனவீச்சை கடப்பதற்கே நேரம் போனது.

இப்படி அபார நினைவாற்றல், நுண்ணுணர்வு கொண்ட கலைஞர் தன்னுடைய பால்யம் முதல் தன்னுடன் கடைசி வரை கூட இருந்து உதவி செய்த நித்யா வரை ஒவ்வொருவராக நினைவு வைத்து அவர்களுக்கு அன்பின் பிரதிபலனை நிகர் செய்தார். அவரை விட்டு முறுக்கிக்கொண்டு போன வைகோ கூட கடைசி வரை அவருடன் தான் இருந்தார். நீங்கள் அவருடன் முரண்படலாம், விமர்சிக்கலாம், ஏன்!! எதிர்த்து கூட பேசலாம் ஆனால் உங்களால் அவரை நிராகரிக்கவே முடியாது. பெரு காந்தம் போல் சுற்றியிருப்பவர்களை ஈர்த்துக்கொள்பவர் அந்த கரகர குரலோன்.

கலைஞரின் காலம் ஒரு மாய காலம். இன்று போல தொழில்நுட்பமோ , தகவல் தொடர்போ இல்லாத காலத்திய அரசியல் தலைமுறையின்  கடைசி மனிதர் அவர். அவருடைய நேரடி பேச்சை கேட்டவர்கள், அதை அலை அலையாய் அடுத்த இடத்திற்கு எடுத்து சென்றவர்கள், புரளி பேசியவர்கள் , புத்தகத்தில் மட்டும் படித்தவர்கள் என அனைவரின் கூட்டு பிம்பயாய் உயரத்தில் இருந்தவர். சினிமாவும் நாடகமும் அவரை உச்சத்தில் நிறுத்தியது. அப்படி புகழின் உச்சத்தில் இருப்பவர்களை எளிதில் அனுகுவது ஏறக்குறைய இயலாத காரியம். ஆனால் கலைஞர் அப்படி அல்ல என்பதை அவர் தினசரி செல்லும் சாலையில் இருக்கும் டீக்கடை காரர் கூட சொல்லுவார். முன்னனுமதி இன்றி யார் வேண்டுமானாலும் கட்சி அலுவலகத்திலும் , அவருடைய வீட்டிலும் சந்திக்கலாம்.

அரசியல் தளத்தில் அவரின் ஆளுமையை தமிழகத்தில் இன்னொருவருடன் ஒப்பிடுவதே முடியாத ஒன்று. அவரிடம் வேலை செய்ய எல்லா ஆட்சி பணியாளர்களும் விரும்புவார்கள். உண்டு இல்லை என்பதை பற்றி காராறாக முடிவெடுக்ககூடியவர் என்பது மட்டுமல்ல அதை சார்ந்த தர்கங்களுக்கும் விளக்கமளிப்பார். நூலகத்தின் மீது தீராத காதல் . மும்பை தாராவி நூலகம் முதல் அண்ணா நூலகம் வரை கட்டமைத்து சமகாலத்தில் தமிழரை படிக்க தூண்டியர்களில் அவரை போல வேறொருவர் இல்லை. சின்னார் தொடங்கி உப்பார் வரை பல அணைகளை கட்டியது, காவேரிக்காக நீண்ட கால சட்டப்போராட்டம் , சம நீதி, சமூக நீதி என பல துறைகளில் அவரின் ஆளுமையும் அறிவும் போற்றுதலுக்குறியது.

சமீபமாக பள்ளி நண்பனுடன் பேசிக்கொண்டிருக்கையில் கலைஞர் தனக்கு எதுவுமே செய்யவில்லை என்றான். எங்கள் பள்ளி காலம் முழுதும் கலைஞர் ஆட்சியிலிருந்தார், அவர் கொடுத்த இலவச பாடபுத்தகத்தில் தான் நீந்தி கறை சேர்ந்தோம், சத்துணவு முட்டை நாட்களில் நாங்களிருவரும் முண்டியடித்திருக்கின்றோம், பஸ் பாஸ், மாநில  அளவில் விளையாட்டு போட்டிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்தது,  மாவட்ட , மாநில அளவில் எழுத்து, கட்டுரை போட்டி என எங்களை சீர் தூக்கியது , நண்பர்கள் பள்ளிகளில் கொடுக்கிறார்கள் என இலவச கண்பரிசோதனை கண்ணாடி கூட அணிந்திருந்தார்கள்,  கடைசியாக மாணவர்களுக்கு கணிணி, சைக்கிள் என தன்னுடைய ஆக்டோபஸ் கரங்களால் எங்களை முழுதாக மூடியிந்தார் கலைஞர். இதை சொன்னதும், அத்தனை சாதனைகளையும் பின் தேடி படித்து கண்ணிகளை இணைத்து பிரமித்துப்போனான்.

கடவுள் இல்லை என்று சொன்னவருக்கு அர்.எஸ்.எஸ் அஞ்சலி செலுத்துகிறது. அவர் பிராமணர்களை எதிர்க்கவில்லை என பிராமனரான தி இந்து ராம் சொல்கிறார். நம் மனதில் ஆழமாய்  நேர்மறையாய் தாக்கம் செய்த ஒருவருக்கு மட்டுமே கருத்துக்களில் முரண்பட்டாலும் பொதுவாக அவருடன் உடன்படுகிறேன் என சொல்வோம். கலை , இலக்கியம், சினிமா, அரசியல், நாடகம், எழுத்து என பலதுறைகளில் ஒரே நேரத்தில் இயங்குவது மட்டுமல்ல தன்னுடைய கருத்தை நுண்ணுணர்வுடன் காட்டமாக மற்றவர்களிடத்தில் கடத்தியுமிருக்கிறார். அதன் வீச்சு தெற்கு, தென்கிழக்கு ஆசிய, ஐரோப்பிய மற்றும் அமெரிக்க ஊடகங்களின் புகழாஞ்சலியில் காணலாம்.

எழுத்தறிவித்தவன் இறைவன்.எங்கள் தலைமுறையே பள்ளி முன் நிறுத்தியவர் கலைஞர். அதற்கு எம் தலைமுறை நன்றிக்கடன் பட்டவர்கள். தலைவர் என்றால் கலைஞரை தவிர வேறு பிம்பங்களே மனதில் பதிவதில்லை. தலைவருக்கு அடுத்த வார்த்தை கலைஞராகத்தான் இருக்கும் என நம்புபவன் நான்.  கரகர குரலில் “ உயிரினும் மேலான அன்பு உடன்பிறப்புகளை “ இனி எப்போது கேட்பேன் !! போய்வா தலைவா. வரலாறு என்றும் உம்மை பெருமையுடன் நினைவுகொள்ளும். வாழ்க நீ எம்மான். வாழ்க நீ எம்மான்.

 

Advertisements

முப்பதுகளின் தொடக்கம்

Posted: மே 27, 2018 by நிலன் in நிலன், பயணம், பேலியோ, Paleo
குறிச்சொற்கள்:,

heal

முப்பதுகளின்  தொடக்கதிலிருக்கிறேன். கல்லூரி முடிந்து ஏறக்குறைய பத்தாண்டுகள் கடந்துவிட்டது. இருபதுகளில் இலகுவான இருந்தவைகள் சற்று சிரமமாக தெரிகிறது. காரணம் உடல்பருமன். கல்லூரியின் மாரத்தான் ஓட்டக்காரன் என நண்பர்களிடையே பேச்சுவாக்கில் சொல்வதையே கூட தவிர்க்குமளவு உடலை கெடுத்துவைத்திருக்கிறேன். பயணங்களின் மீது பெருங்காதல் கொண்டவன். இந்தியாவின் முதல் கிராமமான துர் துக் தொடங்கி கன்னியாகுமரி வரை பெரும்பாலான உணவுகளை கபளிகரம் செய்திருக்கிறேன் 😉 . பயணங்களில் சாப்பிடுவது போய் பிறகு சாப்பிடுவதற்காக பயணப்பட்ட பரமாத்மா நான்.

என் மனம் விரும்பிய ஒரு உணவையும் விட்டுவைத்ததில்லை. அமெரிக்க கண்டத்தின் முதலைக்கறி தொடங்கி தெற்காசியாவின் கரப்பான் பூச்சி வரை ருசிபார்த்த பாவி நான். காரத்தின் அடிமை, ஒருமுறை இமயமலையில்  கிராமத்தில் மழைக்கு ஒதுங்கியிருக்கும் போது வழியின் சென்ற யாரோ இருவர்   மொமோவிற்கு தொட்டுக்கொள்ளும் கார சட்டினியை பற்றி பேசிக்கொண்டதை கேட்டபின் அந்த குளிருலும் அதை தேடி பலகிலோ மீட்டர் பயணப்பட்டு சாப்பிட்தை பார்த்த நண்பர்களின் கண்களின் தெரிந்த மிரட்சியை நினைவுகூருகிறேன். முட்டம் கடற்கறையில் கடைசி துண்டு மீனை முழுங்கும் போது மணி இரவு இரண்டை தாண்டியிருந்தது. சுவையான உணவா எந்த நேரமும் வேலை செய்ய ராணுவ வீரனை போல கட்டுக்கோப்பாக நாக்கை பழக்கப்படுத்தி இருக்கும் நாதஸ் நான்.

சென்னையின் சிறப்பான பொங்கல் அடையாரிலும், தமிழகத்தின் சிறப்பான பொங்கல் கிருஷ்ணகிரியிலும், உலகத்தின் சிறப்பான் சாம்பார் சாதம் பிர்ஸ்பர்க் வெங்கடேஸ்வரா கோயிலிலும் கிடைக்கும் என்பதை தெரிந்து வைத்திருப்பது எவ்வளவு மகத்தான சாதனை. செம்புலப்பெயல் நீர் போல என யாரையாவது வாழ்த்தினால் எனக்கு பொங்கலுக்கும் உளுந்துவடைக்குமான பிணைப்பு தான் நினைவுக்கு வரும். உளுந்து வடையை வெறுப்பவர்களை ஒரு போதும் என் நண்பர்கள் பட்டியலில் இருக்க முடியாது. முன்பெல்லாம் உளுந்து வடையை சாப்பிட்ட பின் தான் தரம் பற்றி தெரிந்து கொள்வேன் , இப்போதெல்லாம் பார்ததுமே தெரிந்து விடும். நல்ல உணவகத்தின் தரம் அதன் உளுந்துவடையில் இருக்கிறது என்பதை நம்புகிறவன் நான். உணவகத்தின் உளுந்து வடையே சொதப்பல் என்றால் நிச்சயமாக மற்றவை அனைத்தும் பெரிதாக சொல்லிக்கொள்ளும்படி இருக்காது. உளுந்துவடை பொங்களுக்கு எப்படி செம்புலம்பெயல் நீர் போலவோ அதற்கு சற்றும் குறைவில்லாத துணை இட்லிக்கும்.

idli-25618358.jpg

ஒரு அடைசல் ஆவிபறக்கும் இட்லியும் எலும்பு குழம்பும் சொர்கத்திற்கு சமமென்பேன். இட்லிக்கு உற்ற துணை சாம்பாரென்பது தவறான பரப்புரை. இட்லிப்பொடியில் காரம் முக்கியம், அப்போதய நேரத்திற்கு தகுந்தாற் போல மையமாகவோ அல்லது உதிரியாகவோ இருக்க வேண்டும். நல்லெண்னையை விட தேங்காயெண்னையுடன் பெரும்பாலும் பிரச்சனையில்லாமல் குடும்பம் நடத்தும் பக்குவம் கொண்டது இட்லிபொடி. ஆனால் இவை எல்லா வற்றையும் விட இன்னொருவன் இருக்கிறான் அவன் தான் மிளகாய் துவையல்.  அரைத்த காய்ந்த மிளகாய், தேங்காய், புளி, பெரிய வெங்காய இவற்றின் சேர்மானம் தேங்காய் சட்னிக்கே சவால் விடக்கூடியது.  சாம்பாருக்கென்று ஒரு அகராதி, ரசத்திற்கென்று  நூலகம் என என் நாக்கின் அத்தனை சுவை நரம்புகளையும் மீட்டின கிராதகன் நான்.

தயிர் சாத்ததுல என்னடா வைரைட்டி என கேட்பவர்கள் வாழ்க்கையை இன்னும் அனுபவிக்க தெரியாத பால்வாடி பையன்கள் என்பதே எனதென்னம். முறுக வறுத்த கருவேப்பிலை, சிவப்பு மிளகாய், கடலைபருப்பு, கொஞ்சமாக உளுந்து, கடுகு இவற்றுடன் இஞ்சி சற்றெ தூக்கலாக போட்டு தயிர் சாதத்தின் தலையில் கவிழ்க்க.  வறுத்த மிளகாயின் காரம் எண்ணெயில் கலந்து , சிவப்பும், கொஞ்சம் கறுப்பும் கலந்த நிறத்தில் தயிரினூடே பயணித்திருப்பதை பார்த்து பரவமாவேன்.  சுடுசாதம், புளிப்பில்லாத கெட்டி புதுத்தயிர் ஒரு டிப்ளமேட்டிக்கான பந்தம் அதனுடன் தக்காளி வெங்காயம் வணக்கிப்போட்ட எண்ணையில் கரையும் நெய்மீன் கருவாடும் சேர்ந்தால் வாவ் அது தான் படைப்பின் உச்சம். தயிருடன் குழம்பு, சாம்பார், என எதை கலந்து சாப்பிடுவதும் நாம் தயிருக்கு செய்யும் அநிதீ.

ருசியான உணவை தேடிப்போய் சாப்பிடுவது செலவு பிடிக்கும் விஷயமாகி போனது. எவனாவது பால்கோவா திங்க பொள்ளாச்சியிருந்து ஸ்ரீவில்லிபுத்துர் போவானா என்று கேட்டால் அப்படி ஒரு ஜீவன் உங்கள் சமகாலத்தில் வாழ்ந்திருக்கிறது. வடபாவ் சாப்பிட பாம்பே போனவனுக்கு, பால்கோவா சாப்பிட ஸ்ரீவில்லிப்புத்தூர் ஒன்றும் சிரமமான காரியமில்லை தான். அதனால் நானே சமைக்க கற்றுக்கொண்டேன். மைசூர்பா தொடங்கி மூளை பொறியல் வரை அனைத்தும் எனக்கு பிடித்தமாதிரி செய்ய தொடங்கினேன். சுவை கொஞ்சம் மாறினாலும் எந்த மூலப்பொருளால் பிசகியது என்பது வரை நுணுக்கமாக தெரிந்து கொண்டேன். அங்கே பிடித்தது பிரச்சனை.

உணவின் சுவையூட்டி  அதன் மூலப்பொருள், அதற்கான தேடல் ஆரம்பமானது. அதன் பிறகுதான் மிளகாயின் வகைகள் என்னை பிரமிக்கவைத்தன. குண்டூர் தேஜா தொடங்கி  மேற்கு தொடர்ச்சி மலைகளில் மட்டும் விளையும்  நெய் மிளகாய் வரை சென்றேன், ஒவ்வொன்றும் உணவின் புது சுவையை அறிமுகப்படுத்தியது. அசைவத்திற்கு தேஜாவை அடித்துக்கொள்ள ஆளில்லை. வடைக்கு எப்போதும் கூடலூர் நெய் மிளகாய் தான் தி பெஸ்ட். மசலாவிற்கு குண்டு மிளகாய், பீட்ஸாவிற்கு பூட் ஜொலைக்கியா, கரைத்து விட்ட மோருக்கு வானம் பார்த்த மிளகாய் என நீள்கிறது பட்டியல். இப்பொது நான் வீட்டில் தினசரி பயன்படுத்தும் மிளகாய் ஊட்டியில் வாங்கியது. கடந்த இரண்டு வருடமாக அங்கே தான் வாங்குகிறேன். ஊட்டிக்கு மிளகாய் வாங்க போகும் ஒரே பிரகஸ்பதி நான் தான். மிளகாய் மட்டுமில்லை  மஞ்சலென்றால் ஈரோடு, மரவள்ளி என்றால் எர்ணாகுளம், குருமிளகு என்றால் வயநாடு என நாவின் நீளத்தை அதிபடுத்தி கொண்டே போனேன். ஒரு முறை பிரியாணிக்கு குங்குமப்பூ வேண்டி காஷ்மீரின் கிராமத்திற்கு பயண திட்டமிட்டது எனக்கே பயத்தை உண்டாக்கியது.

chilli

இப்படி உண்டு கொழுத்தவனின் எடை பார்கும் எந்திரம் “ குறைவான எடை” யையா காட்ட போகிறது. எடை வெளியில் சொல்லகூட கூசும் எண்ணில் இருக்கும் போது இதை தட்டச்சிடுகிறேன். உடலளவில் தொல்லையில்லை ஆனால் எனக்கு மீண்டும் ஒரு முழு மாரத்தான் ஓட வேண்டும் ஆமாம் 42 கிலோமீட்டர் மாரத்தான் தான். இந்த எடையை வைத்துக்கொண்டு தெருமுனை வரை கூட ஓட முடியாது  . ஆனால் எனக்குள் 10 வருடத்திற்கு முன்பு  இருந்த ஒருவனை தெரியும். அவனை தேடிப்போக வேண்டும். தொலைவில் எங்கோ இருக்கிறான். இருந்தால் என்ன ? கடக்க முடியாத தூரம் என ஒன்று இருக்கிறதா என்ன?

வாட்டர் பாஸ்டிங் தொடங்கி பலவகையான டயட்டுகளை பல்வேறு காலகட்டத்தில் எடுக்க ஆரம்பித்து பின் மண்ணைகவ்வியிருக்கிறேன். இப்போது நான் எடுக்கப்போகும் பேலியோவைகூட பல முறை எடுத்து பின் பெருந்தீனிக்காரணாகி போயிருக்கிறேன்.  இனி இப்படி இருக்கபோவதில்லை. மற்ற எல்லாவற்றையும் விட எனக்கு நான் மிக முக்கியமானவன். அவனை இனியும் சித்தம் போக்கில் போகவிடுவது முறையன்று. அதுமட்டுமல்லாது எனக்கு மாரத்தானும் ஒடியாக வேண்டும். ஒருவருடம் கட்டுக்கோப்பாக இருப்பது பெரிய காரியம் தான். அதும் என்னை போல ருசிகண்ட ஊருக்கு செல்லும் பூனைக்கு சிரமமான காரியம் தான். இருந்துதான் பாக்கலாமெ என இன்றிலிருந்து பேலியோ உணவுமுறையைக்கு என்னை முற்றாய் மாற்றுகிறேன். இனி ஓவ்வொரு பதினைந்து நாளும் இதை பற்றி எழுத போகிறேன்.

Rain-Wallpapers-23-23-x-23

வாழ்வின் பிற்பாதியில் ஒரு மழை நாளில் தேனீர் அருந்தியபடி என்னுடைய முப்பதுகளின் தொடக்கம் எப்படி இருந்தது என்பதை நியாபகப்படுத்திக்கொள்ள நினைவுகளை இப்போது சேமிக்க தொடங்குகிறேன்.  வெயில் தாழ்ந்து விட்டது. டியாவுடன் ஒரு மெது நடை சென்று கணக்கை தொடங்கவேண்டும். இனி மெல்லத்தொடங்கும் இப்பருவமழை. நான் நனையப்போகிறேன்.

மண்ணின் மகத்தான ஆளூமை

Posted: திசெம்பர் 26, 2016 by நிலன் in நிலன்

nammalvar-rsk-2

2003ம் வருடம் இளம் விஞ்ஞானிகள் மாநாட்டில் நரைத்த தாடியுடன் மேல் சட்டைக்கு பதில் ஒரு பச்சை துண்டை மட்டும் போற்றிக்கொண்ட மெலிந்த தேகம் கொண்ட‌ ஒருவர் சாதரணமாக அமர்ந்திருந்தார்., பொள்ளாச்சி வட்டாரத்திற்கான நீர்பாசங்கள் குறித்து அரசுப்பள்ளி மாணவர்கள் பேசிக்கொண்டிருந்தார்கள். அன்றைய விருது மேடையில் அவர் ஆற்றிய உரை பிரசித்தமானது. உரங்கள் , ரசாயனங்கள் மண்ணையும் மனிதர்களையும் எப்படி பாழாக்கியது, அதன் பின்னான அரசியல், கேவலமான உழல்கள் என அடுக்கிக்கொண்டே போனார். இரண்டு மணிநேரம் பேசவேண்டியதெல்லாம் பேசி ஓய்ந்தது அந்த கரகரத்த நடுங்கும் குரல்.

தமிழக இயற்கை விவசாயத்தின் முன்னோடி. கோ. நம்மாழ்வார். இயற்கைய விளைஞ்ச அரிசிலயும், பருப்பலயும் பூச்சி இருக்கும், அப்படி இல்லன்னா அத திங்காதீங்க‌, பூச்சியும், வண்டுமே ஆகாதுன்னு விட்ட அரிசிய தின்னு என்ன ஆகப்போகுது., அது அரிசியிங்கய்யா, விஷம்.அவர் உதிர்த்த வரிகள் தான் இவை. நான் அவரை சந்திப்பதற்கு பலவருடங்கள் முன்னமே திராட்சை சாப்பிடுவதை நிறுத்திவிட்டார். திராட்சை கொத்துகள் கொடியில் மேலிருந்து கீழாக தொங்கும், அதற்கு மருந்து தெளிப்பது சவாலான காரணம், அதற்கு மாற்றாக ஒரு வாளியில் மருந்து கரைசலை நிரப்பி திராட்சை கொத்துகளில் முழ்கவைத்து எடுப்பார்களாம். அது மருந்தின் வீரியத்தை இன்னும் அதிகப்படுத்தும், என அவர் சொன்னது இன்னும் காதுகள் ஒலிக்கிறது.

பிடி கத்தரிக்காய், மரபணு மாற்றப்பட்ட விதைகள் , உரம், பூச்சிக்கொல்லிகள் மனிதர்களையும், மண்ணையும் மலடாக்குவதை பற்றி பலமணிநேரங்களுக்கு பேசியிருக்கிறார். இணையத்தில் தேடிப்பாருங்கள். ஒரு சாமானியனின் குரல் அரசுக்கு கேட்காத போது நீதிமன்ற கதவுகளை நம் மண்ணுக்காக தட்டியிருக்கிறார்.வேப்பிலை க்கான காப்புரிமையை பெற ஜெர்மனியில் உள்ள சர்வதேச நீதிமன்றத்தில் வாதாடி மீட்டு, வென்று வந்தவர்.நைட்ரஜன் சத்துக் குறைவுக்காக யூரியா போன்ற உரங்கள் மண்ணுக்குத் தேவை என வாதிட்டபோது, நமது பாரம்பரிய உழவுமுறையான பயிர் சுழற்சி உழவு மூலம் இயல்பாகவே மண்ணில் நைட்ரஜன் சத்து அதிகரிக்கிறது என்று நிரூபித்துக்காட்டியவர் நம்மாழ்வார்.

விவசாயி குழந்தை மாரிங்க, கட்டடம் கட்டறவ்ர் கட்டடம் சிதைஞ்சு போச்சுனா சாக மாட்டான். , ஆனா விவசாசி செத்துப்போயிருவான். பயிரு அவனோட புள்ள மாதிரி ., அரசாங்கம் அவங்களதான் பாத்துக்கனும், அவுங்க நிலத்துலயே ஓட்டைய போட்டு மீத்தேன உறிஞ்சி எடுத்துக்குவோம் சொல்றது விவசாயி ரத்தத்த உறிஞ்சி எடுக்கறதுக்கு சமம். அத பாத்துட்டு எப்படி சும்மா இருக்க முடியும் என புறப்பட்டு போனவர் போனவர்தான். மீத்தேன் எரிவாயு திட்டத்தை அரசு சமீபத்தில் கைவிட்டது நம்மாழ்வாரின் உண்ணாவிரதற்கு கிடைத்த வெற்றியாகவே பார்க்கிறேன்.

ந‌ம்மண்ணிலிருந்து கோடிகளில் ஊழல் செய்து பணம் சேர்த்தவர்களுக்கு மத்தியில் , இந்த மண்ணிற்காய், கிராமம் கிராமமாய் நடந்த சென்று இயற்கை விவசாயத்தை பரவலாக்கியவர் நம்மாழ்வார். முன்னீர்விழவு நிகழ்ச்சியில் கடைசியாக அவரிடம் பேசிய போது நீங்கள் எங்களுக்கு கிடைத்த வரம் என்றேன். காழுக்கடியில் இருந்த மண்ணை கையிலெடுத்து, மனுசன் செத்துப்போனா ஒருவாரத்துல புழு புடிக்கும், அந்த புழு மண்ணுக்கு வளத்த தரும் , மண்ணு மரஞ்செடி கொடிகளுக்கேல்லாம் உயிர் தருங்க. பிறந்த மண்ணுல உயிரா தங்கிறுனுங்க, அதான் வரம் என்று சொல்லி தன்னுடைய விழி சுறுக்கி சிரித்தார். எம்மண்ணில் உயிராய் கலந்து நிற்கும் நம்மாழ்வாரை அவரில் நினைவு நாளில் நினைத்துப்பார்க்கிறேன். எம் தலைமுறையின் முன்னத்தி ஏர் நீங்கள். பெருமையுடன் உங்களை நினைவுகூறுகிறோம். போய்வாருங்கள்.

rio_olympics_0

கோலாகலமாக நடந்து முடிந்தது ரியோ ஒலிம்பிக் .ஒலிம்பிக் தடகள வரலாற்றில் இந்தியா ஒரு தங்கம் கூட வாங்கியதில்லை என்ற கசப்பான உண்மை தொடர்கிறது. தடகளத்தில் ஏன் இந்த முறையும் இந்தியா மண்ணை கவ்வியது ?

ஊழல்,அரசியல் என்று அதரப்பழசான வார்த்தைகளையே சொல்லி தப்பிக்கபோகிறோமா? தோற்றுப்போன களத்தை ஆய்வு செய்யாமல் விடுவது அடுத்த தோல்வியின் முதல் படி. இந்த ஒலிம்பிக்கை கள ஆய்வு செய்வோம்.

இந்தியாவின் சார்பில் தடகள குழு தான் அதிகமான வீரர்களை அனுப்பியது 34 பேர். ஒலிம்பிக் முடிவில் அவர்களின் தர பட்டியல். டூட்டி சந்த் (100 மீ) – 50வது இடம், ஸ்சரபானி (200 மீ) – 55வது , நிர்மலா (400மீ )- 44வது அங்கித் சர்மா (நீளம் தாண்டுதல்) – 24வது விகாஸ் கெளடா ( வ‌ட்டு எறிதல் ) – 28வது டின்டு லூகா (800 மீ) – 29வது சுதா சிங் (3000 மீ) – 30வது ரஞ்சித் மகேஷ்வரி (நீளம் தாண்டுதல்) – 30வது , தொனக்கல் கோபி (மாரத்தான்) -25வது , கீடா ராம் (மாரத்தான்)- 26வது ராவத் சிங் (மாரத்தான்) – 84வது கவூர் (50 கிமீ நடை) – 54வது பெண்கள் மாரத்தான் ஜைஷா – 89வது கவிதா – 120வது இடம்.

மேலே உள்ள பட்டியலை நுட்பமாக பார்த்தால் தெரிந்திருக்கும். இவர்கள் யாரும் முதல் 25 இடங்களில் கூட இல்லையென்பது ஆச்சர்யமாகவும் வேதனையாகவும் உள்ளது. இரண்டு தமிழக வீரர்களை கொண்ட இந்திய தொடர் ஓட்ட அணி தகுதிநீக்கம் செய்யப்பட்டது. வட்டு எறிதலில் தகுதி தூரம் 66.00 மீ கெளடா வீசியதோ 58.99மீ. ரஞ்சித் மகேஷ்வரி மும்முறை நீளம் தாண்டுதலில் தகுதி அளவான 16.85மீ விட குறைவாக 16.13மீ தான் தாண்டினார். நீளம் தாண்டுதலில் தகுதி அளவு 8.15மீ நம்மவர் குதித்தது 7.67மீ.

இவ்வளவு மனித சக்தியை கொண்ட ஒரு தேசம் தடகளத்தில் தகுதி சுற்றுக்கு கூட தடுமாறுகிறது என்பதை எப்படி மென்மையுடன் அணுக முடியும்? ஒரு வீரர் முன்னனி ரேங்கிங்கை வைத்திருக்கும் போது அணியில் இருந்து அவரை கழட்டி விடுவது சிரமமான ஒன்று. கிரிக்கெட் போன்று குழு விளையாட்டு போட்டிகளில் ஒருவரின் திறமையை காரணம் காட்டி அரசியல் செய்து நீக்கி விடலாம். ஆனால் தடகளத்தில் வாழ்வதும் வீழ்வதும் ஒரு வீரனின் தனிப்பட்ட செயல்பாடு. இப்படி தனி ஆளுமை கொண்ட விளையாட்டுகளில் ஏன் முதல் 10 இடங்களில் கூட இந்தியர்களால் வர முடியவில்லை ? மிக முக்கிய காரணம் பயிற்சியின்மை.

ncs_modified20160812194227maxw640imageversiondefaultar-160819748

அதிர்ச்சியாக இருக்கலாம், ஒவ்வொரு வீரனும் எவ்வளவு பயிற்சி செய்கிறார்கள் மிக சாதரணமாக பயிற்சியின்மை என்பதை எப்படி ஒத்துக்கொள்ள முடியும் என கேட்கலாம். பயிற்சிக்காக தடகளத்தில் அசைக்க முடியாத நாடுகளான ஜமைக்காவையும், அமெரிக்காவையும், ஆப்பிரிக்காவையும் நோக்கி கை நீட்டுவேன். அவர்களின் பயிற்சியையும் நம் பயிற்சியையும் தராசிடுங்கள், பிறகு தெரியும் இந்தியா ஏன் சர்வதேச வீரர்களை உருவாக்கவில்லை என்று.

ரியோ ஒலிம்பிக்கில் கலந்து கொண்ட ரஞ்சித் மகேஷ்வரி, டின்டு போல பெரும்பான்மையானோர் தேசிய சாதனையை தன்வசம் கொண்டவர்கள். இந்தியர்களில் தேசிய சாதனை ஒலிம்பிக்கில் 25வது இடத்துக்கு தள்ளப்படுகிறது. 2000 ம் ஆண்டு சிட்னி ஒலிம்பிக் பதக்க பட்டியலில் 56 இடத்தில் இருந்த ஜமைக்கா ரியோவில் 16வது இடத்திற்கு எப்படி வந்தது ?.கென்யா, ஜமைக்கா போன்ற நாடுகள் இந்தியாவின் மனிதவளத்திற்கோ, பொருளாதாரத்திற்கோ பக்கத்தில் கூட வரமுடியாத நாடுகள் என்பதை அறிவோம். அப்படி இருந்தும் அவர்கள் ஜொலிப்பது எதனால் ? திட்டமிட்ட பயிற்சி.

ந‌ம் வீரர்களை ஆப்பிரிக்காவிற்கும், ஜமைக்காவிற்கும் பயிற்சிக்காய் அனுப்ப வேண்டும். சுழற்சி முறைகளில் வீரர்களை அனுப்பி நம்மை களத்தை மீட்டெடுக்க வேண்டும். வீரர்களின் செயல்பாடுகள் , தேர்வு முறையில் வெளிப்படை தன்மையை கட்டாயமாக்கவேண்டும்.

ஆப்பிரிக்க நாடுகள் பயிற்சிக்கு கண்டிப்பு பெற்றது. வீரர்கள் பயிற்சியை தவிர வேறெந்த சலுகையையும் எதிர்பார்க்க முடியாது. டூட்டி சந்த் விமானத்தில் தனக்கு உயர் வகுப்பு இருக்கை கிடைக்கவில்லை என்கிறார். போட்டிகள் முடிந்து ஆப்பிரிக்க கண்டத்திலேயே ஆறு தங்கம் உட்பட அதிக பதக்கங்கள் குவித்த கென்யா, எப்போது விமான கட்டணங்கள் குறையும் ஊருக்கு போலாம் என்பதற்காய் ஒலிம்பிக் கிராமம் மூடப்பட்ட நிலையில் பிரேசிலில் ஒரு ஒதுக்குபுற கிராமத்தில் இன்னமும் தங்கியிருக்கிறது.

image-20160526-16681-jjm6cz

தோற்று போனதற்கு இன்னொரு முக்கிய காரணம் நம்மிடையே இருக்கும் திறமையானவர்களை பயன்படுத்திக்கொள்ளாதது . தடகள வீராங்கனையை செங்கல் சூளையில் அடைத்தது உட்ச பட்ச அவமானம்., சாந்தி 200மீ ஓட்டத்தில் ஆசிய அளவில் வெள்ளி பதக்கம் வென்றது ஆகச்சிறந்த தொடக்கம். பாலின சோதனையில் அவர் தவறியது துரதிஷ்டம். இப்பிரச்சனையை இந்தியா கண்டுகொள்ளாமல் விட்டதை போல ஒரு அவலம் இனி நடக்க கூடாது.

சாந்திக்கு நடந்ததை போலவே தென் அப்பிரிக்கா வீராங்கனைக்கு பிரச்சனை வந்த போது அந்த தேசமே வெகுண்டெழுந்தது. 2009 பெர்லினில் நடந்த உலக சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வென்ற செமன்யாவின் பதக்கம், பாலின பரிசோதனையால் பறிக்கப்பட்டது. நாடு திரும்பிய செமன்யாவை தென்னாப்ரிக்க விளையாட்டுத்துறை அமைச்சரே நேரில் சென்று ‘தாங்கள் இருப்பதாக’ ஆறுதல் கூறினார். தென்னாப்ரிக்க பிரதமர் செமன்யாவிற்கு ஆதரவாக, அந்தச் சோதனையை எதிர்த்து கடுமையான எதிர்ப்பை பதிவுசெய்தார். அந்நாட்டு அரசே அவருக்கு ஆதரவாக ஐக்கிய நாடுகள் அவையில் வழக்கு தொடர்ந்து, வெற்றியும் கண்டது . தென் ஆப்பிரிக்காவின் பெருமை மிகு அடையாளமாக செமன்யா பார்க்கப்பட்டார். 2012ஆம் ஆண்டு லண்டண் ஒலிம்பிக் தொடக்க விழாவில், தென்னாப்ரிக்காவின் சார்பாக அந்நாட்டு கொடியை கையில் ஏந்தி சென்றவர் அதே காஸ்டர் செமன்யாதான். இதோ தன் தேசத்திற்காய ரியோவிலும் தங்கம் வாங்கி கொடுத்துள்ளார். அமெரிக்க‌ நாடுகளில் கவுண்டி எனப்படும் உள்ளூர் விளையாட்டுகளில் ஜெயித்தவர் கூட நட்சத்திர அந்தஸ்துடன் வலம் வருவார். நாம் தான் ஆசிய வீராங்கனையை செங்கல் பொறுக்க விடுகிறோம்.

justieforsanthi

கண்டுகொள்ளபடாத வீரர்களை போல புதிய வீரர்களை கண்டு பிடிக்காத்ததும் தோல்வியின் காரணம். திறன் மேம்பாட்டு பயிற்சி மற்றும் வாழ்வாதார தேவைகளை அரசு பொருப்பெடுத்துக்கொள்ள வேண்டும். சர்வதேச தரத்திலான விளையாட்டு மைதானங்கள், உள்கட்டமைப்பு வசதிகளை படிபடியாக‌ உருவாக்க வேண்டும்.கிராமம், நகரம் மாவட்ட வாரியான தடகள போட்டிகளை நடத்த ஊக்கப்படுத்தவும் , கலந்து கொள்ளும் வீரர்களை மதிப்புடனும், கரிசனத்துடனும் தேர்வு செய்யவேண்டும்.

இந்திய சாரசரி மனநிலையும் நம்மை தோல்விக்கு இட்டுச்சென்றது. இந்தியர்கள் விளையாட்டு துறைக்கு வராததன் காரணம், பணம் சம்பாரிக்க முடியாது என்ற நினைப்பு. உங்களுக்கு பணம் தான் முக்கியமென்றால் 21 வயதில் பிவி சிந்து சம்பாரித்ததை விட மனப்பாட கல்வியை படிக்கும் நாம் யாரும் சம்பாரிக்க முடியாது என்பதை தாழ்மையுடன் நினைவுபடுத்துகிறேன்.

இந்த கசப்பான தோல்விக்கு இன்னொரு காரணம். நாம். ஆம்! நாமே தான். கிராம புற விளையாட்டு வீரனுக்கு ஒரு குடிமனாக நாம் என்ன செய்திருக்கிறோம் ? அவர்களை கண்டால் புன்னகையுடன் கைகுலுக்குங்கள், அவர்கள் இந்தியாவின் கனவுகளை சுமக்கிறார்கள். ஏன் அவர்களுடன் ஒரு இரவு உணவையோ, தேனீரையோ பகிர்ந்து கொள்ளகூடாது ? நண்பர்கள் சேர்ந்து அவர்களுக்கு ஒரு காலணியை பரிசாக தரகூடாது? மைதானத்தில் அவர்களுடன் செல்பி எடுத்துக்கொள்ளுங்கள். மெனக்கெட்டு உள்ளூர் விளையாட்டு போட்டிகளை போய் பாருங்கள். உங்கள் செய்கைகள் மூலம் அவர் அசாத்தியமான ஒன்றை சாத்தியமாக்க‌ முயற்சிசெய்கிறார் என்ற பெருமையை உணர வையுங்கள்.

நீண்ட நெடிய பாரம்பரியமும், வீரமும் கொண்ட தேசத்திற்காய் ஒலிம்பிக்கில் பதக்கம் வாங்கி தருவதை விட சிறந்த சாதனை இருந்து விடமுடியாது. நீங்கள் தேசத்திற்காய் புழுதிபடிய களத்தில் நின்றீர்கள் என்றால் இந்த தேசம் ஒருபோதும் உங்களை கைவிடாது. அது நம்தேசத்தின் அறம்.

-நிலன்

தி இந்துவில் வெளியான என் கட்டுரையின் மூல வடிவம்

my_girl

எப்படியான ஆண்களை பெண்களுக்கு பிடிக்கும்?

எழுத்தாளுரும் நண்பருமான அபிலாஷ் எப்படியான ஆண்களை பெண்களுக்கு பிடிக்கும் என்பது பற்றி தன்னுடைய வலை பக்கத்தில் எழுதி இருந்தார். அதை பற்றிய என்னுடைய கருத்துகளை இங்கே பதிவிடுகிறேன்.

உளவியல் ரீதியாக ஒருவரை அணுக பிராய்ட் கண்களின் வழிதான்  தொடங்க வேண்டும் என நினைப்பேன். இடியாப்ப சிக்கல்களுக்கு பிராய்ட் எப்போதும் ஒரு உளவியல் தீர்வை வைத்திருப்பார். எதிர்பாலினத்தின் மீதான ஈர்ப்பை வகைப்படுத்தினாலே ஒருவருக்கு எப்படிப்பட்ட குணாதிசயங்களை கொண்டவரை பிடிக்கும் என்பதை ஓரளவு கண்டுகொள்ளலாம்.

ஒரு பெண் குழந்தையின் பாலியல் சார்ந்த ரசனை அதன் குழந்தைமை வயதில் ( 4 – 6 வயது ) தீர்மானிக்கப்படுகிறது ஆச்சர்யமாக இருக்கலாம் உளவியலில்  இதை எலக்ட்ரா காம்ளக்ஸ் என்கிறார்கள். பெரும்பாலும் பெண் குழந்தையின் அருகில் இருக்கும்  ஆணான அவள் அப்பாவை ஒற்றிய ரசனையாக அது அமையும். எதிர் காலத்தில் அப்பா சாயலில், அவரது குண நலன்கள் கொண்ட ஒரு துணையை தேர்தெடுப்பதை அவர்கள் பாதுகாப்பாக உணர்வார்கள். எலக்ட்ரா காம்ளஸ் ஒரு பெண்ணின் உறவுகளை,  பாலியல் விருப்பத்தேர்வுகளை பெரும்பாலும் தீர்மானிக்கிறது. இதனால் தான் வளர்ந்த பின்பும் அப்பா பற்றிய இரசனைகளை பெண்கள் விடுவதில்லை. இதே போல  ஆண் குழந்தைகளுக்கானது ஒடிபஸ் காம்ளக்ஸ்.

இதை மிக‌ எளிமையாக புரிந்து கொள்ளலாம், பெண்கள் திருமணம் முடிந்து, வயதான பின்பும் கூட  புகுந்த வீட்டிலோ, கணவனிடமோ எங்க அப்பா என்ன எப்படி பாத்துக்கிட்டாரு தெரியுமா?  என திரும்ப திரும்ப சொல்வதை நீங்கள் கேட்டிருக்கலாம்.  ஏனெனில் அப்பா என்பவர் அவர்களின் தினசரியை தீர்மானிக்கிறவராய்  இருக்கிறார். அவர் கண்டித்தாலும், கண்டிக்காவிட்டாலும், அந்த மனிதர் பெரும் ஆளுமையை கையில் வைத்திருக்கிறார்., ஆளுமை கொண்ட ஆண்கள் எப்போதும் பெண்களை ஈர்க்கிறார்கள். மகள்கள் கொண்டாடுகிறார்கள்.

ஏன் அவர்களால் அப்பாவை  கொண்டாடுவதை போல அம்மாவை கொண்டாட‌ முடிந்ததில்லை? காரணம் 4 வயதில் இயற்கை அவர்களின் மனதில்   பதித்தவைகள் தான். அம்மா என்பவள் தன்னை போன்ற உடல் கூறு கொண்டவள், அவளிடம் வியப்பதற்கு ஒன்றும் இல்லை. ஆனால் அப்பா என்பவர் அப்படி அல்ல‌,

ஆண்கள் மிகை உணர்ச்சியில் அனுகும் தாய்மையை பெண்கள் அனாயசமாக கடந்து போவார்கள்.  எப்படி இருந்தாலும் ஒரு நாள் தானும் தாய்மையை அனுபவிக்க போகிறவர்கள் தான் என்பது அவர்களின் ஆழ்மனதில் பதிந்திருக்கும்.  அதனால் தான் பெண்கள் பெரும்பாலும் அம்மாவிடம் முரண்படுகிறார்கள். ஆனால் எலக்ட்ரா காம்ளஸ்யை வைத்து மட்டும் ஒரு பெண்ணின் ரசனையை முழுவதுமாக‌ தீர்மானிக்க முடியாது .

பெண் குழந்தைகள் வளர்கிறார்கள், குழந்தைமையிலிருந்து விடுபட்டு பூப்பெய்துகிறார்கள் புறவய காரணிகளான கேளிக்கை, படிப்பு,சினிமா, புத்தக அறிவு,சம கால நிகழ்வுகள், நண்பிகள் என அவர்களின் தளம் விரிவடைகிறது. இது அவர்களின் ரசனைக்குரிய துணையின் பிம்மத்தை கலைத்து ஒழுங்கு படுத்துக்கொள்ளும் காலம். அவர்களின் மனது எதில் ஈடுபாட்டுடன் இருக்கிறதோ அதை சார்ந்த ஒத்த ரசனையுள்ள ஆண் அவர்களை ஈர்க்கிறான்.

வித்யாசமாக படலாம் ஒவ்வொரு பெண்ணுமா தனக்கு துணையான ஆணை கண்டைய சினிமா பார்க்கும் போது, படிக்கும் போதும் சதா நினைத்துக்கொண்டிருப்பாள் என கேட்கலாம், அப்படி இல்லை., ஆனால் ஒரு ரசனைக்குரிய விஷயத்தை பார்க்கும் போதோ , கேட்கும் போதோ ஆழ்மனம் அதன் படிமங்களை திருத்திக்கொண்டே இருக்கும்.

என்றைக்கும் இல்லாம இன்னைக்கு சந்தோஷமா இருக்க, என்ன காரணம்னே தெரியல என ஒரு பெண் உங்களிடம் சொன்னால், அது அவளின் ஆழ்மனம் தனக்கு பிடித்த எதோ ஒன்றை கண்டடைந்த நாளாக இருக்கலாம். இது ஒரு ஆணைபற்றி மட்டுமல்ல, தனக்கு பிடித்த கலை , அறிவியல், இசை என ஏதோ ஒன்றின் கண்ணியை அவர்களின் ஆழ்மனம் அறிந்த நாளாக இருக்கலாம்.  இவ்வளவு ஏன் யாரோ ஒருவர் கோலம் போடுவதை பார்த்து அதிலிருந்து சிக்கலான விஷயம் என்று நினைத்த ஒன்றை  ஆழ் மனம் தெளிவு படுத்திக்கொண்டிருக்கலாம்.

ஆண்களை விட பெண்கள் மகிழ்ச்சியாய் இருப்பதை விரும்புவார்கள். தன்னையும்,  சுற்றி இருக்கும் பொருட்களை அழகு படுத்திக்கொள்வதும் , நேற்று பார்த்த தோழியை இன்று சந்தித்தால் கூட மிகையுணர்ச்சியுடன் கைபிடித்து மகிழ்ச்சி பரிமாறுவதும் இதனால் தான். ஆனால் ஆண்கள் இதற்கு நேர் எதிரானவர்கள் ஒரு ஆண் எதை பற்றியும் சிந்திக்காமல் மணிக்கணக்காக வெறுமனே சும்மாக‌ உக்காந்திருக்க முடியும். அவனுடைய தேவை அது. தேவையா? ஆமாம் தேவைதான்.

இதை கற்காலத்திற்கு போய்தான் புரிந்து கொள்ள முடியும். அடிப்படையில் ஆண் என்பவன் வேட்டைக்காக படைக்கப்பட்டவன், ஆதிகாலத்தில் மனிதர்கள் குகைகளிலும் , பாறைகளிலும் வாழும் போது , ஆண்கள் குழுவாக வேட்டைக்கு   செல்வார்கள்.  இப்போது போல துப்பாக்கிகள், நவீன‌ வலைகள் என வசதிகள் இல்லாத காலம்.  வேட்டை விலங்கை துரத்திக்கொண்டே பல மைல் ஓட வேண்டும், அந்த மிருகம் கலைத்து ஓட முடியாமல் நிற்கும் போது அவர்களின் வில் விலங்கின் இதயத்தை துளைக்கும்(இன்னும் ஆப்பிரிக்க காடுகளில் இந்த முறை உள்ளது விடியோ இணைப்பு). குழுவாக,ஓசை எழுப்பாமல்,சைகைகளில் மட்டும் தகவல் பறிமாறி பதுங்கியிருந்தால் தான் அந்த விலங்கை வேட்டையாட முடியும்.  தேவயற்ற சிறு பேச்சும் சத்தமும் கூட அன்றை தேவைக்கான இரையை தவறவிட காரணமாக அமைந்து விடும், பிறகு குகைகளில் வாழும் தன் மனைவியும், குழந்தைகளும் பட்டினியாய் படுக்கவேண்டியது தான் . இதனால் தான் இயற்கை ஆண்களில் மொழி மையத்தை அளவு குறைவாக படைத்தது.

angel1

பெண்களின் மொழி மையம் ஆண்களை விட பெரியது. பெண்கள் குகைகளில் கூட்டாக இருந்து சக பெண்ணுடன் பேசி தனக்காக நாட்களை போக்கிக்கொண்டனர். ஒரு பெண் ஒரு நாளைக்கு குறைந்தது 3000 வார்த்தைகளாவது பேச வேண்டும் அப்போது தான் அவர்கள் இயல்பாய் இருப்பதாய் உணர்வார்கள். இன்றைய தனிக்குடும்ப வாழ்க்கையில் பேசுவதற்கான வாய்புகளே அற்ற சூழ்நிலையில் அந்த இடத்தை கச்சிதமாய் மெகா சீரியல்கள் பிடித்துள்ளன . மெகா சீரியல் கேரக்டர்கள் பேசிக்கொண்டே இருக்கும் இவர்கள் லயித்து அந்த கேரக்டராய் எப்போதோ மாறி இருப்பார்கள். வேலைக்கு போகாமல் வீட்டிலிருக்கும் பெண்களை சந்தித்த சில நிமிடத்திலேயே மனித உறவுகளை பற்றி விவாதிக்க தொடங்கிவிடுவார்கள். அவர்களுக்கு தெரியும் உறவுகள் எப்போதும் பேச்சை வளர்த்திக்கொண்டே இருக்கும் என.

இதிலிருந்து பெண்களின் ரசனைக்கான குறிப்பு கிடைக்கிறது. அது பேச்சு.  எந்த ஆண் தன்னுடன் சலிக்காமல் பேசுகிறானோ, தான் சொல்வதை “ம்” கொட்டி கேட்கிறானோ அந்த ஆணை பெண்களுக்கு பிடிக்கும். பெரும்பாலன பெண்கள் தனக்கு பிடித்த ஆணை பற்றி இன்னொரு பெண்ணுடன் விவ‌ரிக்கும் போது அவன் ஜாலியா பேசுவாண்டி., டைம் போறதே தெரியாது என்பார்கள். இதை எதிர் முனையில் கேட்கும் பெண்ணுக்கு அது தன் தோழி ஒரு ஆணுடன் பேசுவதற்கான நியாயமான காரணமாய் தெரியும்.

நீங்கள் ஆண்களை இதே கோணத்தில் அனுக முடியாது. ஆண்கள் பெண்களின் அம்சத்துடன் முற்றாய் முரண் படுவார்கள். யார் அதிகாரத்தை பற்றி பேசுகிறார்களோ அவர்களை நோக்கியே ஒரு ஆண் ஈர்க்கப்படுவான். அந்த அதிகாரம் பணம் , உறவுகள் என எதை பற்றி வேண்டுமானாலும் இருக்கலாம். அதிகாரம் என்பது முக்கியம். ஒரு கல்லூரி மாணவனை அழைத்து “ பகுதி நேர வேலையை ( பார்ட் டைம் ஜாப்) பற்றி பேசினால் மாணவியை விட மாணவன் ஆர்வமாகி விடுவான். காரணம் பணத்தின் மூலம் அதிகாரத்தை பெற முடியும் என்பதை அந்த‌ ஆணின் ஜீன் அறிந்துவைத்திருக்கிறது.

எல்லாவகை ஆண் பெண் உறவில் பாலியல் கோணம் இருந்தே தீரும் என்கிறார் பிராய்ட். பெண்களால் முகத்தின் உணர்ச்சிகளை எளிதில் அடையாளம் கண்டு கொள்ள முடியும், அதற்கு பல உளவியல் காரணிகள் இருக்கின்றன. முக்கியமானது பெண்களின் பெரிய மொழி மையம்.

இதனால் தான் பார்த்தவுடன் எளிமையையாக ஒரு ஆணை பெண்களால் இனம் பிரிக்க முடிகிறது.  ஆண் தனதருகில் இருக்கும் போது தன்னை பற்றி என்ன நினைக்கிறான் என்பதை பெரும்பாலும் சரியாகவே யூகிக்கிறார்கள்.  ஒரு உண்மை தெரியுமா?  ஆண் அவள் மீதான காதலை சொல்ல வருவதை 90% பெண்கள் ஏற்கனவே அறிந்து வைத்திருக்கிறார்கள். அந்த அளவு பெண்கள் கூர்மையானவர்கள்.

மேலே சொன்ன எலக்ட்ரா காம்ளக்ஸ் , சூழ்நிலை விருப்பங்கள் இவற்றில் சேராமல் தனித்து இயங்கும் இன்னொரு வகை பெண்கள் இருக்கிறார்கள்.  அவர்கள் சேப்பியோ செக்ஸுவல் (sapiosexual)  பெண்கள்.  ஒரு ஆணை அவனின் புற அழகு, குணாதிஸ்யம், பண்பு என எதை பற்றியும் கணக்கில் கொள்ளாமல் ”அறிவு சார்ந்த ஆளுமையை” மட்டுமே பார்த்து காதல் கொள்வது. இந்த காதல்  வயது வித்தியாசம், பொருளாதாரம் பற்றியெல்லாம்  கவலை கொள்ளாது. ஆணின் அறிவுத்திறன், ஆளுமை இது மட்டும் தான் இவ்வகை பெண்களின் விருப்பத்தேர்வாக இருக்கும். நிறைய சர்ச்சைகளை ஏற்படுத்தியிருக்கிறது இவ்வகை காதல். இந்த வகை பெண்கள் ஆணுக்கு சரியான துணையாய் அவனை உந்தித்தள்ளும் சத்தியாய் இருப்பார்கள். இந்த காதல் மிகை உணர்ச்சியுடன் அனுகப்படும்.

எடுத்துக்காட்டாக‌ கல்லூரி விரிவுரையாளரை அவரின் ஆளுமைக்காக காதலிப்பதும் இதில் சேர்த்திதான், கலை, அறிவியல், விஞ்ஞானம் என ஆற்றல் மிகு துறையின் ஆண்களை நோக்கி இவ்வகை பெண்கள் ஈர்க்கப்படுவார்கள். மேரி கியூரி தொடங்கி இன்போசிஸ் நாரயண்மூர்த்தி வரை அடுக்கிக்கொண்டே போகலாம்.

அபிலாஷ் சொன்னது போல தன்னை சிரிக்கவைக்கும் ஆண் எப்போதுமே பெண்களுக்கு ஈர்ப்பானவன். எதிர்பாலினத்தை சிரிக்க வைக்கும் ஆணை ரசனையின் குறியீடாக பெண்கள் பார்க்கிறார்கள்.

பெண்களின் ரசனை காலத்திற்கு காலம் மாறிக்கொண்டே இருக்கிறது. சங்க காலத்தில் முரட்டுத்தனமான ஆண்மையுடன் , பெண்கள் அனுகுவதற்கே சிரமப்படும் ஆணை விருப்பினார்கள், அதன் பிறகு சாகசங்கள் செய்யும் ஆண் பெண்களின் தேர்வாக இருந்தது, அதன் பிறகு பெல்பாட்டம் அணித்த ஆண்கள், அதன் பிறகு தலைகீழ் ப வடிவ மீசை என நீண்டு கொண்டே போனது.

சமூகம் கல்வியை நோக்கி சார்ந்திருந்த போது கல்வியில் முதலிடத்தில் இருப்பவனை ரசித்தார்கள். பொருளாதாரம் சார்ந்திருந்த போது பொருளாதாரத்தில் நிறைவு கொண்டவன். இரண்டாயிரத்தின் ஆரம்பத்தில் பெண்மையும், ஆண்மையும் கலந்து இருக்கும் ஆண்களை ரசித்தார்கள்  ஆரம்ப கால நடிகர் மாதவன் போன்றவர்களை உதாரணமாக கொள்ளலாம். இப்போது கரண்ட் டிரெண்ட் தாடி வைத்தவர்கள்.

ஆண்கள் வெறுமனே தாடி வைத்துக்கொண்டு குறுக்கும் மறுக்கும் நடக்கிறார்கள் என நினைக்க வேண்டாம். அந்த தாடியை ரசிக்க  ஒருத்தி இரு(க்)ந்திருக்கிளாள். யாரோ ஒரு பெண்ணின் விருப்பம் இன்றைய டிரெண்ட் ஆகிவிட்டது. உண்மையில் ஆண்கள் பெண்களை தேர்தெடுப்பதில்லை. பெண்கள் தான் ஆண்களை உருவாக்கி தனக்கானவனை கண்டடைகிறார்கள்.

இவை எல்லாவற்றையும் விட ஆண்களின் வியர்வை வாசனையில் கவரப்படும் பெண்கள், மேற்கத்திய நாடுகளில் நீலக்கண் ஆண்களால் கவரப்படும் பெண்கள், உயரமாய் இருப்பவரால் மட்டும் கவரப்படும் பெண்கள் என தனி அகராதியே போடலாம். இது ஒவ்வொரு பெண்ணுக்கும் மாறுபடுகிறது. ஒரு ஆண் பெண்ணின் விருப்பத்தேர்வுகளை தெரிந்துகொள்வது கம்பசூத்திரம் இல்லை. அவளை மதித்து, ஒரு ஆண் எப்படி சக ஆணை தன்னுளகிற்குள் ஏற்றுக்கொள்வானோ அதே போல் அவளையும் நடத்தும் போது ஒரு பெண் சோஷியல் சர்கிளில் இருந்து ஒரு ஆணை பர்ஸனல் சர்கிளுக்கு அனுமதிக்கலாம். அப்போது அவளின் விருப்பதேர்வுகளை அவளில் நண்பனான ஆண் பெரும்பாலும் அறிந்திருப்பான்.இது காலகாலமாக நடக்கிறது.

இது அறிமுகமான பெண்களுக்கு சரி., அறிமுகமில்லாத , பார்த்திராத பெண்ணாக இருந்தால்?? அதை இன்னொரு நாள் பார்க்கலாம் 😉

 

indian-olympics

இன்னும் சில நாட்களில் தொடங்கப்போகிறது 2016 ஒலிம்பிக் திருவிழா. இந்த ஒலிம்பிக்கில் இந்தியாவின் பங்களிப்பு எப்படி இருக்க போகிறது? அதிலும் குறிப்பாக தடகளத்தில் நிறைவேறாத நூறு ஆண்டுகளின் கனவை இந்த முறை இந்தியா எப்படி சரிகட்டப்போகிறது ?

உலகின் மிகப்பெரும் மனித சக்தியை கொண்ட தேசம். கல்வி, விஞ்ஞானம்,தொழில்நுட்பம் ராணுவம் என தன்னிறைவை நோக்கி முன்னகரும் தேசம், 2020ல் வல்லரசாக தன்னை முன்னிறுத்திக்கொள்ளு விரும்பும் தேசம். அதன் நிறைவேறாத நூற்றாண்டு கனவு., உலக அளவில் தடகளத்தில் ஒரு தங்கம்.

தடகளத்தில் மண்ணை கவ்வுவது இந்தியாவின் துயர்மிகு சரித்திரம்.மில்கா சிங்கையும், பிடி உஷாவையும் தான் தடகளத்திற்கென இன்றுவரை கைகாட்டுகிறோம். மில்கா சிங் களத்தில் இருந்தது 1960 களில்., பி.டி உஷா 1980 களில்.,கடைசியாக இந்தியா ஒலிம்பிக் தடகளத்தில் வெள்ளி வென்றது எப்போது தெரியுமா? 1900 ஆம் ஆண்டு பிரான்சில் நடந்த ஒலிம்பிக்கில். இந்தியாவில் பிறந்த பிரிட்டிஷ் காரர் தான் அதையும் வாங்கிகொடுத்தார். நார்மன் பிட்சர்ட் இந்தியாவின் முதல் தடகள வீரர். அப்போது மட்டும் தான் இந்தியா ஒலிம்பிக் பதக்கப்பட்டியலில் அதன் வரலாற்றிலேயே குறைவான 17ம் இடத்தை பிடித்தது. அதன் பிறகு? தொடர் தோல்விகள். நூற்றிப்பதினைந்து வருடங்களாக பிரிட்டீஷ் இந்தியர், தேசி இந்தியனை ஜெயித்துக்கொண்டே இருக்கிறார்.நீண்ட தோவ்விகளால் வறண்டு போன தடகளத்தை கள ஆய்வு செய்யாததன் வீழ்ச்சி இந்த நிறைவேறாத கனவு.

kkmvU0eifjfsi

ஒலிம்பிக் போட்டிகள் மட்டுமல்ல , உலக தடகளத்திலும் இந்தியா கால் பதிக்காமல் போனது. மாராத்தான் போன்ற தொலைதூர போட்டிகளாகட்டும், 100 மீ, 200 மீ போன்ற குறுகிய தூர போட்டிகளாகட்டும், இல்லை நீளம் தாண்டுதல் , உயரம் தாண்டுதல், மும்முனை நீளம் தாண்டுதல் போன்ற போட்டிகள் ஆகட்டும் இவை அனைத்தும் தீவிர உடல் உழைப்பை கோருபவை. மனவலிமையை பெரிதும் சார்ந்தவை, டிராக் அண்டு பீல்டு எனப்படும் இவற்றில் எப்போதும் இந்திய கொடியை முதலிடத்தில் பார்க்க முடியாது நம் தலைமுறையின் சாபக்கேடு.

தடகளம் என்பது உடலுக்கும் மனதுக்குமான ஒரு யுத்தம். வேறெந்த துறையிலும் இல்லாத அளவு தடகளத்தில் உளவியல் கவனிக்கப்பட வேண்டிய ஒன்று. இந்தியா தவறியதும் இங்கே தான். கடைசி ஒலிம்பிக் போட்டியை சற்று அலசுவோம். ரஞ்சித் மகேஷ்வரி 2012 லண்டன் ஒலிப்பிக்கில் தவறியதற்கு முக்கிய காரணம் பதட்டம். தேசிய சாதனையை தன் பெயருக்கு பின்னால் வைத்திருந்த மனிதர்,27 பேர் கலந்து கொண்ட போட்டியில் 27வது ஆளாய் வந்திருக்கிறார், 27வது என்று கூட சொல்ல முடியாது அவர் தாண்டின ஒரு அளவு கூட ஏற்றுக்கொள்ள முடியாத அளவைகள்( Foul ) முறையில் வெளியேற்றப்பட்டார்.

டின்டு லூகா, பிடி உஷாவின் பள்ளியில் இருந்து வந்தவர், பெரிதும் எதிர்பார்க்கப்பட்டவர். 800மீ ஓட்டத்தில் இந்தியாவிற்கு பதக்கம் உறுதி என மீடியாக்கள் அலறின. அவருடைய மாநிலத்தை சார்ந்தவரே டின்டு வெல்வதற்கு வாய்ப்புகளே இல்லை என பேட்டியளிக்கிறார். வேறுயாருமல்ல அஞ்சு பாபி ஜார்ஜ் தான். போட்டி நடக்கும் போது இப்படி ஒரு வார்த்தை வீரனை எப்படி காயப்படுத்தும் என்று அறியாதவரல்ல, மிக பரிதாபமாக டின்டு தோற்றுப்போனார். இத்தனைக்கும் இவர் இந்தியாவின் தேசிய சாதனையை(1:59.17) கொண்டவர்.

அதே 2012 ம் ஒலிம்பிக்கில் 3000 மீ தடை தாண்டும் ஓட்டத்தில் சுதா சிங் இறுதி போட்டிக்கு கூட முன்னேற முடியவில்லை, ஒலிம்பிக்கின் அதிக தூர போட்டிகளான 50கிமீ நடை, 20கிமீ நடை , மாரத்தான் என அடுத்தடுதது தோல்விகள். போட்டிகள் முடிந்த போது மற்றவர்கள் பதக்கத்திற்கு முத்தம் கொடுத்துக்கொண்டிருக்க நாம் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தோம். மறைமுயன்றும் முட்டிக்கொண்டு நிற்கும் அவமானத்தின் எச்சம்.

indian_atheletes_PTI

இதை எல்லாவற்றிலும் பெரிய தலைகுனிவு குறுகிற ஓட்டப்போட்டிகளில் நம் ஆட்கள் ஒருவரும் இல்லை. நம் ஆட்கள் குறுகிய ஓட்டப்போட்டிகளை பற்றி கனவில் கூட நினைப்பதில்லை போலும்.100மீ, 200 மீ, 110மீ தடைதாண்டும் ஓட்டம் என தொடங்கி என நீளும் பட்டியல் அது. அங்கே ஜமைக்காவின் ஆதிக்கம் .ஜமைக்கா காரர்களுக்கு தொடர் ஓட்டம் என்பது அல்வா சாப்பிடுவது போல. 4* 100 தொடர் ஓட்டத்தில் உசைன் போல்ட், யோஹ‌ன், நெஷ்டாகாட்டர் என களத்தில் அணிவகுக்க மற்றவர்கள் நிலை பரிதாபடும், பல உலக சாதனைகளை கையில் வைத்திருக்கிறார்கள்.

இந்தியாவின் தேசிய சாதனை அணில் குமார் 100 மீ ஒட்டப்போட்டியில் 10.30 நொடிகளில் வைத்திருக்கிறார். ஒலிம்பிக் 100 மீ இறுதிப்போட்டியில் அனைவரும் 9.98 நிமிடத்திற்கு முன்பாக முடித்தவர்கள்., அந்த போட்டியில் கடைசியாக வந்தர் கூட ஒன்றும் சாதாரணமானவரல்ல ஜமைக்காவை சேர்ந்த அசாஃவா பாவல் 9.72 நொடிகளில் 100மீ கடந்த வெற்றிச்சரித்திரம் கொண்டவர்.

அமெரிக்காவை பாருங்கள், சீனாவை பாருங்கள் என்றெல்லாம் சொல்லவில்லை, ஜமைக்கா குட்டி நாடு, சிறு தீவு, பூதக்கண்ணாடியை வைத்து தான் உலக வரைபடத்தில் தேட வேண்டும் தடகளத்தில் உலக சாதனைகளுக்கு சொந்தக்காரர்கள். 100 மீ ஓட்டப்போட்டில் ஜமைக்காவின் தங்க மங்கை சேல்லி ஆன்‍னின் (shelly ann fraser) ஓட்டத்தை ஒரு தடவை பாருங்கள், சக ஓட்டக்காரர்களின் சிம்ம சொப்பனம் அவர். ஒரு தேர்ந்த உயர் ரக பந்தய குதிரையை போல அத்தனை லாவகத்துடன் நொடிகளில் இறுதிக்கோட்டை அடைவார். தடகளத்தில் உயரம் முக்கியமென கருதப்பட்ட வரலாற்றை சுக்கு நூறாய் உடைத்துப்போட்டவர், உயரம் அதிகம் கொண்டவர்கள் களத்தில் ஒடிக்கொண்டிருக்க இவர் பறந்து கொண்டிருப்பார். ஜமைக்காவின் தங்கபெண்மணி, ஒலிம்பிக், உலக தடகள சாம்பியன்ஷிப்கள் என ஒன்றையும் விட்டுவைக்கவில்லை. திரும்ப திரும்ப நாம் நினைவுபடுத்திக்கொளள வேண்டிய கேள்வி இது தான். நம்மால் ஏன் ஒரு சேல்லியையோ, உசைன் போல்டையோ குறைந்த பட்சம் இன்னொரு நார்மன் பிட்சர்ட் டை கூட உருவாக்க முடியவில்லை?

485096972

குறுகிய தூரத்தில் ஜமைக்கா முடிசூடா மன்னன் என்றால் நீண்ட தூர ஓட்டத்தில் ஆப்பிரிக்க நாடுகள்., அனேகமான முதன் மூன்று இடங்களுக்கான போட்டி கென்யா, எத்தியோப்பியா,உகாண்டா, மொராக்கோ, என இவர்களுக்குள் தான் நடக்கும், மற்றவர்கள் 4ஆம் இடம் தொடங்கி மற்ற இடங்களுக்கு போட்டி போட்டிக்கொள்ளலாம். அப்பிரிக்கர்களின் அர்பணிப்பும் பயிற்சியும் சிலிர்க்க வைக்ககூடியது. காடு மேடு புல்வெளி என பல்லாயிரக்கணக்கான கிலோமீட்டர்களை அங்குலம் அங்குலமாக அளந்து வைத்திருக்கும் அவர்களின் கால்கள். மிகை படுத்தி சொல்லவில்லை ஒரு நாளில் சாதாரணமாக 12 மணிநேரத்தை பற்சிக்காக ஒதுக்குகிறார்கள். ஆயிரம் பேர் பயிற்சி பெற்றாலும் கடைசி போட்டிவரை வருவது சிலபேர் தான் ஆனாலும் அந்த பெரும் உந்து சக்தியை ஆப்பரிக்கர்களுக்கு கொடுத்தது எது?

ஒரு ஆப்பிரிக்கரிடம் கென்யர்கள் அலை அலையாக நீண்ட தூர ஓட்டப்போட்டியில் வருவதற்கு என்ன காரணம் என்றேன், யோசிக்கவேயில்லை வயிற்றை தடவி ” சோறு ” என்றார். அங்கே சொந்தமாக ஒரு பூட்ஸ் வைத்திருப்பவர் பணக்காரர்., ஒரே பூட்ஸை பலபேர் காசு கொடுத்து வாங்கி ஒவ்வொருவராக பயிற்சி செய்து கொள்வார்களாம். பெரும்பாலனவர்கள் இன்னும் வெரும் காலில் தான் ஓடிக்கொண்டிருக்கிறார்கள். வெறும் காலில் 40 கிமீ ஓடுவதை கற்பனை செய்து பாருங்கள் அதன் பின்னான சமரசம் செய்து கொள்ளாத விடாமுயற்சியும் , அர்பணிப்பும் புரியும்.

பசந் ரானா 2012 லண்டன் ஒலிம்பிக் 50 கிமி நடையில் 33 வது இடம் பிடித்தார். அதில் அவர் ஒரு சாதனையும் படைத்தார். இந்தியாவில் 50கி நடையை குறுகிய நேரத்தில் கடந்தவர் எனற சாதனை அது. அப்படியானால் ஒலிம்பிக்கில் 33 வது இடம் இந்தியாவில் முதலிடம்., இந்தியர்களின் தரத்திற்கும் சர்வதே தரத்திற்கும் இடைப்பட்ட இடைவெளி அது. இட்டு நிரப்ப முடியாத பெரு வெளி.

உள்கட்டமைப்பு இல்லாமல், மனித வளம் குறைந்த, பொருளாதாரத்தில் ஸ்திர தன்மை இல்லாத நாடுகளில் இருந்து உலக சாதனைகள் கணக்கெடுக்கப்படும் போது எதில் தொலைத்தோம் நம்மை? பொருளாதரத்தில் கடைசி நிலையில் இருக்கும் ஆப்பிரிக்கர்கள் தங்க பதக்கத்தை பட்டியலிடும் போது ஏன் நாம் பதக்க பட்டியலிலாவது வருவோமா என்று காத்திருக்கிறோம்? இந்தியர்கள் வலிமையற்றவர்களா?

150201137

ஒரு வீரனைஉருவாக்குவது என்பது ஒரே நாளில் நடக்ககூடிய விஷயம் அல்ல., அதற்கு சமரசம் செய்து கொள்ளப்படாத முன் தயாரிப்புகள் தேவை. மிகுந்த பொருட்செலவை கோருபவை. ஒரு போதும் விட்டுவிடாத கண்காணிப்பு தேவை படும். மனம், உடல், தொழில்நுட்பம் என அனைத்தையும் பிரித்துப்போட்டு அலசி ஆராயப்பட வேண்டிய துறை அது.

தொழில்நுட்பம் என இங்கு அழைக்கப்படுவது தடகளம் சார்ந்த கற்றல் முறை. இத்தனை வருடத்தில் ஒரு முறை கூட தான் ஓடுவதை துல்லிய வீடியோவாக எந்த ஒரு வீரனும் பார்த்திருக்கமாட்டார்கள், கைகளை எப்படி நீட்டுவது, தொடக்க கோட்டிலிருந்து முன்னரும் போதான உடல் அசைவுகள், சமநிலை ஓட்டம் என அனைத்தும் இந்த வீடியோ பதிவுகளில் அலசப்பட வேண்டும், சர்வதேச போட்டிகளுடன் இந்த வீடியோக்களை ஒப்புமை படுத்தும் போது ஒரு வீரன் தன் தவறுகளை தானே அடையாளம் கொள்வான். இந்த தொழில்நுட்பம் பள்ளியிலிருந்தே கற்றுத்தரப்பட வேண்டும்.

உடலுக்கான பயிற்சி சற்று கடினமானது, அதிக நேரத்தை எடுத்துக்கொள்ள கூடியதும் இதுவே. அந்தந்த போட்டிகளுக்கு தேவையான உடலமைப்பை கொண்டு வர அதில் பயிற்சி பெற்ற நிபுணர்கள் தேவை படுகிறார்கள். இவர்கள் இந்திய,சர்வதேச சந்தையில் சாமானியமாய் கிடைக்க மாட்டார்கள். அவர்களை ஈர்க்க வேண்டும், அவர்களுக்கான வசதி வாய்ப்புகளை அரசு கட்டமைக்க வேண்டும். வீரனின் உடல் மனம் என அனைத்தையும் உருவாக்கப்போகிறவர்கள் இவர்கள் தான். வீரர்களின் முன்னேற்றம் காலவாரியாக பட்டியல் இடப்பட வேண்டும் தொடர்ந்து கண்காணிப்பு,அறிவுறுத்தல்,மாற்றம் என சங்கிலி நிகழ்வாக நடந்து கொண்டே இருக்க வேண்டும். அரசின் கண்காணிப்பும்,அழுத்தமும் வீரனை தொடர்ந்து களத்தில் இயங்கவைக்கும்.

அடுத்து மனம் சார்ந்த உளவியல் பயிற்சி. மனம் ஒவ்வொருமுறை வெல்லும் போதும் தடகள வீரன் முன்னேறிக்கொண்டிருக்கிறான். மனதை தாண்டி உடல் ஜெயிக்கும் போது அவன் கால்கள் தள்ளாடுகிறது. தன்னபிக்கை பலூனை ஒரு ஊசி உடைத்துப்போடுகிறது. இயலாமை, துரத்த தனக்கு முன் ஓடிக்கொண்டிருக்கும் வீரனை பரிதாபத்துடன் பார்த்து தன் தோல்வியை ஏற்கிறான்.

விடா முயற்சியின் தேவையை பற்றி தேர்ந்த உளவியல் நிபுணர்களை கொண்டு வீரர்களிடம் கலந்துரையாடல் நடத்த வேண்டும். வெற்றியின் தாரக மந்திரம் மெல்ல விதைக்கப்படுவது இவர்களால் தான். சோர்ந்து போகாமல் வீர‌னை உயிர்ப்புடன் வைப்பது இவர்கள் கையில் இருக்கிறது.

Olympics-Day-9--Athletics

இவை மட்டுமல்லாது வீரர்களுக்கான பொருளாதாரம், கல்வி, தனி மனித மேம்பாடு, உள்கட்டமைப்பு என அனைத்திலும் முன்னகர வேண்டும். கிராமத்திலிருந்து 50 கி.மீ பயணம் செய்து விளையாட்டு மைதானத்தில் வந்து ஒரு மாணவன் கற்று கொள்வான் என நினைப்பது மிகையானது. மீண்டும் தூசி தட்டிப்போன நமது ஊரக விளையாட்டு மைதாங்களை, உடற்பயிற்சி கூடங்களை உயிர்ப்பிக்க வேண்டும்,ஒத்திகை மைதானம் சிந்தடிக் டிராக் எனப்படும் ஒடுபாதைகளிலும் இருப்பது கட்டாயமாக்கப்பட வேண்டும். வீரர்களுக்கான உடை , பொருட்கள் மானியவிலையில் தரப்பட வேண்டும், ஒரு போட்டியில் தோற்றாலும் தொடர்ந்து பயிற்சியை ஊக்கப்படுத்த வேண்டும்.

பள்ளி அளவில் தோற்றுப்போகும் பெரும்பாலான மாணவர்களை கண்டுக்கொள்ளப்படாமல் விடுவதை போன்ற அபத்தம் வேறில்லை, மீண்டும் மீண்டும் ஒரு வீரன் தன்னை புதுப்பித்துக்கொள்ள கால அவகாசமும் கண்காணிப்பும் கூடவே கரிசனமும் தேவை என்பதை உணரவேண்டும்.

இத்தனை காலமும் ஏன் இந்தியர்கள் தோற்றுப்போகிறார்கள். எதை விதைக்க மறந்தோம் வீரர்களின் மனதில்? தோல்விக்கான முக்கியமான விஷயங்களில் ஒன்று அரசியல் மற்றும் மிக கேவலமான விளையாட்டுத்துறை ஊழல்கள், நூறு வருட கனவை வெறும் கனவாக மட்டும் வைத்துக்கொள்வதற்கு முகம் சுழிப்பதே இல்லை இவர்கள்.ஒரு வீரனுக்கு வாங்கப்படும் காலுறை பணத்தை கொள்ளையடித்து என்ன சாதிக்கப்பார்க்கிறார்கள்? தேசத்திற்காக ஒடும் வீரனின் வியர்வை துளிகளில் பங்குபெறாத இவர்கள் வெற்றியின் போது அருவருப்பாக நினைக்கப்படுவார்கள் என்பதை ஏன் இவர்கள் நம்ப மறுக்கிறார்கள்? இவர்களின் தனிமனித திமிறும் ,ஊழலும் நூற்றாண்டுகனவை சிதைத்துப்போட்டதன் வரலாறு சிவப்பு மை கொண்டு எழுதப்படவேண்டியது.

விளையாட்டு துறை ஊழல் பற்றி ஒரு சிறு கணக்கை பாருங்கள். இது 2010 காமன்வெல்த் விளையாட்டுப்போட்டியில் நடந்தது.“டிரெட் மில்” என்னும் உடற்பயிற்சி சாதனத்தின் அதிகபட்ச விலையே ரூபாய் மூன்று லட்சம்தான். ஆனால், அதனை 9.75 லட்சத்திற்கு வாடகைக்கு எடுத்துள்ளனர். 10,000 ரூபாய் மதிப்புள்ள ஏர் கூலரை 40,000 ரூபாய்க்கும், ரூ.25,000 மதிப்புள்ள கணினியை 89,052 ரூபாய்க்கும் வாடகைக்கு எடுத்துள்ளனர். கையை சுத்தம் செய்ய சோப்புக் கலவையை உமிழும் சாதனத்தின் விலையே 450 ரூபாய்தான். இதனை 3,397 ரூபாய்க்கு வாடகைக்கு எடுத்துள்ளனர்.  குடைகளை 6,000 ரூபாய்க்கு வாடகைக்கு எடுத்த அநியாயம் குறித்து கேட்ட பொழுது, அக்குடைகளெல்லாம் ‘தனிச் சிறப்பானவை’ என்று கூச்சநாச்சமின்றிப் புளுகுகின்றனர். 50 முதல் 100 ரூபாய் மதிப்புள்ள கழிவறைக் காகிதச் சுருளை, 3,757 ரூபாய்க்கு வாங்கியுள்ளனர். உலகிலேயே அதிக விலையுள்ள கழிவறை காகிதச்சுருள் என அவார்டே கொடுக்கலாம்.தொடக்கவிழாவின் போது ஒளிவெள்ளத்தைப் பாச்சும் ஹீலியம் பலூனூக்கு அன்றைய ஒருநாள் வாடகையாக  ரூ.50 கோடி  வாரியிறைக்கப்பட்டுள்ளது. ஆனால், அது அரங்கத்தின் பாதியளவுக்குத்தான் ஒளியை உமிழும் என்று தொழில்நுட்பவாதிகளே அம்பலப்படுத்துகின்றனர்.

2003-இல் திட்டமிடப்பட்ட போது, இப்போட்டியை நடத்த மொத்தத்தில் ரூ.1,899 கோடி செலவாகும் என்று மதிப்பிடப்பட்டது.  ஆனால், எல்லா அதிகாரிகளும் முதலாளிகளும் போட்டி போட்டுக் கொண்டு பணத்தைச் சுருட்டியதால் தற்போது செலவு கணக்கு 10,00 கோடி, எனவும், 36,500 கோடி 70,608 கோடி என பல எண்களை தான் பார்க்க முடிகிறது.  திட்டமிட்டதை விட செலவு 1575%  அதிகம் என வட இந்திய பத்திரிக்கைகள் எழுதின.

CWG2

அரசின் சாதனையை விளம்பரப்படுத்தும் இவர்களால் ஏப்படி ஒரு தேசத்தின் நூற்றாண்டு கனவை பற்றி எதுவுமே சொல்லாமல் இருக்க முடிகிறது. களம் காணுபவர்களின் இறுதி பட்டியலை ஒரு போதும் அரசியல் தீர்மானிக்காது என்பதை எப்போது உரக்க சொல்ல போகிறார்கள்? இந்தியாவின் தடகளத்தை அரசியல் தீர்மானிக்காத போது வரலாற்று நாயகர்கள் தானாக எழுந்து வருவார்கள்.

விளையாட்டு என்பது நேரவிரயம்., பணம் சம்பாதிக்கும் படிப்புகளை படிக்க முடியாது என்ற நம்பிக்கை மக்கள் மனதில் ஆழமாக இருக்கிறது உடல் சார்ந்த தொழிலில் இருப்பதை இந்தியர்கள் கீழ்மையாக எண்ணுவதும் இந்திய விளையாட்டு துறையில் வெற்றிடத்திற்கான காரணம்.

நம்மிடையே இருக்கும் விளையாட்டு வீரர்களை பயன்படுத்திக்கொள்ளாதது அறிவிலித்தனம். நீங்கள் என்ன வேண்டுமானாலும் சொல்லுங்கள்,ஒரு தடகள வீராங்கனையை செங்கல் சூளையில் அடைத்தது உட்ச பட்ச அவமானம்., ஒரு இந்திய வீராங்கனை, 200 மீ ஓட்டத்தில் ஆசிய அளவில் வெள்ளி பதக்கம் வென்றது ஒரு ஆகச்சிறந்த தொடக்கம்., அதிலும் சாந்தி தமிழகத்தை சேர்ந்தவர் என்பது உணர்ச்சி மேலிடசெய்தது. பாலின சோதனையில் அவர் தவறியது துரதிஷ்டம். இந்த பிரச்சனையை இந்தியா கண்டுகொள்ளாமல் விட்டதை போல ஒரு கீழ்மை இனி எப்போதும் நடக்க கூடாது.

தென் அப்பிரிக்கா விராங்கனைக்கு இதே போல ஒரு பிரச்சனை வந்த போது அந்த தேசமே வெடுண்டெழுந்தது. 2009 பெர்லினில் நடந்த உலக சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வென்ற செமன்யாவின் பதக்கம், பாலின பரிசோதனையால் பறிக்கப்பட்டது. நாடு திரும்பிய செமன்யாவை தென்னாப்ரிக்க விளையாட்டுத்துறை அமைச்சரே நேரில் சென்று ‘தாங்கள் இருப்பதாக’ ஆறுதல் கூறினார். தென்னாப்ரிக்க பிரதமர் செமன்யாவிற்கு ஆதரவாக, அந்தச் சோதனையை எதிர்த்து கடுமையான எதிர்ப்பை பதிவுசெய்தார். அந்நாட்டு அரசே அவருக்கு ஆதரவாக ஐக்கிய நாடுகள் அவையில் வழக்கு தொடர்ந்து, வெற்றியும் கண்டது . தென் ஆப்பிரிக்காவின் பெருமை மிகு அடையாளமாக செமன்யா பார்க்கப்பார்.   2012ஆம் ஆண்டு லண்டனில் நடந்த ஒலிம்பிக் போட்டிகளின் தொடக்க விழாவில், தென்னாப்ரிக்காவின் சார்பாக அந்நாட்டு கொடியை கையில் ஏந்தி சென்றவர் அதே காஸ்டர் செமன்யாதான். அமெரிக்கா போன்ற நாடுகளில் கவுண்டி எனப்படும் உள்ளூர் விளையாட்டுகளில் ஜெயித்தவர் கூட நட்சத்திர அந்தஸ்துடன் வலம் வருவார். நாம் தான் ஆசிய வீராங்கனையை செங்கல் பொறுக்க விடுகிறோம். இது ஒட்டு மொத்த தேசத்தின் அவமானம்.

சினிமாக்களை மட்டுமே பார்த்து வளரும் ஒரு மிகப்பெரிய இளைஞர் கூட்டத்தை இந்தியாவின் கனவுகளை நோக்கி எப்படி திருப்ப போகிறோம்? பொபைல் போன் விளையாட்டுகளை தூக்கிபோட்டுவிட்டு, புழுதிபடிய களத்தில் நம் தேசத்திற்காய் விளையாட இந்த தலைமுறையை சிரம் தாழ்த்தி அழைக்கிறேன். இந்தியாவிற்காய் களம் காண்பவர்கள் அவர்கள் தானே?

We have achieved our 100 years dream. India can sleep peacefully tonight. இந்த வார்த்தையை சொல்லப்போகும் அந்த மகத்தான வீரனுக்காய் இந்த தேசம் நூறு ஆண்டுகளாய் காத்திருக்கிறது

160615100857-rio-olympics-medals-5-super-169

 

இது தி இந்துவில் வெளிவந்த என் கட்டுரையின் மூல வடிவம்

 

Veerappan

கர்நாடகாவை சேர்ந்த பிரபல வனவிலங்கு புகைப்படக்காரர்களான கிருபாகர் – சேனானி இருவரையும் அரசு உயர் அதிகாரிகள் என நினைத்து வீரப்பன் கடத்திவிடுகிறார். தன்னார்வ வனவிலங்கு புகைப்படக்காரர்கள் எனத் தெரிய வந்ததும் வீரப்பனுக்கும் இருவருக்கும் நட்பு உருவாகிறது. காட்டுப் பறவைகள் குறித்து நிறைய விஷயங்களை இருவரிடமும் ஒரு குழந்தையின் ஆர்வத்துடன் கேட்டு வீரப்பன் தெரிந்துகொள்கிறார். வீரப்பனுடன் இருந்த தங்கள் அனுபவத்தை ‘Birds, Beasts and Bandits: 14 Days with Veerappan’ என்னும் பெயரில் புத்தகமாக வெளியிட்டுள்ளனர். இது தமிழில் ‘வீரப்பன் பிடியில் பதினான்கு நாட்கள்’ என்னும் பெயரில் வெளிவந்துள்ளது.

இப்போது தன்னுடைய இருபது வயதை கடக்கும் இளைஞர்களுக்கு வீரப்பன் ஒரு சாகச மனிதனாக ஒரு கடத்தல் காரனாகத்தான் தெரியும். யாரோ சொன்ன ., கேள்விப்பட்ட விஷயங்களை வைத்து அவர்களுக்குள் ஒரு சித்திரத்தை வரைந்திருப்பார்கள், அப்படி பட்ட சித்திரங்களை எல்லாம் கலைத்துப்போட்டு வீரப்பனின் பல முகங்கலில் ஒன்றை நேர்படுத்தி பார்க்க இந்த புத்தகத்தை சிபாரிசு செய்கிறேன். காலச்சுவடு கண்ணன் இதை என்னிடம் தரும் போது இது நகைச்சுவையை முன்னிலை படுத்தி எழுதப்பட்டது என்றார். ஆனால் இந்த புத்தகம் அதிலிருந்து எல்லாம் மாறுபட்டு கடத்தல் நடந்த‌ நேரத்தில் வீரப்பனின் ஒரு குறுக்கு வெட்டு தோற்றத்தை இது காட்டுகிறது.

இதில் வீரப்பனின் வலது கை சேத்துக்குளி கோவிந்தனை பற்றி அபாரமான ஒரு பகுதி வரும். நிச்சயம் தவறவிடக்கூடாத பக்கம் அது. ஒரு எள்ளல் தொனியில் எழுதப்பட்டாலும் வீரப்பனின் சித்திரத்தை சற்றேறக்குறைய சரியாகவே காட்டுகிறது இந்த புத்தகம்.

காடும் காடு சார்ந்த வாழ்க்கையும், அதையொட்டிய மனிதர்களும் எப்படி இருந்தார்கள் என்பதை இதில் அறியலாம், மிக முக்கியமாக வீரப்பனுக்கே தெரியாமல்
வீரப்பனை பற்றிய புனைவுகள் எப்படி உரு கொள்கிறது என்பது பட்டவர்த்தனமாக இதில் தெரியும், இந்த புத்தகத்தை படித்தவர் இதன் கண்கள் வழியே தான் 1000 பக்கத்திற்கு டிஜிபி விஜயகுமார் வீரப்பன் பற்றி எழுதப்போகும் புத்தகத்தை அனுகுவர். எது எப்படியோ வரலாற்றை எழுதும் போது வீரப்பனுக்கான பக்கத்தின் கணம் அதிகம் இருக்கும், அது தேவையும் கூட.