காலம் கருணையுடன் இருப்பதாக

இது பழைய பதிவு. எழுதிய வருடம் சரியாக நினைவில் இல்லை. 2012 அல்லது 13 ஆக இருக்கலாம். பழைய டிராவ்டுகளை எடுக்கும் போது கண்ணில் பட்டது. . இந்த பயணங்கள் முழுதும், காலம் கருணையுடன் இருந்ததை நினைவுகூறுகிறேன்.

இவ்வருட தொடக்கத்திலிருந்தே நான் விரும்பியது ஒன்று தான் ” இந்த வடருடம் முழுதும் பயணங்களால் நிறைய வேண்டும் என்று”. என்னுடைய பயணம் என்பது அறை முன்பதிவு செய்து நான்கு சுவற்றுக்குள் அடைத்துக்கொள்வது அல்ல. மற்றும் என் பயணங்கள் முழுதும் பெரு நகரங்களோ, சுற்றுலா தளங்களின் கமர்சியல் ஏரியாக்களையோ சாராதவை. பெரு நகரங்களின் சுற்றுலா என்றுமே என்னுளிருந்ததில்லை. அரண்மனைகள், பூங்காக்கள், மியூசியம் என்பவை மட்டும் தான் பெரும்பாலும் சுற்றூலா தளமாக கொண்டாடப்படுகிறது. இதன் மீதான ஈர்ப்பு எப்போதோ என்னுளிருந்து கலைந்து விட்டது. என் பயணங்கள் முழுக்க முழுக்க கிராமங்கள் தான். ஊட்டி என்றால் பிராதான வீதியில் ஒரு அறை எழுத்துக்கொண்டு , சுற்றியிருக்கும் பூங்காக்களுக்கு சென்றுவிட்டு நானும் ஊட்டியை சுற்றி பார்த்தாயிற்று என்று சொல்பவர்களை மவுனத்துடன் கடந்து செல்கிறேன். நீலகிரியின் ஏதோ ஒரு கிராமத்தில் இரவுகளை கழிக்காமல், டிசம்பரின் நடுங்க வைக்கும் குளிருக்கு உடலை தின்ன கொடுக்காமல், தேயிலை தோட்ட தொழிலாளியுடன் உணவை பகிர்ந்துண்ணாமல், உருளை கிழங்கு வயலில் குளிர் சேற்றுக்குள் கால்களை புதைக்காமல் , ஊர்காரரிடம் கிராமத்து கதையை கேட்காமல் எப்படி ஒரு ஊரை முழுதும் அறிந்ததாக சொல்ல முடியும்.


சென்ற வருட கடைசியில் அப்படி அமைந்தது ஒரு பயணம் நீலகிரி மலைகளுக்கு. திகட்ட திகட்ட ஆறுநாள் பயணம். ஆடம்பரமான விடுதிகள் இல்லை. சொல்லப்போனால் கையில் ஸ்லீபிங் பேகோடு தான் சென்றிருந்தேன், கிடைக்கும் இடத்தில் படுத்துக்கொள்ளலாம் என்று. ஊட்டியின் நவினங்கலெள்ளாம் நுழையாத மலை கிராமத்தின் பாட்டி அவருடைய சிறிய வீட்டில் தங்கிக்கொள்ள சொன்னதால் தப்பித்தேன். ஒவ்வொரு நாளும் விடியும் முன் சென்று , ஊரெல்லாம் அடங்கிய கனத்த இரவில் பாட்டியின் வீட்டிற்கு இருளை துளாவி கொண்டு வருவேன். ஒருவர் படுக்கலாம், மூவர் நிற்கலாம் அந்த அளவே கொண்ட சிறிய அறை. அதை ஒட்டிய அதனினும் சிறிய சமையலறை. பெரும்பாலும் பாட்டி உறங்கியிருப்பார், இல்லை என்றால் நாங்கள் இரவு கதைகள் பேசலாம். காலையில் இருந்து சென்ற இடங்கள், பார்த்த மனிதர்கள், மழையின் சத்தம், காரட் விவசாயம், அவலாஞ்சியில் குளிரில் மட்டுமே வளரும் மிரர் கேப் மின்கள் என மஞ்சள் விளக்கொளியில் கதை பேசிக்கொண்டிருப்போம். அவருடைய வீட்டில் இருந்து வெளியே காலெடுத்து வைப்பதே காரட் தோட்டத்தில் தான். காரட் விவசாயம் பாட்டிக்கு விருப்பம். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கிராமமாக சுற்றினேன். ஆறு நாளும் மழை இருந்து கொண்டே இருந்தது. நானும் கட்டஞ்சாயா குடித்துக்கொண்டே இருந்தேன். எத்தனை சாமானிய மனிதர்கள், ஊட்டி மலையில் இருந்து கீழே கோவைக்கு கூட வராதவர்களில் காதுகளில் வழி கேட்ட சென்னை கதைகளில் சென்னை அழகாக இருந்தது. அவர்களின் தூக்கு போசியில் கொண்டுவரும் மதிய உணவு சில்லிட்டிருக்கும். அந்த குளிரில் காரத்தை கூட்டாமல் நாக்கிற்கு எப்படி ருசியை சொல்வது. எல்லாருடைய மதிய உணவும் காரமாயிருந்தது. நான் எடுத்த படங்களை இங்கே தருகிறேன். நீலகிரியின் கிராமங்கள் என்னை வசீகரிக்கின்றது. ரிசார்ட்டுகளும் , ஹோட்டல்களும் நவீனமும் கலக்காத இந்த சின்ன கிராமமும், அதன் மனிதர்களும் என்னை மெஸ்மரிக்கிறார்கள். சென்னையின் சோழிங்கநல்லூர் சிக்னனில் கடினமான காலை 10 மணியை நினைத்துக்கொள்கிறேன். இதே போல அங்கிருந்தும் இந்த மழை கிராமத்தை நினைத்துக்கொள்வேன். இந்த மழை பயணம் நீங்காமல் என்னுளிருக்கும்.

   நீலகிரி பயணம் முடிந்த பிறகு சென்னையிலிருந்து வால்பாறைக்கான பைக் பயணம்.பிறகு வருட தொடக்கத்தில் பைக்கில் ஆந்திரா மாநிலத்தில் இலக்கற்று ஐந்து நாட்கள் கிராமம் கிராமமாக சுற்றினேன். அதன் பிறகு பிடித்துக்கொண்டது இந்த கடற்கறைகளின் மீதான தீராத காதல். பெரும்பாலும் பயணங்கள் தனிமையில் தான். இல்லை என்றால் அதிகபட்சமாக ஒருவருடன். ஒத்த மனநிலை கொண்டவர்களுடன் பயணம் என்பது சலிப்பே தராது. ஆந்திர பயணத்திற்கு பிறகு வேடந்தாங்கல் இரண்டு நாள் பயணம் கூடவே பறை இசை பயிற்சி, அதன் பிறகு வட சென்னையின் கடற்கரை கிராமங்கள், சமீபத்தில் ஆறு நாட்கள் கோவா. நண்பர்கள் அனைவரும் வடக்கு கோவாவை சுற்றிப்பார்த்து விட்டு திரும்பிவிடலாம் என்றிருக்க, தெற்கு கிராமங்களுக்குள் வண்டியை விட்டேன், உண்மையின் கோவா அதன் பெரும் அழகை யாருமற்ற கால்வா தொடங்கி லீலா கடற்கறை வரை வைத்திருக்கிறது. லீலாவில் அமைதி கடற்கறையை அங்குலம் அங்குலமாக நடந்து முடித்தேன். இப்போது மீண்டும் ஒரு கடற்கரை கிராமம் ”முட்டம்” இந்தமுறை 4 நாட்கள். சென்ற வருட மத்தியில் திட்டமிடப்பட்டது இப்போது தான் நேரம் கிடைத்திருக்கின்றது. மணப்பாடு தொடங்கி பூவாறு மாங்ரோவ் வரை ஒரு பயணத்திட்டம்.கடற்கரை வழியாகவே நடந்து போக முடியுமா என்று பார்த்துக்கொண்டிருக்கிறேன். நண்பர்களுக்கு தகவல் தெரிந்தால் சொல்லவும். முட்டம் திருவிழா 26 தொடங்கி 6 நாடகள் நடைபெறும் என்று தெரிகிறது. கேரளமும் , தமிழகமும் கலந்த அந்த முட்டம் திருவிழாவை பார்க்க வேண்டும். நண்பர்கள் கூப்பிட்டுக்கொண்டே இருக்கிறார். காலம் கருணையுடன் இருப்பதாக.

1 thoughts on “காலம் கருணையுடன் இருப்பதாக

  1. Hi nilan!
    Ungal payanangalin methana parvai unmaiyil satrea vithyasa padukirathu engalil irunthu. Arumayana ninaivugal ungaluku kadavul thanthirukirar. Mealum mealum thodarga Ungal payanam.

    Like

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.

Create a free website or blog at WordPress.com.

Up ↑