இல்லாத ஒருவன்

              

வார்த்தைகளற்ற நடுநிசியில் பொத்துக்கொண்டு வரும் அழுகை தொண்டை குழி வரை நிரம்பி வழியும் இந்த பொழுதில் உன்னை நினைக்காமல் எப்படி இருக்க முடியும் , எனக்கான எல்லாவற்றையும் எடுத்துக்கொண்டு உயிரை மட்டும் விட்டு போன என் உயிரானவள் நீ , எப்படி சமதானப்படுதியும் தனிமை கண்டுபிடித்து இன்னும் கொஞ்சம் அழுக வேண்டும் போல உள்ளது .

நரம்பின்  குருதி வற்றி நான் என்ற அகங்காரம் திறந்து போன இரவில் உன்னிடம் என்றுமே சேராத இந்த கடிதங்கள் எழுதுவதில் தான் எப்படியும் அமைதலாகிறது இந்த நீண்ட இரவு.

அனைவரும் இருக்கும் போது ஏற்படும் இரைச்சலை விட நீ இல்லாத மொழுதுகளின் தனிமை என்னை பயமுறுத்துவதாய் இருக்கிறது. எப்போது என்னை விழுங்கலாம் என்றபடி மெளனம் என்னை வெறிக்கிறது. கொடுமையான இந்த தனிமையை போக்கி என்னை ஆம்பல் மலருக்குள் ஒளித்துக்கொண்டால் எவ்வளவு இனிமையாய் இருக்கும். நிராகரித்தலின் வழி பின் கெண்டை சதை வழி ஏறி தண்டுவடம் விரிந்து மூளையை தாக்குகிறது.

இதே நிராகரிப்பின் வலியை உணரும் போது நீ நாற்பது வயதை கடந்திருக்கலாம் மிருதுளா. வாழ்வின் பிற்பாதியில் கணவன், குழந்தைகள் என அனைவரையும் அலுவலகத்திற்கு அனுப்பிவிட்ட பகல் பொழுதிலோ மெளனம் கசிந்து போன மாலையிலோ என்றேனும் என்னை நினைத்துக்கொள்ளும் போது நான் எழுதின இந்த வரிகள் உன் கண் முன் நிழ‌லாடும் அப்போது எனக்காக ஒரு வறண்ட‌ புன்னகை உதிர்ப்பாயே அது தான் இந்த கடிதத்தின் நிறைவாக நான் என்னுகிறேன்.போய் வா மிருதுளா, உலகம் மிக சிறியது என்றேனும் ஒரு நாள் பேருந்திலோ, விமானத்திலோ, இரயிலிலோ சந்திக்கும் போது ஒரு புன்னகையை தவழ விட்டுச்செல்., அப்படியாவது ஓட்டை விழுந்த என் அன்பின் பாத்திரத்தை உன் புன்னகைகளால் இட்டு நிரப்பிக்கொள்கிறேன்.

உன்னை உன் தவறுகளோடு கூட ஏற்றுக்கொள்ளவில்லை என்றால் பிறகு நான் என்ன உன்னில் பாதி என்றாய்,ஒவ்வொரு முறை தவறு செய்யும் போதும் ஒரு அன்னை போல தலை கோதி அனைத்துக்கொண்ட நீ, கடைசி தவறுக்கு மட்டும் என்னை அமிலத்தில் தள்ளிவிட்டு கைதட்டி சிரித்ததென்ன.என்றேனும் மீண்டும் என்னை அழைப்பாய் என்ற நினைப்பில் தான் உடலோடு இந்த உயிரையும் சேர்த்து சுமைந்தலைகிறேன்

யாருக்காகவும் என்னுடைய முடிவுகளை மறுபரிசீலனை செய்யமாட்டேன் என்றாயே, வாழ்வின் பல முடிவுகளை கட்டாயத்தின் பேரில் மாற்றிக்கொள்ளும் போது உன்னுடைய காத்திருத்தலுக்காக, வெளி தள்ளப்பட்டு கதவை சாத்தின சிறு குழந்தை போல உனக்கான விளிம்பு நிலையில் மனம் பதறி நான் காத்திருந்த நிமிடங்களை நினைத்துக்கொள். எது எப்படியோ என் வாழ்வின் மிக உன்னதமான தருணங்களை உன்னுடன் கழித்திருக்கிறேன். பேருந்து பயணங்களில் தோழ் சாய்ந்து தூங்குவதும், உன் கைகுட்டை வாசனையும் கதகதப்பும் என்னை எப்போதும் லயிப்பிற்குள்ளாக்குபவை,  தனிமையின் இரவில் காதலியின் பிரிவை தாங்காமல் நெஞ்சிலடித்தபடி கதறி அழுகும் ஒருவன் புனிதனென்றால் நான் அவன் தான்.

கடிதம் எழுதி முடித்ததும் கதறி அழுதான் நல்லதம்பி, நெற்றி விகாரமாகவும் மூக்கு சற்றே வளைந்தும், மூன்று பற்கள் துருத்திக்கொண்டிருப்பதால் தான் தன்னுடைய முப்பத்தியாறாவது வயது வரை ஒரு பெண்ணின் ஸ்பரிசம் கூட‌ கிடைக்கவில்லை என எண்ணும் போது வெறுப்பாக இருந்தது

ச்சே! என்ன இது இல்லாத ஒருத்திக்காகவும் இதுவரை வராத ஒரு காதலிக்காகவும் இப்படி மாய்ந்து மாய்ந்து கடிதம் எழுதுவது., அதுவும் நூற்றி நாற்பத்தியாறாவது முறை. தனிமை முகத்திலறைய எழுந்து சென்று ஒரு சிகரெட் பற்ற வைத்தான். எப்படியும் சுவைத்து முடிந்தததும் காலில் மிதித்து அணைப்பான்  இது தங்கள் குலத்திற்கே ஏற்படும் மிகப்பெரிய அவமானம் என சொல்லியபடியே பற்றி எரியத்தொடங்கியது அன்றைய இரவின் நாற்பத்தியெட்டாவது சிகரெட்.

இது வ‌ரை இந்த‌ க‌தையை எழுதிய‌தும் என்ன‌ செய்வ‌தென்று தெரியாம‌ல் விழித்தாள் மிருதுளா. நெற்றியை தொட்டுப்பார்த்தாள் நெற்றி நீண்டு விகாரமாக இருந்தது ,மூக்கு சற்றே வளைந்தும், மூன்று பற்கள் துருத்திக்கொண்டிருப்ப‌து தான் இது வ‌ரை எந்த ஆணின் காதலும்,ஸ்ப‌ரிச‌மும் கிடைக்காதத‌ற்கு கார‌ண‌ம் என்றாள்.  ச்சே!!! என்ன ஆண்கள் இவர்கள் எனக்காக இப்படி காதலால் கசிந்துருகி கடிதம் எழுதாவிட்டாலும் பரவாயில்லை, ஒரு சின்ன புன்னகை கூட காட்ட மறுப்பது அவமானத்தின் உச்சம் என்றாள். நூற்றி நாற்பத்தி ஏழாவது கடிதம் எழுதுவதற்கு த‌யாராய் மேசையில் இருந்தது..

— முற்றும் — 

14 thoughts on “இல்லாத ஒருவன்

Add yours

    1. //பதிவுலகில் நான் காலூன்றிய ஆரம்பத்தில், என்னைத்தவிர என் பதிவைப் பார்ப்பாரில்லை..படிப்பாரில்லை..பாராட்டுவாரில்லை.முதல் முறையாய் என் பதிவிற்கு பின்னூட்டம் இட்டு ,என் நெஞ்சில் நம்பிக்கையை துளிர் விட வைத்த, நண்பர் அடலேறு வுக்கு மிக்க நன்றி.பின்னூட்டமிடுவதோடு நின்று விடாமல் அவ்வபோது மின்னஞ்சலில்,தொலைப்பேசியில் என் அருமை பெருமைகளை பாராட்டியும்,திட்டியும் என்னை பட்டை தீட்டியவர் அவர்//
      நான் ஒன்றுமே செய்ய‌வில்லை பாலா.திற‌மை எப்ப‌டி இருந்தாலும் வெளிப்ப‌ட்டே ஆகும்.இன்னும் சிற‌க்க‌ வாழ்த்துக்க‌ள்

      Like

    1. அ முத்துலிங்கத்தின் “அங்கே இப்ப என்ன நேரம்” தொகுப்பு எனக்கு மிகவும் இனக்கமானது. நட்சத்திர எழுத்தாளர். எனக்கு அவரின் எழுத்துக்களும், வலை பக்கமும் முன்னமே பரிச்சயமுள்ளது.நண்பர்களுக்காக சுட்டியை பகிர்ந்தமைக்கு நன்றி.

      Like

  1. இருப்பவர்களுக்கு தெரிவதில்லை அரவணைப்பும் ஸ்பரிசங்களும்

    கிடைக்காதவர்கள் ஏங்குகிறார்கள் கிடைக்கும் வரை

    கிடைத்த பின் அதை தொலைத்துவிடுவார்கள்

    மனித இயல்பை அழகான காட்சியாக்கியிருகிரீர்கள் அருமை

    Like

பின்னூட்டமொன்றை இடுக

Create a free website or blog at WordPress.com.

Up ↑