பெல்கா – நெடுங்கதை

அட்டைவனைப்படி அன்று பெல்கா தான் நாயை வாக்கிங் கூட்டிப் போக வேண்டும். போன வாரம் தான் இருபத்தி நான்காவது முறையாக அந்த அட்டவனையை திருத்தம் செய்தார்கள். பாத்திரம் கழுவுவதில் ஆரம்பித்து வாசலில் விழுகும் பனியை தள்ளுவது வரை இருவரும் சமமாக வேலையை பிரித்துக்கொண்டார்கள். 

“பனி தள்ளும் நேரம் வந்து விட்டது!!  இந்த முறை நீ தான் போக வேண்டும்” என செர்கி சொல்லும் போது இருப்பதிலேயே மோசமான பாவனையில் முகத்தை வைத்திருப்பாள் பெல்கா. கனடா பனிப்பொழிவை பற்றிய புகார்கள் அவளுக்கு இருந்தது.

“உன்னை வெறுக்கிறேன் செர்கி. பனி தள்ளும் நாட்களில் இன்னும் அதிகமாக வெறுக்கிறேன்” என கத்தியபடி அறையை சாத்திப்போவாள்.

பெல்காவிற்கு ஐந்து வயதாய் இருக்கும் போது லாத்வியாவிலிருந்து அவள் அம்மா கனடா கூட்டிவந்தார். “என் சைப்ரஸ் மலரே” என அவளை உச்சி முகர்வாள். ஆரம்ப நாட்களில் அப்பாவை பார்க்காத ஏக்கம் இருந்தது. பிறகு அது பழகிப்போனது.  லாத்வியாவில் மருந்துக் கடையில் வேலை பார்த்த  அம்மா கனடாவில் பார் டான்சராக மாறினாள். அவளும் பெல்காவும் சேர்ந்து கனடாவின் பதிமூன்று பனிக்காலத்தை பார்த்திருக்கிறார்கள். அம்மா இறந்த போது அம்மாவின் அப்போதைய பாய் பிரண்ட் லெரி தான் கடைசி காரியங்களை கவனித்துக்கொண்டான்.

அம்மா இல்லாத பதினாலாவது பனிக்காலம் கொடுமையாய் இருந்தது. குளிர்காய எரிக்கும் மரக்கட்டைகள் கூட தீர்ந்து போயிருந்தது. வாடைக்காற்று எப்போதும் உடலுடன் ஒட்டியிருப்பதாக உணர்ந்தாள்.  வீட்டிலிருந்த சீஸ் கட்டிகள் இரண்டு வார பசியை போக்கியது. அடுத்த பசிக்கு தண்ணீர் இருப்பதை நினைத்துக்கொண்டாள். அன்று மதியம் கனடிய கருவூலகத்திலிருந்து ஒரு கடிதம் வந்திருந்தது கூடவே ஒரு பணவரையோலையும். பெற்றோரை இழந்த இளம் பருவத்தினருக்கு அரசு கொடுக்கும் மாதாந்திர அலவன்ஸ். அவளில் 21 வது வயது வரை இந்த பணம் வரும் என குறிப்பிட்டு கருவூல அதிகாரி முத்திரையிட்டிருந்தார். கண்களில் நீர் ததும்ப அந்த கடிதத்தை படித்து முடித்தாள்.

அம்மாவின் மறைவிற்குப் பிறகு படிப்பில் அவளால் கவனம் செலுத்த முடியவில்லை. பள்ளியை பாதியில் நிறுத்திவிட்டு உணவகம் ஒன்றில் வேலைக்கு சேர்ந்தாள். அங்கே கொஞ்ச நாள் தான் இருந்தாள், பிறகு பல்பொருள் அங்காடியில் பொருள்களை அடுக்கும் வேலை அதன் பிறகு உணவு டெலிவரி வேலை என மாறி மாறி இப்போது தக்காளி சாசுகளை நிரப்பும் நிறுவனத்தில் லைன் இன்சார்ஜ். கண்ணாடி பாட்டில்கள் கழுவி காயவைக்கப்பட்டு கன்வேயரில் வரிசையாக  வரும். தலைமுடி விழாமல் இருக்க முடி கேப்புகளை போட்ட பெண்கள் பைப்பில் வரும் சாஸை அதில் நிரப்புவார்கள். அதை நிர்வகிப்பது அவளின் பொறுப்பு. நாள் முழுதும் கன்வேயரில் காலி பாட்டில்கள் வருவதையும் அதில் தக்காளி சாசு நிரம்புவதையும் பார்க்க வேண்டும். அங்கே ஏற்படும் சிறு தவறு கூட அவள் பெயரில் எழுதப்படும். எனவே முதல் பிரசவத்தில் இரட்டை குழந்தை பிரசவிக்கிறவள் போல பதட்டத்துடன் இருப்பாள்.

அது ஒரு இத்தாலிய உணவு பாக்கிங் நிறுவனம். அவளை போல இருபது பேர் அங்கே வேலை செய்தார்கள். மேலதிகாரிக்கு அவளை பற்றி பெரிய அபிப்பிராயம் கிடையாது. அவளுடைய ஒவ்வொரு தவறுதலுக்கும் வாயை கூம்பு போல செய்து பற்கள் தெரிய அவரின் அறுபது வயது தலையை ஆட்டிக்காட்டுவார். “நீ ஒரு வதங்கிப்போன உருளை கிழங்கு” என மேனேஜரை மனதுக்குள் திட்டிக்கொள்வாள்.

பெல்கா செர்கியை விட நான்கு வருடம் பெரியவள். இருவரும் சென்ற கோடையில் இருந்து ஒன்றாக வசிக்கிறார்கள். முதல்முறை செர்கியை அவள் வீட்டிற்கு கூட்டி வரும் போது இருவருள்ளும் வோத்கா பாதி நிரம்பி இருந்தது. குடிக்காமல் மீதமிருக்கும் பாட்டிலின் வோத்காவே சுவை கொண்டது என நினைப்பவள் அவள்.  செர்கிக்கு குடித்தால் புகை இழுக்க வேண்டும். புகைக்கும் போது  தான் புகைப்பதை இன்னொருவர் தன்னை பார்க்கும் கோணத்தில் அவனை கற்பனை செய்து கொள்வான்.

செர்கிக்கு நண்பர்கள் கிடையாது. முன்னாள் தோழியுடனான வாடைகை பிரச்சனையில் எக்லின்டென் அவென்யூவிற்கு குடி மாறியிருந்தான். அதே வீதியில் உள்ள பப்பில் தான் பெல்காவை பார்த்தான்.

அது அந்த ஏரியாவின் பிரபலமான பார். சிறிய நுழைவாயில், அதை ஒட்டியபடி நடை பாதை அது முடியும் இடத்தில் நடன மேடை ,அதை சுற்றிலும்  மேசைகளும் இருக்கைகளும் போடப்பட்டிருந்தது. பாடல் சத்தமும் அங்கே இருந்த பல்புகளும் எரிந்து எரிந்து அனைந்து ஒளி மாயத்தை செய்தது. பெல்கா அவளில் 28-வது பிறந்தநாளின் வைனை குடிக்க தனியாக வந்திருந்தாள். 

முதலில் செர்கிக்கு இருட்டில் அவளின் முகம் சரியாக தெரியவில்லை. பாடல் முடிவில் வரும் மின்னல் ஒளி வெளிச்சத்தில் பெல்காவை முதன் முறை பார்த்தான். வெயிட்டரிடம் பக்கத்து மேசையில் இருக்கும் சிகப்பு புறாவிற்கு ஒரு ரவுண்ட் என்றான் அது பெல்காவிற்கு போனது. அதுவே அன்றைய இரவை இருவரும் பகிர்ந்து கொள்ள போதுமானதாக இருந்தது.

வாட்டர்லூவின் பிரபலமான பச்சை குத்தும் கடையில் செர்கி வேலை செய்தான். அவனுடைய தனித்துவமான அங்க வரைகலைக்கு ரசிகைகள் இருந்தனர். எப்போதும் வழுக்கிவிழும் பேண்டை ஒருகையில் பிடித்திருப்பான். இரண்டு நிமிடத்திற்கு ஒருமுறை  வற்றிப்போன இடுப்பில் இருந்து அது கீழே இறங்கிவிடும் மீண்டும் ஏற்றிக்கொள்வான். ஒல்லி தேகத்தை மறைக்க பெரிய குழாய் பேண்டை அணிந்திருப்பான். அவனுடைய ரஷ்ய அம்மாவின் மூக்கு அவனுக்கு கிடைத்தது, விரல்களை பெல்ஜிய அப்பா கொடுத்தார்.

பெல்காவவும் செர்கியும் சேர்ந்து வாழ தொடங்கிய பின் இருவரும் பாருக்கு போவது குறைந்து போனது. வாரயிறுதியில் சீரியல் கலர் விளக்குகளை வீட்டிலேயே எரியவிட்டு மிதமாக இசையில்  குடிப்பது இருவரின் விருப்பம். வோத்காவும் கெட்ட வார்தையும் ,சிரிப்பும், பின் மீண்டும் கெட்டவார்த்தையும், வோத்காவும் என நிரம்பியிருக்கும்.

“செர்கி உன்னுடைய முதுகிலிருந்தே கால்கள் தொடங்கிவிடுகின்றன. புட்டம் என்பதே உனக்கு இல்லை. இப்படி வற்றிப்போன புட்டம் கொண்ட ஒருவனை கூட இந்த ஓண்டாரியோ மாகாணம் பார்த்திருக்காது.” என்றாள் பெல்கா

“நீ ஒரு பிட்ச்.  நாயை கட்டிலுக்கு கூட்டிவருபவள்.  என் புட்டத்தை பற்றி பேசாதே” என்றான் செர்கி.

“ஓ அப்படியா ! நான் கூட்டிவந்த நாய் தான் நீ”

“ஓ! பிறகு ஏன் நாயை கட்டிப்பிடித்து தூங்குகிறாய். தள்ளிவிட வேண்டியது தானே”.

“ஓ! நான் தள்ளிவிடுவேனே. வெளியே போ நாயே. வெளியே போ நாயே”. என்றாள்.

நாயை போல பாவனை செய்து அவளை கட்டிப்பித்து முகம் முழுதும் நக்கி வைத்தான். 

இப்படி நள்ளிரவு தாண்டி நீளூம் வேடிக்கைகள் வடிந்து போன பிறகு பெரும்பாலும் பெல்கா அம்மாவை பற்றியும் செர்கி பழைய காதலியை பற்றியும் பேச தொடங்குவார்கள். அது எப்போதும் நடப்பது தான். அன்று அவள் ஆரம்பித்தாள்.

“செர்கி உனக்கு தெரியுமா நான் என் அம்மாவின் நீட்சி. அவளிடம் இருந்து எவ்வளவு தூரம் வந்தாலும் அவளின் ஒரு விரல் என்னை தொட்டுக்கொண்டே இருக்கிறது. மனதில் பிடுங்கி எறிய முடியாத இடத்தில் அவள் ஆணி அடித்திருக்கிறாள். அவளின் உச்சத்தையும், பையித்தியகாரத்தனத்தையும் நான் சேர்ந்தே அறிந்திருந்தேன்”

“அவள் ஒரு அட்டகாசமான டான்ஸர். இரவு முழுதும் பாரில் டான்ஸ் ஆடுவாள். பக்கத்து கவுண்டியிலிருந்து எல்லாம் அவளின் நடனத்தை பார்க்க வருவார்கள். அவளை போல ஓபரா நுணுக்கத்தை கற்றவர்கள் வெகு சிலரே. அவள் இரவில் பாரில் உற்சாகத்தில் திளைத்துக்கொண்டிருப்பாள் நான் வீட்டில் தனியாக இருப்பேன்.  அதிகாலைதான் வீட்டிற்கு வருவாள். சில நாட்கள் காலை உணவாக அவள் கொண்டுவந்த ரொட்டியை சாப்பிட தருவாள் நான் தின்னவே மாட்டேன்”.

“எனக்காய் எல்லாம் செய்வாள். அப்பா இல்லாமல் என்னை தனியாக வளர்த்து எடுத்தாள். அவளில் அன்பாய் இருப்பேன். எல்லா தருணங்களிலும்  நாங்களிருவரும் இருந்திருக்கிறோம். இறப்பதற்கு சில மாதங்களுக்கு முன்பு அவளின் காதல்முறிவுகளை கூட என்னிடம் பேசுமளவு நெருக்கத்தில் வைத்திருந்தாள் ஆனால் எனக்கு தான் மனதில் ஓரத்தில் அவள் மீது  புரியாத ஒரு விலகல் இருந்தது. இது தான் காரணம் என அறுதியிட்டு சொல்ல முடியாது. எல்லா மகள்களுக்கும் அம்மாவிடம் இருக்கும் விலகல் அது என நினைத்துக்கொண்டேன். அதற்கான காரணத்தை தேடிச்சலித்திருக்கிறேன்”.

“நீ எப்போது உன் அம்மாவிடம் இருந்து விலகத் தொடங்கினாய்”?

“இது தான் தொடக்கம் என சொல்லுமளவு எதுவும் நினைவிலில்லை. பல பல சந்தர்பங்களில் அவளில் செயல்கள் என்னை வெறுப்பிற்குள்ளாக்கியது. சொன்னவற்றையே திரும்ப திரும்ப சொல்வாள். சுத்தமாக இருக்க மாட்டாள். ஆண் நண்பர்களை அடிக்கடி மாற்றுவாள். ஒருமுறை என்னுடைய உள்ளாடையை அவள் சோதித்த போது நான் அதை பார்த்துவிட்டேன். அதுவாக கூட இருக்கலாம். அதை வெரோனிகாவிடம் சொல்லி அழுதேன்.  என்னால் அதை மறக்கவே முடியாது. அப்பறம் ஒருமுறை அவள் சாப்பிடும் போது எழுப்பும் சத்தங்கள் என்னை அருவருப்பிற்குள்ளாக்கியது”.

“அது தான். அதுதான் பெல்கா. யார் சாப்பிடுவதை அருவெறுப்புடன் பார்க்கிறோமோ அவர்களை பின்னாளில் கண்டிப்பாக வெறுப்போம்.”

“ஓ! இருக்கலாம். எனக்கு தெரியாது. நம் வீட்டிலேயே இருந்து நம்  மிச்சத்தை சாப்பிட்டு, வீட்டு தண்ணீரையே குடித்து நம்மை கண்டதும் கூட்டுக்குள் ஓடும் எலியை போல அவள் முன்பு நானும் என் முன்பு அவளும் எங்கள் எங்கள் கூட்டுக்குள் ஓடிக்கொண்டிருந்தோம்”. “அவள் கிளப்புலிருந்து அதிகாலை வந்து தூங்குவாள் நான் கிளம்பி பள்ளிக்கு போவேன். மாலையில் நான் வீட்டிற்கு வரும் போது அவள் கிளம்பி பாருக்கு போவாள்”.

“ஏன் அப்படி பார்க்கிறாய் செர்கி. போரடித்துவிட்டேனா?”

“சாரி சாரி. அம்மா பேச்சு போதும். நான் இதை கேட்க வேண்டும் என நினைத்தேன். நீ யோசிக்காமல் சொல்ல வேண்டும் அதும் உண்மையை மட்டுமே சொல்ல வேண்டும்”. 

“ம்ம் கேள்”.

“என்னை எப்படி பிடித்தது உனக்கு”?

“ஓ மை காட்.. நீயா கேட்கிறாய் பெல்கா? ஏன் எல்லா பெண்களும்  இதே கேள்வியை வைத்துக் கொண்டிருக்கிறீர்கள்?. இதை பிடித்தவர்களிடம் தானே கேட்பார்கள். உனக்கு என்னை அவ்வளவு பிடித்திருக்கிறதா என்ன?  நான் காதலித்த ஒவ்வொருத்தியும் இதை கேட்டிருக்கிறாள். இதோ இப்போது போலிஷ் வோத்காவை கையில் பிடித்த படி நீயும் கேட்கிறாய். “

“நீயே சொல், மரத்தை எந்த கிளையில் இருந்து ரசிக்கத்தொடங்குவது”?

“வாவ். அழகான உவமை. கச்சிதமான வடிவம். கவிதையாய் இருக்கிறது. ஆனால் இப்போது கவிதை வேண்டாம் செர்கி கதைக்கு வா”.

“உன்னை நினைக்கும் போது உன் முகமோ உருவமோ நினைவுக்கு வராது பெல்கா, உன் விரல்கள் தான் வரும். ஏன் என்று தெரியவில்லை.” “பயணத்தில் என் தோள் சாய்ந்து தூங்குவாயே. அது மார்வலஸ்”! “உண்மையில் தோளில் சாயந்துறங்கும் பெண்ணே ஒருவனை ஆணாக உணரவைக்கிறாள்”. “பிறகு நீ சண்டை போட்டு அழுகும் போது உன்னை தேற்றுவேனில்லையா அப்படி உன்னை தேற்றுவதன் மூலம் எனக்குள் இருக்கும் ஒன்றுக்கு நான் நிறைவளிக்கிறேன். அந்த நிறைவும் பிரியம் தான். இப்படி பல தருணங்களில் எனக்கு உன்னை பிடித்திருக்கிறது. நீ என்னை யோசிக்க கூடாது என்று சொன்னதால் எந்த நினைவு முதலில் வந்தததோ அதை சொன்னேன். நீயும் என்னை அப்படி பார்க்காதே, ஏன் போரடிக்கிறேனா?”.

“ஏய்.. ஏன் வாய்க்குள் சிரிப்பை பூட்டிக்கொண்டிருக்கிறாய், பெல்கா. சொல்லித்தொலையே”.

“செர்கி நீ பேசுவது கல்லூரிச்சிறுவனை போல இருக்கிறது. எப்போதும் இப்படி உள சிக்கலைதான் பேசுவாயா? நீ சொன்னது அனைத்துமே என் மூலமாக உன்னை உனக்கு எப்படி பிடித்திருக்கிறது என்பதே. நான் கேட்டது என்னை எப்படி பிடித்தது என்று. புரிகிறதா? என்னை… எப்படி… பிடித்திருக்கிறது …என்று.  இது சரிப்பட்டுவராது. காலில் இருக்கும் முள்ளை களைய பூனைநகத்தை கேட்கிறாய். உன்னை உன்வழியிலேயே  சந்திக்கவேண்டும்”.

“ம்ம்ம். என்னை பிடிக்காத தருணத்தை சொல்”. என்றாள் பெல்கா

“ஓ!  இது மிக எளிதான கேள்வி. இரு யோசித்து சொல்கிறேன். ம்ம்ம்… நம் சண்டைக்கு பிறகான நேரங்களில் நீ அவ்வளவு ஒன்றும் அழகில்லை என்று எனக்குள்ளாக சொல்லிக்கொள்வேன். நாமிருவரும் முரண்பட்ட தருணங்களை நினைத்துப்பார்ப்பேன். நீ சொன்ன ஏதேனும் ஒரு வார்த்தையிலோ, செய்த அசைவிலோ உன் மீதான முரண்கள் அனைத்தையும் குவிக்கமுடியுமா என பார்ப்பேன். அவைகள் மூலமாக சிறு விலகலை உன்னிடம் உருவாக்கமுடியும் என நம்புவேன். அந்த விலகல் மூலம் என்மீது எனக்கே ஒரு தன்னிரக்கம் வரும், என்னை பாதிக்கப்பட்டவனாக நினைத்துக்கொள்வேன், தன்னிரக்கத்திலிருந்து என்னை மீட்டெடுக்க உன்னை இன்னும் அதிகமாக வெறுக்கலாம். ஆனால் அது அப்படி நடந்ததே இல்லை. அந்த இரவுகளில் உன்னை சுற்றியே நினைவுகள் வட்டமடிக்கும் பெரும் காதலுடன். இது முரணல்லவா. இப்படி வரைபட கோடு போல மேலும் கீழாக செல்லும் உணர்ச்சியை நீ என்ன சொல்வாய்”?

“ஓ செர்கி, மை டாலி ! உன்னுடைய பதில்களில் நான் தெரிந்து கொண்டது இதுதான். நீ என் மீது படுகாதலில் இருக்கிறாய். என்னிடம் கண்டடையாத ஒன்றை தேடிக் கொண்டு இருக்கிறாய். அதை கண்டுபிடித்த பின் இது போல இருக்கமாட்டாய். பெரும்பாலான ஆண்கள் அது பெண்ணின் உடல் என அசட்டுத்தனமாக நம்புவார்கள். ஆனால் நீ அதை தேடவில்லை என உணர்கிறேன். என் உடலையும் தாண்டி என்னிடம் ஈர்ப்புமிக்க ஏதோ ஒன்று இருக்கிறது என நம்புகிறாய். தேடிக்கண்டுபிடி இருந்தாலும் இருக்கலாம்.”

“அதே..அதே தான். என்ன அது, சொல் பெல்கா”?

“என்ன என்று எனக்கு எப்படி தெரியும் முட்டாளே? அது நீ தேடுவது. நீ தான் கண்டடையவேண்டும். எனக்கு எப்படி தெரியும்?  அப்படியே எனக்கு தெரிந்தாலும் உன்னுடைய காதல் தேவைபடும் வரை அதை சொல்ல மாட்டேன். மாஜிக்கின் ஈர்ப்பே அது மறைவாக இருப்பது தான்.”.

” யூ பிட்ச்” என்று சொல்லி லார்ஜை ஒரே மடகில் குடித்தான்.  “பிட்சை தவிற வேறு கெட்ட வார்த்தைகள் தெரியாதா மோரான்” என சொல்லி சிகரெட்டை தரையில் சுண்டிவிட்டாள்.

“இல்லை பெல்கா. உன்னிடத்தில் இருக்கும் ஏதோ ஒன்று உண்மையில் என்னை மகிழ்விக்கிறது. நீ சொன்னது சரிதான், அது உன் உடல் மட்டும் இல்லை. வேறு எதோ ஒன்று. முந்தய கேள் பிரண்டுகளுடன் இப்படி இருந்ததில்லை. இது உண்மையில் பிடித்திருக்கிறது”

“பொய். முற்றிலும் பொய். முதன்முறை உன்னிடம் மட்டும் தான் இப்படி உணர்கிறேன் என்பது பெண்களை ஏமாற்ற ஆண் இனம் சொல்லும் ஆதிப்பொய்”

“உண்மைக்கு மிக அருகில் பதிக்கப்படும் பொய்களே சிறந்த பொய்கள் என நான் முன்பு சொன்னதை நீ நினைத்துக்கொள்கிறாய் பெல்கா. இது அதுவல்ல. நான் சொல்வது உண்மை”

“இல்லை, நீ அதை சொன்ன போது உனக்கு கோர்வையாக வருகிறது, இதை ஏற்கனவே உனக்குள் சொல்லி பார்த்திருக்கிறாய் . மன எழுச்சி கோட்பாடுகள் இப்படி கோர்வையாக வராது, அதில் வார்த்தை சிக்கல்கள் இருக்கும்”.

“நீ அளவுக்கதிகமாய் என்னை அறிந்து கொண்டாயோ என எனக்கு பயமாய் இருக்கிறது பெல்கா. இவ்வளவு நுணுக்கமாக யாரையும் அறியாதே”.

“உன்மேல் பித்து என உன்னிடம் சொல்வதற்கு முன்பு மனதிற்குள் அந்த வாக்கியத்தை நினைத்துப்பார்த்தேன். உண்மைதான். மனதிற்குள் இருப்பது வார்த்தையாக மேலெழுந்து வருவதில்லையா அது போல தான் இது மனதில் உள்ளடுக்கில் நிகழ்ந்தது. ஆனால் இவ்வளவு அப்பட்டமாக தெரியும் என நினைக்கவில்லை. நான் எதிர்பார்த்ததை விட நீ அபாரமான நுண்ணுணர்வை கொண்டிருக்கிறாய் பெல்கா. எனவே உன்னிடம் இதை பற்றி சொல்ல முடியும் என நினைக்கிறேன்”.

“உனக்கு உன் அம்மாவின் கரங்கள் எங்கு சென்றாலும் நீள்கிறதோ அதே போல என்னுடைய முதல் காதலியின் நினைவுகள் எங்கு சென்றாலும் நீள்கிறது. என்னால் அவளை மறக்கவே முடியவில்லை”.

“முதல் காதலி”??

“ஆம்… பால்ய காதலை இன்னுமா நினைத்து கொண்டிருப்பார்கள் என உனக்கு சிரிப்பாக இருக்கலாம். யாராவது இதையே என்னிடம்  சொன்னால் நானும் சிரிப்பேன். ஆனால் இது நிதர்சனம்”. “புதை சேற்றுக்குள் சிக்கிய காலின் விரலை மட்டும் ஆட்டுவது போல நான் மட்டுமே உணரக்கூடியது அவளை உடலளவில் என்னால் அந்தரங்கமாக உணரமுடியும். என்னால் அவளை தாண்டி வரவே முடியவில்லை. இரவு முழுதும் அவள் என்னுடன் இருப்பதாக கற்பனைசெய்கிறேன். உண்மையில் அது ஒரு மெய்நிகர் வெளி. அவளை தவிர மற்றெல்லாரும் உயிர் கொண்டவர்கள். அவள் மட்டுமே அருவமாக என்னில் தங்கிவிட்டாள்”.

“அவளுக்கு பிறகு பல உணர்ச்சிக் காதல்களை கடந்திருக்கிறேன். ரத்தமும் சதையுமான காதல்கள் இருந்திருக்கின்றன. அந்தந்த நேரங்களின் உணர்ச்சிக்கொந்தளிப்பாக மட்டுமே அது இருக்கும். அவளுடன் இருந்த அதே தீவிரத்தில் அவளுக்கு பிறகு யாருடனும் இருக்க முடிந்ததில்லை.  அவளை விட பித்துகொண்டு என்னை காதலித்தவர்கள் இருக்கிறார்கள்”.

“நான் உண்மையில் அதே தீவிரத்தில் அவர்களை திரும்ப காதலிக்க விரும்பினேன் ஆனால் அதை போன்ற ஒரு பாவனை மட்டுமே என்னில் இருந்து வெளிப்படுகிறது. அவள் நினைவுகளுடன் இருக்கையில் எவளுடனும் ஒன்ற முடியவில்லை. அதனால் ஓவ்வொரு உறவும்  எதோ ஒரு சந்தர்பத்தில் முற்றிலும் வடிந்து விடுகிறது. உறவு முடிந்து வெளியேறும் போது ஒரு துக்கத்திற்கு மாறாக சிறு மகிழ்ச்சிக்கீற்று தோன்றி மறையும். அவள் இன்னும் உக்கிரமாக என்னுள் இருப்பதை நினைத்து என்னையே நொந்துகொள்வேன்”.

“அப்போது நான் நுனாவட்டிலுள்ள கூகர்கில் காலநிலை சார்ந்த உயிரியல் ஆராய்ச்சி மையத்தில் வேலை பார்த்துக்கொண்டிருந்தேன். சமூக பரப்பிலிருந்து அது மிக மிக ஒதுங்கிய பகுதி. பொதுப்போக்குவரத்தோ மக்கள் நடமாட்டமோ இருக்காது. வருடத்தில் ஒன்பது மாதங்கள் பனியில் கழியும். அந்த கால நிலை தான் ஆராய்ச்சிக்கு தேவைபட்டது. பிரிட்டிஸ் கொலம்பியாவின் பெல்லா கோலாவிலிருந்து மூவாயிரம் கிலோமீட்டர்கள் சாலைகளே இல்லாத உறை பனி வழியே பெரும் போராட்டத்திற்கு பின் ‘யரோலி’ என்னை பார்க்க வந்திருந்தாள்”. “அதை பற்றி எதுவுமே தெரியாமல் அவளின் கடிதத்திற்காக நான் காத்துக்கொண்டிருந்தேன்”.

  ”அவளை அங்கே பார்த்ததும் உண்மையில் நான் அதிர்ந்து போனேன். பனியில் உதடுகள் வெடித்து வீங்கி ரத்தம் வந்து கொண்டிருந்தது. அவளின் தோல் முழுக்க பாளம் பாளமாக வரண்டு வெடித்து, காலுறை அவள் சதையுடன் ஒட்டிக்கொண்டது அதை அறுத்து தான் பிரித்தேன். கையில் ஒரே ஒரு குஸ்ஸி பையுடன் காதலை தேக்கிக்கொண்டு அவ்வளவு தூரம் எனக்காக வந்திருந்தாள். உலர் திராட்சையை போல மொத்தமாக வடிந்திருந்தாள்”. “அந்த கணத்தில் அது ஒரு லட்சிய காதல் என உணர்ந்தேன். பெருங்காதலுடன் இணைந்தோம்”.

“ஆனால் அந்த வருட இலையுதிர் காலத்தில் இருவரும் கைகுலுக்கி பிரிய நேரிட்டது, துரதிஷ்டம் தான். இப்போதும் அவள் எனக்கு சிநேகிதி தான் ஆனால் ஏதோ ஒன்று எங்களுக்குள் அற்றுப்போனது, காரணமே இல்லாமல்”. “அதுபோல  சிறிதும் பெரிதுமான அன்பை கடந்து வந்திருக்கிறேன். அவள்களில் ஒருத்தி கூடவா மனதின் ஆழத்தை நிரப்பவில்லை என நீ கேட்கலாம். நீ நினைத்தாலும் டியூலிப் மலர்களை பருவம் முழுதும் வைத்துக்கொள்ள முடியாது என பழமொழி உள்ளது. நான் அவர்களுடன் இருக்க வேண்டும் என விரும்பினாலும் விளக்கை அனைத்ததும் கீற்றல்களாக மறையும் ஒளிச்சிதறலை போல மெல்ல கரைந்து போகிறார்கள்”.

“உண்மையை சொல்ல வேண்டுமானால் என் முதல் காதலியின் உயரத்திற்கு அருகில் கூட யாரும் இல்லை என்பதே நிசர்சனம். அவளையன்றி பெண்ணின் உருவமே என் மனதில் பதியாது. சினிமா, கவிதை, கற்பனை என எல்லா கலையிலும் அவளை தான் ஒப்புமை படுத்துகிறேன். சின்ன கோட்டோவியத்தில் கூட அவள் சாயலை வரைந்தெடுப்பேன். பச்சை குத்துகையில் அவளின் துணுக்கை பதிக்காமல் நிறைவடையமாட்டேன். வோல்காவின் பெருஞ்சுழல் போல என்னை வைத்திருக்கிறாள். அவளை இப்படி நினைத்துக்கொள்வதே அலாதியாய் இருக்கிறது”.

“முன்னெல்லாம் அவள் இருப்பது வெற்றுக்கற்பனையாக இருந்தது. பிறகு அந்த கற்பனையை நானே வளர்த்தெடுத்தேன். கற்பனையை அருவமாக்கினேன். எங்கு வேண்டுமானாலும் அவளின் அரூவத்தை மீட்டெடுக்க முடியும். அவளுடன் பேச முடியும். அவளை நினைக்கும் போதெல்லாம் நுரைத்துப்பொங்குகிறாள்.  பனிக்கடவுளாக , உடன் பணிபுரிபவளாக, யட்சியாக என் மனதில் நிறைகிறாள். இரவுகளில் கண்ணை மூடி அவள் வரவிற்காய் காத்துக்கொண்டிருப்பேன். அவளுடைய நினைவுகள் இல்லாத இரவு இருக்கவே முடியாது,பெல்கா.

  புரிகிறது! இது ஒரு மனநோய் என நினைக்கிறாய், இல்லை பெல்கா”.

“பகனை போல, சால்வசை போல, என் ரஷ்ய தொன்மத்தைப்போல மிக மிக அந்தரங்கமாய் என்னால் அவளை உணர முடியும். இதோ கனடாவின் வாட்டர்லூ விற்கும் ரஷ்யாவின் அகினோவிற்கும் இடையில் இருக்கும் பல்லாயிரக்கணக்கான கிலோமீட்டர்கள் தாண்டி அவளின் கரம் என்னை தொடுகிறது. நீ அல்ல, யாராலும் என்னை மீட்டெடுக்க முடியாது”.

“ஒரு பெண் தெய்வம் அது சார்ந்த சமூகம் முழுக்க நிறைத்திருக்குமில்லையா அதுபோல எனக்குள் நிறைந்திருக்கிறாள். அவள் இன்னும் உக்கிரமாக, உக்கிரமாக எனக்குள் உலவுகிறாள். அவளுடன் இருந்த எல்லா நினைவுகளையும் என்னால் திரும்ப எடுக்கமுடிகிறது, நடுங்கும் கரங்களுடன் கைகூப்பி மன்றாடுகிறேன் என்னை விட்டு விடும் படி ஆனால் எனக்கு பிராப்தம் இல்லை”.

“அதுமட்டுமல்ல காணும் பெண்களில் எல்லாம் அவளின் துளியை தேடுகிறேன். கண் அசைவிலாவது, பார்வை கோணத்திலாவது, முடி ஒதுக்கும் அழகிலாவது அவளின் ஒரு துளி கிடைக்குமா என எல்லா பெண்களிடமும் தேடுகிறேன் அதை மனம் அனிச்சையாய் செய்கிறது. உண்மையில் அவளின் சில கோணங்களை தான் உனக்குள் தேடியிருக்கிறேன். உன் எல்லா அதரங்களையும் விட அதுவே உன்னை பிரியத்திற்குரியவளாக மாற்றுகிறது, பெல்கா”

இதை கேட்டதும் தலையை கொஞ்சமாக மேலிருந்து கீழாக அசைத்து அதை உள்வாங்கிக்கொண்டதற்கான ஒரு பாவனையை செய்தாள்.

  ”உன்னிடம் மட்டுமல்ல இனி காணும் எல்லா பெண்களிலும் அதையே செய்வேன்,பெல்கா. வோல்காவின் மிதக்கும் பனிபாறைகளில் மோதுகிறேன். ஒவ்வொரு பாறையும் அவள் பிம்பங்களாகவே தெரிகிறது நான் என்ன செய்யட்டும் பெல்கா. அவளின் நினைவுகளுடன் இருப்பதே இப்பிறவியில் எனக்கு விதிக்கப்பட்டது. அதுவே என் சாபம். அதுவே என் உன்னதம். இதற்காக நீ என்னை வெறுக்கலாம்.அதை நான் ஏற்றுக்கொண்டுதான் ஆக வேண்டும். நீண்ட நாட்கள் கழித்து கோர்வையுடன் அவளை அள்ளி முடிந்திருக்கிறேன். இந்த இரவு என் கோப்பையில் தளும்புகிறது பெல்கா. நான் நிறைந்திருக்கிறேன்! நான் நிறைந்திருக்கிறேன்”.

செர்கி சொல்லி முடித்ததும் சில நிமிடங்கள் இருவரும் பேசிக்கொள்ளவில்லை. மீண்டும் ஒரு லார்ஜை நிரப்பி பால்கனி கதவை திறந்தான். குளிர் அறையை நிறைத்தது. மெளனத்தை கலைத்து இப்போது அவள் தான் பேச தொடங்கினாள்.

“செர்கி ! உண்மையில் இதை பற்றி சொல்ல எனக்கு ஒன்றும் இல்லை. நீ உணர்ச்சிகளை கட்டுப்படுத்துகிறாய் என்று தெரியும் ஆனால் அதை ஒரு லாட்விய வேட்டை நாயை போல உனக்குள் வளர்த்தியிருக்கிறாய். அது செல்லும் பாதைகளிலெல்லாம் உன் கற்பனையை கொண்டு அதை மீட்டியிருக்கிறாய்”.

“உண்மைக்கு நெருக்கமான பொய்கள் மட்டுமல்ல. உண்மைக்கு அருகிலான கற்பனையை கூட திரும்ப திரும்ப வார்த்தையில் சொல்லும் போது மனதால் அதை பிரித்துணரமுடியாது. நீ அந்த கற்பனையை நினைக்கும் போது அது மதுரமான மதுவை போல உனக்குள் இறங்கியிருக்கிறது. உன் பேச்சிலிருந்து அதை தான் பார்க்கிறேன். அவளை பற்றி பேசும் போது நீ அன்பில் தளும்பினாய். இதிகாசமும், வரலாறும் கொண்டாடியது இந்த காதலை தான். கோடி கோடியாய் பணம் கொட்டி எடுக்கப்படும் சினிமா காட்ட முனைவது இந்த காதலை தான். நீ அவள் மேல் கொண்டிருப்பது மகத்தான காதல். இயற்கையின் கொடை அது. உன் உணர்சிகளை கட்டுப்படுத்தாதே. அதன் போக்கில் விடு”.

“உன்னுடைய உணர்ச்சி கொந்தளிப்பை பார்க்கும் போது அதே போல உச்ச தருணத்தை நானும் தாண்டி வந்திருக்கிறேன்”.

“அது என்னுடைய நான்காவது வயதில்”

“நான்காவது வயதிலா”?

“என்னால் அந்த காட்சியை ஒவ்வொரு சட்டமாக உணர முடிகிறது. அது பனி பூக்களாக விழுந்து கொண்டிருந்த பின்பகல் நேரம். அப்பா என்னை வேட்டைக்கு கூட்டிப்போகிறார். அவரின் மூக்குவைத்த குண்டு கார் நெடுந்தூரம் செல்கிறது. ஒரு முகட்டு வளைவில் வண்டியை நிறுத்தி இறங்கி கீழே சிற்றோடையின் பாதையில் நடக்கத்தொடங்கினோம்”.

“அவரின் தோளின் பின்புறமாக என்னை துணியில் சேர்த்து சுற்றி கட்டியிருக்கிறார். நடக்கும் போது  அவரில் தோளில் இருந்து அப்பாவின் பார்வை கோணத்தில் என்னால் பார்க்க முடியும். அடர் வனம் சுற்றிலும் மரங்கள் நாங்கள் எங்கே இருக்கிறோம் என்றே தெரியவில்லை. என்னிடம் பேசியபடியே வந்தவர் திடிரென பேசுவதை நிறுத்தினார் அவரின் கவனம் எங்கோ குவிந்தது. அவர் பூனையை போல சத்தமெலுப்பாமல் ஒற்றைவழி பாதையில் இருந்து விலகி மறைவான இடம் நோக்கி நகர்ந்தார். நான் அனிச்சையாக கையில் வைத்திருந்த முள்கர அம்பை எடுத்துக்கொடுத்தேன். வாங்கிய நொடியே அதை எய்தார். அது எங்யோ குத்தி சக்க் என சத்தம் கேட்டது”.

“அவர் அதை உணர்ந்திருக்க வேண்டும். அவசர அவசரமாக அவரின் கை பின்புறத்தில் எதையோ துளாவியது.  அப்போது எங்களில் தலைக்கு மேலே இருந்த மரக்கிளையில் ஒரு ஹனி பேட்சரை பார்த்தேன். அதை அப்பாவிடம் சொல்லவேண்டும் என நினைத்தேன் ஆனால் உள்ளுணர்வில் அமைதியாய் இருந்தேன். அப்பா குழல் துப்பாக்கியை அவரின் உடலில் இருந்து தேடி எடுத்தார். அவர் டிரிகரை லாக் செய்யும் சத்தம் கேட்டது. என்னுடைய கண் முழுதும் விரிந்தது நான் உறைந்து போனேன்”.

“வ்வாம்ம்ம் என்று பெரிய உறுமலுடன் கரிய உருவம் மரத்திற்கு பின்னிருந்து எங்களை நோக்கி வந்தது நான் ஓங்காரமிட்டு கத்தினேன். அப்பா தடுமாறி சில தப்படிகள் பின்நகர்ந்து அந்த உருவத்தை நோக்கி ஏழு ரவுண்டுகள் சுட்டு நிறுத்தினார். தோட்டா வெடித்து மருந்து நெடி என் மூக்கிற்கு ஏறி கண்ணீர் வந்தது”.

“நான் கண் திறக்கும் போது ஒரே புகை மண்டலம், அது மரத்திற்கு பின்னாக வீழ்வதை பார்த்தேன். சில நொடிகளுக்கு பின் தான் அது பெரிய இஸ்டோனிய கரடி என மனம் உணர்த்தியது.  தோட்டாவின் கந்தக நெடி காற்றில் சூழ்ந்தது. அவர் கழுத்தை இறுக்கி பிடித்திருந்தேன். பயப்படாதே “கமேறு சீமாட்டியே” பயப்படாதே என சொல்லி அப்பா தலையை தடவினார். அந்த வெற்றிக்காக  கழுத்தை சற்றெ முன்னே தள்ளி அந்த தடவலை ஏற்றுக்கொண்டேன்”.

“நாங்கள் மரத்தினருகே போனோம். அப்பா என்னை கட்டியிருந்த துணிக்கயிற்றை அவிழ்த்து இறக்கிவிட்டார். அப்போது தரையிலிருந்த பச்சை நிற சிறு தவளை என் பூட்ஸின் மீது தவ்வியது. அதன் முதுகிலிருக்கும் கருப்பு ரேகையை வருட நினைத்தேன். அத்தனை பெரிய நிகழ்வின் முன் அந்த சிறு தவளை என் கவனத்தை திருப்பியது கண்டு வியந்திருக்கிறேன். கரடியின் உடலில் குண்டு பட்ட இடத்தை என்னால் பார்க்க முடியவில்லை.  குண்டு அதன் சதையுடன் புதைந்து போயிருந்தது. கண்களை பார்த்தேன்”.

“வேட்டையாடப்படும் விலங்கின் கண்ணை பார்க்கக்கூடாது என அப்பா சொல்லியிருக்கிறார். அது வேறோர் உலகிற்கு நம்மை கூட்டிசென்றுவிடும், ஆனால் நான் ஆரஞ்சும் சிகப்பும் கலந்த அதன் கண்ணை இன்னும் உற்றுப்பார்த்தேன். அதன் கருவிழி மேலே சொருகி இருந்தது. அது கடைசி மூச்சை விட்டுக்கொண்டிருந்தது. அதன் உயிர் போவதற்கு முன் பார்த்த கடைசி காட்சி என் முகமாகத்தான் இருந்திருக்கும். அதன் சூடான கரிய ரத்தம் வழிந்து போகஸ் மரத்தின் பெரிய இலையில் தேங்கத்தொடங்கியது. அப்பா என்னை உட்கார சையை காட்டினார். நான் குத்துக்காலிட்டேன். அந்த ரத்தத்தை என்னுடய கைகளில் தடவினார். அதை விரலில் தொட்டு உச்சி நெற்றியில் சிலுவை இட்டார். நான் அப்பாவையே பார்த்தேன்”.

  ”கமேறு சீமாட்டியே நீ ஒரு  வேட்டைக்காரி! நீ ஒரு வேட்டைக்காரி! என்றார். நான் அவரின் ரத்தம் தோய்ந்த விரல்களை பார்த்தேன். முதல் முறையாக இரத்தின் வாசனையை உணர்ந்தேன். அது ஒரு திறப்பு”.

“முழித்துப்பார்க்கும் போது வீட்டிலிருந்தேன். அம்மா எதோ சொல்லி உடைந்த நாற்காலியை அப்பாவை நோக்கி வீசினாள். அது தரையில் பட்டு சிதறியது. நான் ஓடிச்சென்று அப்பாவின் கழுத்தை கட்டிக்கொண்டேன். அம்மா ஓடிவந்து என்னை அப்பாவிடம் இருந்து பிரிக்கும் போது அவரின் கழுத்தை என் நகம் கீறி ரத்தம் வந்தது. நான் இன்னமும் இறுக்கமாக அப்பாவை இறுக்கினேன். என்னை இழுத்துப்பிரித்தாள். அப்பா துப்பாக்கியை தேடினார். அவர் கண்டிப்பாக சுடுவார் என அறிவேன். ஆனால் அது அப்போது அவர் கைக்கு சிக்கவில்லை. அம்மா அவசர அவசரமாக வீட்டை விட்டு வெளியேறி என்னை காரில் திணித்தாள். நான் துப்பாக்கியால் அப்பா அம்மாவை சுடுவதை பற்றி கற்பனைசெய்தேன். அம்மாவின் ரத்தத்தை பற்றி நினைக்கையில் நான் அழுவதை நிறுத்தியிருந்தேன்”.

“அதன் பிறகான நாட்கள் ஒரு கனவு போல இருந்தது. பனிபெய்து கொண்டிருந்த ஒரு மார்ச் மாதத்தில் நானும் அம்மாவும் லாத்வியாவிலிருந்து கனடா வந்தோம். ஆரம்ப நாளில் என்னிடம் உட்காந்து பேசி அப்பாவின் நினைவுகளை மறக்க வைத்தாள். பிறகு அவரை பற்றி பேச நினைத்தாலே அம்மாவின் முகம் மாறி விடும். நான் அவரை பற்றி கேட்பதை குறைத்துக்கொண்டேன்.  அவளுக்கும் எனக்கும் சண்டைவரும் போதெல்லாம் அப்பாவின் நினைவு எழுந்தடங்கும். அம்மா அதை அந்தரங்கமாய் உணர்ந்திருக்க வேண்டும் அதற்காகவே என்னை சீண்டுவாள். அப்போது எனக்கு பத்து பன்னிரண்டு வயதிருக்கலாம் அம்மா வேறொருவருடன் பேசுவதே எனக்கு எரிச்சலை கொடுத்தது. அவள் அணியும் கவுன்களின் நிறமாற்றங்களையும் கண்ணாடி முன் நிற்கும் நிமிடங்களை அறிந்தேன். தீவிர மனசிதைவுக்குள்ளானேன்”.

“டாக்டரிடம் போனோம். அவர் சில மருந்துகளை எழுதிக்கொடுத்தார். விடுப்பு எடுத்து அம்மா என்னை அன்புடன் பாத்துக்கொண்டாள். எனக்கு கதைகள் சொன்னாள். நான் கொஞ்சம் கொஞ்சமாக சரியாக தொடங்கினேன். அன்று வாசலில் விளையாடிக்கொண்டிருந்தேன் அம்மாவை டாக்டர் காரில் வந்து இறக்கிவிட்டு என்னை பார்த்து கையசைத்தார். நான் திரும்ப கையசைக்கவில்லை”.

“அம்மா  என்னை ‘சைப்ரஸ் மலரே’ என கொஞ்சினாள். அன்று இரவு எனக்கு ஜுரம் கண்டது. அம்மா கொடுத்த மாத்திரையை தலையனைக்கடியில் மறைத்து வைத்தேன்.  அந்த சிறு வயதிலேயே என்னை சுற்றி நடப்பவைகளை புரிந்து கொள்ளமுடிந்தது இப்போது வியப்பாக இருக்கிறது. பின்னாளில் தான் அது வேட்டையாடிகளின் விழிப்பு நிலை என அறிந்தேன். என் அப்பாவின் கொடை. அம்மா போதையில் அவரை வசைபாடுவாள்.  அவளை விட்டுச்சென்ற யாரைப்பற்றியும் அவளுக்கு புகார்கள் இல்லை அப்பாவை தவிர”.

“அது ஒரு பிப்ரவரி மாதம். இரண்டு நாட்களுக்கு முன்பு தான் பனிப்புயல் எங்கள் ஊரை சூரையாடி சென்றது. அன்று காலை மீண்டும் பனிபுயல் எச்சரிக்கை கொடுத்திருந்தார்கள். இதோ இப்ப வருகிறது பிறகு வருகிறது என ரேடியோவில் மாறி மாறி சொல்லிக் கொண்டிருந்தார்கள். அப்போது நான் பகுதி நேரமாக வேலை பார்த்துக் கொண்டிருந்தேன். நான் வீடு திரும்புவதற்கு முன்னாகவே இருட்டியிருந்தது. முந்தைய நாள் கொட்டிய பனியில் என் கால் புதையும் அளவு இருந்தது. வீட்டிற்கு வெளியே நியான் வெளிச்சத்தில் பனிப்பூக்கள் சாரலாக உதிர்ந்துகொண்டிருந்தது. பனி ஷூவை கழட்டி விட்டு, வாசல் கதைவை திறந்த போதே மனம் அதிர்ந்தது, உப்புக்குறுதியின் வாசம். நான் பரபரப்பானேன். முதலில் அது கிரெளவ்ட்ஹாகின் இரத்தம் என்றே நினைத்தேன்”.

“ஆனால் அதை முழுமையாக உணர்ந்தபோது என் கால்கள் விரைத்துக்கொண்டது. அனிச்சையாக கால் பெருவிரலை தரையுடன் அழுத்தினேன் அது இடுப்பு பூட்டு வரை வலித்தது.  “மனித குறுதியின் வாசம்”. பார்வை பிம்பங்கள் அசைய தொடங்கியது. நேராக அம்மாவின் அறைக்கு செல்லாமல் என்னுடைய அறைக்கு சென்றேன். நொடியில் மனம் இரத்த வாசனையை பின்தொடர்ந்ததை நினைத்துப்பார்த்தேன். அந்த காட்சியை இப்போது நினைத்தாலும் பயமாயிருக்கிறது என்னுடைய அறையில் அம்மா தலைகுப்புற விழுந்து கிடந்தாள், ஒரு கையில் விளக்குத்தண்டு முழுதும் இரத்தமாயிருந்தது. வயிற்றிலிருந்து ரத்தம் தரை முழுதும் பரவி என்னுடைய அலமாரியின் அடியில் சென்றிருந்தது. அவள் கண்கள் இரத்தச்சிகப்பாய் மாறி கருவிழி மேலே சொருகி இருந்தது. அவள் மூச்சுவிட்டுக்கொண்டிருந்தாள்”.

என்று சொல்லி பெல்கா அமைதியானாள்.

“நிறுத்தாதே பெல்கா. சொல்! என்ன நடந்தது. என்ன நடந்தது!?”

“செர்கி அவளை அப்படி பார்த்த அந்த கணத்தில் அதுவரை அவள் மீதிருந்த வெறுப்பின் திரை முழுதும் எனக்கு துலங்கியது. அது பதினைந்து வருடத்திற்கு முன்பு அப்பாவிடம் இருந்த என்னை பிரித்தவள் என்ற உணர்வு. குண்டடிபட்ட கரடியில் அருகே நான் மட்டுமே பார்த்த அதன் குட்டி கரடியாக மனம் என்னை இத்தனை நாட்களாக கற்பனை செய்து கொண்டிருந்திருக்கிறது. தனித்துவிடப்பட்ட இஸ்டோனிய கரடிக்குட்டி நான் தான். தந்தையை இழந்த சேய் நான் தான். அதுவரை உண்மையில் அப்படி நினைத்திருப்பேனா என்று கூட தெரியவில்லை. ஆழ்மனதின் பின்னல்கள் விலகத் தொடங்கியது.”

  ”அத்தனை வருடமும் அம்மா அப்பாவை வேட்டையாடி என்னை பிரித்திருக்கிறாள் என்ற உணர்வினால் தான் நான் அலைக்கழிக்கப்பட்டிருக்கிறேன். அந்த நினைப்பு மட்டுமே அந்த கணத்தில் மேலோங்கியது”.

  ”நான் யாரிடமும் அதை பற்றி குறை சொன்னதில்லை. ஏன் எனக்குள்ளாக கூட அம்மாதான் என்னை பிரித்தாள் என நினைத்ததில்லை. ஏதோ சண்டை பிரிந்துவிட்டார்கள் என்ற நினைப்பே இருந்தது”.

“குமட்டிக்கொண்டு வரும் போது எச்சில் சுரக்குமில்லையா அதை போல அவள் மீதான கசப்பு வெளியேறி கசந்து நாக்கில் அதை உணர்ந்தேன். அம்மா மெதுவாக கண்ணசைவில் என்னை அருகே உட்கார சொன்னாள். நான் குத்துக்காலிட்டு அவளையே பார்த்தேன் கண்ணீர் பெருக்கெடுத்தது. அந்த கணம் அதன் உச்சியிலிருந்தது. நான் விம்மிக்கொண்டிருந்தேன். அம்மா என் மனதில் தாவல்களை உணர்ந்திருக்கவேண்டும். அவளின் எஞ்சிய சக்தியை எல்லாம் திரட்டி ‘சைபீரிய மலரே’ என்றாள்”.

“நான் படாரென எழுந்துவிட்டேன், சுற்றிலும் பார்த்தேன், விளக்கு தண்டு ஒளிர்ந்து அனைந்து கொண்டிருந்தது. நேராக கிட்சனில் போய் தண்ணீரை அள்ளிக்குடித்தேன்,  பிறகு விருவிருவென வெளியேறினேன். கதவருகே போன போது என்ன நினைத்தேனோ ஒரு கணம் நின்று மீண்டும் அவளிடம் திரும்பி சென்றேன். அவளை பார்த்தேன் அவள் பார்வை என்னில் குத்தி நின்றது. கண்ணீரும் கோழையுமாக என் முகம்  சிவந்து போயிருந்தது. தண்ணீர் சிந்தி முன்பக்க உடை முழுதும் நனைந்திருந்தது, நான் அழுதபடி அரற்றிக்கொண்டிருந்தேன்”.

  ”கையில் இருந்த என்னுடைய பெரிய புத்தகத்தை நெஞ்சுடன் இறுக்கி பிடித்திபடி தொண்டையை சரி செய்து கொண்டு திடமான குரலில் “நான் கமேறு சீமாட்டி” என்றேன். அந்த சொல் துல்லியமாக அவள் மனதை துளைத்தது. கண்களை சுறுக்கினாள், அவளின் வாய் ஒரு பக்கமாக கோணியது. அதை காண சகிக்காதவளாய்  பூட்ஸை அணிந்து கொண்டு வெளியேறினேன்”.

“வெளியே பனி உக்கிரமாக அடித்துக்கொட்டி சாலையில் நுரையாகப்பொங்கியது. நான் மார்ஸிர்க்கு போன் செய்தேன். அத்தனை பனியில் எப்படி அங்கே வந்தான் என்று தெரியவில்லை. அவனுடைய டிரக்கில் வந்து கூட்டிக்கொண்டான். பனியை சாலையில் இருபக்கங்களிளும் சிதறடித்தபடி டிரக் மிதந்து சென்றது. அவனுடன் ஆறு மாதங்கள் தங்கியிருந்தேன்”.

  ”அதன் பிறகு நானும் அம்மா வாழ்ந்த அந்த வீட்டிற்கு போகவே இல்லை. போலிஸ் விசாரனையில் கூட நான் அங்கே போனதை பற்றியோ அம்மாவை பார்த்ததையோ சொல்லவில்லை. உண்மையில் நான் அவளின் நீட்சி அல்ல. அவளின் கரம் என்னை தொடவில்லை. அவளை அப்படி விட்டு வந்தது தான் என்னை கொல்கிறது. ஆழ் மனதின் விசித்திரங்கள் தெரிவதில்லை செர்கி. இந்த ஒரு நிகழ்வை தவிர அவளின் நினைப்பே இப்போது முற்றிலும் இல்லை. அவளுடைய கல்லறைக்கு கூட நான் போனதில்லை. கரைந்து போன மெழுகுவர்தியை எங்கே தேட?”

“செர்கி, உண்மையில் நான் ஒரு லாட்விய வேட்டைக்காரி, கமேறு சீமாட்டி அது தான் என் ரத்ததில் அதுவே பூரணமாய் இருக்கிறது”

“கமேறு சீமாட்டி, கமேறு சீமாட்டி, என்ன ஒரு கச்சிதமான பெயர். அதற்கு பிறகு நீ அப்பாவை தேடினாயா?”

“இல்லை. அவரை பார்ப்பதில் எனக்கு உடன்பாடில்லை. அம்மா என்னை தனியாக வளர்த்தாள். நான் தனியாகத் தான் இருக்கப் போகிறேன். என்னால் ஒரு போதும் யாருடனும் இசைந்திருக்க முடியாது. என்னை இந்த சமூகத்தில் இருந்து பிரித்தது மட்டும் தான் அவள் எனக்கு செய்தது.”

“என்ன சொல்கிறாய் பெல்கா?”

“நீ சாப்பிடுவதை பார்க்க எனக்கு அருவருப்பாக இருக்கிறது செர்கி”.

இது உதிரிகள் சிற்றிதழில் வந்த என்னுடைய முதல் நெடுங்கதை. பதிப்புத்த ஆசிரியர் குழுவிற்கும், நிலாவிற்கும் நன்றிகள்.

பின்னூட்டமொன்றை இடுக

Create a free website or blog at WordPress.com.

Up ↑